கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்தத் தொலைபேசி உரையாடலில் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு முறைப்படி தெரிவித்ததாக பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிடம் எடுத்துரைத்தார். மே 6 மற்றும் 7-ம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் எல்லையை ஒட்டிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அவர்களது மறைவிடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக நடத்தப்பட்ட பதில் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு எந்தவொரு எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் மே 9-ம் தேதி, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான், இந்தியா மீது ஒரு பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்று துணை அதிபர் வான்ஸ் தெரிவித்ததாகவும், அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா வலுவான பதிலடி கொடுக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
மே 9 மற்றும் 10-ம் தேதிகளில், பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்தியா உரிய முறையில் வலுவான பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவத் தளங்களில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டது. அவர்களது விமானத் தளங்கள் செயலிழந்தன. இந்தியாவின் உறுதியான நடவடிக்கை காரணமாக, பாகிஸ்தான் அரசு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது.
இந்த உரையாடலின் போது இந்தியா – அமெரிக்கா இடையேயான வரத்தக ஒப்பந்தம் குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தம் செய்வது குறித்த எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதை பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம் தெளிவுபடத் தெரிவித்தார்.
ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த விவாதம் இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே உள்ள முறையான தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் நேரடியாக நடத்தப்பட்டது என்றும் இது முற்றிலும் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை என்றும் அவர் விவரித்தார்.
இந்தியா ஒருபோதும் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மோடி உறுதிபடக் கூறினார். இந்த விஷயத்தில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து நிலவுவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் திரு மோடி தெரிவித்த கருத்துகளை கவனமாக கேட்டுக் கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டர். தீவிரவாதச் செயல்களை இந்தியா இனி மறைமுகப் போராகக் கருதாது என்றும், மாறாக இதனை இந்தியா மீதான போராகவே கருதப்படும் என்றும் தெரிவித்த பிரதமர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னமும் முடியடையவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
கனடாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதமர், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பயணத்திட்டத்தின் காரணமாக தற்போது அமெரிக்காவில் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் அவரிடம் விவரித்தார். இதனையடுத்து இரு நாடுகளின் தலைவர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். ரஷ்யா - யுக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை, இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். மேலும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை உருவாக்கும் வகையில் குவாட் உறுப்பு நாடுகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். இதனையடுத்து இந்தியாவில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருமாறு, பிரதமர் திரு மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அப்போது அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அதிபர் ட்ரம்ப், இந்தியா வருவதற்கு ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.