வங்கியில் பணம் போடுபவர் மற்றும் முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே எங்களது முன்னுரிமை: பிரதமர்
வெளிப்படைத்தன்மையற்ற கடன் கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: பிரதமர்
நிதி உட்புகுத்தலுக்குப்பின், நிதி மேம்பாட்டை நோக்கி நாடு வேகமாக செல்கிறது: பிரதமர்

நிதியியல் துறை சார்ந்த எனது தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிதித்துறையில் ஏராளமான பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். வங்கி துறையாக இருந்தாலும், வங்கி அல்லாத துறையாக இருந்தாலும், காப்பீட்டு துறையாக இருந்தாலும், நிதித்துறையின் அனைத்து அம்சங்களையும் வலுப்படுத்த இந்த பட்ஜெட்டில் தெளிவான வழிகாட்டுதலை நாங்கள் வழங்கியுள்ளோம்.

தனியார் துறை பங்கேற்பு, பொதுத்துறை நிறுவனங்களை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது பற்றிய தெளிவான திட்டத்தையும் நீங்கள் காணலாம். பட்ஜெட்டுக்கு பின்பு, இந்த உரையாடல் மிகவும் முக்கியமாகும். இந்த நடவடிக்கைகளை பொதுத்துறை மற்றும் தனியார் துறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். 21-ம் நூற்றாண்டில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல இது மிகவும் அவசியமாகும். எனவே, இன்றைய விவாதம், கலந்துரையாடல் ஆகியவை உலகில் உருவாகி வரும் இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒன்றாகும்.

நண்பர்களே, நாட்டின் நிதித்துறை குறித்து அரசின் தொலைநோக்கு மிக தெளிவாக உள்ளது. இதில், தயக்கத்திற்கோ, தடங்கலுக்கோ இடமில்லை. வங்கியில் பணம் போடுபவர்களும், முதலீட்டாளர்களும் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உணருவதை உறுதி செய்வதே எங்களது உயர் முன்னுரிமை ஆகும். 

நாட்டின் நிதியியல் நடைமுறை இந்த நம்பிக்கை என்ற ஒன்றில்தான் இயங்குகிறது. வருமானத்திற்கு உரிய பாதுகாப்பு, முதலீட்டுக்கான வருவாய் ஆகியவற்றில் ஏற்படும் நம்பிக்கையே நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையாகும். எனவே, வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பழைய நடைமுறைகள் எல்லாம் மாற்றத்துக்கு உட்படுத்தப்படுவது இயல்பானதாகும்.

இந்த மாற்றங்கள் அவசியமானதும் ஆகும். 10-12 ஆண்டுகளுக்கு முன்பு, தீவிர கடன் வழங்கல் என்ற பெயரில், வங்கிகள் எவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

வெளிப்படைத் தன்மையற்ற கடன் கலாச்சாரத்திலிருந்து நாட்டை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன. வாராக் கடன்களை எல்லாம் கம்பளத்திற்கு அடியில் தள்ளி மறைப்பதற்கும், பதிவுகளை இல்லாமல் மறைப்பதற்கும் பதிலாக, ஒரு நாள் வாராக் கடனைக் கூட தற்போது தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, தொழிலில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. ஒவ்வொரு தொழிலும் கட்டாயம் லாபம் ஈட்ட முடியும் என்றோ, எதிர்பார்த்தபடி வருமானம் வரும் என்றோ வாய்ப்பு இல்லை என்பதை அரசு அறியும். எந்தக் குடும்பமாக இருந்தாலும், மகன் தொழிலை நடத்த வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்ப்பார்கள். மகன் இதில் வரக்கூடாது என யாரும் நினைக்கமாட்டார்கள். ஆனால், சில சமயங்களில் இது நடக்காமல் போவது உண்டு. தொழில்களின் நிலையற்ற தன்மையை அரசு புரிந்து கொண்டுள்ளதைப் போலவே, தீய நோக்கத்துடன் வர்த்தக முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பதையும் அரசு உணர்ந்துள்ளது. இவையணைத்தும் அரசுக்கு தெரியும்.

இது போன்ற சூழலில், மனசாட்சியுடன் எடுக்கப்படும் தொழில் முடிவுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என உறுதி அளிக்கிறேன். திவால் நிலை மற்றும் நொடிப்பு நிலை விதிமுறைகள் எல்லாம் கடன் அளிப்பவருக்கும், கடன் பெறுவோருக்கும் உறுதியை அளிக்கின்றன.

நண்பர்களே, நாட்டின் மேம்பாட்டுக்காக மக்களின் வருவாய் பாதுகாப்பு, ஏழைகளுக்கு அரசின் பயன்கள் முழுவதுமாக கிடைக்கச் செய்வது, உள்கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளை ஊக்குவிப்பது போன்றவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நிதி சீர்திருத்தங்களும், இந்த முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்றன.

நண்பர்களே, இந்தியாவின் நிதித்துறையை வலுப்படுத்தும் தொலைநோக்கை, மத்திய நிதி நிலை அறிக்கை கொண்டுள்ளது. நிதித்துறையை உள்ளடக்கிய புதிய பொதுத் துறை கொள்கை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நமது பொருளாதாரத்தில், வங்கி மற்றும் காப்பீட்டுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நிதிநிலை அறிக்கையில், 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, காப்பீடு துறையில் 74 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிப்பது, எல்ஐசியின் பங்குகளை விற்பது உட்பட பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் முடிந்தவரை ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனாலும், அதனுடன், வங்கி மற்றும் காப்பீடு பொதுத்துறை நிறுவனங்களின் தீவிர பங்களிப்பு நாட்டுக்கு இன்னும் தேவைப்படுகிறது.

