இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தைப் பிரதமர் வெளியிட்டார்
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமையின் சின்னமாக அறியப்படுகிறார்கள்: பிரதமர்
சோழப் பேரரசின் வரலாறும் மரபும் நமது மாபெரும் தேசத்தின் வலிமையையும் உண்மையான ஆற்றலையும் பிரதிபலிக்கின்றன: பிரதமர்
சோழர் சகாப்தம் இந்திய வரலாற்றின் பொற்காலங்களில் ஒன்றாகும்; அந்தக் காலம் வலிமைமிக்க ராணுவ ஆற்றலால் தனித்து நிற்கிறது. பிரதமர்
ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை நிறுவினார்; இன்றும் கூட, இந்தக் கோயில் உலகம் முழுவதும் போற்றப்படும் ஒரு கட்டடக்கலை அதிசயமாக நிற்கிறது: பிரதமர்
சோழப் பேரரசர்கள் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை ஒரே நூலில் நெய்திருந்தனர். இன்று, இந்த அரசு சோழர் சகாப்தத்தின் அதே தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கிறது. காசி-தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் மூலம், நூற்றாண்டுகள் பழமையான ஒற்றுமைப் பிணைப்புகளை நாங்கள் வலுப்படுத்துகிறோம்: பிரதமர்
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டபோது, நமது சைவ ஆதீனங்களைச் சேர்ந்த துறவிகள் விழாவை ஆன்மீக ரீதியாக வழிநடத்தினர். தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய புனிதமான செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் சம்பிரதாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது: பிரதமர்
நமது சைவ பாரம்பரியம் இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சோழப் பேரரசர்கள் இந்த மரபின் முக்கிய சிற்பிகளாக இருந்தனர். இன்றும் கூட, இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து செழித்து வளரும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது: பிரதமர்
சோழர் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார, ராணுவ உயர்நிலைகள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன: பிரதமர்
ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அதை ராஜேந்திர சோழன் மேலும் வலுப்படுத்தினார்: பிரதமர்

சோழ மண்டலத்திற்கு வணக்கம்.

 

மதிப்பிற்குரிய ஆதீன மடாதிபதிகள் (தலைவர்கள்) அவர்களே, சின்மயா மிஷனின் துறவிகளே, தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் டாக்டர்.எல்.முருகன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு  திருமாவளவன் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் தமிழக அமைச்சர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பரான திரு இளையராஜா அவர்களே,ஓதுவார்களே, பக்தர்களே, மாணவர்களே, கலாச்சார வரலாற்றாசிரியர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே! 

நம சிவாய

 

 

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!

 

நயினார் நாகேந்திரன் பெயரைச் சொல்லும் போதெல்லாம் சுற்றிலும் இருந்த பரபரப்புச் சூழல் திடீரென மாறுவதை கவனித்தேன்.

 

நண்பர்களே,

 

ஒரு வகையில், இது ராஜராஜனின் மரியாதைக்குரிய இடம். இளையராஜா அந்த நம்பிக்கை பூமியில் நம் அனைவரையும் சிவ பக்தியில் மூழ்கடித்த விதம், அது சாவன மாதமாக இருந்தாலும் சரி, ராஜராஜனின் நம்பிக்கை பூமியாக இருந்தாலும் சரி, இளையராஜாவின் தவ பூமியாக இருந்தாலும் சரி, என்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஓம் நம சிவாய என்று கேட்கும்போது, எனக்கு உள்ளம் சிலிர்க்கிறது.

 

நண்பர்களே,

 

சிவ தரிசனத்தின் அற்புதமான ஆற்றல், திரு இளையராஜாவின் இசை, ஓதுவார்களின் மந்திர உச்சாடனம் என இந்த ஆன்மீக அனுபவம் உண்மையிலேயே ஆன்மாவை மூழ்கடிக்கிறது.

 

 

நண்பர்களே,

 

புனித சாவன மாதம் மற்றும் பிரகதீஸ்வரர் சிவன் கோவில் கட்டுமானம் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் ஆன வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இவ்வளவு அற்புதமான நேரத்தில் பிரகதீஸ்வரர் சிவனின் பாதத்தில் அமர்ந்து அவரை வணங்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் நான் பிரார்த்தனை செய்துள்ளேன். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா!

