The Somnath Temple stands as a beacon of unwavering faith, divinity and a sacred symbol of India’s eternal soul: PM
The restoration of the Somnath Temple on this exact day 75 years ago was no ordinary occasion; If India attained independence in 1947, then the consecration of Somnath in 1951 proclaimed the independent spirit of India: PM
The Somnath Amrit Mahotsav will serve as India's guiding inspiration for the next thousand years: PM
Looters tried to destroy the magnificence of the Somnath temple;Thinking of Somnath as nothing but a physical edifice, they kept striking against it; The temple was broken repeatedly, yet it was rebuilt time and again, standing tall after every fall: PM
Not only was the Somnath temple reconstructed, but the country also washed away the blemish of centuries: PM
Somnath serves as a reminder that a nation can sustain its strength over time only if it remains connected to its roots: PM

சோமநாநாதருக்கு அரோகரா!

சோமநாநாதருக்கு அரோகரா!

ஹர ஹர மகாதேவ்!

குஜராத் முதல்வர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, துணை முதல்வர் பாய் ஹர்ஷ் சங்கவி அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, மதிப்புக்குரிய சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று, பிரபாஸ் பாதனின் இந்த புனித பூமி ஒரு தெய்வீக ஒளியால் நிறைந்துள்ளது. மகாதேவனின் இந்த தரிசனம், இந்த எழில் கொஞ்சும் அழகு, பூமியிலிருந்தும் வானத்திலிருந்தும் பொழியும் மலர்மாரி, காவிக்கொடிகளின் அசைவாட்டம், கலை, இசை மற்றும் நடனத்தின் அற்புதம், வேத மந்திரங்களின் முழக்கம், கருவறையில் தடையின்றி ஒலிக்கும் 'சிவ பஞ்சாட்சர' மந்திர உச்சாடனம், இவை அனைத்தோடும் இணைந்து முழங்கும் கடல் அலைகளின் பேரொலி – என ஒட்டுமொத்தப் படைப்பும் ஒரே குரலில் பேசுவது போல் உணர்கிறேன்: சோமநாநாதருக்கு அரோகரா! சோமநாதரின் பெருமை ஓங்குக!

 

காலத்தை உருவாக்குபவரும், என்றும் நிலைத்திருப்பவரும், காலத்தின் வடிவமாகவே திகழ்பவரும், யாருடைய விருப்பத்தால் இந்த அகிலம் படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, இறுதியில் யாருக்குள் ஒடுங்குகிறதோ, அந்த மகாதேவனின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் 75-ஆம் ஆண்டை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

“யதோ ஜாயதே பால்யதே யேன விஸ்வம், தமிஷம் பஜே லீயதே யத்ர விஸ்வம்.” இதன் பொருள்: எந்த இறைவனிடமிருந்து இந்த உலகம் தோன்றி, எவராலே காக்கப்பட்டு, இறுதியில் எவரிடத்தில் ஒடுங்குகிறதோ, அந்த ஈசனை நான் வணங்குகிறேன்.

இன்று நாம் அவர்தம் புனிதமான திருத்தலம் மறுநிர்மாணம் செய்யப்பட்டதைக் கொண்டாடுகிறோம். நஞ்சினை உண்டு நீலகண்டனாக மாறிய அந்த ஈசனின் புகலிடத்தில், இந்த சோமநாத் அமிர்த மஹோத்சவம் இன்று கொண்டாடப்படுகிறது. இவை யாவும் அந்த சதாசிவ மூர்த்தியின் தெய்வீக லீலையே அன்றி வேறில்லை.

