போபாலில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயர் பயபக்தியுடன் நம் மனதில் தோன்றுகிறது. அவரது சிறந்த ஆளுமை குறித்து பேசுவதற்கு வார்த்தைகள் போதாது: பிரதமர்
தேவி அஹில்யாபாய் இந்தியப் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலர்: பிரதமர்
நாட்டைக் கட்டமைப்பதில் பெண் சக்தியின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சின்னமாக மாதா அஹில்யாபாய் திகழ்கிறார்: பிரதமர்
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு முன்னேற்றத்திற்கான அச்சாணியாக மாற்றுகிறது: பிரதமர்
நமோ ட்ரோன் சகோதரி பிரச்சாரம் கிராமப்புற பெண்களை ஊக்குவித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்கிறது: பிரதமர்
இன்று, நாட்டின் அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டில் உள்ள பெண் சக்தியின் வலிமையின் அடையாளமாக மாறியுள்ளது: பிரதமர்

லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.

இன்றைய நிகழ்வு அவரது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளதாகவும், அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதையும், டாடியா மற்றும் சத்னாவிற்கு விமான போக்குவரத்து இணைப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும், வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அனைவருக்கும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் பெயரைக் கேட்டதும் ஆழ்ந்த மரியாதை செலுத்திய திரு. நரேந்திர மோடி, அவரது குறிப்பிடத்தக்க ஆளுமையை விவரிப்பதற்கு வார்த்தைகள் போதாது என்று கூறினார். தேவி அஹில்யாபாய் அவரது விருப்பம் மற்றும் உறுதிப்பாட்டின் வலிமையைக் குறிப்பதாக உள்ளது என்றும், பாதகமான சூழ்ல்கள் இருந்த போதிலும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை அடைய முடியும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இரண்டரை முதல் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒடுக்குமுறையால் நாடு கட்டப்பட்டிருந்தபோது, தலைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கும் அளவுக்கு ஆழமான அசாதாரண சாதனைகளைப் படைத்தது எளிதான செயல் அல்ல என்பதை திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

லோகமாதா அஹில்யாபாய் ஹோல்கர் தெய்வீக சேவையையும் மக்கள் சேவையையும் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை என்பதை எடுத்துரைத்த பிரதமர், அவர் எப்போதும் தன்னுடன் ஒரு சிவலிங்கத்தை எடுத்துச் செல்வது குறித்து அறியப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது அவரது ஆழ்ந்த பக்தி நிலையைக் குறிப்பதாக உள்ளது. அவரது காலத்தில் உள்ள சவால்கள் குறித்த சிந்தனையுடன் பேசிய அவர், அத்தகைய சகாப்தத்தில் ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது முள் கிரீடம் அணிவதற்குச் சமமானது என்று தெரிவித்தார். இருப்பினும், லோகமாதா அஹில்யாபாய் தனது மாநிலத்தின் வளமைக்கு ஒரு புதிய பாதையை வகுத்தார். ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். "லோகமாதா அஹில்யாபாய் இந்தியப் பாரம்பரியத்தின் சிறந்த பாதுகாவலர்" என்று திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார். நாட்டின் கலாச்சாரம், கோயில்கள், புனித யாத்திரை செல்லும் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளான தருணத்தில், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகக் பிரததமர் குறிப்பிட்டார். காசி விஸ்வநாதர் உட்பட நாடு முழுவதும் ஏராளமான கோயில்களை மீட்டெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை திரு நரேந்திர மோடி விரிவாக எடுத்துரைத்தார்.

 

