நாளை (ஜனவரி 30, 2019) பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் தண்டிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின்போது, சூரத் விமான நிலையத்தில் முனையம் கட்டிடத்தின் விரிவாக்கத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். 25,500 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ. 3.54 கோடி மதிப்பில் இந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஏற்றவகையில், இந்த கட்டிடத்தில், சூரியஒளி மின்சக்தி மற்றும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும். இந்தக் கட்டுமானப்பணி நிறைவுபெற்ற பிறகு, இது 1800 பயணிகளை கையாளும் திறனைப் பெறும். விமானப் போக்குவரத்து மற்றும் பயனாளிகள் வருகையைப் பொருத்தவரை, அகமதாபாத் மற்றும் வதோதராவிற்குப் பிறகு குஜராத்தின் முக்கியமான மூன்றாவது விமான நிலையம், சூரத்.
வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்வது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். பல்வேறு துறைகளில் பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் விமானப் போக்குவரத்துத் துறையும் அடங்கும். குஜராத்தில் சிவில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வலுவாக்கப்பட்டுள்ளதுடன், விமான போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளது. உடான் திட்டத்தின்கீழ், கண்ட்லா முதல் மும்பை வரையிலும், போர்பந்தரிலிருந்து அஹமதாபாத் மற்றும் மும்பை வரையிலும் விமானப் போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜ்கோட்டில் உள்ள ஹிராசாரில் பசுமை விமான நிலையம் அமைப்பது, அகமதாபாத் மற்றும் வதோதராவில் புதிய ஏ.டி.சி கோபுரம்/தொழில்நுட்பப் பிரிவு அமைப்பது ஆகியவை இந்த வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும்.
சூரத்தில் நடைபெறவுள்ள புதிய இந்தியா இளைஞர்கள் மாநாட்டில் பிரதமர் இளைஞர்களுடன் கலந்துரையாடுவார். பிறகு அவர் திருமதி. ராசிலாபென் செவன்திலால் ஷா வீனஸ் மருத்துவமனையை துவக்கி வைத்து, அங்குள்ள வசதிகளைப் பார்வையிடுவார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, குஜராத், தண்டியில் உள்ள நவ்சாரி மாவட்டத்திற்கு பிரதமர் பயணம் மேற்கொள்வார். அங்கு மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவர் தேசிய உப்பு சத்தியாகிரக நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்த நினைவகத்தில் மகாத்மா காந்திக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி உப்பு சத்தியாகிரக ஊர்வலத்தில் காந்தியுடன் பங்கேற்ற 80 நபர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1930-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரக ஊர்வலம் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை சித்தரிக்கும் 24 ஓவியங்களும் இந்த நினைவகத்தில் உள்ளன. இந்த நினைவகத்தைப் பார்வையிட்ட பின், பிரதமர் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக ஊர்வலம் என அழைக்கப்படும்
3
தண்டி யாத்திரை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இந்நாளில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சிவில் ஒத்துழையாமை இயக்கத்தின் ஓர் அங்கமாக மகாத்மா காந்தி தலைமையில் 80 நபர்கள் அகமதாபாதின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடல் கிராமம் வரை 241 மைல்தூரம் நடைபயணம் மேற்கொண்டு, ஆங்கிலேயர்களின் உப்பு சட்டத்தை உடைத்தெறிந்து கடல்நீரிலிருந்து உப்பு தயாரித்தனர்.
இது இந்த மாதம், குஜராத்துக்கு பிரதமர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். இதற்கு முன்பு ஜனவரி 19, 2019-அன்று பிரதமர் திரு. மோடி சூரத்திற்கு சென்றிருந்த போது, ஹசீராவில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத், காந்தி நகரில் ஜனவரி 17 மற்றும் 18-ல், நடைபெற்ற துடிப்புமிகு குஜராத் மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார்.


