கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.
இப்போது, பெங்களூரு புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக மாறி வரும் ஒரு நகரமாக வளர்ந்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். தத்துவ ஞானத்தை உள்ளடக்கிய அதே வேளையில், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு நகரமாகவும் பெங்களூரு உள்ளது என அவர் விவரித்தார். பெங்களூரு நகரம் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் பெருமையுடன் இடம்பிடித்துள்ளது என்றும், இது பெங்களூரு மக்களின் கடின உழைப்புக்கும் திறமைக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனவும் அவர் எடுத்துரைத்தார்.

21-ம் நூற்றாண்டில், நகர்ப்புற திட்டமிடலும் நகர்ப்புற உள்கட்டமைப்பும் நமது நகரங்களுக்கு மிகவும் அவசியமான தேவைகள் என்று பிரதமர் வலியுறுத்தினார். பெங்களூரு போன்ற நகரங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில், பெங்களூருவுக்காக மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும், இப்போது இந்த இயக்கம் புதிய வேகத்தைப் பெற்று வருகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். பெங்களூரு மெட்ரோ மஞ்சள் வழித்தடப் பாதையை திரு நரேந்திர மோடி திறந்து வைத்து, மெட்ரோ கட்டம்-3 க்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பெங்களூருவுக்கும் பெலகாவிக்கும் இடையே வந்தே பாரத் சேவை தொடங்குவது பெலகாவியில் வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். கூடுதலாக, நாக்பூர் - புனே இடையேயும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - அமிர்தசரஸ் இடையேயும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இந்நிகழ்ச்சியின்போது பிரதமரால் தொடங்கப்பட்டன. இந்த சேவைகள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பயனளித்து சுற்றுலாவை மேம்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த திட்டங்களுக்கும் புதிய வந்தே பாரத் ரயில்களுக்கும் பெங்களூரு, கர்நாடகா மற்றும் முழு நாட்டிற்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூருக்கு இது தான் தமது முதல் வருகை என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிக்கும் திறன் கொண்ட ஆபரேஷன் சிந்தூரில் இந்தியப் படைகளின் வெற்றியை எடுத்துரைத்தார். பயங்கரவாதிகளைப் பாதுகாத்த பாகிஸ்தானை சில மணி நேரங்களுக்குள் மண்டியிட வைத்ததில் இந்தியாவின் வலிமையை அவர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவின் இந்தப் புதிய முகத்தை முழு உலகமும் கண்டிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் சக்தியும் பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் வலிமையுமே ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறினார். இந்த சாதனையில் பெங்களூரு மற்றும் கர்நாடக இளைஞர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த வெற்றியில் அவர்களின் பங்கிற்கு அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பெங்களூரு தற்போது முக்கிய உலக நகரங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நமது நகரங்கள் நவீன திறன் கொண்டதாக மாறும்போதுதான் முன்னேற்றம் வரும் என்று அவர் குறிப்பிட்டார். நவீன உள்கட்டமைப்பு திட்டங்களை முடிப்பதில் அரசு வலுவான கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். பெங்களூருவின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் ஆர்.வி. சாலையிலிருந்து பொம்மசந்திரா வரை பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் வழித்தடப் பாதை தொடங்கப்படுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். பசவனகுடிக்கும் எலக்ட்ரானிக் சிட்டிக்கும் இடையிலான பயண நேரம் இப்போது கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார். இது, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை எளிதாவதை உறுதி செய்து, வேலைகளை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

மஞ்சள் வழித்தடப் பாதை திறப்பு விழாவுடன், பெங்களூரு மெட்ரோவின் மூன்றாம் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். குறிப்பாக ஆரஞ்சு பாதை பணி தொடங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், மஞ்சள் வழித்தடப் பாதையுடன் ஆரஞ்சு பாதை இணைந்து 25 லட்சம் பயணிகளுக்கு தினசரி பயணத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார். இது பெங்களூருவின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி புதிய உயரத்திற்கு உயர்த்தும் என்று அவர் கூறினார். நாட்டில் பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பெங்களூரு மெட்ரோ ஒரு புதிய மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, பயோகான், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பல முக்கிய மெட்ரோ நிலையங்களுக்கு பகுதி அளவில் நிதியுதவி அளித்துள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் இந்த புதுமையான பயன்பாட்டை அவர் பாராட்டினார். மேலும் அவர்களின் பங்களிப்புக்காக பெருநிறுவனத் துறைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது எனவும் கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரம் 10வது இடத்திலிருந்து உலக அளவில் முதல் ஐந்து இடங்களுக்கு உயர்ந்துள்ளது எனவும் மேலும் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். தெளிவான நோக்கம், நேர்மையான முயற்சிகளால் உந்தப்பட்ட சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற உணர்வே இந்த உத்வேகத்திற்குக் காரணம் என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பற்றிப் பேசுகையில், 2014-ம் ஆண்டில், மெட்ரோ சேவைகள் வெறும் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தன என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இப்போது, 24 நகரங்களில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான மெட்ரோ கட்டமைப்புகள் உள்ளன, இது இந்தியாவை உலக அளவில் மூன்றாவது பெரிய