நண்பர்களே,

சோமநாதரின் தீவிர பக்தனாக, நான் இந்தத் தலத்திற்கு எண்ணற்ற முறை வந்திருக்கிறேன், பலமுறை தலைவணங்கிப் பிரார்த்தனை செய்திருக்கிறேன். ஆனால் இன்று இங்கு வரும்போது, காலத்தைக் கடந்த இந்தத் பயணம் எனக்குள் ஒரு தனித்துவமான, பேரின்ப உணர்வைத் தந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் நாம் 'சோமநாத் சுவாபிமான் பர்வ்' (சோமநாத் சுயமரியாதை விழா) கொண்டாடியபோது நான் இங்கு வந்திருந்தேன். இந்த ஆலயம் முதன்முதலில் அழிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், சோமநாதரின் அழியாத பெருமையை நாம் கொண்டாடினோம்; இன்று இந்த நவீன வடிவத்தின் 75-ஆம் ஆண்டு சிலை பிரதிஷ்டை தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் வெறும் இரண்டு விழாக்களில் மட்டும் பங்கேற்கவில்லை; சிவபெருமான் நமக்கு ஆயிரம் ஆண்டுகால அழியாத ஆன்மீகப் பயணத்தை உணரும் நல்வாய்ப்பை வழங்கியுள்ளார்.

நண்பர்களே,

75 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. 1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது என்றால், 1951-ம் ஆண்டில் நடைபெற்ற சோமநாத் ஆலயப் பிரதிஷ்டையானது இந்தியாவின் சுதந்திர ஆன்மாவின் விழிப்பை உலகிற்குப் பிரகடனப்படுத்தியது. சுதந்திரத்தின் போது, சர்தார் வல்லபாய் படேல் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே நவீன இந்தியாவை உருவாக்கினார். அதே வேளையில், சோமநாத் ஆலய மறுநிர்மாணத்தின் மூலம், இந்தியா வெறும் விடுதலை மட்டும் பெறவில்லை—தனது பண்டைய காலப் பெருமைகளை மீட்டெடுக்கும் பாதையிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதை அவர் உலகிற்கு உணர்த்தினார்.

நண்பர்களே,

எனவே, இந்த நன்னாளில் நான் 75 ஆண்டுகளின் சுவடுகளை மட்டும் பார்க்கவில்லை. அழிவுகளுக்கு மத்தியிலும் புதிய படைப்பை உருவாக்கும் சோமநாதரின் அசைக்க முடியாத உறுதியை நான் இங்கு காண்கிறேன். பொய்மையின் மீது வாய்மை பெற்ற வெற்றியை, பிரபாஸ் பாதன் மீண்டும் மீண்டும் வாழ்ந்து காட்டியதை நான் இங்கு காண்கிறேன். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வை உலகிற்குப் போதித்த ஆயிரக்கணக்கான ஆண்டுகால ஆன்மீக விழிப்புணர்வை நான் இங்கு காண்கிறேன். நூற்றாண்டுகளாகப் பல தீய சக்திகள் முயன்றும், அழிக்கவோ தோற்கடிக்கவோ முடியாத இந்தியாவின் அந்த அழியாத ஆன்மாவை நான் இங்கு காண்கிறேன். மேலும், இந்த சோமநாத் அமிர்த மஹோத்சவம் என்பது கடந்த காலத்தைக் கொண்டாடும் ஒரு விழா மட்டுமல்ல; இது இந்தியாவின் அடுத்த ஆயிரம் ஆண்டுகாலப் பயணத்திற்கான ஒரு மாபெரும் எழுச்சி விழா என்பதையும் நான் காண்கிறேன். இந்தத் தருணத்தில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் மற்றும் சோமநாத் தாதாவின் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய நாள் மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் விசேஷமானது. இதே நாளில், அதாவது 1998-ம் ஆண்டு மே 11 அன்று, இந்தியா பொக்ரானில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. மே 11 அன்று, நாடு தனது முதல் மூன்று அணு ஆயுதச் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. நமது விஞ்ஞானிகள் இந்தியாவின் வலிமையையும் திறமையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டினர், அது உலகளவில் ஒரு மிகப்பெரிய புயலையே கிளப்பியது. இந்தியா எவ்வாறு அணு ஆயுதச் சோதனைகளை நடத்தத் துணியலாம் என்று உலக நாடுகள் கோபத்துடன் எதிர்வினையாற்றின. இந்தியாவின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த நாடுகள் முன்வந்தன. பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. பொருளாதார ஸ்திரத்தன்மைக்குச் செல்லும் பாதைகள் முடக்கப்பட்டன. இத்தகைய கடுமையான அழுத்தத்தின் கீழ் எவர் ஒருவரும் நிலைதடுமாறிப் போயிருக்கக் கூடும். ஆனால், நாம் வலிமையானவர்கள், அந்த நடவடிக்கைகள் நம் உறுதியில் அசைக்க இயலவில்லை.

