சோம்நாத்... இந்தச் சொல்லைக் கேட்கும்போதே நம் இதயங்களில் ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது. இது இந்திய ஆன்மாவின் நிலைத்த பிரகடனம். இந்த கம்பீரமான ஆலயம், இந்தியாவின் மேற்கு கடற்கரையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் முதல் ஜோதிர்லிங்கமாக சோமநாத்தின் நாகரிக, ஆன்மீக முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. சோம்நாத் சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தனது நியாயமான விருப்பங்களைப் பெற்று, மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தை அடையலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, லட்சக்கணக்கானோரின் பக்தியையும் பிரார்த்தனைகளையும் ஈர்த்த இந்த சோம்நாத், அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது.

அது புத்துயிர் பெற்றுள்ள நிலையில், 2026-ம் ஆண்டு சோம்நாத் ஆலயத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைகிறது. இந்த மாபெரும் புண்ணியத்தலத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆகின்றன. 1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் கஜினி முகமது இந்த ஆலயத்தைத் தாக்கினார். ஒரு வன்முறை மிகுந்த, கொடூரமான படையெடுப்பின் மூலம், நம்பிக்கையையும் நாகரிகத்தையும் பறைசாற்றும் ஒரு மாபெரும் கலாச்சாரச் சின்னத்தை அழிக்க அவர் முயன்றார்.
ஆயினும் சோம்நாத்தை அதன் பழைய பெருமையோடு மீட்டெடுப்பதற்கான எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக, இந்த ஆலயம் முன்பை விடவும் இப்போது பொலிவுடன் நிற்கிறது. அத்தகைய ஒரு மைல்கல் நிகழ்வு 2026-ம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி, அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில், புனரமைக்கப்பட்ட ஆலயம் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது.
1026-ம் ஆண்டில் சோம்நாத்தின் மீது நடந்த முதல் படையெடுப்பு, அந்த நகரத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம், ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு ஆகியவை பல்வேறு வரலாற்றுப் பதிவுகளில் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும்போது இதயம் நடுங்குகிறது. ஒவ்வொரு வரியும் துயரம், கொடுமை ஆகியவற்றால் நிறைந்துள்ளன. அவை காலத்தால் மறைய மறுக்கும் ஒரு சோகச் சுமையைச் சுமந்து நிற்கின்றன. பாரதத்தின் மீதும், நாட்டு மக்களின் மன உறுதியின் மீதும் அது ஏற்படுத்திய தாக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சோம்நாத்துக்கு மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. அது கடற்கரையில் அமைந்து, பெரும் பொருளாதார வலிமை கொண்ட ஒரு சமூகத்திற்கு பலம் சேர்த்தது. அந்தச் சமூகத்தின் கடல் வணிகர்களும் மாலுமிகளும் அதன் பெருமையின் கதைகளைத் தொலைதூர தேசங்களுக்குக் கொண்டு சென்றனர்.

ஆயினும், முதல் தாக்குதல் நடந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சோம்நாத் அழிவின் அடையாளமாக இல்லை என்று நான் உறுதியாகக் கூறுவதில் பெருமை கொள்கிறேன். அது பாரத அன்னையின் கோடிக்கணக்கான குழந்தைகளின் அசைக்க முடியாத வீரத்தின் அடையாளமாகத்தான் உள்ளது.
1026-ல், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த இடைக்கால கொடூரம், மற்ற படையெடுப்பாளர்களையும் சோம்நாத் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தத் தூண்டியது. அது நமது மக்களையும் கலாச்சாரத்தையும் அடிமைப்படுத்தும் ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆலயம் தாக்கப்பட்டபோது, அதைக் காக்க முன்வந்து, தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த மாபெரும் துணிச்சல் மிக்க ஆடவரும் மகளிரும் நம்மிடம் இருந்தனர். ஒவ்வொரு முறையும், தலைமுறை தலைமுறையாக, நமது மாபெரும் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள், தாங்களாகவே ஆலயத்தை மீண்டும் கட்டிப் புத்துயிர் அளித்தனர். சோம்நாத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்வதை உறுதிசெய்ய உன்னதமான முயற்சி மேற்கொண்ட அகல்யாபாய் ஹோல்கர் போன்ற மாமனிதர்களை வளர்த்த அதே மண்ணில் நாமும் வளர்ந்திருப்பது நமது பாக்கியம்.
