பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார். அவர் காலை 10:30 மணியளவில் பாவ்நகரில் நடைபெறும் ‘கடலிலிருந்து செழிப்பு’ நிகழ்வில் பங்கேற்று சுமார் ரூ.34,200 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, உரையாற்றுவார்.
அதன்பிறகு, பிரதமர் தோலேராவில் வான்வழி ஆய்வு மேற்கொள்வார். பிற்பகல் 1:30 மணியளவில், அவர் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிடுவார்.
கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் ரூ.7,870 கோடி மதிப்பிலான கடல்சார் துறை தொடர்பான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை அவர் திறந்து வைப்பார். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் புதிய கொள்கலன் முனையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்கள்; பாரதீப் துறைமுகத்தில் புதிய கொள்கலன் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்கள்; டுனா டெக்ரா சரக்கு முனையம்; எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் தீயணைப்பு வசதிகள் மற்றும் நவீன சாலை இணைப்பு; சென்னை துறைமுகத்தில் கடல் சுவர்கள் மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு பணிகள்; கார் நிக்கோபார் தீவில் கடல் சுவர் கட்டுமானம்; காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் பல்துறை சரக்கு நிறுத்துமிடம் மற்றும் பசுமை உயிரி-மெத்தனால் ஆலை மற்றும் பாட்னா மற்றும் வாரணாசியில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள் ஆகிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர், குஜராத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில், ரூ.26,354 கோடி மதிப்புள்ள மத்திய மற்றும் மாநில அரசின் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். திரவ இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், கடலோர பாதுகாப்பு பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.
நிலையான தொழில்மயமாக்கல், நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய முதலீட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பசுமையான தொழில்துறை நகரமாகக் கருதப்படும் தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்வார். இந்தியாவின் பண்டைய கடல்சார் மரபுகளைக் கொண்டாடவும், பாதுகாக்கவும், சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாகச் செயல்படவும், லோதலில் சுமார் ரூ.4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக பணிகளின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்வார்.


