We are very proud of our security personnel who stand firm in the inhospitable of places and protect us: PM

பாரத் மாதா கீ ஜே!

நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.  தீபாவளி நல்வாழ்த்துகள்!

உங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது என்னைப் பொறுத்தவரை பண்டிகையின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு, இது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தீபாவளிக்கும் அதன் சொந்த அர்த்தம் உள்ளது, ஆனால் இது ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது: 500 ஆண்டுகளுக்குப் பின்  அயோத்தியில் உள்ள அவரது பிரமாண்டமான கோவிலில் ராமர் இப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். உங்கள் அனைவருக்கும், பாரதத் தாயின் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒவ்வொரு வீரருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவைக்கான அங்கீகாரத்துடனும் பாராட்டுடனும் 140 கோடி மக்களின் நன்றியுணர்வுடனும் என் வாழ்த்துகளை இணைத்துக்கொள்கிறேன்.

 

நண்பர்களே,

தாய்நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு உண்மையில் ஓர் அரிதான அதிர்ஷ்டம். இந்த சேவை எந்த வகையிலும் எளிதானது அல்ல. தாய்நாட்டை தங்களுக்கு எல்லாமுமாக கருதுபவர்களின் பக்தியை இந்தச் சேவை பிரதிபலிக்கிறது. இது  பாரதத் தாயின் துணிச்சலான மகன்கள் மற்றும் மகள்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு. இமயமலையின் உறைய வைக்கும்  பனிப்பாறைகளாகட்டும், இரவுகளாகட்டும், சுட்டெரிக்கும் பாலைவன வெப்பமாகட்டும், புழுதி படிந்த மணற்புயலாகட்டும், சதுப்பு நிலங்களின் சவால்களாகட்டும்,  கொந்தளிக்கும் கடலாகட்டும், அர்ப்பணிப்பு நமது வீரர்களை எஃகு போல் உறுதி கொண்டவர்களாக்குகிறது. எதிரிகளின் இதயங்களில் அச்சத்தை விதைக்கிறது. எதிரிகள் உங்களைப் பார்க்கும்போது, இத்தகைய கடுமையான நிலைமைகளுக்கு மத்தியிலும் அசைக்கப்படாதவர்களை யாராலும் வெல்ல முடியாது என்பதை  புரிந்துகொள்வார்கள். உங்களது அசைக்க முடியாத உறுதிப்பாடு, எல்லையற்ற தைரியம், அதிக துணிச்சல் ஆகியவை நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியின் அடையாளமாக விளங்குகின்றன. நீங்கள் பாரதத்தின் வலிமையின் பிரதிநிதியாக உலகிற்கு இருக்கிறீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் கர்ஜிக்கும்போது, பயங்கரவாத சக்திகள் பயத்தால் தாக்கப்படுகின்றன. இதுதான் நமது ராணுவத்தின், ஆயுதப்படைகளின் வீரம். ஒவ்வொரு சவாலான சூழ்நிலையிலும் நமது வீரர்கள் தங்கள் வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர்களே,

இங்கே கட்ச் பகுதியில் நிற்கும் இந்த வேளையில், நமது கடற்படைக்கும் பாராட்டு தெரிவிப்பது பொருத்தமானதாகும். குஜராத்தின் கடற்கரை, தேசத்தின் வலிமையான சொத்தாகும்.  பாரத இறையாண்மையின் அடையாளமான சர் க்ரீக் இங்கே கட்ச் பகுதியில்தான் உள்ளது. கடந்த காலங்களில், இந்த பகுதியை ஒரு போர்க்களமாக மாற்ற முயற்சிகள் நடந்தன. எதிரியின் தீய பார்வை சர் க்ரீக்கின் மீது நீண்ட காலமாக எவ்வாறு பதிந்துள்ளது என்பதை தேசம் நன்கு அறியும். ஆனால், நீங்கள் காவலுக்கு நிற்பதை அறிந்து, நாடு நிம்மதியாக இருக்கிறது. 1971 போரில் நீங்கள் மேற்கொண்ட உறுதியான எதிர்வினையை நமது எதிரிகள் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார்கள். எனவே, நமது கடற்படை இருக்கும்போது, சர் கிரீக் மற்றும் கட்ச் மீது யாரும் பேராசையுடன் கண் வைக்கத் துணியமாட்டார்கள்.