மெட்ரோ கட்டமைப்பாக மாற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, சுமார் 20,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தன என்பதையும் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். கடந்த பதினொரு ஆண்டுகளில் மட்டும், 40,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன எனவும் இது நிலையான போக்குவரத்து வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வேகத்தைக் குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் சாதனைகள் நிலத்தில் மட்டுமல்லாமல், வானிலும் உயர்ந்து வருவதைக் கூறிய பிரதமர், 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன என்றும், இப்போது அந்த எண்ணிக்கை 160-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டில் மூன்று தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன என்றும் இந்த எண்ணிக்கை தற்போது முப்பது ஆக உயர்ந்துள்ளது என்றும் நீர்வழி உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரம், கல்வித் துறைகளில் இந்தியா அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பற்றி விவரித்த திரு நரேந்திர மோடி, 2014 வரை நாட்டில் 7 எய்ம்ஸ், 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன எனவும் இப்போது 22 எய்ம்ஸ், 704 மருத்துவக் கல்லூரிகள் மக்களுக்கு சேவை செய்கின்றன என்றும் எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த விரிவாக்கத்தின் தாக்கத்தை அவர் விளக்கினார். அதிகரித்த வாய்ப்புகளால் நடுத்தர வர்க்க குழந்தைகள் எவ்வாறு பெரிதும் பயனடைந்துள்ளனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில், ஐஐடி-களின் எண்ணிக்கை 16-லிருந்து 23 ஆகவும், ஐஐஐடி-கள் 9-லிருந்து 25 ஆகவும், ஐஐஎம்-கள் 13 லிருந்து 21 ஆகவும் அதிகரித்துள்ளன என்பதை திரு நரேந்திர மோடி மேலும் எடுத்துரைத்தார். இப்போது, மாணவர்கள் உயர்கல்வியில் கணிசமாக அதிக வாய்ப்புகளைப் பெற முடிவதாக அவர் கூறினார்.
இப்போது நாடு வேகமாக முன்னேறி வருவதால், ஏழைகள், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை அதே வேகத்தில் மாறி வருவதாகக் கூறிய பிரதமர், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்தார். அரசு இப்போது மேலும் 3 கோடி வீடுகளைக் கட்டத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். வெறும் 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த முயற்சி கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளுக்கு கண்ணியம், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் வளர்ச்சியின் வேகம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் வலுவாக இயக்கப்படுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். 2014-க்கு முன்பு இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 468 பில்லியன் டாலர்களை மட்டுமே எட்டியிருந்தது எனவும் ஆனால் இப்போது அது 824 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். முன்னதாக, இந்தியா மொபைல் போன்களை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி இப்போது, மொபைல் கைப்பேசிகளை ஏற்றுமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாற்றத்தில் பெங்களூரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 2014-க்கு முன்பு, இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி உத்தேசமாக 6 பில்லியன் டாலர்களாக இருந்தது எனவும் இப்போது அது கிட்டத்தட்ட 38 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என்பதையும் திரு நரேந்திர மோடி விளக்கினார்.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வாகன தொழில்துறை (ஆட்டோமொபைல்) ஏற்றுமதி சுமார் 16 பில்லியன் டாலர்களாக இருந்ததை எடுத்துரைத்த பிரதமர், இப்போது அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, இந்தியாவை உலகளவில் நான்காவது பெரிய ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளராக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த சாதனைகள் தற்சார்பு இந்தியா என்ற உறுதியை வலுப்படுத்துவதாகவும், இது வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய பயணம் டிஜிட்டல் இந்தியாவுடன் இணைந்து முன்னேறும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் போன்ற முயற்சிகள் மூலம், இந்தியா உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தலைமையை நோக்கி முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். குறைக்கடத்தி இயக்கமும் வேகம் பெற்று வருவதாகவும், விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் வெளியாகும் என்றும் அவர் கூறினார். குறைந்த செலவில் உயர் தொழில்நுட்ப விண்வெளி பயணங்களுக்கு இந்தியா ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார். எதிர்கால தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாகவும், இந்த முன்னேற்றத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் இப்போது நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் அடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், யுபிஐ மூலம், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடப்பதாகவும் குறிப்பிட்டார். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தொழில்நுட்பம் உதவுகிறது என்று அவர் கூறினார். இப்போது, 2,200 க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் மொபைல் தளங்களில் கிடைக்கின்றன என்று அவர் தெரிவித்தார். உமாங் (UMANG) செயலி மூலம், மக்கள் வீட்டிலிருந்தே அரசு அலுவலகங்கள் தொடர்பான பணிகளை முடிக்க முடியும் என்றும், டிஜிலாக்கர் (DigiLocker) மூலம் சான்றிதழ்களை நிர்வகிப்பதில் உள்ள தொந்தரவு நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா தற்போது பாதுகாப்பான நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருவதாக பிரதமர் கூறினார். டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் சமூகத்தின் கடைசி நபரையும் சென்றடைவதை உறுதி செய்வதே குறிக்கோள் என்று அவர் வலியுறுத்தினார். இந்த தேசிய முயற்சிக்கு பெங்களூரு தீவிரமாக பங்களித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