நண்பர்களே, பொதுத் துறையை வலுப்படுத்த, பங்கு மூலதன உட்செலுத்துதல் வலியுறுத்தப்படுகிறது. அதே நேரத்தில், வங்கிகளின் வாராக் கடன்களை கண்காணிக்க சொத்து மறுசீரமைப்பு முறை உருவாக்கப்படுகிறது. இது வங்கிகளின் வாராக் கடன்களை கண்காணித்து, கடன்கள் மீது தீவிர கவனம் செலுத்தும். இது பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும்.

நண்பர்களே, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் திட்டங்களுக்கு நீண்ட கால நிதி தேவைகளை நிறைவேற்ற உள்கட்டமைப்பு மேம்பாடு அவசியமாகும். இதற்கு புதிய நிதி மேம்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவது தற்போதைய தேவையாகும். உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய அரசு நிதி, ஓய்வூதிய நிதி மற்றும் காப்பீடு நிறுவனங்களின் நிதியை ஊக்குவிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே, தற்சார்பு இந்தியா, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய நகரங்களால் மட்டும் உருவாக்கப்படாது. சிறிய தொழில் முனைவோர் மற்றும் மக்களின் கடின உழைப்பால் கிராமங்களிலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். சிறந்த வேளாண் தயாரிப்புகளை உருவாக்கும் விவசாயிகளாலும், விவசாய குழுக்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். நமது குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களாலும் தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும். அதனால் கொரோனா காலத்தில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகளால் 90 லட்சம் நிறுவனங்கள் ரூ.2.4 டிரில்லியன் அளவுக்கு கடன் பெற்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, வேளாண், நிலக்கரி மற்றும் விண்வெளித்துறையில் பல சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டது.

 

நண்பர்களே, நமது பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், விரைவான வளர்ச்சிக்கு, கடன் வழங்குதலும் முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய தொடக்க நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள, புதிய நிதி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்கியதற்காக நமது நிதி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் பாராட்டுக்குரியவை ஆகின்றன. கொரோனா தொற்று காலத்தில், தொடக்க நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களே, இந்த ஆண்டிலும், நிதித்துறையில் மிகச் சிறந்த உந்துதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியது மற்றும் புதிய முறைகளை உருவாக்கியது ஆகியவை நாட்டின் நிதி உட்செலுத்துதலில் மிகப் பெரிய அளவில் பங்காற்றின.

நாட்டில் 130 கோடி பேர் ஆதார் அட்டை வைத்துள்ளனர். 41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஜன் தன் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவற்றில் 55 சதவீதம் கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. முத்ரா திட்டம் மூலம், சிறு தொழில் முனைவோருக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நண்பர்களே, பிரதமரின் கிசான் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாய குடும்பங்கள் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடியை, தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்றுள்ளனர். சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி திட்டம், இந்தப் பிரிவில், முதல் நிதி உட்செலுத்துதல் நடவடிக்கையாகும்.

சுமார் 15 லட்சம் வியாபாரிகளுக்கு, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் பெற ட்ரட்ஸ் (TREDS), பிஎஸ்பி டிஜிட்டல் ( PSB Digital) போன்ற தளங்கள் உள்ளன. கிசான் கடன் அட்டைகள், சிறு விவசாயிகள், கால்நடை பராமரிப்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்றோரை முறைசாரா கடனிலிருந்து விடுவித்துள்ளன.

 

இப்பிரிவினருக்காக புதுமையான நிதி திட்டங்களை நிதி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இதற்கு, சுய உதவிக் குழுக்களின் திறன்களை சேவைகளில் இருந்து உற்பத்திக்கு மாற்ற வேண்டும். அவர்களுக்கு நிதி வழங்குவது, ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு சிறந்த வழியாக இருக்கும். இது நலத்திட்டம் மட்டும் அல்ல சிறந்த வர்த்தக முன்மாதிரியாகவும் இருக்கும்.

நண்பர்களே, நிதி உட்செலுத்துதலுக்குப்பின், நிதி மேம்பாட்டை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. உலகத்தரத்திலான நிதி மையம் ஐஎப்எஸ்சி கிப்ட் நகரில் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் நவீன கட்டமைப்பை உருவாக்குவது நமது ஆசை மட்டும் அல்ல, தற்சார்பு இந்தியாவின் தேவையுமாகும். எனவே, இந்த நிதிநிலை அறிக்கையில், உள்கட்டமைப்புக்கு துணிச்சலான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளை நிறைவேற்ற முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒட்டு மொத்த நிதித்துறையின் தீவிர ஆதரவுடன்தான், இந்த இலக்குகளை சாதிக்க முடியும்.

நண்பர்களே, நிதி அமைப்புகளை வலுப்படுத்த, தனது வங்கித்துறைகளை வலுப்படுத்த அரசு உறுதியுடன் உள்ளது. வங்கி சீர்திருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பட்ஜெட் முன்மொழிவுகளை, அமலாக்க பொருள் பொதிந்த ஆலோசனைகளை நீங்கள் வழங்குவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டின் இத்துறைச் சார்ந்த நிபுணர்கள் மற்றும் உலக அளவிலான நிபுணர்கள் எங்களை இந்த விஷயத்தில் வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் ஆலோசனையும் எனது அரசுக்கு மதிப்புமிக்கதாகும். எந்தவித தயக்கமும் இன்றி நாம் முன்னேறிச் செல்வதற்கான உங்களது யோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களுக்கு சிரமங்கள் ஏதாவது இருந்தால், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல உங்களது பங்களிப்பு என்ன என்பதை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2026
January 28, 2026

India-EU 'Mother of All Deals' Ushers in a New Era of Prosperity and Global Influence Under PM Modi