பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.
இதன் பின்னர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார். பிற்பகல் 1.45 மணியளவில் பன்ஸ்வாராவில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார். மேலும் பிஎம் குசும் (பிரதமரின் விவசாய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம்) பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.
உத்தரப்பிரதேசத்தில்
மேக் இன் இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, தற்சார்பு இந்தியா ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டுக்கு ஏற்ப கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்தக் கண்காட்சி செப்டம்பர் 29 வரை நடைபெறும். இதில் கைவினை தொழில்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேளாண் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். 2400க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
ராஜஸ்தானில் பிரதமர்
பன்ஸ்வாராவில் ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார்.
இந்தியாவின் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ராஜஸ்தானில் ரூ.19,210 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். புதுப்பிக்கவல்ல எரிசக்தி மண்டலம் என்ற மத்திய அரசின் முன் முயற்சி திட்டத்தின் கீழ் ரூ.13,180 கோடி மதிப்பிலான மூன்று மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.