1890-ம் ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தர் சோம்நாத்துக்கு வருகை தந்தார். அந்த அனுபவம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. 1897-ல் சென்னையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் போது அவர் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அப்போது அவர், “தென்னிந்தியாவின் இந்த பழமையான கோயில்களும், குஜராத்தின் சோம்நாத் போன்ற கோயில்களும் உங்களுக்குப் பெரும் ஞானத்தைக் கற்பிக்கும். எந்தவொரு புத்தகத்தையும் விட நமது இனத்தின் வரலாற்றைப் பற்றிய கூர்மையான பார்வையை அவை உங்களுக்கு வழங்கும். இந்தக் கோயில்கள் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்களையும், நூற்றுக்கணக்கான முறை புத்துயிர் பெற்ற அடையாளங்களையும் எவ்வாறு தாங்கி நிற்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவை தொடர்ந்து அழிக்கப்பட்டாலும், இடிபாடுகளில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து, முன்பை விடப் புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் நிற்கின்றன! அதுதான் தேசிய மனப்பான்மை. அதுதான் தேசிய உயிரோட்டம். அதைப் பின்பற்றுங்கள். அது உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அதை விட்டுவிட்டால் உயிர்வாழ முடியாது. அந்த உயிரோட்டத்திலிருந்து நீங்கள் விலகும் கணமே, மரணம் விளைவாக அமையும்.” என்றார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் புனிதமான கடமை சர்தார் வல்லபாய் படேலின் திறமையான கைகளுக்குச் சென்று சேர்ந்தது. 1947-ம் ஆண்டில் தீபாவளி நேரத்தில் அங்கு அவர் மேற்கொண்ட ஒரு பயணம் அவரை மிகவும் நெகிழச் செய்தது. அதன் விளைவாக, அந்த ஆலயம் அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் என்று அவர் அறிவித்தார். இறுதியாக, 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி, சோம்நாத்தில் பிரமாண்டமான கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டது. அதில் அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண சர்தார் படேல் உயிருடன் இல்லை. ஆனால் அவரது கனவு நிறைவேற்றப்பட்டு தேசத்தின் முன் கம்பீரமாக நின்றது. அப்போதைய பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு, இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த சிறப்பு நிகழ்வில், குடியரசுத்தலைவரும் அமைச்சர்களும் பங்கேற்பதை நேரு விரும்பவில்லை. இந்த நிகழ்வு இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். ஆனால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உறுதியாக இருந்து இதில் பங்கேற்றார். அதன் பிறகு நடந்தவை வரலாறு. சர்தார் படேலுக்கு உறுதியுடன் ஆதரவு கொடுத்த கே.எம். முன்ஷியின் முயற்சிகளை நினைவுகூராமல் சோம்நாத்தைப் பற்றிய எந்தத் தகவலும் முழுமையடையாது. 'சோம்நாத்: தி ஷ்ரைன் எடர்னல்' (சோம்நாத் - என்றும் நிலைத்திருக்கும் ஒரு புனிதத் தலம்) என்ற நூல் உட்பட, சோம்நாத் குறித்த அவரது படைப்புகள், தகவல்கள் செறிந்தவையாகவும், பல விஷயங்களை தெரியப்படுத்துபவையாகவும் உள்ளன.