மே 11-க்குப் பிறகு, உலகமே நமக்கு எதிராகத் திரும்பியது. விஞ்ஞானிகள் தங்களது பணியை மே 11 அன்று செய்து முடித்திருந்தனர்; ஆனால், இந்தியாவின் அரசியல் துணிச்சல் எவ்வளவு உறுதியானது என்பதை உலகிற்குக் காட்டும் வகையில், மே 13 அன்று மேலும் இரண்டு அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டன. உலகளாவிய அழுத்தங்கள் இருந்தபோதிலும், அடல் ஜி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு, நமக்கு எப்போதுமே 'நாடே முதன்மை' என்பதை நிரூபித்துக் காட்டியது. உலகிலுள்ள எந்தவொரு சக்தியாலும் இந்தியாவை வளைக்கவோ அல்லது பணிய வைக்கவோ முடியவிலை.

நண்பர்களே,

பொக்ரான் அணு ஆயுதச் சோதனைகளுக்கு "ஆபரேஷன் சக்தி" என்று பெயரிடப்பட்டது. ஏனெனில், சிவபெருமானோடு இணைந்து சக்தியையும் வழிபடுவது என்பது எப்போதுமே நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் சிவபெருமான், சக்தியோடு இணையும்போதுதான் முழுமையடைகிறார். இந்தியாவின் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியபோது, அந்த ரோவர் நிலவில் கால் பதித்த இடத்திற்கு நாம் "சிவ சக்தி புள்ளி" என்று பெயரிட்டதை நீங்கள் நினைவூட்டிப் பார்க்கலாம். நமது நம்பிக்கையின்படி, சந்திரன் சிவபெருமானோடு தொடர்புடையவர், சிவபெருமான் சக்தியோடு தொடர்புடையவர். இந்த ஜோதிர்லிங்கமே சோமநாதர் என்று அழைக்கப்படுவது எவ்வளவு அற்புதமானது—ஏனெனில் இது 'சோமா' எனப்படும் சந்திரனுடன் தொடர்புடையதாகும்.

சிவபெருமான் மற்றும் சக்தியை நாம் வழிபடும் தத்துவமானது, தற்போது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் உந்துசக்தியாக மாறியுள்ளது. இந்த உன்னதமான நன்னாளில், சோமநாதப் பெருமானின் புனிதமான திருவடிகளிலிருந்து, 'ஆபரேஷன் சக்தி'யின் அணு ஆயுதச் சோதனை தினத்தை முன்னிட்டு நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த முறை நான் இங்கு வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன்: அமுதம் மற்றும் அழியாத்தன்மை என்ற பொருளைத் தரும் "சோம்" என்ற சொல்லைத் தன் பெயரிலேயே தாங்கியிருக்கும் ஒன்று, எவ்வாறு எப்போதாவது அழிய முடியும்? வரலாறு நெடுகிலும் இந்தத் திருத்தலம் எண்ணற்ற படையெடுப்புகளை எதிர்கொண்டுள்ளது. முகமது கஜினி, அலாவுதீன் கில்ஜி போன்ற படையெடுப்பாளர்கள் சோமநாதரின் பிரம்மாண்டத்தை முற்றிலுமாக அழித்துவிட முயன்றனர். அவர்கள் சோமநாத்தை வெறும் ஒரு சாதாரணக் கட்டிட அமைப்பாக மட்டுமே கருதி, அதன் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தினர். மீண்டும் மீண்டும் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது—ஆனால் ஒவ்வொரு முறையும் அது முன்பை விடப் பொலிவோடு கம்பீரமாக எழுந்து நின்றது.

