ஜி.20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் ஜப்பான் நாட்டின் ஒசாசா செல்கிறேன். உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை புலனாய்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பெரும் சவால்கள் குறித்தும் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தவும், அதற்கு ஆதரவளிக்கவும் இந்த மாநாடு ஒரு அரிய சந்தர்ப்பத்தை நமக்கு வழங்கியுள்ளது. வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விதிமுறை சார்ந்த சர்வதேச ஒழுங்கு நெறிகளை பாதுகாக்க, பன்னாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வலிமைவாய்ந்த வளர்ச்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு ஒரு சிறந்த அமைப்பாக பயன்படும். கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவே, இந்திய மக்கள் இந்த அரசு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க ஏதுவாக மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளனர். இந்த வெற்றி நாட்டின் நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் வழிகாட்டுவதாக இருக்கும்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள 2022-ஆம் ஆண்டில், புதிய இந்தியாவில் அடியெடுத்து வைக்கும்போது, ஜி.20 மாநாட்டை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஒசாகா மாநாடு ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த மாநாட்டினிடையே, பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து, நமது முக்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
அத்துடன் இந்த மாநாட்டின் இடையே ரஷ்யா, இந்தியா, சீனா (RIC) இடையேயான அதிகாரப்பூர்வமற்ற மாநாடு ஒன்றிலும் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அத்துடன் பிரிக்ஸ் (பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) அமைப்பு மற்றும் JAI (Japan, America & India) தலைவர்களுடனான அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.