 

நண்பர்களே,

 

நான் இங்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது, நான் சீக்கிரமாகவே வந்துவிட்டேன், ஆனால் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் நடத்திய அற்புதமான கண்காட்சி, தகவல்கலள் நிறைந்ததாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது, மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் மனித நலனுக்காக எவ்வாறு வழிகாட்டினார்கள் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். இது மிகவும் பிரமாண்டமாக, மிகவும் விரிவாக இருந்தது. கடந்த ஒரு வாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்க்க வருகிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது பார்க்க வேண்டிய ஒன்று. எல்லோரும் நிச்சயமாக இதைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இன்று சின்மயா மிஷனின் முயற்சிகள் மூலம் தமிழ் கீதையின் ஆல்பத்தை வெளியிடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த முயற்சி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியையும் ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியுடன் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.

 

 

நண்பர்களே,

 

சோழ மன்னர்கள் இலங்கை, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு தங்கள் ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தினர். நான் நேற்று மாலத்தீவிலிருந்து திரும்பியதும், இன்று நான் தமிழ்நாட்டில் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாகக் கலந்து கொள்வதும் தற்செயலான  நிகழ்வு.

 

சிவ பக்தர்கள், சிவனுடன் இணைவதன் மூலம் சிவனைப் போல அழியாதவர்களாக மாறுகிறார்கள் என்று நமது வேதங்கள் கூறுகின்றன. அதனால்தான் சிவனின் பிரத்தியேக பக்தியுடன் தொடர்புடைய இந்தியாவின் சோழ பாரம்பரியம் இன்று அழியாததாகிவிட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய பெயர்கள் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்கு இணையானவை. சோழப் பேரரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம், இந்தியாவின் உண்மையான ஆற்றலின் பிரகடனமாகும். வளர்ந்த இந்தியாவின் இலக்கை நோக்கி நாம் முன்னேறி வரும் இந்தியாவின் கனவிற்கு இது உத்வேகம் அளிக்கிறது. இந்த உத்வேகத்துடன், ராஜேந்திர சோழனுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். கடந்த சில நாட்களில், நீங்கள் அனைவரும் ஆடி திருவாதிரை விழாவைக் கொண்டாடினீர்கள். இன்று இந்த மகத்தான நிகழ்வில் இது உச்சக்கட்டத்தை அடைகிறது. இதற்கு பங்களித்த அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே,

 

 

சோழப் பேரரசு, இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். இந்த சகாப்தம் அதன் உத்திசார் சக்தியால் அடையாளம் காணப்படுகிறது. ஜனநாயகத்தின் தாயாக இந்தியாவின் பாரம்பரியத்தை சோழப் பேரரசும் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்றாசிரியர்கள் ஜனநாயகத்தின் பெயரில் இங்கிலாந்தின் மாக்னா கார்ட்டாவைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, குடவோலை அமைவிலிருந்து ஜனநாயக அமைப்பு மூலம் சோழப் பேரரசில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இன்று உலகம் முழுவதும் நீர் மேலாண்மை மற்றும் சூழலியல் பாதுகாப்பு பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன. நமது முன்னோர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்துகொண்டனர். மற்ற இடங்களைக் கைப்பற்றிய பிறகு தங்கம், வெள்ளி அல்லது கால்நடைகளைக் கொண்டு வந்த பல மன்னர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ராஜேந்திர சோழன், கங்கை நீரைக் கொண்டு வந்தார். ராஜேந்திர சோழன், வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து தெற்கில் பாயச் செய்தார். “கங்கா ஜலமயம் ஜெயஸ்தம்பம்”. இன்று பொன்னேரி ஏரி என்று அழைக்கப்படும் சோழ கங்கை ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

நண்பர்களே,

 

ராஜேந்திர சோழன் கங்கை கொண்டசோழபுரம் கோவிலையும் நிறுவினார். இந்தக் கோவில் இன்னும் உலகின் கட்டிடக்கலை அதிசயமாக உள்ளது. காவேரி பாயும்  இந்த பூமியில் கங்கை அன்னைக்கு விழா கொண்டாடப்படுவது சோழப் பேரரசின் பரிசாகும். அந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக, இன்று மீண்டும் ஒருமுறை காசியிலிருந்து கங்கை நீர் இங்கு கொண்டு வரப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போதுதான் நான் இங்கு பூஜை செய்யச் சென்றபோது, மரபுப்படி சடங்குகள் முடிக்கப்பட்டன, கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. நான் காசியின் மக்கள் பிரதிநிதி, மேலும் எனக்கு கங்கை அன்னையுடன் நெருங்கிய பிணைப்பு உள்ளது. சோழ மன்னர்களின் இந்தப் படைப்புகள், அவற்றுடன் தொடர்புடைய இந்த நிகழ்வுகள், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற மகா யாகத்திற்குப் புதிய ஆற்றலையும், புதிய எழுச்சியையும், புதிய உத்வேகத்தையும் அளிக்கின்றன.

