

பிரதமர் திருமதி. கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் அவர்களே,
அமைச்சரவை உறுப்பினர்களே
இன்று கூடியிருக்கும் அனைத்து பிரமுகர்களே
இந்திய வம்சாவளியினரே
பெண்களே மற்றும் தாய்மார்களே,
நமஸ்காரம்!
சீதா ராம்!
ஜெய் ஸ்ரீ ராம்!
எதையாவது குறிப்பிட முடியுமா... என்ன ஒரு தற்செயலான நிகழ்வு!
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
ஹம்மிங் பறவைகளின் இந்த அழகான பூமிக்கு நான் சிறிது நேரத்திற்கு முன்புதான் வந்து சேர்ந்தேன். மேலும், இங்குள்ள இந்திய வம்சாவழியினருடனான எனது முதலாவது சந்திப்பு இதுவாகும். இது முற்றிலும் இயல்பான நிலையை உணர்த்துவதாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக, நாம் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கமாக இருக்கிறோம். உங்கள் உபசரிப்பு மற்றும் பாசத்திற்கு மிக்க நன்றி.
நண்பர்களே,
ட்ரினிடாட் & டொபாகோ நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரின் துணிச்சலான வரலாறு குறித்து நான் அறிந்து வைத்துள்ளேன். உங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள், வலிமையான உணர்வு கொண்ட ஆன்மாக்களைக் கூட சிதைத்திருக்கும். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் பிரச்சினைகளைச் சந்தித்தனர்.
அவர்கள் கங்கை மற்றும் யமுனை நதிகளை விட்டுச் சென்றபோதிலும், தங்கள் இதயங்களில் ராமாயணத்தைச் சுமந்து சென்றனர். அவர்கள் தங்களது மண்ணை விட்டுப் பிரிந்து சென்றாலும், அவர்களது ஆன்மாவை பிரிந்து செல்லவில்லை. அவர்கள் வெறும் குடியேறிகளாக இல்லாமல், காலத்தால் அழியாத நாகரிகத்தின் தூதர்களாக இருந்தனர். அவர்களது பங்களிப்புகள் இந்த நாட்டிற்கு கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பயனளித்துள்ளன. இந்த அழகான தேசத்தில் நீங்கள் அனைவரும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் காணுங்கள்.
இந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். திருமதி. கிறிஸ்டின் கார்லா கங்கலூ பெண் அதிபராகவும் உள்ளார். ஒரு விவசாயியின் மகனான மறைந்த பாஸ்டியோ பாண்டே பிரதமராகவும், உலகளவில் மரியாதைக்குரிய தலைவராகவும் உயர்ந்தார். புகழ்பெற்ற கணித அறிஞர் ருத்ரநாத் கபில்டியோ, இசையின் அடையாளமாக சுந்தர் போபோ, திறமையான கிரிக்கெட் வீரர் டேரன் கங்கா மற்றும் கடலில் கோவிலைக் கட்டிய சேவ்தாஸ் சாதுவின் பக்தி போன்ற பல்வேறு சாதனையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கிர்மிதியாக்களின் குழந்தைகளான நீங்கள் அனைவரும் இனி இக்கட்டான சூழலில் வாழ வரையறுக்கப்படவில்லை. உங்களது வெற்றி, சேவை மற்றும் மதிப்புகளால் நீங்கள் வரையறுக்கப்படுகிறீர்கள். "டபுள்ஸ்" மற்றும் "டல் பூரி"யில் ஏதோ ஒரு மாயாஜாலம் இருக்க வேண்டும், ஏனென்றால், நீங்கள் இந்த மாபெரும் தேசத்தின் வெற்றியை இரட்டிப்பாக்கிவிட்டீர்கள்!
நண்பர்களே,
நான் கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது, லாரா கவர் திசையிலும், புல் ஷாட்களை அடித்தும் விளையாடியதை நாங்கள் அனைவரும் ரசித்தோம். இன்று, இந்திய இளைஞர்களின் இதயங்களில் அதே உற்சாகத்தைத் தூண்டும் வகையில் சுனில் நரைன் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை, இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு மேலும் வலுவடைந்துள்ளது.
பனாரஸ், பாட்னா, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்கள் இந்தியாவில் இருக்கலாம். ஆனால் அவை இங்கே தெருக்களின் பெயர்களாகவும் உள்ளன. நவராத்திரி, மகாசிவராத்திரி, ஜன்மாஷ்டமி ஆகியவை இங்கே மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் பெருமையுடன் கொண்டாடப்படுகின்றன. சௌதால் மற்றும் பைதக் கானா இங்கே தொடர்ந்து செழித்து வளர்கின்றன.
பழக்கமான பலரது முகங்களின் அரவணைப்பை என்னால் காண முடிகிறது. இளைய தலைமுறையினரின் பிரகாசமான கண்களில், ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்து கொண்டு வளர்வதில் ஆர்வத்துடன் இருப்பதை என்னால் காண முடிகிறது. உண்மையிலேயே, நமது பிணைப்புகள் புவியியல் எல்லைகளைக் கடந்து, தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளது.
