புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
உணவுப் பதப்படுத்துதல் துறை, உணவு நிலைத்தன்மை, ஊட்டச்சத்து மற்றும் இயற்கை உணவுத்துறையில் இந்தியாவின் வலிமையை எடுத்துக் காட்டும் வகையில் இக்கண்காட்சி செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் சிறு திட்டங்களுக்காக சுமார் 26,000 பயனாளிகளுக்கு கடன் ஆதரவாக ரூ.770 கோடியும் பிரதமரின் உணவுப் பதப்படுத்துதல் சிறு தொழில் துறை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், ரூ.2,510 கோடியும் வழங்கப்பட உள்ளது.
வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பு, அரசு வர்த்தகர்களுக்கு இடையேயான சந்திப்பு, அரசுகளுக்கு இடையேயான சந்திப்பு, தலைமைச் செயல் அதிகாரிகள் சந்திப்பு, தொழில்நுட்ப அமர்வுகள், கண்காட்சிகள், பலதரப்பு வர்த்தக உரையாடல்கள் ஆகியவை இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், தென்கொரியா, டென்மார்க், இத்தாலி, தாய்லாந்து, இந்தோனேசியா, தைவான், பெல்ஜியம், டான்சானியா, எரிட்ரியா, சைப்ரஸ், ஆப்கானிஸ்தான், சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட 21 நாடுகளும், 150 சர்வதேச பங்கேற்பாளர்களும் இதில் பங்கு பெறுகின்றனர்.
உலக உணவுப் பதப்படுத்துதல் மையமாக இந்தியா, உணவுப் பதப்படுத்துதலில் நீடித்த தன்மை உணவுப் பதப்படுத்துதலில் முன்னோடியாக இந்தியா, செல்லப்பிராணிகள் தொழில்துறை, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான பதப்படுத்தப்பட்ட உணவுகள், தாவரம் அடிப்படையிலான உணவுகள், ஊட்டச்சத்து மருந்துகள், சிறப்பு உணவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பிட்ட தலைப்புகளில் 14 அரங்குகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


