நியூயார்க் நகரின் இயற்கைச் சிகிச்சை மையத் தொடக்க நிகழ்வில் கூடியிருக்கும் பிரமுகர்களே, அழைப்பாளர்களே, இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நிகழ்வைக் கண்டுகளிக்கும் நேயர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். சீமான்களே, சீமாட்டிகளே, சர்வதேச யோகா தின வாழ்த்துகள்.
இன்று (21.06.2018) காலை, இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக,இமயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய நகரமான டேராடூனில், வாழ்வின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். இந்தக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் பங்கேற்கும் படங்களைப் பார்த்தேன். உண்மையில், மூன்றே ஆண்டுகளில் இந்த நிகழ்வு உலகளாவிய ஒரு பொது இயக்கமாக வளர்ந்துள்ளது. பல நாடுகளில் அது பொதுவாழ்வின் ஓர் அவசியமான அங்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. கடைபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே அதன் தாக்கம் எல்லை கடந்து விரிந்துள்ளது. இந்தியாவில், சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுவதற்காக மூன்று கருத்துருக்களை நான் கண்டுணர்ந்துள்ளேன். பிற நாடுகள் பலவற்றிலும் இப்படித்தான் என நான் உறுதிபட நம்புகிறேன்.
முதலாவதாக, அது லட்சோபலட்சம் மக்களை அறிமுகம் கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிறது. யோகாவின் உணர்வால் உந்துதல் பெற்று, அவர்கள் அதனை அனுசரிப்பதில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.
இரண்டாவதாக, அது யோகாவுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் தம்மை அதில் மீண்டும் மறுஅர்ப்பணிப்பு செய்துகொள்வதற்கான நிகழ்வாகும் .
நல்ல சொல்லைப் பரப்புவது என்பது மூன்றாவது கருத்துரு ஆகும். யோகா வாயிலாக நற்பயன் கண்ட ஆயிரக்கணக்கான நபர்களும் நிறுவனங்களும், யோகாவை இதுவரை அறிந்திராதவர்களைச் சென்றடையலாம். அதன் போக்கில், சர்வதேச யோகா தினம் உலகெங்கும் வாழும் பலரால் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. யோகா என்ற சொல்லுக்கு ‘ஒன்றுபடுதல்’ என்று அர்த்தமாகும். எனவே, யோகா மீதான இந்த ஆர்வ எழுச்சி என்னை நம்பிக்கையுடன் நிறைத்திருக்கிறது. உலகத்திற்கான ஒரு பிணைக்கும் சக்தியாக யோகா விளங்கும் என நான் நம்புகிறேன்.
இந்த இயற்கைச் சிகிச்சை மையத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் இந்த சர்வதேச யோகா தினத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். யோகாவின் கூறுகளை அதன் அனைத்துத் திட்டங்களுடனும் முன்முயற்சிகளுடனும வலிமையுடன் ஒன்றிணைப்பதற்கு இந்த மையம் பாடுபடும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய ஞான முறைகள், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. உடல், மனம் ஆகியவற்றின் உள்ளார்ந்த பலவீனங்களை நாம் வெற்றிகொள்ள அவை நமக்கு வழிகாட்டுகின்றன. இந்த முறைகள் தனிநபர்களுக்கு அக்கறையுடனும் மரியாதையுடனும் சிகிச்சை அளித்தன. அவர்களின் அணுகுமுறையானது உள்ளூர ஊடுருவியதோ, பாதியிலேயே துண்டிக்கப்படுவதோ அல்ல. மரபுவழியிலான சிகிச்சைமுறைகளை மேற்கொள்வோருக்கு அது அவ்வப்போது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றமாகவே இருந்துவந்துள்ளது. நவீன வாழ்க்கைமுறையானது