லோகமாதா அஹில்யாபாய் விரிவான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட வாரணாசி நகரத்திலேயே சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது பெருமை அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். "மாதா அஹில்யாபாய் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முன்மாதிரியான நிர்வாகத்தை செயல்படுத்தினார்" என்று திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் ஆகியோரின் எண்ணிக்கைகை அதிகரிக்க அவர் ஏராளமான முயற்சிகளைத் தொடங்கினார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விவசாயம், வன விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட குடிசைத் தொழில்கள், கைவினைப்பொருட்களின் உற்பத்தியை அவர் ஊக்குவித்தார். வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சிறிய கால்வாய்களை உருவாக்கி, விரிவான நீர் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு, சுமார் 250-300 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான குளங்களை அவர் கட்டினார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், பயிர்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பருத்தி, மசாலா பொருட்களின் விவசாயத்தை அவர் ஊக்குவித்தார். பழங்குடியின சமூகங்கள், நாடோடி குழுக்களுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயன்பாடற்ற  நிலத்தில் வேளாண் திட்டங்களை எளிதாக்கினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு என்ற பழங்குடியினப் பெண்ணின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக திரு நரேந்திர மோடி கூறினார். உலகப் புகழ்பெற்ற மகேஸ்வரி புடவைகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவி, நாட்டின் நெசவாளர்களுக்கு கணிசமாக பயனளிக்கும் வகையில், ஜவுளித் துறைக்கு தேவி அஹில்யாபாயின் பங்களிப்பு அளப்பரியது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஜுனாகரிலிருந்து சில சேலை நெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களை 250-300 ஆண்டுகளுக்கு முன்பு தேவி அஹில்யாபாய் இதே தொழிலைத் தொடங்க அழைத்ததாக அவர் கூறினார். “பெண்கள் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது, பெண்களின் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் விதவைகளின் மறுமணத்தை ஆதரிப்பது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்களுக்காக தேவி அஹில்யாபாய் ஹோல்கர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்றும், அவரது காலத்தில் விவாதிப்பதற்குக் கூட கடினமாக இருந்த பிரச்சினைகள் இவை” என்று திரு மோடி சுட்டிக் காட்டினார். சமூகங்களில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், தேவி அஹில்யாபாய் இந்த முற்போக்கான சீர்திருத்தங்களை வலுவாக ஆதரித்தார் என்று அவர் தெரிவித்தார்.

 

மால்வா இராணுவத்தில் ஒரு சிறப்பு பெண்கள் பிரிவை அவர் உருவாக்கியதுடன், கிராமங்களில் பெண்கள் பாதுகாப்பு குழுக்களையும்  நிறுவி, அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் போன்ற நடவடிக்கைகளை உறுதி செய்தார். “நாட்டைக் கட்டமைப்பதில் பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பின் அடையாளமாக மாதா அஹில்யாபாய் திகழ்கிறார்” என்று கூறிய பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் அவரது தொடர் ஆசிகள் கிடைக்க பிரார்த்தனை செய்தார். தாம் பெற்ற அனைத்தும் மக்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் என்றும், அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள அவரது கூற்றை நினைவு கூர்ந்த பிரதமர், மத்திய அரசு அவரது மாண்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாகவும், 'நாகரிக் தேவோ பவ' என்ற கொள்கையை ஆட்சியின் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் முன்னேற்றத்தின் மையமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஒவ்வொரு அரசின் முயற்சிகளும் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வீட்டின் உரிமையைப் பதிவு செய்துள்ள பெண்களில் பலரின் பெயர்கள் சொத்துரிமையுடன் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் முதல் முறையாக வீட்டு உரிமையாளர்களாக மாறியிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்புகள் மூலம் சுத்தமான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்து, பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க உதவிடுவதாக குறிப்பிட்ட திரு. மோடி, முன்பு கோடிக்கணக்கான பெண்களுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், கழிப்பறைகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் கிடைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். இந்த முக்கியமான அடிப்படை வசதிகள் தற்போது மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துகின்றன. முன்னதாக, பல பெண்கள் தங்களது உடல்நலம் தொடர்பான  பிரச்சினைகளை மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பெரும்பாலும் நிதி சார்ந்த கவலைகள் காரணமாக கர்ப்ப காலத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தனர் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தச் சுமையைக் குறைத்து, மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெற உதவுகிறது என்று அவர் எடுத்துரைத்தார். கல்வி மற்றும் சுகாதார சேவைகளுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நிதி சுதந்திரம் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். ஒரு பெண்ணுக்கு சொந்த வருமானம் இருக்கும்போது, அவளுடைய சுயமரியாதை மேம்படுவதுடன், முடிவெடுப்பதில் அவளுடைய பங்களிப்பு மேலும் வலுவடைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

கடந்த 11 ஆண்டுகளாக பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். 2014 - ம் ஆண்டுக்கு முன்பு, 30 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலை இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு அவர்களுக்காக ஜன் தன் வங்கிக் கணக்குகளைத் தொடங்க வசதி செய்தது. இதன் மூலம் அரசின் பல்வேறு நல்த் திட்டங்களுக்கான நிதி தற்போது நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவை பிணை இல்லாத கடன்களை வழங்கும் முத்ரா திட்டத்தின் ஆதரவுடன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 75%-க்கும் அதிகமானோர் பெண்கள்" என்று பிரதமர் கூறினார். நிதிசார் சேர்க்கையில் இந்த முயற்சியின் தாக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் 10 கோடி பெண்கள் தற்போது சுயஉதவிக் குழுக்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.

