விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர்
அறிவியல் மற்றும் ஆன்மீகம், இரண்டும் நமது நாட்டின் பலம்: பிரதமர்
சந்திரயான் பயணத்தின் வெற்றியுடன் நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியலில் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது, விண்வெளியை ஆராய ஆர்வம் ஏற்பட்டுள்ளது, இப்போது உங்கள் வரலாற்று பயணம் இந்த உறுதிப்பாட்டிற்கு அதிக சக்தியை அளிக்கிறது: பிரதமர்
நாம் ககன்யான் பயணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும், நமது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும், மேலும் இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்க வேண்டும்: பிரதமர்
இன்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், இது இந்தியாவின் ககன்யான் பயணத்தின் வெற்றியின் முதல் அத்தியாயம் என்று; உங்கள் வரலாற்று பயணம் விண்வெளியில் மட்டுமல்ல, நமது வளர்ந்த பாரதத்தின் பயணத்திற்கு வேகத்தையும் புதிய வீரியத்தையும் தரும்: பிரதமர்
இந்தியா உலகிற்கு விண்வெளியின் புதிய சாத்தியக்கூறுகளுக்கான கதவுகளைத் திறக்கப் போகிறது: பிரதமர்

பிரதமர்: சுபான்ஷு வணக்கம்!

சுபான்ஷு சுக்லா: வணக்கம்!

பிரதமர்: இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

 

சுபான்ஷு சுக்லா: ஆம், பிரதமர் அவர்களே! உங்கள் வாழ்த்துகளுக்கும், எனது 140 கோடி மக்களின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆசிர்வாதத்தாலும் அன்பாலும் நான் இங்கே முற்றிலும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இது மிகவும் புதிய அனுபவம்.  எனது இந்தப் பயணம் என்னுடையது மட்டுமல்ல.  இது நமது நாட்டின் பயணமும் கூட என்று நான் உணர்கிறேன். ஏனென்றால் நான் இளமையாக இருந்தபோது, ​​நான் ஒரு விண்வெளி வீரராக முடியும் என்று  நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் உங்கள் தலைமையின் கீழ் இன்றைய இந்தியா இந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அந்தக் கனவுகளை நனவாக்க ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. எனவே, இது எனக்கு மாபெரும் சாதனை. இங்கு என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி, பிரதமர் அவர்களே!

பிரதமர்: சுபான்ஷு, நீங்கள் விண்வெளியில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு இந்தியரும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறார்கள். நீங்கள் எடுத்துச் சென்ற கஜர் கா ஹல்வாவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அளித்தீர்களா?

 

சுபான்ஷு சுக்லா: ஆம், பிரதமர் அவர்களே! நமது நாட்டிலிருந்து கஜர் கா ஹல்வா, மூங் தால் ஹல்வா மற்றும் ஆம் ராஸ் போன்ற சில உணவுப் பொருட்களை நான் கொண்டு வந்திருந்தேன். மற்ற நாடுகளிலிருந்து வந்த எனது மற்ற நண்பர்களும் அதை ருசித்து இந்தியாவின் வளமான சமையல் பாரம்பரியத்தை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அதை ருசித்தோம். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.

பிரதமர்: சுபான்ஷு, பரிக்ரமா எனப்படும் வலம் வருதல் என்பது இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம். பூமித்தாயைப் பரிக்ரமா (வலம் வருதல்) செய்யும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் இப்போது பூமியின் எந்தப் பகுதியைக் கடந்து செல்கிறீர்கள்?

சுபன்ஷு சுக்லா:  பிரதமர் அவர்களே! எனக்கு இப்போது அந்தத் தகவல் இல்லை. ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், நாங்கள் ஹவாய் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு நாளைக்கு 16 முறை சுற்றி வருகிறோம். சுற்றுப்பாதையில் இருந்து 16 சூரிய உதயங்களையும் 16 சூரிய அஸ்தமனங்களையும் காண்கிறோம். இந்த முழு செயல்முறையும் மிகவும் அற்புதமானது. இந்த சுற்றுப்பாதையில், இந்த வேகத்தில், நாங்கள் மணிக்கு சுமார் 28000 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறோம். உங்களுடன் பேசும்போது இந்த வேகம் தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் உள்ளே இருக்கிறோம். ஆனால் இந்த வேகம் நிச்சயமாக நம் நாடு எந்த வேகத்தில் முன்னேறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

பிரதமர்: அருமை!