உடலுக்கும் அதுபோல் மனதிற்கும் உலைவைக்கிறது. மரபுமுறை மருத்துவத்தின் மீதான கவனக் குவிப்பு , துரதிர்ஷ்டவசமாக, நோய்களை, வரும் முன் தடுப்பதை விட அதிகமாக வந்த பின்னர் தடுப்பதிலேயே முனைப்பாகவுள்ளது. இன்றைய ஆரோக்கியக் கேடுகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பாரம்பரிய மருத்துவத்தையே நாம் நாட வேண்டியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில ஆரோக்கியப் பிரச்சினைகள் இன்னும் கவனிக்கப்படாமலேயே உள்ளன என்பதும் உண்மையே. யோகா, ஆயுர்வேதம் போன்ற முறைகள், பாரம்பரியச் சிகிச்சைமுறைகளுக்குச் சிறந்தமுறையில் துணைபுரியமுடியும் என்ற உண்மையை உலகெங்கும் உள்ள நலவாழ்வு நிபுணர்கள் இப்போது அறிந்து பாராட்டுகிறார்கள். இந்த முழுமையான, ஒருமுகப்பட்ட முறை ஆரோக்கியம் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவிக்கிறது. இந்த முழுமையான சிகிச்சைமுறைகள் தனிநபர்கள் மற்றும் சமுதாயத்தில் ஆரோக்கியத்தையும் நலவாழ்வையும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன. சிலருடைய கண்ணோட்டத்திற்கு மாறாக, யோகா என்பது உடற்பயிற்சிகளையும் உடல் கோணங்களையும் மட்டும் குறிப்பதல்ல. அது மனம், உடல், ஆன்மா ஆகியவற்றினுள் ஆழ்ந்து தேடுவதை உள்ளடக்கியது. ஒருவர் தன்னை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அது இட்டுச்செல்கிறது. சமூக ஒழுங்குக்கு இட்டுச்செல்வதுடன், அதன் விளைவாக, வாழ்க்கையின் நீடித்த விழுமியங்களுக்கும் நன்னெறிகளுக்கும் அது வழிவகுக்கிறது. யோகா என்பது கவலைகளிலிருந்து விடுதலை பெறுவது அல்லது மீட்பின் பாதையில் நடைபோடுவதற்கு உதவும் ஆழ்ந்த தத்துவமாகும்.

நண்பர்களே,
யோகாவுக்கு எந்த மதச் சார்பும் இல்லை என்று நான் எப்போதும் நம்புகிறவன். ஒவ்வொருவருக்கும், தங்களை மதநம்பிக்கை உள்ளவர்களாகக் கருதாதவர்களுக்கும் கூட, பயன்படும் நடைமுறைப் படிநிலைகளை அது கொண்டிருக்கிறது. நவீன யோகா நடைமுறைகள் பெரிதும் பண்டைய ஞானத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. உடலைத் தகுதி வாய்ந்ததற்காக வடிவமைக்கப்பட்ட உடற்கோணங்கள், குரு ஒருவரால் அறிவுறுத்தப்பட்ட ஆன்மிகத் தத்துவம், மந்திரங்களை உச்சாடனம் செய்வது, மூச்சை வெளியேற்றுவது, தியானத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்துவது ஆகிய நீதி மற்றும் நன்னெறிக் கோட்பாடுகளை உள்ளடக்கியது. யோகாவானது, தனிநபர்களின் வாழ்க்கைமுறைகளை மாற்றுவதில் கவனத்தைக் குவிக்கிறது. அதனால், வாழ்க்கைமுறைகள் தொடர்பான சீர்குலைவுகள் எளிதாகத் தடுக்கவும் நிர்வகிக்கவும் படுகின்றன. யோகாவை அன்றாடம் மேற்கொள்ளுதல், தன்னளவில் பயன் தருவதுடன், ஆரோக்கியத்தை அதிகரிப்பது, உணர்வுரீதியான நலம், மனத்தெளிவு, வாழ்வதில் பேரின்பம் ஆகியவற்றுக்கு நம்மை இட்டுச் செல்லும். சில குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் மற்றும் பிரணாயமா ஆகியவை பல நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என்ற நம்பிக்கை இந்தியாவில் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவலாக நிலவிவருகிறது. இப்பொழுது, நவீன அறிவியல் இதற்குத் துணை செய்யும் ஆதாரங்களை உருவாக்க முனைந்துள்ளது. யோகாவின் மூலம் இதயம், மூளை, நாளமில்லா சுரப்பி உள்ளிட்ட உடலின் பல உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அறிவியல் நிரூபித்துள்ளது.
