1. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை
சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தப் பயணம் ஒரு பகிரப்பட்ட வரலாற்றை மட்டுமல்ல, கூட்டாகத் திட்டமிடப்பட்ட தொலைநோக்குப் பார்வை, பரஸ்பர நம்பிக்கை, ஒரு எதிர்கால கூட்டாண்மை ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.
இரு தலைவர்களும் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினர். இது சைப்ரஸ் மற்றும் இந்தியா இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் வலிமையையும், ஆழத்தையும் சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மக்களிடையேயான உறவுகளில் சமீபத்திய முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றனர். இது உறவின் துடிப்பான மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இரு தரப்பினரும் தங்கள் மதிப்புகள், ஆர்வங்கள், சர்வதேசக் கண்ணோட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அதிகரித்து வரும் ஒருமைப்பாட்டை ஒப்புக்கொண்டு, முக்கியத் துறைகளில் இந்தக் கூட்டாண்மையை மேலும் முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் நம்பகமான மற்றும் இன்றியமையாத கூட்டாளிகளாக சைப்ரஸும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த உறுதிபூண்டுள்ளன.
அவர்கள் பின்வரும் கூட்டுப் பிரகடனத்தை ஒப்புக் கொண்டனர்.:
2. பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் உலகளாவிய உறுதிமொழிகள்
அமைதி, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயனுள்ள பன்முகத்தன்மை, நிலையான வளர்ச்சி ஆகியவற்றிற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கான தங்கள் ஆதரவை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் சுதந்திரமான பயணம் மற்றும் இறையாண்மை கொண்ட கடல்சார் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டிற்கு குறிப்பாக முக்கியத்துவம் அளித்தனர்.
அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்கள் அசைக்க முடியாத ஆதரவை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். மத்திய கிழக்குப் பிராந்திய நிலைமை மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் விரிவான விவாதங்களை நடத்தினர். அணுசக்தி விநியோகஸ்தர் குழுவில் இந்தியா இணைவதன் மதிப்பை அங்கீகரித்து, உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை கட்டமைப்பை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைத் தலைவர்கள் வெளிப்படுத்தினர். மேலும் 2024-ம் ஆண்டு அபியா காமன்வெல்த் பெருங்கடல் பிரகடனத்தை செயல்படுத்துவதில் நெருக்கமாகப் பணியாற்றவும் ஒப்புக்கொண்டனர். இது உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மையின் தூணாக கடல் நிர்வாகத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த சூழலில், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சைப்ரஸில் தொடக்கநிலை காமன்வெல்த் பெருங்கடல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் நிலையான கடல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் திறனை வலுப்படுத்துவதற்கும் நீல சாசன சிறப்பு மையத்தை நிறுவுவதையும் குறித்தது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுமத்தை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், சமகால புவிசார் அரசியல் சவால்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வழிகள் உட்பட அதன் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுமம் சீர்திருத்தம் குறித்த அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தலைவர்களும் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் ஒப்பந்தம் அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை நோக்கிச் செல்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுமத்தின் விரிவாக்கத்தின் பிரதிநிதித்துவ தன்மையை மேம்படுத்துவதற்கான தனது ஆதரவை சைப்ரஸ் மீண்டும் வலியுறுத்தி விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுமத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக தனது ஆதரவை தெரிவித்தது.
இரு தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையில் நெருக்கமான ஒத்துழைப்பில் ஈடுபடவும், பலதரப்பு மன்றங்களில் ஒருவருக்கொருவர் அவர்கள் வேட்பாளர்களை ஆதரிப்பதற்கும் உட்பட ஒப்புக்கொண்டனர்.
3. அரசியல் உரையாடல்
இரு தரப்பினரும் வழக்கமான அரசியல் உரையாடல்களை நடத்தவும், சைப்ரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையில் உள்ள இருதரப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்பை நெறிப்படுத்தவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். மேற்கூறிய தகுதிவாய்ந்த அமைச்சகங்கள், இரு நாடுகளின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், தயாரிக்கப்பட வேண்டிய செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை மதிப்பாய்வு செய்து செயல்படுத்துவதைக் கண்காணிக்கும்.