மத்திய அரசின் கணிசமான நிதி உதவியுடன் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்த திரு. மோடி, 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக அதிகாரம் அளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார். மேலும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டியுள்ளதற்கு திருப்தி தெரிவித்த அவர், கிராமங்களில் வங்கி சேவைகளுடன் மக்களை இணைக்கும் வங்கி சகிகள் பங்களிப்பு குறித்தும்  குறிப்பிட்டார். மேலும், பெண்கள் மற்றும் மகள்கள் தற்போது நாடு தழுவிய காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் தொழில்நுட்பங்களிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அந்த சகாப்தத்தைக் கடந்து நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும், பெண்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும், நவீன தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் மகள்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வைப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விவசாயத்தில் ட்ரோன் புரட்சியை  சுட்டிக்காட்டிய அவர், கிராமப்புற பெண்கள் இத்தகைய  மாற்றத்திற்கு தலைமை ஏற்று பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். "நமோ ட்ரோன் சகோதரி  முயற்சி கிராமப்புற பெண்களின் நம்பிக்கையை அதிகரித்து அவர்களின் வருமான வாய்ப்புகளை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏராளமான மகள்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் விமானிகளாக தங்களது வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டிய திரு மோடி, அறிவியல், கணிதம் போன்ற படிப்புகளில் பெண்களின் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறினார். "இன்று, நமது அனைத்து முக்கிய விண்வெளிப் பயணங்களிலும் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்" என்று திரு மோடி கூறினார், சந்திரயான்-3 திட்டத்தின் பயணத்திற்கு 100-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவில் உள்ள புத்தொழில் நிறுவனங்களில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களில், ஏறத்தாழ   45% நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராக உள்ளார் என்றும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். கொள்கைகளை வகுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், இந்த இலக்கை அடைய கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். முதன்முறையாக, இந்தியாவில் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர் இருந்ததையும், தற்போது பெண் நிதி அமைச்சர் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து நாடாளுமன்றத்திற்கு பெண்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போது 75 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு  இந்தக் கண்ணோட்டத்தை உள்ளடக்கியது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு பல ஆண்டுகள் காலதாமதங்களை எதிர்கொண்ட போதிலும், மத்திய அரசு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மத்திய அரசு ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது என்பதை அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். "இந்தியா, ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடு என்றும்,  சிந்தூரம் பெண்மையின் வலிமையைக் குறிக்கிறது" என்றும் திரு மோடி கூறினார். ராமர் பக்தியில் மூழ்கிய ஹனுமான் கூட சிந்தூரத்தால் தன்னை அலங்கரித்துக் கொண்டார் என்றும், மேலும் அது சக்தி பூஜை போன்ற சடங்கு நிகழ்ச்சிகளிலும் வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். "சிந்தூர் தற்போது இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது" என்று திரு மோடி கூறினார்.

பஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய அவர், பயங்கரவாதிகள் இந்தியர்களின் இரத்தத்தை சிந்த வைத்ததுடன், நாட்டின் கலாச்சார நெறிமுறைகள் மீதும் தாக்குதல் நடத்தி சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றதாக அவர் கூறினார். மிக முக்கியமாக, தீவிரவாதிகள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர் என்றும், மேலும் இந்த சவால் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் ஆபத்தானது என்று தெரிவித்தார். "ஆபரேஷன் சிந்தூர் என்பது வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" என்று குறிப்பிட்ட திரு மோடி, பாகிஸ்தான் படைகள் ஒருபோதும் பதில் நடவடிக்கையை எதிர்பார்க்காத இடங்களில், இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத தளங்களை துல்லியமாகக் குறிவைத்து அழித்தன என்பதை எடுத்துரைத்தார். இனியும் பயங்கரவாதச் செயல்களின் மூலம் மறைமுகப் போர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியை ஆபரேஷன் சிந்தூர் அனுப்பியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா தனது எல்லைக்குள் தீவிரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவது மட்டுமின்றி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டி இருப்பதையும் உறுதி செய்யும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்தார். "ஒவ்வொரு இந்தியனும் தற்போது அதே உணர்வைக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் தோட்டாக்களை அனுப்பினால், பீரங்கி குண்டுகளை எதிர்கொள்ள நேரிடும்", என்று திரு நரேந்திர மோடி எச்சரித்தார்.