உண்மையில், முன்ஷி-யின் நூலின் தலைப்பு உணர்த்துவது போல, நிலைத்தன்மை குறித்த உறுதியான நம்பிக்கையைக் கொண்ட ஒரு நாகரிக சமுதாயமாக நாம் திகழ்கிறோம். பகவத் கீதையின் ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளபடி, நிலையானதை என்றும் அழிக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். தடைகளையும் போராட்டங்களையும் கடந்து, கம்பீரமாக நிற்கும் சோம்நாத்தை விட, நமது நாகரிகத்தின் அசைக்க முடியாத உணர்விற்குச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
பல நூற்றாண்டுகால படையெடுப்புகளையும் காலனித்துவ கொள்ளைகளையும் கடந்து, வளர்ச்சியில் பிரகாசமாகத் திகழும் நமது தேசத்தில் இதே உணர்வுதான் காணப்படுகிறது. நமது விழுமியங்களும் மக்களின் உறுதியும்தான் இந்தியாவை இன்று உலகத்தின் கவன ஈர்ப்பு மையமாக மாற்றியுள்ளன. உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. நமது இளைஞர்களின் திறன்களை நம்பி உலகம் முதலீடு செய்ய விரும்புகிறது. நமது கலை, கலாச்சாரம், இசை, திருவிழாக்கள் ஆகியவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன. யோகாவும் ஆயுர்வேதமும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துகின்றன. மிகவும் அழுத்தமான சில உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகள் இந்தியாவிலிருந்து வருகின்றன.

பழங்காலம் தொட்டே, சோம்நாத் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைத்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, மிகவும் மதிக்கப்பட்ட சமணத் துறவியான கலிகால சர்வக்ஞ ஹேமச்சந்திராச்சாரியார் சோம்நாத்துக்குச் சென்றார். அங்கு பிரார்த்தனை செய்த பிறகு, அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் - "உலகப் பிறவிக்கான விதைகளை அழித்து, ஆசையையும் அனைத்து துன்பங்களையும் நீங்கியவருக்கு என் வணக்கங்கள்." என்பதாகும். இப்போதும், சோம்நாத் மனதிலும் ஆன்மாவிலும் ஆழமான உணர்வை எழுப்பும் அதே ஆற்றலைக் கொண்டுள்ளது.
1026-ம் ஆண்டில் நடந்த முதல் தாக்குதலுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், சோம்நாத்தில் உள்ள கடல் அன்றைய அதே தீரத்துடன் இப்போதும் கர்ஜித்து அலைகளின் ஒலியை எழுப்புகிறது. சோம்நாத்தின் கரைகளைத் தழுவும் அலைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. என்ன நடந்தாலும், அந்த அலைகளைப் போலவே, சோம்நாத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறது.
கடந்த காலத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது காற்றில் கலந்த தூசியாகிவிட்டனர். அவர்களின் பெயர்கள் மறைந்துவிட்டன. அவர்கள் வரலாற்றின் ஏடுகளில் அடிக்குறிப்புகளாகிவிட்டனர். ஆனால் சோம்நாத் பிரகாசமாக நின்று, அடிவானத்தைத் தாண்டி ஒளி வீசுகிறது. 1026-ம் ஆண்டு தாக்குதலால் சிறிதும் குறையாத நிலையான ஆன்மாவை அது நமக்கு நினைவூட்டுகிறது. சோம்நாத் ஒரு நம்பிக்கையின் கீதம். வெறுப்புக்கும், மதவெறிக்கும் தற்காலிகமாக அழிக்கும் சக்தி இருக்கலாம். ஆனால் நன்மையின் மீதான நம்பிக்கையும் உறுதியும் அழியாத நிலைத் தன்மையை உருவாக்கும் சக்தி கொண்டவை என்பதை சோம்நாத் நமக்குச் சொல்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்டு, அதன் பிறகு தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட சோம்நாத் ஆலயம் மீண்டும் மீண்டும் எழ முடிகிறது. அதேபோல் படையெடுப்புகளுக்கு முன்பு நமது தேசம் கொண்டிருந்த அதே பெருமையை நம்மால் நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். ஸ்ரீ சோம்நாத் மகாதேவரின் ஆசீர்வாதங்களுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கிப் பயணிப்போம்.
ஜெய் சோம்நாத்!






