மூன்றாவது முறையாக மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷுக்குப் பிரதமர் பாராட்டு

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்த அவையின் சார்பாகவும், எனது சார்பாகவும் திரு. ஹரிவன்ஷ்  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களவையின் துணைத் தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, உங்கள் மீது இந்த அவைக்கு இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். கடந்த காலத்தில் உங்கள் அனுபவத்தாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் முயற்சியாலும் இந்த அவை பெற்ற பயன்களுக்கு, இந்த அவை தகுந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது. இது அனுபவத்திற்கு அளிக்கப்பட்ட மரியாதையாகும்; ஒரு இயல்பான பணிமுறைக்கு அளிக்கப்படும் கவுரவமாகும், மேலும் அந்த இயல்பான பணிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாகும்.

திரு. ஹரிவன்ஷ் ஜியின் தலைமையின்கீழ் இந்த அவையின் வலிமை மேலும் சிறப்பாகச் செயல்படுவதை நாம் அனைவரும் கண்டுள்ளோம். அவர் அவையின் நடவடிக்கைகளை வெறும் முறைப்படி நடத்துவது மட்டுமல்லாமல், தனது கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி, இந்த அவையைச் செழுமைப்படுத்துகிறார் என்று நான் சொல்ல முடியும். அவரது அனுபவம், அவையின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள், செயல்பாடு மற்றும் சூழலை மேலும் முதிர்ச்சியடையச் செய்கிறது. துணைத் தலைவரின் இந்தப் புதிய பதவிக்காலம் அதே உணர்வுடனும், சமநிலையுடனும், அர்ப்பணிப்புடனும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நம் அனைவரின் முயற்சியாலும், இந்த அவையின் கண்ணியம் புதிய உயரங்களை எட்டும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

ஹரிவன்ஷ் ஜி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். இயல்பாகவே, தனது கிராமியப் பின்னணியின் காரணமாக, மாணவர் பருவத்திலிருந்தே தனது கிராமத்தின் வளர்ச்சிக்காக அவர் ஏதோ ஒன்றை செய்து வருகிறார். அவரது கல்வி காசியில் தொடங்கியது. இந்த விஷயங்கள் அனைத்தைப் பற்றியும் நான் கடந்த காலத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருப்பதால், அதைப் பற்றி ஏற்கனவே நிறைய சொல்லியிருக்கிறேன். எனவே, இன்று நான் அதை மீண்டும் கூறப் போவதில்லை. இருப்பினும், இன்று ஒரு விஷயத்தை நான் கண்டிப்பாகக் குறிப்பிடுவேன். இன்று ஏப்ரல் 17. 1927, ஏப்ரல் 17 என்பது நமது முன்னாள் பிரதமர் சந்திரசேகர்  அவர்களின் பிறந்தநாளாகும். இதன் சிறப்பு என்னவென்றால், நீங்கள் மூன்றாவது முறையாக இந்தப் பொறுப்பை ஏற்கப்போகும் இந்த ஏப்ரல் 17ம் தேதி, சந்திரசேகர் ஜியின் பிறந்தநாளோடு ஒத்துப்போகிறது. சந்திரசேகர் அவர்களுடன் உங்களுக்கு இருந்த தொடர்பு, அவர் மீது உங்களுக்கு இருந்த பாசம் மற்றும் ஒரு வகையில் அவரது பதவிக்காலம் முழுவதும் அவருக்குத் துணையாகப் பயணித்தது என அனைத்தும் தற்செயலாக நிகழ்ந்த மிகப்பெரிய ஒற்றுமையாகும். சந்திரசேகர் ஜியின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள்; அவரது விரிவான வாழ்க்கை வரலாற்றைப் புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பெரும் பணியையும் செய்துள்ளீர்கள். எனவே, சந்திரசேகர் ஜியின் பிறந்தநாளில் உங்களது மூன்றாவது பதவிக்காலம் தொடங்குவது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு தருணமாக அமைகிறது.

ஹரிவன்ஷ் அவர்களின் பொதுவாழ்வு என்பது நாடாளுமன்றப் பணிகளுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. இதழியல் துறையில் அவர் நிலைநாட்டிய உயர் தரநிலைகள் இன்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. அவர் இதழியலில் நீண்ட காலம் பணியாற்றியவர், ஆனால் அங்கேயும் அவர் எப்போதும் உயர் விழுமியங்களையே அடித்தளமாகக் கொண்டிருந்தார். அவரது எழுத்தில் கூர்மை இருப்பதை நாம் அனைவரும் அறிவோம், அதே சமயம் அவரது பேச்சிலும் நடத்தையிலும் மென்மையும் பணிவும் நிறைந்திருக்கும். நான் குஜராத்தில் இருந்தபோது அவரது கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அவர் தனது தரப்பை மிகுந்த உறுதியுடன் முன்வைப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகுதான் அவர் கருத்துகளை வெளிப்படுத்துவார் என்று நான் உணர்ந்திருக்கிறேன். இதழியலிலும் அவர் கடைசி மனிதனையும் சென்றடைய தொடர்ந்து வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டார். அந்தப் பண்புகளின் பிரதிபலிப்பை நாம் இந்த அவையிலும் பார்க்கிறோம்; அது கொள்கையாக இருந்தாலும் சரி அல்லது செயல்முறையாக இருந்தாலும் சரி, இது நம்மனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