இதனை அழிக்க முயன்றவர்கள் நமது நாகரிகத்தின் உன்னதமான சித்தாந்த வலிமையைப் புரிந்து கொள்ளவில்லை. நாம் இந்த உலகில் உடலை மட்டுமே அழியக்கூடியதாகக் கருதுகிறோம்; ஆனால் அதற்குள் இருக்கும் ஆன்மா அழியாதது என்பதை நாம் அறிவோம். சிவபெருமான் என்பவரோ பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவாகத் திகழ்பவர். எனவேதான், சிவபெருமான் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் மூலம் வெளிப்பட்டார். போஜராஜன், முதலாம் பீம்தேவ், குமாரபாலர், முதலாம் மகிபாலர் மற்றும் ராவ் கங்கார் போன்ற மாமன்னர்கள் சோமநாதர் ஆலயத்தை மீண்டும் மீண்டும் புனரமைத்துக் கட்டினர். லகுலீசர் மற்றும் சோம் சர்மா போன்ற மாபெரும் சிந்தனையாளர்கள் பிரபாஸ் பாதனின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனைச் சைவ தத்துவம் மற்றும் ஆன்மீக வழிபாட்டின் ஒரு மாபெரும் மையமாக மாற்றினர். பவ பிரஹஸ்பதி, பாசுபத ஆச்சாரியர்கள் மற்றும் பல அறிஞர்கள் இந்தத் திருத்தலத்தின் ஆன்மீகப் பாரம்பரியங்களைத் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருந்தனர். விஷால் தேவா மற்றும் திரிபுராந்தகர் போன்ற ஆளுமைகள் இப்பகுதியின் அறிவுசார் விழிப்புணர்வைப் பாதுகாத்தனர்.

நண்பர்களே,

வீர ஹமிர்ஜி கோஹில், வீர வேகட்ஜி பில், புண்யஸ்லோக் அகில்யாபாய் ஹோல்கர், பரோடாவின் கெய்க்வாட்கள், ஜாம் சாஹிப் மகாராஜா திக்விஜய் சிங் ஜி—எனப் பல மாபெரும் ஆளுமைகள் தங்களது அனைத்தையும் சோமநாதரின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளனர். இன்று, நான் சர்தார் வல்லப்பாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு. கே. எம். முன்ஷி மற்றும் அறியப்பட்ட, அறியப்படாத அனைத்து உன்னத ஆன்மாக்களையும் மரியாதையுடன் தலைவணங்கி நினைவுகூர்கிறேன். அவர்களின் நினைவு, நமது கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்த நமக்கு ஊக்கமளிப்பது மட்டுமன்றி, இந்தப் பொறுப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் நமக்கு வழிகாட்டுகிறது.

நண்பர்களே,

நமது கலாச்சாரத் தலங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. இவ்வளவு வளமான பாரம்பரியத்தை நாம் பரம்பரையாகப் பெற்றிருந்தும், முரண்பாடான விஷயம் என்னவென்றால், பல தசாப்தங்களாக நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம். உலகெங்கிலும், வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தோடு தொடர்புடைய இடங்களை அழித்ததற்கான பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், அந்த நாட்டு மக்களுக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த அடையாளங்களை மீண்டும் மீட்டெடுத்துப் பெருமைப்படுத்தினர்.

இருப்பினும், நமது நாட்டில் தேசியப் பெருமிதம் சார்ந்த விஷயங்கள்கூட அரசியலாக்கப்பட்டன. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சோமநாதர் ஆலயமே ஆகும். சுதந்திரத்திற்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய முதல் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று சோமநாதர் ஆலயப் புனரமைப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், சர்தார் வல்லபாய் படேலும், டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் இதற்காக மிகவும் உறுதியான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், நேரு ஜி அவர்களிடம் இருந்து அவர்கள் எவ்வளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நான் இன்று அதன் விரிவான விபரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை, ஆனால் சர்தார் படேல் அவர்களின் அசைக்க முடியாத உறுதியின் காரணமாகவே, இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது, அதன் மூலம் இந்த நாடு பல நூற்றாண்டுகால அவமானத்தைத் துடைத்தெறிந்தது.