சுபான்ஷு சுக்லா: இந்த நேரத்தில் நாம் இங்கு வந்துவிட்டோம். இப்போது நாம் இங்கிருந்து மேலும் செல்ல வேண்டும்.

பிரதமர்: சரி, விண்வெளியின் பரந்த தன்மையைப் பார்த்த பிறகு உங்கள் மனதில் தோன்றிய முதல் எண்ணம் என்ன?

 

சுபான்ஷு சுக்லா: பிரதமர் அவர்களே, உண்மையைச் சொல்லப் போனால், நான் முதன்முறையாக சுற்றுப்பாதையை அடைந்ததும், விண்வெளியை அடைந்ததும், முதல் பார்வை பூமியின் மீதுதான். பூமியை வெளியில் இருந்து பார்த்த பிறகு  மனதில் தோன்றிய முதல் எண்ணம் பூமி முற்றிலும் சீராகத் தெரிகிறது. அதாவது எந்த எல்லைக் கோடும் இல்லை. வெளியில் இருந்து எந்த எல்லையும் தெரியவில்லை. இந்த உணர்வு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதாகும். வெளியில் இருந்து பார்க்கும்போது எந்த எல்லையும் இல்லை. எந்த மாநிலமும் இல்லை. எந்த நாடுகளும் இல்லை. இறுதியாக நாம் அனைவரும் மனிதகுலத்தின் ஒரு பகுதி. பூமி நமது வீடு, நாம் அனைவரும் அதன் மக்கள் என்பது போல் தெரிகிறது.

 

பிரதமர்: சுபான்ஷு, விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் நீங்கள். நீங்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நீண்ட பயிற்சியை கடந்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் ஒரு களச் சூழ்நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே விண்வெளியில் இருக்கிறீர்கள். அங்குள்ள நிலைமைகள் எவ்வளவு வேறுபட்டவை? நீங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறீர்கள்?

சுபான்ஷு சுக்லா: இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது பிரதமர் அவர்களே. நாங்கள் கடந்த ஒரு வருடமாக பயிற்சி செய்தோம். எல்லா அமைப்புகளையும் பற்றி எனக்குத் தெரியும். எல்லா செயல்முறைகளையும் பற்றி எனக்குத் தெரியும். சோதனைகளைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு வந்தவுடன், திடீரென்று எல்லாம் மாறிவிட்டது. ஏனென்றால் நம் உடல் ஈர்ப்பு விசையில் வாழப் பழகிவிட்டதால் எல்லாவற்றையும் அதுவே தீர்மானிக்கிறது. ஆனால் இங்கு வந்த பிறகு, ஈர்ப்பு விசை இல்லாததால், சிறிய விஷயங்கள் கூட மிகவும் கடினமாகிவிடும். இப்போது, ​​உங்களுடன் பேசும்போது, ​​நான் என் கால்களைக் கட்டிவிட்டேன். இல்லையெனில் நான் மேலே செல்வேன்.  பிரதமர் அவர்களே, சூழல் மாறுகிறது, எனவே இதற்குப் பழகுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். ஆனால் பின்னர் அது சரியாகிவிடும். பின்னர் அது சாதாரணமாகிவிடும்.

பிரதமர்: சுபான்ஷு, இந்தியாவின் பலம் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டிலும் உள்ளது. நீங்கள் ஒரு விண்வெளிப் பயணத்தில் இருக்கிறீர்கள். ஆனால் இந்தியாவின் பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்தியா உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில் தியானம் மற்றும் ஆழமான உணர்வின் பலனைப் பெறுகிறீர்களா?

