நான் பிரதமராக சில பெரிய கூட்டங்களில் பேசி இருக்கிறேன். ஆனால் இன்று இங்குள்ள அரவணைப்புக்கும் ஆற்றலுக்கும் ஈடு இணை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன் பாடகர் புகழ்பெற்ற புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன்-னை இந்த மேடையில் சந்தித்துள்ளேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிதான் முதன்மையானவர்!
பழங்கால இந்திய கலாச்சாரத்தின் ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் இந்திய உள்ளூர் பொருட்களின் உடல்நல நன்மைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடலில் ஈடுபட்டேன். எங்கள் கலந்துரையாடல் இந்தியாவின் மீதான எனது அன்பையும், இந்திய உணவுத் துறையில் எனது ஆர்வத்தையும் வலுப்படுத்தியுள்ளது. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த உரையாடலுக்கு அப்பால், அடுத்த செயல்பாடுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இதன் மூலம் நான் செல்ல வேண்டிய திசை தொடர்பான தெளிவான பார்வை எனக்குக் கிடைத்தது. எனது முன்னேற்றப் பாதையை வடிவமைப்பதில் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
திரு. நரேந்திர மோடி நிச்சயமாக இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அரங்கிலும் மிகுந்த நற்பெயரைப் பெற்றுள்ளார். நான் நிறைய நகைச்சுவையுடன் கூடிய கருத்துகளை எழுதுவது வழக்கம். நீங்கள் ஏன் திரு. நரேந்திர மோடி குறித்து கேலி செய்து நகைச்சுவையாக எழுதக் கூடாது? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். உயர்ந்த குணம் கொண்ட நபரைக் கேலி செய்வது சாத்தியமற்றது என்பதால் நான் அவரிடம் அதற்கான பதிலைச் சொன்னேன். கேலி செய்வதற்கான எந்த தன்மையும் திரு நரேந்திர மோடியிடம் இல்லை என்றும் அவரிடம் சிறந்த ஈர்ப்புத் தன்மை உள்ளது எனவும் நான் கூறினேன். திரு. நரேந்திர மோடி சர்வதேச அரங்கில் மிகவும் மதிக்கப்படுகிறார். மேலும் அவர் சர்வதேச அரங்கில் மிகச் சிறந்த தலைவராக இருந்து வருகிறார்.
அவர் இந்தத் துறையைப் பற்றி மிகச் சிறப்பாக விளக்கினார் என்பதை நான் விளக்கியாக வேண்டும். இது உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றிய பல முக்கியமான விசயங்களை நாங்கள் விவாதித்தோம். இந்தியா போன்ற நாடுகள் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். யுபிஐ என்பது, மிகச் சிறந்த உதாரணம் ஆகும். உலகின் முன்னணி தயாரிப்பை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம் ஆகும். இதுவே பணத்தின் எதிர்காலமாக இருக்கும். எனவே இது ஒரு சிறந்த தொடக்கமாகும். இந்தியாவின் கண்டுபிடிப்பு பெரிய அளவிலான வணிகத்தையும் பெரிய செழிப்பையும் எவ்வாறு ஏற்படுத்தும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மதிப்பிற்குரிய இந்தப் பிரதமருடனான எங்கள் சந்திப்பில் பல விசயங்களைப் பற்றி பேசினோம். அவர் மிகவும் அன்பாகவும், மரியாதையுடன் எல்லாவற்றையும் கேட்டார். நாங்கள் இசையைப் பற்றிப் பேசினோம். அவர் எனக்கு மிகவும் பிரபலமான பாடலான ‘நாட்டுநாட்டு’பாடல் குறித்து எடுத்துரைத்தார். எனவே, நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கான்பூரைச் சேர்ந்த என் தாயாரைப் பற்றியும் பேசினோம். இது எனக்கு ஒரு அழகான சந்திப்பாகும். நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு வெளியேறிய பின் நான் பேசிய முதல் நபர் எனது தாயார் ஆவார். நான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததில் எனது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் ஆக்கப்பூர்வமான பாடங்களை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயல்படுவது பற்றி நாங்கள் விரிவாகப் பேசினோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருக்கிறார். நாடுகளின் கலைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை அவர் புரிந்து கொண்டுள்ளதாக உணர்கிறேன்.