 

நண்பர்களே,

இன்று, நமது எல்லையின் ஒரு அங்குலத்தைக் கூட சமரசம் செய்ய மறுக்கும் ஓர் அரசை  நமது நாடு கொண்டுள்ளது. ராஜதந்திரம் என்ற போர்வையில், சர் க்ரீக்கைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஏமாற்றுக் கொள்கைகள்  ஒரு காலத்தில் இருந்தன. குஜராத்தின் முதலமைச்சர் என்ற முறையில், நமது நாட்டின் குரலை நான் உயர்த்தினேன். இந்தப் பகுதிக்கு நான் வருவது முதல் முறை அல்ல. இந்தப் பகுதியை நான் நன்கு அறிவேன்; நான் பல முறை இங்கு வந்துள்ளேன். விரிவாகப் பயணம் செய்துள்ளேன். இப்போது, நாங்கள்  பொறுப்பேற்கும்போது, எங்களின் கொள்கைகள் நமது படைகளின் பார்வையுடன் ஒத்துப்போகின்றன. நாங்கள் எங்கள் எதிரிகளின் வாக்குறுதிகளில்  நம்பிக்கை வைக்கவில்லை, மாறாக எங்கள் படைகளின் உறுதியில் நம்பிக்கை வைக்கிறோம்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, நமது ஆயுதப் படைகளை நவீனமாக்கி வருகிறோம்.  நமது இராணுவத்தை உலகின் மிக முன்னேறிய படைகளின் வரிசையில் நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த முயற்சிகளின் அடித்தளமமாக பாதுகாப்புத் துறையில் தற்சார்பு பாரதம் விளங்குகிறது.  அண்மையில், குஜராத் மாநிலம் வதோதராவில் சி295 தொழிற்சாலை திறக்கப்பட்டது. இன்று, விக்ரந்த் விமானம் தாங்கி கப்பல் போன்ற 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட"' சொத்துக்கள் நம்மிடம் உள்ளன. நாம் நமது  சொந்த நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து வருகிறோம். நமது தேஜஸ் போர் விமானங்கள் விமானப்படையை பலப்படுத்தி வருகின்றன. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஆயுத இறக்குமதியை நம்பியுள்ள நாடாக பார்க்கப்பட்ட இந்தியா, இப்போது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நமது பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நமது ஆயுதப்படைகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. நமது பாதுகாப்புப் படைகள் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. மேலும்  இனி இறக்குமதி செய்யவேண்டாத 5,000 க்கும் அதிகமான ராணுவப்  பொருட்களின் பட்டியலை உருவாக்கியதற்காக  அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த முடிவு பாதுகாப்புத் துறையில் 'தற்சார்பு இந்தியா' திட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

 

நண்பர்களே,

இன்று, நாம் புதுயுகப் போர் பற்றி பேசுகையில், ட்ரோன் தொழில்நுட்பம்  முக்கியமானதாக மாறியுள்ளது. நடந்துகொண்டிருக்கும் மோதல்களில் ட்ரோன் தொழில்நுட்பம் எவ்வளவு விரிவாக பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் காண்கிறோம். ட்ரோன்கள் இப்போது கண்காணிப்பு, உளவுத்தகவல்  சேகரிப்பு மற்றும் தனிநபர்களை அல்லது இருப்பிடங்களை அடையாளம் காண உதவுகின்றன. அவை  பொருட்களை கொண்டு செல்லவும் உதவுகின்றன.  ஆயுதங்களாகப்  பயன்படுத்தப்படுகின்றன. மேலும்,  பாரம்பரிய வான் பாதுகாப்புக்கு புதிய சவால்களை ட்ரோன்கள் முன்வைக்கின்றன. இதை உணர்ந்த பாரதம் தனது ஆயுதப்படைகளை ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் பலப்படுத்தி வருகிறது. பல இந்திய நிறுவனங்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே ட்ரோன்களை உருவாக்கி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பல புத்தொழில் நிறுவனங்கள் இந்தத் துறையில் ஈடுபடுகின்றன.

நண்பர்களே,

இன்று, புதிய பாதுகாப்பு சவால்கள் உருவாகி வருகின்றன. எதிர்கால மோதல்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். எனவே நமது மூன்று ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் திறன்கள் ஒருங்கிணைக்கப்படுவது அவசியமாகும். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அவை தனித்தனி அமைப்புகளாகத் தோன்றாமல் ஒன்றுபட்ட சக்தியாகத் தோன்றுகின்றன என்று நான் சில நேரங்களில் கூறுவதுண்டு. இந்த  தொலைநோக்கு பார்வையுடன்,பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) நியமிக்கப்பட்டார்.