நண்பர்களே,
பிரபு ஸ்ரீராம் மீது உங்களின் ஆழ்ந்த நம்பிக்கையை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது.
எண்ணூற்றி எண்பத்தொரு ஆண்டுகள் கடந்து விட்டன. மனம் மறக்கவில்லை.
ராம நாமம் ஒவ்வொரு இதயத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சங்ரே கிராண்டே மற்றும் டவ் கிராமத்தில் உள்ள ராம்-லீலா உண்மையிலேயே தனித்துவமானவை என்று கூறப்படுவதாக ஸ்ரீ ராம் சரித் மானஸ் கூறுகிறார்.
அதாவது, பிரபு ஸ்ரீராமரின் புனித நகரம் மிகவும் அழகாக இருப்பதுடன், அதன் பெருமை உலகம் முழுவதும் பரவுகிறது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் லல்லா அயோத்திக்கு திரும்பியதை நீங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீங்கள் புனித நீரையும், சிலையும் அனுப்பியது எங்களுக்கு நினைவிருக்கிறது. அதேபோன்ற பக்தி உணர்வுடன் நானும் ஒன்றை இங்கு கொண்டு வந்துள்ளேன். அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் சரயு நதியில் இருந்து சிறிதளவு புனித நீரைக் கொண்டு வருவது எனது மரியாதையாகும்.
புனித சரயு நதியில் இருந்து அயோத்தியின் மகிமை பிறக்கிறது என்று பிரபு ஸ்ரீ ராம் கூறுகிறார். அதில் நீராடுபவர், ஸ்ரீ ராமருடன் நித்திய ஐக்கியத்தைக் காண்கிறார்.
சரயு நதியின் புனித நீரும், புனிதமான நதிகளின் சங்கமமும் நம்பிக்கையின் அமிர்தமாகும். நம் நாட்டின் மதிப்புகளையும், நமது சடங்கு மற்றும் சம்பிரதாயங்களும் என்றென்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் பாயும் நீரோடை இது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சியான மஹா கும்ப மேளா நடைபெற்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மகா கும்ப மேளாவிலிருந்து புனித நீரை என்னுடன் எடுத்துச் செல்லும் பெருமை எனக்கு உண்டு. இங்குள்ள கங்கா தாராவிற்கு சரயு நதி மற்றும் மகா கும்ப மேளாவின் புனித நீரை வழங்குமாறு கமலா அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த புனித நீர் டிரினிடாட் & டொபாகோ மக்களை ஆசீர்வதிக்கட்டும்.
நண்பர்களே,
இந்திய வம்சாவளியினரின் வலிமை மற்றும் ஆதரவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். உலகம் முழுவதும் 35 மில்லியனுக்கும் அதிகமாக இந்திய வம்சாவளியினர் வசிக்கும் நிலையில், அவர்கள் இந்தியாவின் பெருமையாகத் திகழ்கின்றனர். நான் அடிக்கடி கூறியது போல், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாட்டின் தூதுவர்கள். இந்தியாவின் மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்களாவர்.
இந்த ஆண்டு, புவனேஷ்வரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியை நடத்தியபோது, திருமதி. கிறிஸ்டின் கார்லா கங்கலூ தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து எங்களை கௌரவித்தார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள கிர்மிதியா சமூகத்தை கௌரவிக்கவும், அவர்களுடனான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு முயற்சிகள் குறித்த அறிவிப்பை நான் வெளியிட்டேன். கடந்த கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பிரகாசமான எதிர்காலத்திற்காக மக்களிடையே நெருக்கமான பிணைப்பைக் கொண்டு வருகிறோம்.
கிர்மிதியா சமூகம் குறித்த விரிவான தரவுத்தளத்தை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் உள்ள அவர்களின் மூதாதையர்கள் இடம்பெயர்ந்த கிராமங்கள் மற்றும் நகரங்களை ஆவணப்படுத்துதல், அவர்கள் குடியேறிய இடங்களை அடையாளம் காணுதல், கிர்மிதியா சமூகத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் பாரம்பரியத்தைப் படித்து பாதுகாத்தல் மற்றும் உலக அளவில் கிர்மிதியா சமூக மாநாடுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய பாடுபடுதல் போன்றவை இதில் அடங்கும். இது டிரினிடாட் & டொபாகோ நாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடனான ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஆதரவு அளிக்கும்.
இன்று, டிரினிடாட் & டொபாகோ நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரின் ஆறாவது தலைமுறைக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கான அட்டைகள் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இரத்த பந்தம் அல்லது குடும்பப் பெயரால் மட்டும் இணைக்கப்படவில்லை. நீங்கள் சுயமாக நிலைநின்று இருப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தியா உங்களைக் காண்பதுடன், வரவேற்பு அளித்து, அரவணைக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவில் உள்ள மக்கள் பிரதமர் திருமதி கமலாவை பீகார் மாநிலத்தின் மகளாகக் கருதுகிறார்கள்.