"இந்தியாவின் பெண் சக்தியின் வலிமை மற்றும் வீரத்திற்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சான்றாகத் திகழ்கிறது" என்று கூறிய பிரதமர், இந்த நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படை ஆற்றிய முக்கிய பங்களிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார். ஜம்மு முதல் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் வரை, கணிசமான எண்ணிக்கையிலான எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் வீராங்கனைகள் களத்தில் முன்னணியில் இருந்தனர் என்பதைக் குறிப்பிட்டார். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்களின் உறுதியான பதிலடி, கட்டளை, மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில் அவர்களின் தீவிர பங்கேற்பு எதிரியின் நிலைகளை அகற்றுவதில் அவர்கள் காட்டிய முனைப்பான செயல்பாடுகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் மகள்களின் திறனை உலகம் கண்டு வியந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். சைனிக் பள்ளிகளின் கதவுகள் சிறுமிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார். 2014 - ம் ஆண்டில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்களில் 25% மட்டுமே பெண்களாக இருந்தனர். ஆனால் இன்று, அவர்களின் பங்கேற்பு 50% - ஐ நோக்கி அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய முதல் தொகுதி பெண்கள் படையினரின் முக்கிய தருணம் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று  பிரதமர் தெரிவித்தார்.

 

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பெண்கள் தற்போது முக்கியப் பதவிகளில் பணியாற்றி வருவதாக கூறிய பிரதமர், போர் விமானங்கள் முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் வரை, இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண் அதிகாரிகள் தங்கள் துணிச்சலையும் தலைமைத்துவப் பண்பையும் வெளிப்படுத்தி வருவதாகவும், நாட்டின் பாதுகாப்புப் படைகளில் அவர்களது பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர் மேலும் எடுத்துரைத்தார். நவிகா சாகர் பரிக்ரமத்தைக் குறிப்பிட்டு, இந்தியக் கடற்படையில் பணியாற்றிவரும் பெண்களின் அண்மைக்கால துணிச்சலை பாராட்டிய திரு மோடி, இரண்டு துணிச்சலான பெண் அதிகாரிகள் உலகைச் சுற்றி கிட்டத்தட்ட 250 நாட்கள் கடல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதையும் அவர்  குறிப்பிட்டார். காற்றால் மட்டுமே இயக்கப்படும் பாய்மரப் படகைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து, நிலப்பரப்பு வழியாக செல்லாமல் கடலில் நீண்ட நேரம் செலவிட்டதை அவர் குறிப்பிட்டார். கடுமையான வானிலை மற்றும் புயல்களை அவர்கள் சமாளித்து, தங்களது நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதை அவர் வியந்து பாராட்டினார்.  அவர்களின் சாதனை, இந்தியாவின் மகள்கள் மிகவும் வலிமையான சவால்களைக் கூட வெல்லும் திறனுக்கு ஒரு சான்றாகும் என்று திரு மோடி குறிப்பிட்டார். நக்சல் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அல்லது எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களது பங்களிப்பு அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார். தேவி அஹில்யாபாயின் மண்ணிலிருந்து, இந்தியாவின் பெண் சக்தியின் வலிமை மற்றும் மன உறுதிக்காக அவர் மீண்டும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். பிரதமர் தனது ஆட்சிக் காலத்தில், தேவி அஹில்யாபாய் வளர்ச்சியை மேம்படுத்தியதுடன், நாட்டின் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். நவீன இந்தியா அவரது பாதையைப் பின்பற்றி, முன்னேற்றத்தையும் கலாச்சாரப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இன்றைய திட்டத்தை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டு, உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம் மாநிலம் தனது முதல் மெட்ரோ சேவையைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், ஏற்கனவே உலகளவில் தூய்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட இந்தூர், தற்போது அதன் மெட்ரோ ரயில் சேவையால் அடையாளம் காணப்படும் என்று குறிப்பிட்டார்.

