பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) காலை 9 மணிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
பசுமைப் புரட்சி, இயற்கையுடன் இயைந்த வாழ்வியல் முறை என்ற கருபொருளுடன் நடைபெறும் இந்த மாநாடு அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பேராசிரியர் சுவாமிநாதனின் அர்ப்பணிப்புடன் கூடிய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த மாநாடு அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வழங்கும் தளமாகவும் பசுமை புரட்சிக்கான எதிர்கால கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கும் தளமாகவும் அமைகிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கான நீடித்த மேலாண்மை மற்றும் இயற்கை வளங்கள் உள்ளிட்ட முக்கிய கருப்பொருள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஊட்டச் சத்துப் பாதுகாப்பு மற்றும் உணவுக்கான நீடித்த வேளாண் நடைமுறைகள், பருவநிலையைத் தாங்கி வளரக்கூடிய பயிர் வகைகள், கால்நடைகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான தொழில்நுட்ப பயன்பாடு, இளையோர், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் உலக அறிவியல் நிறுவனம் இணைந்து உணவு மற்றும் அமைதிக்கான எம் எஸ் சுவாமிநாதன் விருதை அறிமுகம் செய்ய உள்ளன. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி முதல் விருதை விருதாளருக்கு வழங்குகிறார்.
உணவுப் பாதுகாப்பு, மேம்பட்ட பருவநிலைக்கான நடைமுறைகள், சமத்துவம் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான அமைதி, கொள்கை மேம்பாடு, அடித்தட்டு மக்களுக்கான முன்னேற்ற நடவடிக்கைகள் அல்லது உள்நாட்டு திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த சர்வதேச விருது வழங்கப்படுகிறது.