சுபான்ஷு சுக்லா: ஆம், பிரதமர் அவர்களே, நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். நல்ல உணர்வுடன் நீங்கள் பல சூழ்நிலைகளில் உங்களை அமைதியாக வைத்திருக்க முடியும். நீங்கள் உங்களை அமைதியாக வைத்திருந்தால், நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். ஓடும்போது யாரும் சாப்பிட முடியாது என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக முடிவுகளை எடுக்க முடியும். எனவே, இந்த விஷயங்களில் மன உறுதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பிரதமர்: நீங்கள் விண்வெளியில் பல பரிசோதனைகளைச் செய்கிறீர்கள். எதிர்காலத்தில் விவசாயம் அல்லது சுகாதாரத் துறைக்கு பயனளிக்கும் ஏதேனும் பரிசோதனை உள்ளதா?

 

சுபன்ஷு சுக்லா: ஆம், பிரதமர் அவர்களே.. இந்திய விஞ்ஞானிகள் முதன்முறையாக 7 தனித்துவமான பரிசோதனைகளை வடிவமைத்துள்ளனர் என்பதை நான் மிகுந்த பெருமையுடன் சொல்ல முடியும். அதை நான் என்னுடன் விண்வெளி நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இன்று நான் செய்யப் போகும் முதல் பரிசோதனை ஸ்டெம் செல்களில் உள்ளது. எனவே, விண்வெளிக்குச் செல்லும்போது என்ன நடக்கிறது என்றால், ஈர்ப்பு விசை இல்லாததால், சுமை நீங்கி, அதனால் தசை இழப்பு ஏற்படுகிறது. எனவே, எனது பரிசோதனை, ஏதாவது துணை மருந்துகளை வழங்குவதன் மூலம் இந்த தசை இழப்பை நிறுத்த முடியுமா அல்லது தாமதப்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதுதான். வயதானதால் தசை இழப்பால் அவதிப்படுபவர்களுக்கு இந்த துணை பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பது பூமியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதை நிச்சயமாக அங்கு பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். இதனுடன், மற்றொரு பரிசோதனை நுண் பாசிகளின் வளர்ச்சி பற்றியது. இந்த நுண் பாசிகள் மிகச் சிறியவை ஆனால் மிகவும் வலுவானவை. எனவே அவற்றின் வளர்ச்சியை இங்கே நாம் பார்த்து, அவற்றை அதிக எண்ணிக்கையில் வளர்த்து ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒரு செயல்முறையைக் கண்டுபிடித்தால், எங்காவது அது பூமியில் உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விண்வெளியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இங்கு செயல்முறை மிக விரைவாக நடக்கிறது. எனவே, நாம் மாதங்கள் அல்லது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. எனவே இங்கு நாம் பெறும் முடிவுகளை  பயன்படுத்தலாம்.

 

பிரதமர்: சுபான்ஷு, சந்திரயான் வெற்றிக்குப் பிறகு, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியலில் ஒரு புதிய ஆர்வம் பிறந்தது. விண்வெளியை ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்போது உங்களுடைய இந்த வரலாற்றுப் பயணம் அந்தத் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இப்போது குழந்தைகள் வானத்தை மட்டும் பார்க்கவில்லை. அவர்களும் பல வகைகளில் சாதிக்க நினைக்கிறார்கள்.  இந்த உணர்வுதான் நமது எதிர்கால விண்வெளிப் பயணங்களின் உண்மையான அடித்தளம். இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன செய்தியைக் கூறுவீர்கள்?

சுபான்ஷு சுக்லா: பிரதமர் அவர்களே, இன்றைய நமது இளம் தலைமுறையினருக்கு ஒரு செய்தியை நான் தெரிவிக்க விரும்பினால், முதலில் நான் ஒன்றைச் சொல்வேன். இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் மிகவும் உயர்ந்த கனவுகளைக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் நமக்குத் தேவை. எனவே அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, சில நேரங்களில் நீங்கள் ஒரு பாதையை எடுக்கிறீர்கள். சில நேரங்களில் யாரோ ஒருவர் மற்றொரு பாதையை எடுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பாதையிலும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடக்கூடாது என்பதுதான். முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம். நீங்கள் எந்தப் பாதையில் இருந்தாலும், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.  வெற்றி இன்று அல்லது நாளை வரலாம். ஆனால் அது நிச்சயமாக வரும்.