போபாலில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விரைவான முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் கூறினார். மத்திய அரசு அண்மையில் ரத்லம்-நாக்டா இடையே உள்ள பாதையை நான்கு வழித்தடங்களாக விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் உதவியது என்றும் பிரதமர் கூறினார். கூடுதலாக, இந்தூர்-மன்மத் ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது இப்பிராந்தியத்தில் போக்குவரத்திற்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த உதவிடும் என்று கூறினார். டாடியா - சட்னா இடையே தற்போது நாட்டின் விமானப் பயணத்திற்கான கட்டமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், புன்ந்தேல்கண்ட் மற்றும் விந்தியா பிராந்தியங்களில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த மேம்பாலம் மா பீதாம்பரம், மா சாரதா தேவி மற்றும் புனிதமான சித்ரகூட் தாம் போன்ற புனித தலங்களை எளிதாக சென்றடைய உதவும் என்று அவர் கூறினார்.

 

"இந்தியா தற்போது வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தில் இருப்பதாகவும், நாடு அதன் பாதுகாப்பு, வலிமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒரே சமயத்தில் பணியாற்ற வேண்டும்" என்றும் திரு மோடி கூறினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களான மாத்ருசக்தியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்த அவர், ராணி லட்சுமிபாய், ராணி துர்காவதி, ராணி கமலாபதி, அவந்திபாய் லோதி, கிட்டூர் ராணி சென்னம்மா, ராணி கைடின்லியு, வேலு நாச்சியார் மற்றும் சாவித்ரிபாய் புலே போன்ற சிறந்த பெண் தலைவர்களின் மரபுடன் லோக்மாதா அஹில்யாபாயின் உத்வேகம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த பெயர்கள் ஒவ்வொன்றும் நாட்டிற்கு பெருமிதம் சேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். லோகமாதா அஹில்யாபாயின் 300-வது பிறந்த தின விழா வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வரும் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அடித்தளத்தை வலுப்படுத்த உதவிடும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார். மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திரு மங்குபாய் சாகன்பாய் படேல், அம்மாநில முதலமைசசர் திரு மோகன் யாதவ் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

 

லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர், லோகமாதா தேவி அஹில்யாபாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு அஞ்சல்தலை மற்றும் சிறப்பு நாணயத்தையும் அவர் வெளியிட்டார். 300 ரூபாய் நாணயத்தில் அஹில்யாபாய் ஹோல்கரின் உருவப்படம் இடம்பெறும். பழங்குடியின, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகளில் பங்களித்த பெண் கலைஞருக்கு தேசிய தேவி அஹில்யாபாய் விருதையும் அவர் வழங்கினார். தொலைதூரப் பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் தாதியா மற்றும் சத்னா விமான நிலையங்களை அவர் திறந்து வைத்தார். இது விந்தியப் பகுதியில் தொழில், சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். நகர்ப்புறங்களில் பயண உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதியான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, இந்தூர் மெட்ரோ ரயில் சேவையின் மஞ்சள் பாதையின் சூப்பர் முன்னுரிமை வழித்தடத்தில் பயணிகள் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இது பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ரூ.480 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள 1,271 அடல் கிராம் சுஷாசன் பவன் கட்டுமானத்திற்கான முதல் தவணைத் தொகையை விடுவித்தார். இந்த கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு நிரந்தர உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும், அவை நிர்வாக செயல்பாடுகளை நிர்வகிக்கவும், கூட்டங்களை நடத்தவும், பதிவுகளை மிகவும் திறமையாக பராமரிக்கவும் உதவிடும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
With HPV vaccine rollout, AIIMS oncologist says it’s the beginning of the end for cervical cancer in India

Media Coverage

With HPV vaccine rollout, AIIMS oncologist says it’s the beginning of the end for cervical cancer in India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Jammu and Kashmir team on their first-ever Ranji Trophy victory
February 28, 2026

The Prime Minister has congratulated the Jammu and Kashmir team for their first-ever Ranji Trophy win.

The Prime Minister stated that this historic triumph reflects the remarkable grit, discipline, and passion of the team. Highlighting that it is a proud moment for the people of Jammu and Kashmir, he noted that the victory underscores the growing sporting passion and talent in the region.

The Prime Minister expressed hope that this feat will inspire many young athletes to dream big and play more.

The Prime Minister shared on X post;

"Congratulations to the Jammu and Kashmir team for their first ever Ranji Trophy win! This historic triumph reflects remarkable grit, discipline and passion of the team. It is a proud moment for the people of Jammu and Kashmir and it highlights the growing sporting passion and talent there. May this feat inspire many young athletes to dream big and play more."