நண்பர்களே,

துரதிர்ஷ்டவசமாக, இன்றும் கூட நம் நாட்டில் தேசியப் பெருமிதத்தை விடத் தங்களது திருப்திப்படுத்தும் அரசியலே முக்கியம் எனக் கருதும் சில சக்திகள் இருக்கவே செய்கின்றன. ராமர் கோவில் கட்டுமானத்தின் போதும், அதற்கு எழுந்த எதிர்ப்புகளின் வழியாக நாம் இதனைப் பார்த்தோம். இத்தகைய குறுகிய மனப்போக்கு கொண்டவர்களிடம் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் இத்தகைய குறுகிய அரசியலைக் கடந்து செல்ல வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்தே நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

நண்பர்களே,

சமீபத்திய ஆண்டுகளில், சோமநாத் அறக்கட்டளையின் தலைவராக இருந்து சோம்நாத் தாதாவிற்குச் சேவை செய்யும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த ஆலயத்தின் மற்றும் இப்பகுதியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் இன்று நம் கண் முன்னே சாட்சியாக நிற்கின்றன. அதே வேளையில், இந்தச் சேவையானது எனக்குத் தனிப்பட்ட முறையிலும் பெரும் பலனை அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் உள்ள புனிதமான ஆன்மீகத் திருத்தலங்களை மேம்படுத்துவதற்கு எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பானது, அந்த சோமநாதப் பெருமானின் பேரருள் அன்றி வேறில்லை.

நண்பர்களே,

இன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு காசி விஸ்வநாதர் தளம்  ஒரு மாபெரும் விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இன்று உஜ்ஜைனியில், கம்பீரமான மாபெரும் காலத்தின் பெரு உலகம் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். கேதார்நாத் திருத்தலமும் மிகச் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, அயோத்தியில் 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்து, குழந்தை ராமர்  இப்போது அங்குள்ள ஒரு மாபெரும் ஆலயத்தில் பவ்யமாக வீற்றிருக்கிறார்.

நண்பர்களே,

புராணங்களில் மட்டுமே நாம் பெருமையோடு கேட்டு வியந்த, எண்ணற்ற ஆன்மீகத் திருத்தலங்கள், மடங்கள், கோவில்கள் மற்றும் ஆன்மீகப் பகுதிகள் இன்று நம் கண் முன்னே அந்த உன்னத பாரம்பரியத்தோடு மீண்டெழுவதை நாம் காணத் தொடங்கியுள்ளோம். இவை அனைத்தும் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் சாத்தியமாகியுள்ளன.

நண்பர்களே,

நமது கலாச்சார மையங்கள் அலட்சியப்படுத்தப்பட்டது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. நமது ஆன்மீகத் திருத்தலங்கள் என்பது இந்தியாவின் ஆன்மீக மற்றும் சமூக ஒழுங்கிற்கான மையங்கள் மட்டுமின்றி அவை பொருளாதார முன்னேற்றத்திற்கான வாழ்வாதார மூலங்களுமாகும். இன்று 'சார் தாம்' நெடுஞ்சாலைத் திட்டம், கோவிந்த்காட் முதல் ஹேமகுண்ட் சாஹிப் வரையிலான ரோப்வே திட்டம், கர்தார்பூர் வழித்தடம் மற்றும் புத்த மதச் சுற்றலாத் தலங்களின் மேம்பாடு போன்ற திட்டங்கள் ஆன்மீகப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை வெகுவாக அதிகரித்துள்ளன.