 

நண்பர்களே,

 தேசம் முதலில், தேசம் முதலில் என்பது நமது தாரக மந்திரம். தேசம் அதன் எல்லைகளில் தொடங்குகிறது. எனவே எல்லைப்பகுதிகளில்  உள்கட்டமைப்பை உருவாக்குவது எங்கள் முன்னுரிமைகளில் ஒன்றாகும். லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை உட்பட 80,000 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகளை எல்லைப்புற சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) அமைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்த அமைப்பு சுமார் 400 பெரிய பாலங்களைக் கட்டியுள்ளது. நமது ஆயுதப் படைகளுக்கு தொலைதூரப் பகுதிகளில் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற இணைப்புக்கான சுரங்கப்பாதைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில், அடல் மற்றும் சேலா சுரங்கங்கள் போன்ற பல முக்கியமான சுரங்கப்பாதைகள் நிறைவடைந்துள்ளன. எல்லைப்புற சாலைகள் அமைப்பு  நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

நண்பர்களே,

எல்லையோர கிராமங்களை "கடைசி கிராமங்களாக" பார்க்கும் கண்ணோட்டத்தையும் நாங்கள் மாற்றியுள்ளோம். இன்று, அவற்றை நாட்டின் முதல் கிராமங்கள் என்று அழைக்கிறோம். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், இந்த முதல் கிராமங்கள் எல்லையில் துடிப்பான சமூகங்களாக உருவாக்கப்படுகின்றன. அங்கு ஒருவர் துடிப்பான இந்தியாவின் முதல் காட்சியைக் காண முடியும். நமது எல்லைப் பகுதிகள்  பல தனித்துவமான இயற்கை பொக்கிஷங்களைக் கொண்டிருப்பதால், சுற்றுலாவுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறன. இந்தத் திறனை நாம் பேணி வளர்த்து மேம்படுத்த வேண்டும். இதன் மூலம், இந்த கிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கை மேம்படும்.  புதிய வாய்ப்புகள் உருவாகும். துடிப்பான கிராமங்கள் இயக்கத்தின் மூலம் இந்த மாற்றத்தை நாம் காண்கிறோம். உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தொலைதூர கிராமங்களில், முன்பு "கடைசி கிராமங்கள்" என்று அழைக்கப்பட்டவை இப்போது முதன்மை கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடற்பாசி வணிகம் போன்ற தொழில்கள் உங்கள் கண் முன்னே செழித்து வருகின்றன. ஒரு குறிப்பிடத்தக்க புதிய பொருளாதாரத் துறை உருவாகி வருகிறது. சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதிலும் நாங்கள் அதிக முதலீடு செய்கிறோம், இது நமது சுற்றுச்சூழலுக்கு  நம்பிக்கைக்குரிய நடவடிக்கையாகும். இங்கு உருவாக்கப்பட்டு வரும் சதுப்புநிலக் காடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். தோர்டோவின் 'ரான் உத்சவ்' நாட்டையும் உலகையும் கவர்ந்ததைப் போலவே, இந்த பகுதியும் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாறும். அது உங்கள் கண் முன்னாலேயே வெளிப்படும்.

 

நண்பர்களே,

நமது வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே நாடு இன்று பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பான தேசம் மட்டுமே முன்னேற முடியும் என்பதால்  மக்களின் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இந்தக் கனவின் பாதுகாவலர்கள் நீங்கள்தான். இன்று, ஒவ்வொரு குடிமகனும் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு மனதுடன் பங்களித்து வருகிறார்கள். உங்கள் தைரியம் பாரதத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மிக்க நன்றி!

பாரத் மாதா கி ஜே என்று சொல்வதில் என்னுடன் சேருங்கள்! மாதா கி ஜே! மாதா கி ஜே! மாதா கி ஜே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Make in India goes global with Maha Kumbh

Media Coverage

Make in India goes global with Maha Kumbh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi greets the people of Meghalaya on Statehood day
January 21, 2025

The Prime Minister Shri Narendra Modi today greeted the people of Meghalaya on its Statehood day.

He wrote in a post on X:

“On Meghalaya’s Statehood Day, I convey my best wishes to the people of the state. Meghalaya is admired for its natural beauty and the industrious nature of the people. Praying for the continuous development of the state in the times to come.”