2018-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன், லோக் கல்யாண்மார்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.09.2019) கலந்துரையாடினார்.
விருது பெற்றவர்கள் ஆற்றிய சிறப்பான பணிக்காக, அவர்களை பிரதமர் பாராட்டினார். தொடர்ந்து கடினமாக பாடுபட்டு, ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்குமாறு அவர்களிடம் (ஆசிரியர்களிடம்) அவர் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலின் போது, கற்பித்தலுக்கு உதவியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சிந்தித்து செயல்படும் திறனுடைய மாணவர்களை ஊக்குவிக்குமாறும் ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வாய்ப்புத் தருமாறு, விருது பெற்ற ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்ட அவர், எந்த மாணவரையும் புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மாணவர்களிடையே, படைப்பாற்றலை தூண்டிவிட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகள் சுயஉந்துதலுடன் செயல்படவும் அவர்கள் போட்டி மனப்பான்மையுடன் செயல்படவும் வழிவகுக்கும் என்றார். பல்வேறு பிரச்சினைகள் பற்றிய மாணவர்களின் கருத்துக்களை உணர்ந்து கொள்வது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, அவர்களை கல்வி கற்கச் செய்யுமாறும் ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

பள்ளிகளில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்ட புதுமையான பணிகளையும் பிரதமருடனான கலந்துரையாடலின்போது விருது பெற்றவர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்களிடையே கண்டுபிடிப்புத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தச் செய்வதில், அடல் ஆய்வகங்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருந்தது என்பது குறித்தும் அவர்கள் எடுத்துக் கூறினர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் மற்றும் இணை அமைச்சர் திரு சஞ்சய் சாம்ராவ் தோத்ரே ஆகியோர் இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர்.


