பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2023) வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை காணொலி மூலம் பிரதமர் வழங்கினார். தபால் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அரசுப் பணியில் சேரும் வகையில், நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.99758500_1695712743_1.jpg)
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக அவர்கள் இந்தப் பணிகளுக்கு தேர்வுத் செய்யப்பட்டுள்ளதாகவும் பல லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு இடையே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் விநாயகர் உற்சவம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நல்ல தருணத்தில் பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு இது ஒரு புதிய தொடக்கம் என்றும் கூறினார். "விநாயகர் சாதனைகளின் கடவுள்" என்று கூறிய பிரதமர், பணியமர்த்தப்பட்டவர்களின் சேவை மீதான அர்ப்பணிப்பு நாடு அதன் இலக்குகளை அடைய உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்றுச் சாதனைகளுக்கு நாடு சாட்சியாக உள்ளது என்று பிரதமர் கூறினார். நாரிசக்தி வந்தன் அதினியம் எனப்படும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம், இரு அவைகளிலும் சாதனை அளவிலான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த முடிவு புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நடந்துள்ளது என்றும், ஒரு வகையில், இது புதிய நாடாளுமன்றத்தில் தேசத்திற்கு ஒரு புதிய தொடக்கமாகும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதிதாக பணியமர்த்தப்படுபவர்களில் பெண்கள் கணிசமாக இருப்பதாகக் கூறிய பிரதமர், நாட்டின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்த பெயர் பெற்று வருவதாகக் கூறினார். நாரிசக்தி எனப்படும் மகளிர் சக்தியில் சாதனைகளில் மிகவும் பெருமையடைவதாக அவர்களின் வளர்ச்சிக்குப் புதிய வழிகளை ஏற்படுத்துவது அரசின் கொள்கையாக உள்ளது என்றும் அவர் கூறினார். எந்தவொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு எப்போதும் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.17663100_1695712769_2.jpg)
புதிய இந்தியாவின் உயரிய எதிர்பார்ப்புகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தப் புதிய இந்தியாவின் கனவுகள் உன்னதமானவை என்றார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த சில ஆண்டுகளில், நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், வரும் காலங்களில் அரசு ஊழியர்கள் தேசத்திற்கு மேலும் அதிகளவிலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மக்களே முதன்மையானவர்கள் என்ற அணுகுமுறையை அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அதை திறம்பட பயன்படுத்தி, நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மேலும் எடுத்துரைத்த பிரதமர், இணையதளம் மூலமாக ரயில் முன்பதிவுகள், ஆதார் அட்டை, டிஜிலாக்கர், இ.கே.ஒய்.சி எனப்படும் மின்னணு நடைமுறை மூலம் வாடிக்கையாளர் விவரங்களை அறிந்துகொள்ளுதல், எரிவாயு முன்பதிவு, கட்டணங்கள் செலுத்துதல், நேரடிப் பண பரிம்மாற்றம் மற்றும் டிஜியாத்ரா ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் ஊழலைத் தடுத்துள்ளது என்றும், நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது என்றும் சிக்கலைக் குறைத்துள்ளது எனவும் வசதிகளை அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். இதே நோக்கத்தில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.18374000_1695712788_3.jpg)
கடந்த 9 ஆண்டுகளில், அரசின் கொள்கைகள் ஒரு புதிய மனநிலை, தொடர்ச்சியான கண்காணிப்பு, தீவிர அமலாக்க செயல்முறை மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறினார். இந்த நடைமுறைகள் மகத்தான இலக்குகளை அடைய வழிவகுத்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். தூய்மை இந்தியா மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற இயக்கங்களை எடுத்துக்காட்டாக கூறிய பிரதமர், சிறந்த பயன்களை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசு தீவிர செயல்பாட்டு அணுகுமுறையை கொண்டுள்ளது எனவும் எடுத்துரைத்தார். நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பிரதமரே கண்காணிக்கும் பிரகதி தளத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். அரசின் திட்டங்களை அடித்தளத்தில் இருந்து செயல்படுத்தும் மிக உயர்ந்த பொறுப்பை அரசு ஊழியர்கள் தான் சுமக்கிறார்கள் என்று அவர் கூறினார். லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போது கொள்கை அமலாக்கத்தின் வேகம் மற்றும் அளவு அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் அரசுத் துறைக்கு வெளியே வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு குறித்துப் பேசிய பிரதமர், நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை விவசாயம், பாதுகாப்பு, சுற்றுலா போன்ற துறைகள் புதிய உத்வேகத்தை அடைந்துள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் தற்சார்பு இயக்கத்தின் மூலம் கைப்பேசிகள் முதல் விமானம் தாங்கி கப்பல்கள் வரை, கொவிட் தடுப்பூசி முதல் போர் விமானங்கள் வரை உள்நாட்டு உற்பத்தியில் சிறந்த உள்நாட்டு உற்பத்தி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.87582700_1695712802_4.jpg)
அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சியிலும், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையிலும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார். குழுப்பணிக்கு அதிக முன்னுரிமை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஜி 20 உச்சிமாநாடு, நமது பாரம்பரியம், விருந்தோம்பல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் நிகழ்வாக அமைந்தது என்று பிரதமர் கூறினார். இந்த வெற்றி பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளின் வெற்றியாகும் என்று அவர் தெரிவித்தார். ஜி 20-ன் வெற்றிக்கு அனைவரும் ஒரு குழுவாக உழைத்தனர் என்று பிரதமர் கூறினார். இன்று பணிநியமனம் பெற்ற ஊழியர்களும், அரசு ஊழியர்களின் குழுவில் ஒரு பகுதியாக மாறுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் தங்கள் கற்றல் பயணத்தைத் தொடரவும், அவர்கள் ஆர்வமுள்ள துறைகளில் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் ஐ.ஜி.ஓ.டி கார்மயோகி தளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். புதிதாக பணி நியமனம் பெற்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வாழ்த்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்ட உறுதி ஏற்று செயல்படுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த முன்முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகளில் பணி நியமன நடைமுறைகள் நடைபெறுகின்றன. தபால் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவின் மூலம் பணி நியமனம் பெற்று அரசு பணியில் இணைகின்றனர்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.44353800_1695712816_5.jpg)
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த வேலைவாய்ப்புத் திருவிழா அமைந்துள்ளது. வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்குவதில் இந்த வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி தளத்தில் உள்ள இணைய தள கற்றல் தொகுப்பான கர்மயோகி பிரரம்ப் மூலம் பயிற்சி பெற்றுத் திறன்களை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்தத் தளத்தில் 680 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் உள்ளன. எந்த இடத்திலிருந்தும், எந்த சாதனத்தின் மூலமாகவும் கற்றல் என்ற வடிவத்தில் இவை கிடைக்கின்றன.