4. இறையாண்மை மற்றும் அமைதிக்கான ஆதரவு
சைப்ரஸ் பிரச்சனைக்கு ஒரு விரிவான மற்றும் நீடித்த தீர்வை அடைவதற்கான ஐ.நா.வின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கு சைப்ரஸும் இந்தியாவும் தங்கள் வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
சைப்ரஸ் குடியரசின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு இந்தியா தனது அசைக்க முடியாத மற்றும் நிலையான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
5. பாதுகாப்பு, ராணுவம் மற்றும் நெருக்கடி ஒத்துழைப்பு
சர்வதேச மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தையும் வன்முறை தீவிரவாதத்தையும் சைப்ரஸும் இந்தியாவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தன. மேலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு சைப்ரஸ் ஒற்றுமையையும், அசைக்க முடியாத ஆதரவையும் தெரிவித்தது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இரு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான தங்கள் அணுகுமுறையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர், எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற செயல்களுக்கான எந்தவொரு நியாயப்படுத்தலையும் நிராகரித்தனர். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்குமாறு அனைத்து நாடுகளையும் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் அனைத்து வகையான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் கண்டித்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கான கட்டமைப்புகளை சீர்குலைக்கவும், பாதுகாப்பான புகலிடங்களை அழிக்கவும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றவும், பயங்கரவாதக் குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். எல்லைகளுக்கு அப்பால் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய அவர்கள், ஒத்துழைப்புடன், இருதரப்பு ரீதியாக மற்றும் பலதரப்பு அமைப்புடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பலதரப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும் ஐ.நா. கட்டமைப்பிற்குள் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாட்டை விரைவாக இறுதி செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். 1267 ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விதித்துள்ள தடைகளின் கீழ் வரும் பயங்கரவாதிகள் உட்பட, அனைத்து ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத நிறுவனங்கள், தொடர்புடைய பிரதிநிதி குழுக்கள், அவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்போர் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் மீது ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்களை சீர்குலைக்க ஐ.நா. மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு மூலம் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
சர்வதேச பாதுகாப்பு சூழலில் உருவாகி வரும் சவால்களை ஒப்புக்கொண்ட தலைவர்கள், உத்திசார்ந்த தன்னாட்சி, பாதுகாப்பு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், அந்தந்த பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம், அவர்களின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவையும் சைப்ரஸையும் ஆழமான கடற்படை மரபுகளைக் கொண்ட கடல்சார் நாடுகள் என்று அங்கீகரித்த தலைவர்கள், கடல்சார் களத்தையும் உள்ளடக்கிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதித்தனர். அவர்கள் இந்திய கடற்படைக் கப்பல்களின் வழக்கமான துறைமுக பயணங்களை ஊக்குவிப்பார்கள். மேலும் கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த கூட்டு கடல்சார் பயிற்சி மற்றும் ஏனைய பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை ஆராய்வார்கள்.
அந்த வகையில், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அவசரகாலத் தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த நெருக்கடி சூழலில் உதவுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டனர். கடந்த கால வெற்றிகரமான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வெளியேற்றம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
6. இணைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு
சைப்ரஸும் இந்தியாவும் பிராந்தியங்களுக்கு இடையே பாலங்களாகச் செயல்படும் ஒரு திட்டமிட்ட தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றன. அமைதி, பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்க்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், பல்-முனை முயற்சியாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். ஆக்கபூர்வமான பிராந்திய ஒத்துழைப்புக்கான ஒரு ஊக்கியாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைக் கருதி, கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் பரந்த மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும் இந்திய தீபகற்பத்திலிருந்து பரந்த மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவிற்கு இடையேயான ஆழமான ஈடுபாடு மற்றும் உள்வழித்தடங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
ஐரோப்பாவிற்கான நுழைவாயிலாக சைப்ரஸின் பங்கை அங்கீகரித்த அதே வேளையில், போக்குவரத்து, சேமிப்பு, விநியோகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துகளுக்கான பிராந்திய மையமாக செயல்படும் வாய்ப்பையும் அவர்கள் அங்கீகரித்த அதே நிலையில், இந்திய கப்பல் நிறுவனங்கள் சைப்ரஸில் ஒரு இருப்பை நிறுவுவதற்கான வாய்ப்பை வரவேற்றனர். இது சைப்ரஸை தளமாகக் கொண்ட மற்றும் இந்திய கடல்சார் சேவை வழங்குநர்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சிகள் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இது பொருளாதார மற்றும் சரக்குப் போக்குவரத்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு வழியாகும்.
