பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று உக்ரேன் அதிபர் திரு.வொலோடிமீர் ஜெலன்ஸ்கி-யோடு தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரேன் அதிபர் தேர்தலில், அதிபர் திரு. ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவரது “மக்கள் சேவகன் கட்சி”யின் வெற்றிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதிபர் திரு. ஜெலன்ஸ்கி, பிரம்மாண்டமான மக்கள் தீர்ப்போடு இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றதற்கு, திரு. மோடிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தியாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான நட்போடு கூடிய சுமுகமான உறவுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இருநாட்டு வர்த்தக உறவுகளின் திருப்தியான வளர்ச்சியையும் சுட்டிக்காட்டினார். பல்வேறு துறைகளில் உக்ரேனுடனான நீண்டகால ஒத்துழைப்பை கோடிட்டுக் காட்டிய அவர், உக்ரேனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான மக்களோடு மக்களுடனான இணைப்புகளை வலுப்படுத்துவதாகக் கூறினார். சென்ற ஆண்டு முதல், கீவ்-வுக்கும், தில்லிக்கும் இடையேயான நேரடி விமான சேவை தொடர்பு இவ்வுறவுகளுக்கும், சுற்றுலாவுக்கும் உத்வேகம் கொடுத்திருப்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
பரஸ்பர பலனைத் தருவதற்கு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.