உண்மையில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் நாம் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம்? என்பது குறித்து எல்லாம் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி மிகச் சிறப்பாக விளக்கினார். உலகத்தரம் வாய்ந்த அறிவியல் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா திறன் பெற்றுள்ளது. எனது வாழ்நாளில் இந்தியா கண்ட சிறந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என உறுதியாகக் கூறுவேன். அவருடன் பேசும்போது அவர் மிகுந்த ஆளுமையுள்ளவர் என்பதை உணர்கிறேன். மக்கள் மீது உண்மையிலேயே அவர் அக்கறை காட்டுகிறார் என்பதை என்னால் உணர முடிகிறது.
அவருக்கும் எனக்கும் தூய்மை மீது அதீத ஆர்வம் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். இந்தியாவில் தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரியும். திரு. நரேந்திர மோடி உலக அளவில் தூய்மை தொடர்பான செயல்பாடுகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளார். அவருடன் போட்டியிட்டு நெருங்கிவரக் கூடியவர்கள் யாரும் இல்லை. இந்த முக்கியமான பணியில் சமூக தாக்கத்தின் அடிப்படையில், உலகில் யாரும் மிகப்பெரிய தூய்மைத் திட்டத்தை செயல்படுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கவில்லை. மனித வரலாற்றில் மிகப் பெரிய தூய்மைத் திட்டம் இதுவாகும். இந்தியாவில் இந்த தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு சமூக மற்றும் அரசியல் உறுதியுடன் திரு. நரேந்திர மோடி மேற்கொண்ட பணிகளால் ஏற்பட்டுள்ள சமூக தாக்கம் மிகப்பெரியதாகும். இந்தத் தாக்கத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் அறிவீர்கள். நான் உங்கள் நாட்டிற்குச் 15 முதல் 20 ஆண்டுகளாக வந்து சென்றுள்ளேன். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விசயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இது மிகவும் ஈர்க்கக்கூடிய சந்திப்பு. நிச்சயமாக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஈர்ப்புள்ள நபர். அவர் வணிகத்தைப் புரிந்துகொள்கிறார். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்தியா தொடர்பான அவரது கனவுகள் மற்றும் அவரது கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனம் நிச்சயமாக இந்தியாவில் முதலீடு செய்யும். இந்திய உள்கட்டமைப்பு நிதியத்தில் முதலீடு செய்யும். இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக எங்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அதிசயிக்கத்தக்க மனிதர். அவரைச் சந்தித்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டம் அடைந்துள்ளதாக உணர்கிறேன். அவர் உண்மையிலேயே தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா மீது அக்கறை கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி அதீத செல்வாக்கு கொண்ட நபர். எளிமையான பின்னணியில் இருந்து வந்து, நாட்டின் தலைவராக உயர்ந்துள்ள அவர் அபாரமான பணிகளைச் செய்துள்ளார். உண்மையில் மக்களை சிறந்த பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். இன்று அவருடனான உரையாடலில் அவர் எவ்வளவு ஆளுமைமிக்கவர் என்பதை உணர்ந்தேன்.
புதைபடிம எரிபொருள் துறைக்கான காலம் குறைந்த அளவுதான் உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். மேலும் மாற்று எரிபொருளால் ஈடு செய்யப்பட வேண்டும். எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாத, ஆனால் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து எரிசக்திப் பயன்பாட்டையும் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கான பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி உலகின் முன்னிலையில் இருக்கிறார். அவரின் மனிதாபிமான முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை உலக அளவில் எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.
உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களது சிறந்த பிரதமர் ஒரு மிக முக்கியமான மந்திரத்துடன் பதவிக்கு வந்தார். அதாவது "சிவப்பு நாடா முதல் சிவப்பு கம்பளம் வரை" என்பதே அது. எளிதாகக் கூறினால், தொழில் துறை அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் முதலீட்டை ஈர்க்கலாம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். அதைத்தான் அவர் விரும்புகிறார். தன் நாட்டுக்காக அதைச் செய்ய விரும்புகிறார்.