இன்று, மேலைநாடுகளில் யோகா மீதான ஆர்வம் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. மேலைஉலகால் யோகா பெரிதும் பாராட்டப்படுகிறது என்று கூறுவது மிகையாகாது. அமெரிக்காவில் மட்டுமே, 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் யோகாவைக் கடைபிடிக்கின்றனர் என்றும் இந்த எண்ணிக்கையானது ஆண்டுதோறும் சராசரியாக ஐந்து சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துவருகிறது என்றும் நான் அறிந்தேன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல்வேறு நவீன மருத்துவ நிறுவனங்கள் யோகாவைப் பல நோய்களுக்கு ஒரு மாற்றுமுறை அல்லது துணைச் சிகிச்சையாகக் கடைபிடித்துவருகின்றன. சமீப காலமாக, யோகாவில் ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்திய அரசு நிரூபணத்தின் அடிப்படையிலான பாரம்பரியப் பொதுமக்கள் ஆரோக்கிய முறைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நமது தேசிய ஆரோக்கியக் கொள்கையானது, நோய்களைத் தடுப்பதில் தீவிரமாகக் கவனத்தைக் குவித்துள்ளது. தொற்றாத நோய்களைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் நாம் தேசிய அளவிலான திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இன்று மேற்கொள்ளும் முன்முயற்சிகள் பலன்களைத் தர சில ஆண்டுகள் பிடிக்கலாம், ஆனால் மிக விரைவில் தெள்ளத்தெளிவான பலன்கள் காணக் கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
முடிவாக, நிவாரணத்தையும் நலத்தையும் நாடி அங்கு வருவோர் அனைவருக்கும் , யோகாவின் பலன்களை வழங்குவதில் உங்கள் இயற்கைச் சிகிச்சை மையம் பாடுபடும் என நான் மீண்டும் கூற விரும்புகிறேன். தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைக் களைவதில் உங்கள் மையத்தால் முன்வைக்கப்படும் ஆரோக்கியத்திற்கான பாதைகள் வழியமைக்கும் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்கிறேன். வாழ்க்கை முழுவதற்குமான ஆரோக்கியமே அவர்களின் குறிக்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குறிக்கோள்களில் உள்ளுறைந்துள்ள அறிவியல் அணுகுமுறையில் நம்பகத்தன்மை, நம்பிக்கை மீதான மதிப்பு இருக்கும் என நான் யூகிக்கிறேன். இப்படிப்பட்ட அணுகுமுறையுடன், ஆரோக்கிய இயக்கத்திற்கு இந்த மையம் கணிசமாகப் பங்களிக்க முடியும் என்பதுடன், அமெரிக்காவில் வசிக்கும் எண்ணற்ற மக்களுக்கு யோகாவின் பலன்களையும் எடுத்துச்செல்லும். இந்தத் துறையில் உங்கள் மையம் ஐநூறு நேரடி வேலைவாய்ப்புகளையும் பதினைந்தாயிரம் மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவுள்ளது என்பதை அறிந்ததிலும் பெருமகிழ்வு கொள்கிறேன். இந்தவகையில் அது சமுதாயத்தின் ஒரு பொறுப்பான உறுப்பினராகத் திகழும். இந்த மாபெரும் முயற்சிக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகள். நன்றி. மிக்க நன்றி.