திருமதி. கமலாவைப் போலவே, பீகார் மாநிலத்தில் தங்களது மூதாதையர்களைக் கொண்ட பலர் இங்கு உள்ளனர். பீகார் மாநிலத்தின் பாரம்பரியம் நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.
நண்பர்களே,
இந்தியா முன்னேற்றம் அடைந்து வரும்போது உங்களில் அனைவரும் பெருமைப்படுவீர்கள் என நான் நம்புகிறேன். புதிய இந்தியாவைப் பொறுத்தவரை, வானம் கூட எல்லை அல்ல. இந்தியாவின் சந்திரயான் நிலவில் தரையிறங்கியபோது நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள். அது தரையிறங்கிய இடத்திற்கு, சிவசக்தி புள்ளி என்று பெயரிட்டுள்ளோம்.
அண்மையில் நீங்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். நாம் பேசும்போது கூட, ஒரு இந்திய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறார். நாம் தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தியர் ஒருவர் நிலவில் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவிற்காக சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
விண்வெளியில் இந்தியா படைத்து வரும் சாதனைகள் நம் நாட்டிற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அதன் பலன்களை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நண்பர்களே,
தற்போது உலகின் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக இந்தியா உள்ளது. விரைவில், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பலன்கள் மிகவும் தேவைப்படுபவர்களைச் சென்றடைகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 250 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தீவிர வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி நமது புதுமையான மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களால் இயக்கப்படுகிறது.
இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் நிறுவனங்களின் மையமாக உள்ளது. இந்த புத்தொழில் நிறுவனங்களில் ஏறத்தாழ பாதியளவு பெண் இயக்குநர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 120 புத்தொழில் நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளன. செயற்கைத் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கான தேசிய இயக்கம், வளர்ச்சியின் புதிய எந்திரங்களாக மாறி வருகின்றன. ஒரு வகையில், புதுமை கண்டுபிடிப்புகள் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) டிஜிட்டல் பரிமாற்றங்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏறத்தாழ 50% இந்தியாவில் நடைபெறுகின்றன. இப்பிராந்தியத்தில், யுபிஐ நடைமுறைகளை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக டிரினிடாட் & டொபாகோ உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, பணம் அனுப்புவது 'காலை வணக்கம்' போன்ற குறுஞ்செய்தி அனுப்புவது போல் எளிதாக இருக்கும்! மேலும், இது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சைக் காட்டிலும் வேகமானதாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
நண்பர்களே,
எங்களது உற்பத்தித் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு பாடுபடுகிறது. உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலகிற்கு ரயில் என்ஜின்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பாதுகாப்புச் சாதனங்களின் ஏற்றுமதி 20 மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் இந்தியாவிற்காக உற்பத்தி செய்யவில்லை. உலகிற்காக உற்பத்தி செய்கிறோம். நாம் வளரும்போது, அது உலக நாடுகளுக்கு பரஸ்பர நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்கிறோம்.
நண்பர்களே,
இன்றைய இந்தியாவானது வாய்ப்புகளுக்கான பூமியாக உள்ளது. வர்த்தகம், சுற்றுலா, கல்வி அல்லது சுகாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.
உங்கள் மூதாதையர்கள் கடல்களைக் கடந்து 100 நாட்களுக்கு மேல் நீண்ட மற்றும் கடினமான பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளனர் - சாத் சமந்தர் பர்! இன்று, அதே பயணம் சில மணிநேரங்களில் சாத்தியமாகிறது. சமூக ஊடகங்களில் மட்டுமின்றி, நேரில் இந்தியாவிற்கு வருகை தருமாறு நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்!
உங்கள் மூதாதையர்களின் கிராமங்களைப் பார்வையிடவும். அவர்கள் நடந்து வந்த மண்ணில் நடக்கவும். உங்கள் குழந்தைகளை, அண்டை வீட்டாரை அழைத்து வாருங்கள். தேநீர் மற்றும் ஒரு நல்ல கதையை ரசிக்கும் எவரையும் அழைத்து வாருங்கள். உங்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் - திறந்த கரங்கள், அன்பான இதயங்கள் மற்றும் ஜிலேபியுடன்!
இந்த வார்த்தைகளுடன், நீங்கள் என் மீது காட்டிய அன்பு மற்றும் பாசத்திற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.
உங்கள் நாட்டின் உயர்ந்த தேசிய விருதை வழங்கி கௌரவித்ததற்காக பிரதமர் திருமதி கம்லா அவர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமஸ்கார்!
சீதா ராம்!
ஜெய் ஸ்ரீ ராம்!.