நமது அடுத்த பெரிய முன்னுரிமை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக அளவில் ஒரு முத்திரையைப் பதித்து, உலகம் முழுவதும் மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்கியுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது என்றும், புதிய தயாரிப்புகளின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக மென்பொருள்களும் செயலிகளும் இப்போது ஒவ்வொரு களத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்தத் துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டுவது அவசியம் என்று திரு நரேந்திர மோடி கூறினார். வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்தும் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் உற்பத்தித் துறையில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் தயாரிப்புகள் பூஜ்ஜிய குறைபாடு, பூஜ்ஜிய விளைவு தரம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறினார். அதாவது அவை தரத்தில் குறைபாடற்றதாக இருக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். கர்நாடகாவின் திறமை தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை வழிநடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளாக இருந்தாலும் சரி, அனைவரும் மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூட்டு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்த திசையில் ஒரு முக்கிய பொறுப்பு புதிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். உதாரணமாக, சட்டங்களை குற்றமற்றதாக்குவதற்கான ஜன் விஸ்வாஸ் மசோதா நிறைவேற்றப்பட்டதை அவர் மேற்கோள் காட்டினார். மேலும் ஜன் விஸ்வாஸ் 2.0 அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். தேவையற்ற குற்றவியல் விதிகள் கொண்ட சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கு மாநில அரசுகள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அரசு ஊழியர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மிஷன் கர்மயோகி முயற்சியை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மாநிலங்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் இந்தக் கற்றல் கட்டமைப்பை செயல்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார். லட்சிய மாவட்டத் திட்டம் மற்றும் லட்சியத் தொகுதித் திட்டத்தில் கவனம் செலுத்துவதை எடுத்துரைத்த பிரதமர், சிறப்பு கவனம் தேவைப்படும் பகுதிகளை இதேபோல் அடையாளம் காணுமாறு மாநிலங்களை வலியுறுத்தினார். மாநில அளவில் தொடர்ச்சியான சீர்திருத்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்து, இந்த கூட்டு முயற்சிகள் கர்நாடகாவை வளர்ச்சியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அனைவரும் இணைந்து, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டுவோம் என்று கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் திரு மனோகர் லால், திரு எச்.டி.குமாரசாமி, திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர்கள் திரு வி. சோமன்னா, செல்வி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பின்னணி
பெங்களூரு மெட்ரோ
கட்டம்-2 திட்டத்தில் ஆர்.வி. சாலை (ராகிகுடா) முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடப் பாதையை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் நீளம் 19 கிலோ மீட்டருக்கும்
அதிகமாகும். 16 நிலையங்களைக்
கொண்ட இத்திட்டம் சுமார் ₹7,160 கோடி
மதிப்புடையது. இந்த
மஞ்சள் வழித்தடப் பாதை திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில்

செயல்பாட்டு மெட்ரோ கட்டமைப்பு தூரம் 96 கிலோ மீட்டருக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
₹15,610 கோடிக்கு மேல் மதிப்புள்ள பெங்களூரு மெட்ரோ 3-ம் கட்டத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் மொத்த பாதை நீளம், 31 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன், 44 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். இந்த உள்கட்டமைப்புத்
திட்டம், குடியிருப்பு, தொழில்துறை,
வணிகம் மற்றும் கல்வி பகுதிகளில் நகரத்தின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
பெங்களூருவிலிருந்து 3 வந்தே பாரத் விரைவு ரயில்களையும்பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூருவிலிருந்து பெலகாவி, அமிர்தசரஸ் முதல் ஸ்ரீ மாதா
வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர்
(அஜ்னி) முதல் புனே வரை செல்லும்
ரயில்கள் இதில் அடங்கும். இந்த
அதிவேக ரயில்கள் பிராந்திய இணைப்பை கணிசமாக மேம்படுத்தி, பயண
நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
The success of Operation Sindoor… the strength to destroy terrorist hideouts deep across the border… and the ability to bring Pakistan, which came to defend the terrorists, to its knees within hours…
— PMO India (@PMOIndia) August 10, 2025
The whole world has witnessed this new face of India: PM @narendramodi pic.twitter.com/XvIqhUDAWk
Today, India is the fastest-growing major economy in the world.
— PMO India (@PMOIndia) August 10, 2025
In the last 11 years, our economy has risen from 10th place to the top five.
We are now moving rapidly towards becoming one of the top three economies: PM @narendramodi pic.twitter.com/r2Vk2v7yVD
The journey to a Viksit Bharat will move forward hand in hand with Digital India. pic.twitter.com/X2A5SvxgmS
— PMO India (@PMOIndia) August 10, 2025
Our next big priority should be becoming self-reliant in tech. pic.twitter.com/vTodl7SVeh
— PMO India (@PMOIndia) August 10, 2025


