பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மாண்புமிகு திரு அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமிகு உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் இன்று கூட்டாக தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்திகளாக, இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், நம்பிக்கை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய பொதுவான தொலைநோக்குப் பார்வையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள வலிமையான மற்றும் நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. உலகளாவிய விஷயங்கள் பற்றி பேசுவது, நிலைத்தன்மையை ஏற்றுக் கொள்வது மற்றும் பரஸ்பர செழிப்புக்காக விதிகளின் அடிப்படையிலான ஆணைகளை ஊக்குவிப்பதில் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மையின் பங்களிப்பை தலைவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கம், நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விநியோக சங்கிலி நீட்டிப்பு போன்ற முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை தலைவர்கள் வரவேற்றனர். மேலும், இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதிசெய்வது மற்றும் இந்திய- மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார வழித்தடங்கள் திட்டத்தை அமல்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
பிப்ரவரியில் இந்தியாவிற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் குழு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கூடிய விரைவில் இருதரப்பிற்கும் வசதியான தேதியில் அடுத்த இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவது பற்றி தலைவர்கள் ஆலோசித்தனர்.
உக்ரைனில் மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் உட்பட பரஸ்பர நன்மை பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மோதலுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணவும், அங்கு நிலைத்தன்மை மற்றும் அமைதியை விரைவில் மீட்டெடுக்கவும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
முக்கிய விஷயங்கள் பற்றி தொடர்ந்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள தலைவர்கள் உறுதியளித்தனர்.