சமூகத்தின் எதார்த்தங்களுடன் ஆழமான பிணைப்புடன் பணியாற்றும் மனிதர் அவர். மக்களவை அல்லது மாநிலங்களவை என எங்கு வந்தாலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரிவன்ஷ் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்; அவரிடம் உரையாடுவதன் மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம். இதழியலில் இருந்தபோது, "நமது நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில் அவர் ஒரு பத்தியை எழுதி வந்தார். அன்றைய தினம், ஒரு நாள் அவரே அங்கே அமர வேண்டியிருக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவர் எழுதிய அந்த விஷயங்களில் பெரும் ஆழம் இருந்தது. அவையின் கண்ணியம், உறுப்பினர் ஒருவரின் பொறுப்பு, அவர்களின் நடத்தை மற்றும் சிந்தனைகள் குறித்தெல்லாம் அவர் மிகுந்த ஆய்வு செய்துள்ளார். இந்த அவையில் உள்ள உறுப்பினர்கள் அவருடன் அமர்ந்து, அந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு ஒழுக்கமான வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும் நேர மேலாண்மை மற்றும் கடமைகளின் மீதான தீவிரத்தன்மை ஆகியவை உங்களின் தனிச்சிறப்புகள். இதனாலேயே, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆளுமையாக நீங்கள் பரிணமித்திருக்கிறீர்கள். அவர் மாநிலங்களவை உறுப்பினரான திலிருந்து, முழுநேரமும் அவையிலேயே இருப்பதை நாம் கண்டிருக்கிறோம். அவைத்தலைவர் இல்லாத நேரத்தில் அவையை வழிநடத்தும் பணியைச் செய்வது மட்டுமன்றி, மற்ற நேரங்களிலும் ஏதாவது ஒரு குழு உறுப்பினர் அமர்ந்திருந்தாலும், அவையில் அவரது இருப்பு எப்போதும் இருக்கும். அவர் அனைத்தையும் கவனிப்பார், அந்த நேரத்தில் அவையை நடத்துபவர்களின் பணிகளை உற்று நோக்குவார். தனது பொறுப்பின் மீதான அர்ப்பணிப்பு காரணமாகவே இது சாத்தியமாகிறது. இது நம்மனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். அவர் தனது முழு நேரத்தையும் இதற்காகவே செலவிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் ஜி அவையை எவ்வாறு நடத்தினார், ஒரு உறுப்பினராக அவைக்கு என்ன பங்களிப்பு செய்தார் என்பது குறித்த நேர்மறையான விவாதங்கள் இயல்பாகவே நம்மிடையே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், அவைக்கு வெளியே மக்கள் மத்தியில் அவர் தனது ஜனநாயக மற்றும் சமூகப் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பது, பொதுவாழ்வில் இருக்கும் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு விஷயமாகும். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது பணி பாராட்டுக்குரியது மட்டுமல்ல, முன்மாதிரியானதும் கூட என்று எனது அனுபவத்திலிருந்து நான் சொல்ல முடியும். நமது நாடு ஒரு இளைஞர்கள் நிறைந்த நாடு. ஹரிவன்ஷ்  அவர்கள் தனது நேரத்தின் பெரும்பகுதியை இளைஞர்களிடையே செலவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இளைஞர்களிடையே தீவிரமான விஷயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் தொடர்ந்து பணியாற்றுகிறார். இது ஒரு வகையான மக்கள் கல்விப் பணியாகும். இதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்கிறார். ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகம் இல்லை, ஆனால் அவரது பயணங்களும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மாநிலங்களவையின் துணைத் தலைவராக அவர் பொறுப்பேற்ற 2018-ம் ஆண்டிலிருந்து, எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, அவர் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் 350-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது மிகவும் பிரம்மாண்டமான ஒரு பணி. நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 350-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் - அங்கு செல்வது, திரும்புவது, மாணவர்களுடன் அமர்ந்து பேசுவது, அதற்கான விஷயங்களைத் தயாரிப்பது - இதுவே மிகப்பரிய விஷயமாகும்; நீங்கள் இந்தப் பணியை ஒரு பிரம்மாண்டமான அளவில் செய்துள்ளீர்கள். இளைஞர்களுடன் இணைந்திருக்கும் உங்களது இலக்கைச் சிறிதும் குறைய விடவில்லை.