7. ஐரோப்பிய யூனியன்–இந்திய உத்திசார்ந்த ஈடுபாடு
2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய யூனியன் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை சைப்ரஸ் ஏற்பதை எதிர்நோக்கி, இரு தலைவர்களும் ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தியாவிற்கு ஐரோப்பிய ஆணைய உறுப்பினர்கள் வருகை தந்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் முதலாவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திபூர்வ உரையாடல் தொடங்கப்பட்டதற்கும், வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார், இணைப்பு, தூய்மையான மற்றும் பசுமை எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட முன்னுரிமைப் பகுதிகளில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் திருப்தி தெரிவித்தனர்.
சைப்ரஸ் தலைமைத்துவமாக இருந்தபோது ஐரோப்பிய யூனியன்-இந்தியா உத்திசார்ந்த கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு பாடுபடுவதாக உறுதியளித்தது. ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினரும் ஆதரவளிக்க தயாராக இருப்பது அதன் மகத்துவம் மிக்க பொருளாதார மற்றும் உத்திசார்ந்த திறனை அங்கீகரிக்கிறது.
ஐரோப்பிய யூனியன்-இந்தியா வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமம் மூலம் நடைபெற்று வரும் பணிகளுக்கு அவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் இந்த முக்கிய உலகளாவிய கூட்டாண்மையை ஆழப்படுத்த 2025 திட்டத்திற்கு அப்பால் ஒரு எதிர்கால திட்டத்தை ஏற்படுத்த உறுதிபூண்டனர்.
8. வர்த்தகம், புத்தாக்க கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வாய்ப்பு
சைப்ரஸ் மற்றும் இந்தியா இடையே வளர்ந்து வரும் திட்டமிட்ட கொள்கைகளை அங்கீகரித்த தலைவர்கள், அறிவியல், புதுமை கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த உறுதியளித்தனர்.
ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, வணிக பிரதிநிதிகள் உட்பட சைப்ரஸ் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதையும், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த சைப்ரஸ்-இந்தியா வணிக மன்றத்தை அமைப்பதையும் வரவேற்பதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். திட்டமிட்ட பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்த சைப்ரஸ்-இந்தியா வணிக வட்ட மேசை மாநாட்டிலும் இரு தலைவர்களும் உரையாற்றினர்.
ஆராய்ச்சி, புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற முக்கிய துறைகளில் புதுமை கண்டுபிடிப்புகள், பரிமாற்றங்களை ஆதரிப்பதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
9. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகள்
இரு தலைவர்களும் மக்களுக்கு இடையேயான உறவுகளை ஒரு உத்திசார்ந்த சொத்தாகவும், பொருளாதார, கலாச்சார உறவுகளை ஆழப்படுத்துவதற்காக செயல்படும் பன்முக செயல்பாடுகளாகவும் அங்கீகரித்தனர். 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு போக்குவரத்துத் திட்ட ஏற்பாட்டை இறுதி செய்ய இரு தரப்பினரும் பணியாற்றுவார்கள்.
கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகள் மூலம் பரஸ்பர புரிதலை வளர்ப்பதன் மதிப்பை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சைப்ரஸ் மற்றும் இந்தியா இடையே நேரடி விமான போக்குவரத்தை இணைப்பை ஏற்படுத்துவதற்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும், இருதரப்பு பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கும் பகிரப்பட்ட கூட்டாளிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட விமான வழித்தடங்களை ஆராய்வதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
10. எதிர்காலம்: 2025-2029 செயல் திட்டம்
இந்தக் கூட்டுப் பிரகடனம் சைப்ரஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்திபூர்வ பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும், இந்த கூட்டாண்மை தொடர்ந்து செழித்து, தங்கள் பிராந்தியங்களிலும் அதற்கு அப்பாலும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
சைப்ரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியக் குடியரசின் வெளியுறவு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சைப்ரஸ் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் வகையில் ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.