இதற்குச் சோம்நாத் வளாகமே ஒரு வலுவான உதாரணம். இன்று நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சோமநாத் கோவில் அறக்கட்டளையோடு இணைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இப்பகுதியுடன் பிணைந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் இங்கு வரும் மக்கள், குஜராத்தின் பிற பகுதிகளுக்கும் பயணம் செய்கிறார்கள். இது மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் புதிய வளர்ச்சிப் பாதைகளைத் திறந்து விடுகிறது.

நண்பர்களே,

நமது நம்பிக்கை நமக்கு எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. நாம் எப்போதும் இதனை முழுமையாக நம்புகிறோம்: “ஸர்வம் கல்விதம் பிரம்மா.” இதன் பொருள்: இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனின் வடிவமே ஆகும்.  இதன் பொருள், இந்த அகிலத்தின் ஒவ்வொரு அங்கமும், ஒட்டுமொத்த இயற்கையும் அந்த இறைவனின் வடிவமே என்பதாகும். அதனால்தான் நதிகளையும் மரங்களையும் நாம் தெய்வமாக வழிபடுகிறோம். காடுகளை நாம் பக்திபூர்வமாகப் பார்க்கிறோம். மலைகளிலும் நாம் புனிதத்தைக் காண்கிறோம். இன்று ஒட்டுமொத்த உலகமும் மீண்டும் இயற்கையான வாழ்வியலை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், நாமும் நமது இந்த உன்னத வலிமையை உணர்ந்து கொள்ள வேண்டும். நமது ஆன்மீகத் திருத்தலங்களையும் ஆலயங்களையும் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் தூய்மையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதே வேளையில், நமது புனிதத் தலங்களை ஒட்டுமொத்த உலகிற்குமே முன்மாதிரியாக நாம் மாற்ற வேண்டும். இந்த உறுமொழிகளை நமது ஆன்மீக நம்பிக்கையோடு இணைத்து நாம் வாழ வேண்டும்.

நண்பர்களே,

புதிய தலைமுறையினர் தங்களது வரலாறு, ஆன்மீக நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களோடு தங்களை இணைத்துக் கொள்ளும்போது, நாட்டின் சுயநம்பிக்கை மேலும் வலுவடைகிறது. இன்று இந்தியா எந்தவொரு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறதோ, அது நமது இந்தத் தொடர்ச்சியான கலாச்சாரப் பாரம்பரியத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நவீனத்துவமும் பாரம்பரியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல, அவை இரண்டும் கைகோர்த்து ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.

ஒரு நாடு தன் வேர்களுடன் இணைந்திருக்கும் போது மட்டுமே—தன் கலாச்சாரப் பாரம்பரியத்தை அதே நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும்போது மட்டுமே—நீண்ட காலத்திற்கு வலிமையுடன் திகழ முடியும் என்பதை சோமநாதர் நமக்கு நினைவூட்டுகிறார். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்ற போது, இந்தியா தனது புதிய விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கியது. இன்று, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆன்மீகப் பயணம் இன்னும் விரிவான வடிவத்தில் நம் கண்முன்னே நிற்கிறது. இதனை நாம் இன்னும் உன்னதமான உயரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நமது இந்தத் தூய லட்சியங்களை நிறைவேற்றுவதில் சோமநாத் தாதாவின் பேரருள் எப்போதும் நமக்குத் துணையாக இருக்கட்டும். இந்த நன்னாளிலே, நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் மற்றும் நமது பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு இணைந்து முழங்குங்கள்—

சோமநாநாதருக்கு அரோகரா!

சோமநாநாதருக்கு அரோகரா!

ஹர ஹர மகாதேவ்!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Rs 6,000 Crore Earned, 12.33 Crore Sq Ft Freed: Inside Government's Big Clean-Up

Media Coverage

Rs 6,000 Crore Earned, 12.33 Crore Sq Ft Freed: Inside Government's Big Clean-Up
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 24, 2026
August 24, 2026

Beyond Announcements: Real Milestones Proving India’s Rise Across Defence, Tech & Economy Under the Leadership of PM Modi