'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவு ஏன் இளைஞர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதை மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர் பல்வேறு வழிகளில் விளக்கிக்கொண்டே இருக்கிறார். இளம் தலைமுறையினரிடையே நம்பிக்கையை எவ்வாறு விதைப்பது, அவர்கள் எப்போதும் விரக்தியில் இருந்து எப்படித் தங்களை விடுவித்துக்கொள்வது என்பது குறித்து அவர் விவாதிக்கிறார். நாம் ஏன் வேகமான முன்னேற்றத்தை அடையவில்லை, தற்போது நமக்கு வந்துள்ள வாய்ப்பு என்ன, நாடு எவ்வளவு பெரிய பாய்ச்சலைச் செய்ய முடியும் என்பது குறித்து வரலாற்றுச் சான்றுகளுடன் அவர் பேசி வருகிறார். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பணியை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் இலக்கிய விழாக்கள் ஒரு டிரெண்டாக மாறியுள்ளது. இப்போது அந்த டிரெண்ட் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் சென்றடைந்துள்ளது. ஹரிவன்ஷ் ஜி அடிக்கடி இலக்கிய விழாக்களுக்குச் சென்று, தனது கருத்துகளால் சமூகத்தின் அந்தப் பகுதியைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியும், தாக்கம் ஏற்படுத்தியும் வருகிறார்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; பொதுவெளியில் இருக்கும் எனது தகவல்கள் துல்லியமாக இல்லாமலும் இருக்கலாம். 1994-ம் ஆண்டில், ஹரிவன்ஷ் ஜி முதன்முதலாக வெளிநாடு சென்று அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் போக, அவர் வேறெங்காவது செல்ல வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இது ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்பதால், இந்த நாடு இவ்வளவு முன்னேறுவதற்கு எந்த வகையான கல்வியும் கலாச்சாரமும் காரணமாக இருக்கிறதோ, அந்தப் பல்கலைக்கழகங்களை நான் கண்டிப்பாகப் பார்த்துப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்று பிடிவாதமாகக் கேட்டுப் பெற்றார். அந்த முதல் அமெரிக்கப் பயணத்தின்போது, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் தவிர, தனது முழு நேரத்தையும் பல்கலைக்கழகங்களில் மட்டுமே செலவழித்து, அவற்றைப் படிப்பதிலேயே பணியாற்றினார். அதாவது, ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரும் விஷயங்கள் இவை என்றால், 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவை உருவாக்க இந்தியாவின் பல்கலைக்கழகங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரது மனதில் இருந்தது.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நிறைய விவாதங்கள் உள்ளன. இது எப்போதுமே உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகவே இருந்து வருகிறது. சில நேரங்களில், எம்.எல்.ஏ நிதியோடு ஒப்பிடும்போது எம்.பி நிதியின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த போராட்டங்கள் கூட நடைபெறுவதுண்டு. ஆனால், இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த ஹரிவன்ஷ் ஜியின் கருத்துகளை நான் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறேன்; அவை என்னைக் கவர்ந்துள்ளன. நாமும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே செயல்படுகிறோம். இத்தகைய ஒரு விஷயத்தில் அனைவரையும் உடன்பட வைப்பது சற்று கடினம் என்பதால், அவரது எதிர்பார்ப்புகளுக்கேற்ப நம்மால் செயல்பட முடியாமல் போயிருக்கலாம். இருப்பினும், அவர் தனது பொறுப்பை எப்படிக் கடைப்பிடித்தார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். அவர் தனது கருத்துகளைச் செயல்படுத்த, கல்வித் துறையையும் இளைய தலைமுறையையும் மையமாகக் கொண்டு இந்த எம்.பி.எல்.ஏ.டி நிதியைப் பயன்படுத்தினார். இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆய்வு மையங்களை அவர் நிறுவினார். அதிலும் குறிப்பாக, திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். உதாரணமாக, மறைந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்காக, ஐ.ஐ.டி பாட்னாவில் ஒரு ஆய்வு மையத்தைத் தொடங்க அவர் இந்த நிதியைப் பயன்படுத்தினார். அங்கு அந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மற்றொரு முக்கியமான பணியைச் செய்தார்: பீகாரின் சில பகுதிகளில் தினசரி நிலநடுக்க பாதிப்புகள் நிகழ்கின்றன; நேபாளத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட அது இந்தப் பகுதியைப் பாதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, 'நிலநடுக்க பொறியியல் மையம்'  என்ற பெயரில் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவர் நடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியின் மூலம் திறக்கச் செய்தார். அதன் மூலம் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜெயப்பிரகாஷ் நாராயண் ஜியின் கிராமமான சிதாப் தியாராவைச் சேர்ந்தவர் ஹரிவன்ஷ் அவர்கள் என்பது நமக்குத் தெரியும். கங்கை மற்றும் காக்ரா ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள அக்கிராமம், எப்போதும் நீர் அரிப்பினால் பாதிப்புக்குள்ளாகிறது; ஆற்று நீரோட்டம் மாறுவதால் பெரும் அழிவுகளும் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அதன் அறிவியல் பூர்வமான ஆய்வுக்காக பாட்னாவின் ஆர்யபட்டா அறிவுசார் பல்கலைக்கழகத்தில் ஒரு 'ஆற்று ஆய்வு மையத்தை' அவர் நடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியைக் கொண்டு திறக்கச் செய்தார். பாட்னாவின் சந்திரகுப்த மேலாண்மை நிறுவனத்தில் 'வணிகக் காப்பகம் மற்றும் புத்தாக்க மையத்தை' உருவாக்கி வருகிறார். இந்த செயற்கை நுண்ணறிவு காலத்தில், மகத் பல்கலைக்கழகத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு மையத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். அதாவது, நடாளுமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு நிதியை ஒரு தீர்க்கமான திசையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கியுள்ளீர்கள்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வேறு நகரங்களுக்குப் புலம் பெயரும்போது, ஒரு வகையில் அவர்கள் தங்கள் பூர்வீக கிராமத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் ஹரிவன்ஷ் அவர்களின் வாழ்க்கை தனது கிராமத்துடனும், தனது பூர்வீகத்துடனும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களின் இன்ப துன்பங்களில் ஒரு பங்காளியாக இருந்து, தன்னால் முடிந்த பங்களிப்பை அவர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