 

சகோதர சகோதரிகளே,

சோழ மன்னர்கள் இந்தியாவை கலாச்சார ஒற்றுமையின் நூலில் பிணைத்திருந்தனர். இன்று நமது அரசு சோழர் காலத்தின் அதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது. காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம் பல நூற்றாண்டுகள் பழமையான ஒற்றுமையின் இழைகளை வலுப்படுத்தி வருகிறோம். கங்கை கொண்டசோழபுரம் போன்ற தமிழ்நாட்டின் பழமையான கோவில்களும்  மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் பாதுகாக்கப்படுகின்றன. நாட்டின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது, நமது சிவ ஆதீனத்தின் துறவிகள் அந்த நிகழ்வை  ஆன்மீக ரீதியாக வழி நடத்தினர். அவர்கள் அனைவரும் இங்கே உள்ளனர். தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. அந்தத் தருணத்தை இன்றும் நான் நினைவில் கொள்ளும்போது, நான் பெருமையால் திளைக்கிறேன்.

 

நண்பர்களே,

 

 

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் சிலரை  நான் இப்போதுதான் சந்தித்தேன். சிவபெருமான் நடராஜர் வடிவில் வழிபடப்படும் இந்த தெய்வீக கோவிலின் புனித பிரசாதத்தை அவர்கள் எனக்கு வழங்கினர். நடராஜரின் இந்த வடிவம் நமது தத்துவம் மற்றும் அறிவியல் வேர்களின் சின்னமாகும். இதேபோன்ற நடராஜரின் ஆனந்த தாண்டவ சிலை தில்லியில் உள்ள பாரத மண்டபத்தின் அழகிற்கு மெருகூட்டுகிறது. இந்த பாரத மண்டபத்தில், ஜி-20 மாநாட்டின் போது உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற தலைவர்கள் இணைந்திருந்தனர்.

 

நண்பர்களே,

 

இந்தியாவின் கலாச்சார உருவாக்கத்தில் நமது சைவ பாரம்பரியம் பெரும் பங்கு வகித்துள்ளது. சோழப் பேரரசர்கள் இந்தக் கட்டுமானத்தின் முக்கிய கட்டிடக் கலைஞர்களாக இருந்தனர். அதனால்தான் இன்றும் தமிழ்நாடு சைவ மரபின் வாழும் மையங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. சிறந்த நாயன்மார் துறவிகளின் மரபு, அவர்களின் பக்தி இலக்கியம், தமிழ் இலக்கியம், நமது மதிப்பிற்குரிய ஆதீனங்களின் பங்கு ஆகியவை சமூக மற்றும் ஆன்மீகத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன.

 

நண்பர்களே,

 

இன்று, உலகம் நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடி வரும் வேளையில், சைவக் கொள்கைகள் நமக்கு தீர்வுகளுக்கான வழியைக் காட்டுகின்றன. திருமூலர் எழுதிய “அன்பே சிவம்” என்பது, அன்பு என்றால் சிவன் என்பதை வலியுறுத்துகிறது! இன்று உலகம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால், பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும். இன்று இந்தியா இந்தக் கருத்தை ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற வடிவத்தில் முன்னெடுத்துச் செல்கிறது.

 

நண்பர்களே,

 

இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் தாரக மந்திரத்துடன்  முன்னேறி வருகிறது. இன்றைய இந்தியா அதன் வரலாற்றைப் பற்றி பெருமை கொள்கிறது. கடந்த பத்தாண்டுகளில், நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒரு நோக்கத்துடன் பணியாற்றி வருகிறோம். வெளிநாடுகளில் திருடப்பட்டு விற்கப்பட்ட நாட்டின் பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. 2014 முதல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளன. குறிப்பாக, இவற்றில் 36, நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இன்று, நடராஜர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வர், நந்திகேஷ்வர், உமா பரமேஸ்வரி, பார்வதி, சம்பந்தர் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பாரம்பரியச் சிலைகள் மீண்டும் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன.

 

நண்பர்களே,

 

நமது பாரம்பரியமும் சைவ தத்துவத்தின் செல்வாக்கும் இனி இந்தியாவுடனும், இந்த பூமியுடனும் மட்டுப்படுத்தப்படவில்லை. சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா ஆனபோது, சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு "சிவ-சக்தி" என்று பெயரிட்டோம். சந்திரனின் அந்த முக்கியமான பகுதி இப்போது சிவ-சக்தி என்ற பெயரால் அடையாளம் காணப்படுகிறது.

 

நண்பர்களே,

 

சோழர்கள் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் உத்திசார் முன்னேற்றத்தின் உச்சங்கள் இன்றும் நமக்கு உத்வேகமாக இருக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் வலுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் பல நிர்வாக சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவர் உள்ளூர் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தினார். ஒரு வலுவான வருவாய் அமைப்பு செயல்படுத்தப்பட்டது. வர்த்தக மேம்பாடு, கடல் வழிகளைப் பயன்படுத்துதல், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் என இந்தியா எல்லா திசைகளிலும் வேகமாக முன்னேறி வந்தது.

 

நண்பர்களே,

 

சோழப் பேரரசு என்பது ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு பண்டைய வரைபடத்தைப் போன்றது. நாம் ஒரு வளர்ந்த தேசமாக மாற விரும்பினால், ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் என்று அது நமக்குச் சொல்கிறது. நமது கடற்படை, நமது பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும். புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும். இவை அனைத்துடனும், நமது மதிப்புகளையும் பாதுகாக்க வேண்டும். மேலும், இன்று இந்த உத்வேகத்துடன் நாடு முன்னேறி வருவதில் நான் திருப்தி அடைகிறேன்.

 

நண்பர்களே,

 

இன்றைய இந்தியா தனது பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால் இந்தியா எவ்வாறு பதிலளிக்கும் என்பதை உலகம் கண்டது. இந்தியாவின் எதிரிகளுக்கு, பயங்கரவாதிகளுக்கு எந்த இடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்துகிறது. இன்று நான் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து 3-4 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இங்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு பெரிய சாலைப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன், அனைவரும் ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டினர். ஆபரேஷன் சிந்தூர் முழு நாட்டிலும் ஒரு புதிய உணர்வை எழுப்பியுள்ளது, புதிய தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது.  மேலும் உலகமும் இந்தியாவின் ஆற்றலை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

 

நண்பர்களே,

 

ராஜேந்திர சோழன், கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியபோது, அதன் சிகரத்தை தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை விட சிறியதாக வைத்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது தந்தை கட்டிய கோவில் தான் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். தனது மகத்துவத்திற்கு மத்தியிலும், ராஜேந்திர சோழன் பணிவைக் காட்டினார். இன்றைய புதிய இந்தியா இந்த உணர்வில் முன்னேறி வருகிறது. நாம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறோம், எனினும் நமது உணர்வு உலக சகோதரத்துவமும், உலக நலனும்தான்.

 

நண்பர்களே,

 

எனது பாரம்பரியத்தின் மீதான பெருமையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இன்று நான் இங்கே மற்றொரு உறுதிமொழியை எடுக்கிறேன். வரும் காலங்களில், ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகனும் சிறந்த ஆட்சியாளருமான முதலாம் ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான சிலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவோம். இந்த சிலைகள் நமது வரலாற்று உணர்வின் நவீன தூண்களாக மாறும்.

 

 

நண்பர்களே,

 

இன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் ஆகும். வளர்ந்த இந்தியாவை வழிநடத்த, டாக்டர் கலாம், சோழப்  பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் நமக்குத் தேவை. வலிமையும் பக்தியும் நிறைந்த அத்தகைய இளைஞர்கள் 140 கோடி நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள். ஒன்றாக, நாம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதியை முன்னெடுப்போம். இந்த உணர்வுடன், இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

 

 

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்,

 

 

பாரத் மாதா கி ஜெய்.

 

 

பாரத் மாதா கி ஜெய்.

 

 

பாரத் மாதா கி ஜெய்.

 

 

வணக்கம்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions