‘நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி’ என்பது குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய தொடர் இணைய வழிக் கருத்தரங்கில் இது ஒன்பதாவது ஆகும்.
நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி இந்திய பாரம்பரியத்தை எதிரொலிப்பதுடன், வருங்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களை எட்டுவதற்கு ஒரு வழியாகவும் உள்ளது என பிரதமர் கூறினார். நீடித்த எரிசக்தி வளங்கள் மூலம் மட்டுமே நீடித்த வளர்ச்சியை அடைய முடியும் என அவர் தெரிவித்தார். 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வை அடைய கிளாஸ்கோ மாநாட்டில் உறுதி பூண்டதை பிரதமர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் ரீதியில் நீடித்த வாழ்க்கை முறை என்ற தமது தொலைநோக்கையும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற உலக ஒத்துழைப்புகளில் இந்தியா தலைமை நிலையை வழங்கி வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் புதை படிமம் அற்ற எரிசக்தி மூலம் 50 சதவீத எரிசக்தி நிறுவுத் திறனை அடையவும், 500 ஜிகாவாட் படிமம் அற்ற எரிசக்தித் திறனை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை அவர் குறிப்பிட்டார். “இந்தியா தனக்காக எந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டாலும், அவற்றை சவால்களாக நான் பார்ப்பதில்லை. மாறாக அவற்றை வாய்ப்பாகவே கருதுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த தொலைநோக்குடன் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதனை கொள்கை அளவில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். சூரியசக்தி மற்றும் அது தொடர்பான பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு உலக மையமாக இந்தியாவை உருவாக்க, உயர்திறன் மிக்க சூரியசக்தி தொகுப்புக்கு பட்ஜெட்டில் ரூ.19.5 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் உதவும்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர் பசுமை ஹைட்ரஜன் மையமாக இந்தியா மாறலாம் என தெரிவித்தார். அபரிமிதமான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வடிவில் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தனியார் துறை முயற்சிகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.
எரிசக்தி சேமிப்பு சவால் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளதாக கூறிய திரு மோடி, “மின்னூக்கி மாற்றக் கொள்கை மற்றும் உள்ளியக்கத் தரங்கள் தொடர்பாக இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறைக்கும்” என்றார்.
எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி சேமிப்பு என்பது அதே அளவில் முக்கியத்துவம் கொண்டது என பிரதமர் வலியுறுத்தினார். “எரிசக்தித் திறன் கொண்ட குளிர்சாதனப் பெட்டி, தண்ணீரை சூடேற்றும் கருவிகள், வெந்நீர் கொதிகலன்கள், மின்சார அடுப்புகள் ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து நீங்கள் பணியாற்ற வேண்டும்” என்று கருத்தரங்கில் பங்கேற்றவர்களை அவர் வலியுறுத்தினார்.
எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட பொருட்களின் முன்னுரிமை அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர், எல்ஈடி பல்புகளை பெருமளவில் மேம்படுத்தியதை எடுத்துக்காட்டாக தெரிவித்தார். எல்ஈடி பல்புகள் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் விலையை பெருமளவுக்கு அரசு முதலில் குறைத்தது என்று அவர் கூறினார். அதன் பின்னர், உஜாலா திட்டத்தின்கீழ் 37 கோடி எல்ஈடி பல்புகள் விநியோகிக்கப்பட்டன என்று அவர் கூறினார். இதன்மூலம் 48 ஆயிரம் மில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதுடன் மின்சாரத்திற்காக செலவிடும் 20 ஆயிரம் கோடி ரூபாயும் மிச்சப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், இதனால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்புக் குடும்பங்கள் பயனடைந்ததாகத் தெரிவித்தார். மேலும் வருடாந்திர கரியமில உமிழ்வும் 4 கோடி டன் அளவுக்கு குறைந்தது. தெரு விளக்குகளுக்கு எல்ஈடி பல்புகளை பயன்படுத்தியதால் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நிலக்கரி வாயுவாக்கம் என்பது நிலக்கரிக்கு தூய்மையான மாற்று என்று கூறிய பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட் நிலக்கரி வாயுவாக்கத்திற்கு 4 முன்னோடித் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி நம்பகத்தன்மையை இது ஏற்படுத்தும். இதேபோல, எத்தனால் கலப்பை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எத்தனால் கலப்பற்ற எரிபொருளுக்கான கூடுதல் வேறுபாட்டு கலால் வரி பற்றி பிரதமர் தெரிவித்தார். இந்தூரில் அண்மையில் கோபர்தன் நிலையம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், நாட்டில் அடுத்த இரண்டாண்டுகளில் தனியார் துறையினர் 500 முதல் ஆயிரம் நிலையங்கள் வரை அமைக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் எரிசக்தித் தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்பது பற்றி பேசிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 24-25 கோடி இந்திய வீடுகளில் தூய்மையான சமையல், கால்வாய்களில் சூரிய எரிசக்தி தகடுகள், வீட்டுத் தோட்டங்கள் அல்லது பால்கனிகளில் சூரிய சக்தி மரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த முறையில் எடுக்கப்பட்டதை அவர் பட்டியலிட்டார். சூரியசக்தி மரத்தின் மூலம் வீடுகள் 15 சதவீத எரிசக்தியை பெறலாம் என அவர் தெரிவித்தார். மின்சார உற்பத்தியை அதிகரிக்க குறு புனல் மின் திட்டங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு அவர் யோசனை தெரிவித்தார். “அனைத்து விதமான இயற்கை வளங்களும் குறைந்து வருவதை உலகம் பார்த்து வருகிறது. இத்தகைய சூழலில் சுழற்சி பொருளாதாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதை நமது வாழ்க்கையின் கட்டாயத் தேவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.