நண்பர்களே,
உலகளாவிய அமைதியும் பாதுகாப்பும் வெறும் இலட்சியங்கள் மட்டுமல்ல, மாறாக அவை நமது பகிரப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளமாகும். அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மனித சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் ஒன்றாக முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
பயங்கரவாதம் தற்போது மனித சமூகம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவாலாகும். இந்தியா சமீபத்தில் ஒரு கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலைச் சந்தித்தது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு மனித சமூகத்திற்குமான தாக்குதலாகும். துயரமான இந்த நேரத்தில், எங்களுக்கு ஆதரவையும் இரங்கலையும் தெரிவித்த நட்பு நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்வது கொள்கை ரீதியான அம்சமாக இருக்க வேண்டுமே தவிர, வசதிக்காக மட்டும் கூடாது. தாக்குதல் எங்கு அல்லது யாருக்கு எதிராக நடந்தது என்பதைப் பொறுத்து நமது நடவடிக்கை இருந்தால், அது மனித சமூகத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.
நண்பர்களே,
பயங்கரவாதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆதரவாளர்களையும் சமமாக நடத்த முடியாது. தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காக, பயங்கரவாதத்திற்கு அமைதியாக ஒப்புதல் அளிப்பது அல்லது பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பது எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. பயங்கரவாத சூழலில் நமது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது. இதைச் செய்ய முடியாவிட்டால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் நாம் தீவிரமாக இருக்கிறோமா இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
நண்பர்களே,
தற்போது, மேற்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை, முழு உலக நாடுகளும் சர்ச்சைகள் மற்றும் பதற்றங்களால் சூழப்பட்டுள்ளது. காசாவில் மனிதாபிமான நிலைமை கடுமையான கவலைக்குரியதாக உள்ளது. எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், மனித சமூகத்தின் நன்மைக்கான ஒரே வழி அமைதியின் பாதைதான் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.
இந்தியா பகவான் புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமியாகும். போர் மற்றும் வன்முறைக்கு எங்களிடம் இடமில்லை. உலகை பிரிவினை மற்றும் மோதலில் இருந்து விலக்கி வைத்து உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கிறது; மேலும் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த திசையில், அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நன்றி.
நண்பர்களே,
நிறைவாக, அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
மிக்க நன்றி.