நாடாளுமன்றத்தின் இந்த புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவருடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனது மனதில் தோன்றும் யோசனைகளை அவரிடம் பகிர்ந்து, "இதை இப்படிச் செய்தால் என்ன?" என்று கேட்பேன். இரண்டு நாட்களுக்குள்ளாகவே அதை மிகச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டு வருவார். ஒரு விஷயத்திற்குப் பெயர் சூட்டுவது முதல், இந்த அவையின் அடையாளம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது வரை, அவையின் கட்டுமானத்திலும், அதன் கலைக்கூடம் அமைப்பிலும், பல்வேறு வாயில்களுக்குப் பெயர் சூட்டுவதிலும் அவரது பங்களிப்பு அபரிமிதமானது. சுருக்கமாகச் சொன்னால், ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஒரு உற்ற துணையாக அவர் இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

அவையை நடத்துவதில் ஹரிவன்ஷ் அவர்களின் திறமையை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதோடு மட்டுமல்லாமல், மாநில சட்டப்பேரவைகள் மற்றும் சட்ட மேலவைகளின் பயிற்சிக்காகவும், அங்கிருக்கும் அவைத் தலைவர்களுக்குப் பயனுள்ள வகையில் வழிகாட்டுவதற்காகவும் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார். காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தில்  இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் முத்திரையைப் பதிப்பதிலும் அவர் மிகச் சிறந்த மற்றும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த இரண்டாம் கால் பகுதியில், இந்த அவை நாட்டுக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு ஏராளமாக உள்ளது என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும், வளர்ச்சி என்ற இலக்கை அடைவதிலும் இந்த அவையின் மூலம் பல முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று நான் நம்புகிறேன். இதன் காரணமாக, அனைத்து அவைத் தலைவர்களின் பொறுப்பும் மிகவும் மகத்தானது.

நீங்கள் விரும்புவதை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும், உங்கள் பணிகளில் எந்தச் சிரமமும் ஏற்படாமல், நீங்கள் இன்னும் சிறந்த முடிவுகளைத் தருவதற்கு வழிவகுப்பார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அனைவரும் இதனைச் செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

நான் முன்னரே குறிப்பிட்டது போல, அனைத்தும் 'ஹரி கிருபை' (இறைவனின் அருள்) பொறுத்தே அமையும். 'ஹரி' இங்கே இருப்பவரும்தான், 'ஹரி' அங்கே இருப்பவரும்தான், இந்த அவையில் அமர்ந்திருப்பவரும் 'ஹரி'தான். எனவே, 'ஹரி கிருபை' என்றும் நிலைத்திருக்கட்டும். இந்த எதிர்பார்ப்புடன், எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 4, 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership