பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காவல் படைகளை நவீனப்படுத்துவதற்காக அம்பரெல்லா திட்டத்தை (umbrella scheme) 2017-18 முதல் 2019-20-ம் ஆண்டுகள் வரை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு, மூன்று ஆண்டுகளுக்கான செலவு ரூ.25,060 கோடி. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.18,636 கோடியாகவும், மாநிலங்களின் பங்கு ரூ.6,424 கோடியாகவும் இருக்கும்.
சிறப்பம்சங்கள்:
O இந்தத் திட்டத்தின் கீழ், உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்துவது, காவல் படைகளை இடம்பெயரச் செய்தல், உபகரணங்களை வாங்குவதற்கு உதவுவது, ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்தல், காவல் துறை கம்பியில்லா சேவையை மேம்படுத்துவது, தேசிய செயற்கைக்கோள் இணையம், குற்றம் மற்றும் குற்றச் செயல்கள் கண்காணிப்பு இணையம் மற்றும் அமைப்புத் திட்டம் (CCTNS project), மின்னணு சிறைச் சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு சிறப்பு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
O அம்பரெல்லா திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்காக ரூ.10,132 கோடியை மத்திய அரசு செலவிடும்.
O இடதுசாரி பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களில், வளர்ச்சியின்மை பிரச்சினையை எதிர்கொள்வதற்காக ரூ.3,000 கோடியில், சிறப்பு மத்திய நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
O வடகிழக்கு மாநிலங்களில் காவல் துறை கட்டமைப்பை மேம்படுத்துதல், பயிற்சி நிறுவனங்கள், விசாரணை வசதிகள் ஆகியவற்றுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
O இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இடதுசாரி பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் தற்போதுள்ள பல்வேறு விதமான சவால்களை திறமையாக எதிர்கொள்ளும் வகையில், அரசின் திறன் வலுப்படும். மேலும், வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது இந்தப் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். அதேநேரத்தில், சவால்களை திறமையாக எதிர்கொள்ள உதவும்.
O குற்றவியல் நீதி முறையில் உள்ள முக்கியமான இடைவெளியைப் போக்கும் வகையில், காவல் துறை கட்டமைப்பு, தடய அறிவியல் ஆய்வகங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் போதுமான உபகரணங்களை இருக்கச் செய்தல் ஆகியவற்றுக்காக மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தேசிய தரவு அடிப்படையிலான குற்றம் மற்றும் குற்றவியல் ஆவணங்கள் உருவாக்கப்படும். இது, குற்றவியல் நீதி முறையில் உள்ள மற்ற தூண்களான சிறைச்சாலைகள், தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தண்டனை வழங்கும் அலுவலகங்கள் போன்றவற்றுடன் இணைக்கப்படும்.
O அம்பரெல்லா திட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமராவதியில் அதிநவீன தடய அறிவியல் ஆய்வகத்தை அமைக்கவும், பாதுகாப்புக்கான சர்தார் பட்டேல் சர்வதேச மையம், ஜெய்ப்பூரில் உள்ள தீவிரவாத தடுப்பு மற்றும் கிளர்ச்சி தடுப்பு மையம், காந்தி நகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது.
அம்பரெல்லா திட்டத்தின் மூலம், காவல் படைகள் நவீனமயமாக்கப்படுகின்றன. இது மத்திய மற்றும் மாநில காவல் படைகளை நவீனமயமாக்கி, அதன் திறமையையும், செயல் திறனையும் மிகப்பெரிய அளவுக்கு ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