 

பிரதமர்: உங்கள் இந்த வார்த்தைகளை நாட்டின் இளைஞர்கள் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்னை நன்கு அறிவீர்கள். நான் யாரிடமாவது பேசும் போதெல்லாம், நான் எப்போதும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கிறேன். நாம் ககன்யானை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும். மேலும் இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறக்க வேண்டும். இந்த அனைத்து பயணங்களிலும் உங்கள் அனுபவங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

 

சுபான்ஷு சுக்லா: ஆம், பிரதமர் அவர்களே, நிச்சயமாக, பயிற்சி பெற்று இந்த முழு பயணத்தையும் அனுபவித்த பின்னர், ​​நான் பெற்ற பாடங்கள், நான் பெற்ற கற்றல்கள் அனைத்தும் மிகவும் மதிப்புமிக்கதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ககன்யான் கனவு மிக விரைவில் நிறைவேறும் என்று நான் நினைக்கிறேன். நான் இங்கு கற்றுக்கொண்ட பாடங்கள். திரும்பி வந்த பிறகு, அவற்றை எனது பணியில் 100% பயன்படுத்துவேன்.

பிரதமர்: சுபான்ஷு, உங்களுடைய இந்த செய்தி பலருக்கு உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புறப்படுவதற்கு முன்பு ​​உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு உற்சாகத்துடன் இருந்ததைக் கண்டேன். சுபான்ஷு, இன்று உங்களுடன் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. நீங்கள் 28000 கிலோமீட்டர் வேகத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டேன். இது இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் வெற்றியின் முதல் அத்தியாயம் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். உங்களுடைய இந்த வரலாற்றுப் பயணம் விண்வெளியில் மட்டுமல்ல, வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்திற்கு வேகத்தையும் புதிய பலத்தையும் தரும். இந்தியா, உலகிற்கு விண்வெளியின் புதிய சாத்தியக்கூறுகளின் கதவுகளைத் திறக்கப் போகிறது.

சுபன்ஷு சுக்லா: நன்றி, பிரதமர் அவர்களே! விண்வெளிக்கு வந்து இங்கு பயிற்சி பெற்று இங்கு வந்த இந்த முழு பயணத்திலும், நான் இதில் நிறைய கற்றுக்கொள்கிறேன். இதைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, நீங்கள் முயற்சி செய்து உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கினால், உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும். நமது நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும். உங்கள் மனதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்திருங்கள். அந்த வானத்திற்கு ஒருபோதும் எல்லைகள் இல்லை. நீங்கள் எப்போதும் இதை உங்கள் மனதில் வைத்திருந்தால், நீங்கள் முன்னேறுவீர்கள். உங்கள் எதிர்காலத்தை ஒளிரச் செய்வீர்கள். நமது நாட்டின் எதிர்காலத்தை ஒளிரச் செய்வீர்கள். இதுவே எனது செய்தி.

பிரதமர் அவர்களே, நான் இன்று உங்களுடன் பேசவும், உங்கள் மூலம் 140 கோடி நாட்டு மக்களுடன் பேசவும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் பின்னால் நீங்கள் காணும் இந்த மூவர்ணக் கொடி நான் இங்கு வந்தபோது இங்கே இல்லை. நாங்கள் வந்த பின்னர் நாங்கள் அதை முதல் முறையாக இங்கே ஏற்றியுள்ளோம். எனவே, இது என்னை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்கிறது. இன்று இந்தியா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்திருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

 

பிரதமர்: சுபான்ஷு, உங்கள் பணி வெற்றிபெற உங்களுக்கும் உங்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சுபான்ஷு, உங்கள் வருகைக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். பாரத அன்னையின் மீதான மரியாதையை உலகில் தொடர்ந்து உயர்த்துங்கள். 140 கோடி மக்களின் வாழ்த்துகள். இவ்வளவு கடினமாக உழைத்து இந்த உயரத்தை எட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி. பாரத் மாதா கி ஜெ!

 

சுபான்ஷு சுக்லா: பிரதமர் அவர்களே, நன்றி.. 140 கோடி நாட்டு மக்களுக்கும் நன்றி.. விண்வெளியில் இருந்து அனைவருக்கும் பாரத் மாதா கி ஜெ!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand

Media Coverage

Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 27, 2026
January 27, 2026

India Rising: Historic EU Ties, Modern Infrastructure, and Empowered Citizens Mark PM Modi's Vision