பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 ஜனவரி 18 அன்று துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 9வது அமர்வை தொடங்கி வைக்கிறார். இந்தத் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் 9வதுஅமர்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், உலகளாவிய வர்த்த நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தகத் துறையின் முன்னோடிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தத் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் 9வது அமர்வு ஒரு ‘புதிய இந்தியா’விற்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் மீது கூர்மையான கவனம் செலுத்தும் வகையில் உலகளாவிய, தேசந்தழுவிய, மாநில அளவிலான நிகழ்ச்சி நிரல்கள் குறித்த விவாதத்தை மேற்கொள்வதற்கான மேடையை வழங்குவதாக அமையும்.
துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் நிகழ்வுகளோடு கூடவே, இந்த 9வது அமர்வு, உச்சிமாநாட்டில் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையை விரிவுபடுத்துவது, பங்கேற்பாளர்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கான புத்தம்புதிய களமாக அமையும்.
துடிப்புமிக்க குஜராத் என்ற கருத்தோட்டம் முழுவதுமே திரு. நரேந்திர மோடி அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டதாகும். 2003-ம் ஆண்டில் தொடங்கிய துடிப்புமிக்க குஜராத் நிகழ்ச்சியானது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அதில் பங்கேற்று முதலீட்டை வளர்த்தெடுப்பதற்கான உலகம் தழுவியதொரு வலைப்பின்னலுக்கான மேடையாக இப்போது மாறியுள்ளது. அறிவைப் பரிமாறிக் கொள்வது, சிறப்பான கூட்டணிகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கு உதவி செய்வதாக இந்த நிகழ்வு அமைவதோடு, உலகளாவிய சமூகப் பொருளாதார வளர்ச்சியின் நிகழ்ச்சிநிரல்கள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடையாகவும் இந்த உச்சி மாநாடு உருவெடுத்துள்ளது.
2017-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 8வது அமர்வில் 4 நாடுகளின் தலைவர்கள், நோபல் பரிசு பெற்ற நிபுணர்கள், உலகளாவிய வர்த்தகத் துறையின் தலைவர்கள், தலைசிறந்த சிந்தனை நிபுணர்கள் ஆகியோர் உள்ளிட்டு 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
2019 துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளுக்கான வட்டமேஜை
இந்த வட்டமேஜை நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கல்வியாளர்களும், மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை உருவாக்கும் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த வட்டமேஜை நிகழ்வில் வெளிப்படும் விவாதங்கள் “இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுக்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் வாய்ப்புகளுக்கான வழிப்பாதை” என்ற தலைப்பில் தொகுக்கப்படும்.
எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த கண்காட்சி
விண்வெளிப் பயணத்தின் எதிர்காலம் குறித்த பார்வையை வழங்குவதாக இது அமையும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை குறித்த சர்வதேச மாநாடு
துடிப்புமிக்க குஜராத்திற்கான உலகளாவிய வர்த்தகக் கண்காட்சி
சுமார் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள, முன்னோடியான இந்த வர்த்தகக் கண்காட்சி 25 துறைகளின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதாக அமையும்.
துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் அதற்கான நடைமுறைத் திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகவும், ஆசிய கண்டத்தின் சரக்கு மாற்றலுக்கான மையப் பகுதியாக இந்தியாவை உருவாக்குவது குறித்த கருத்தரங்கம்
குஜாராத் மாநிலத்திலும் இந்தியாவிலும் போக்குவரத்து துறையின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் விவாதம் நடத்துவதாக இந்தக் கருத்தரங்கு அமையும்.
இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம்
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தின் வெற்றிக்கதைகளை, இத்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்த அரசு மேற்கொண்ட முக்கியமான தலையீடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இந்தக் கருத்தரங்கம் அமையும்.
பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொடர்பான தொழில்களில் நிலவும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்
குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் வானியல் தொழில்நுட்பங்களில் நிலவும் வாய்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்துவது; பாதுகாப்பு மற்றும் வானியல் தொழில்நுட்பங்களில் இந்தியாவும் குஜராத் மாநிலமும் ஓர் உற்பத்தி மையமாக வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பது ஆகியவையே இந்தக் கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
நகரும் தன்மையோடு கூடிய நகர்ப்புற வளர்ச்சி
முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, வாகன நிறுத்தங்களுக்கான தீர்வுகள், மின்சார ஊர்திகள், பெரும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் நகர்ப்புற வளர்ச்சியை எடுத்துச் செல்ல நகரும் தன்மையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு உகந்த நகரங்களை உருவாக்குவது குறித்த விவாதங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமையும்.
புதிய இந்தியாவை உருவாக்க நீடித்த தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் விவசாயத் துறை
புதிய இந்தியாவை உருவாக்க நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கான திறனை கண்டறிவதற்கென நெசவுத் தொழில் குறித்த சிறப்புக் கூட்டம்
மாண்புமிகு பிரதமரின் புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடைபெறும் இந்த நெசவுத் தொழிலுக்கான சிறப்புக் கூட்டத்தில் கலந்துரையாடவும், விவாதிக்கவும் இந்தியாவில் நெசவுத்தொழிலின் வளர்ச்சியை தொடர்ந்து நீட்டிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கவும், புதியதொரு இந்தியாவினை உருவாக்குவதற்கான முன்முயற்சிக்கு உதவவும் அத்தொழிலின் முக்கிய தலைவர்கள், அரசு சார்பிலான தலைவர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.


