கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-இல் கலந்துகொண்டபோது, பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பாராட்டிய திரு மோடி, வாழைப்பழ கழிவுகளின் பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வாழைப்பழ கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று விவசாயி விளக்கம் அளித்தார். இத்தகைய தயாரிப்புகள் இந்தியா முழுவதும் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதை விவசாயி உறுதிப்படுத்தினார். வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தனிநபர் பங்களிப்பாளர்கள் வாயிலாக ஒட்டுமொத்த மாநிலத்தையும் உழவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த விவசாயி மேலும் கூறினார்.

மற்றொரு விவசாயி, தேயிலையின் நான்கு வெவ்வேறு வகைகள் பற்றி பிரதமருக்கு விளக்கம் அளித்தார். தற்போது வெள்ளை தேயிலைக்கு குறிப்பிடத்தக்க சந்தை இருப்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். இயற்கை வேளாண்மை நடைமுறை வாயிலாக விளைந்த கத்திரிக்காய், மாங்காய் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
முருங்கைக்காயின் தற்போதைய சந்தை நிலவரம் பற்றி பிரதமர் கேட்டறிந்தார். அதன் பல்வேறு பயன்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்கையில், முருங்கை இலைகள் தூளாக பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதை விவசாயிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த தயாரிப்பை அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் பிரதமரிடம் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களிடம் கிட்டத்தட்ட 1000 பாரம்பரிய நெல் வகைகள் இருப்பதாகவும், அவை சிறுதானியங்களுக்கு இணையான ஊட்டச்சத்துமிக்கவை என்றும் விவசாயிகள் கூறினார்கள். நெல் தொடர்பாக தமிழ்நாடு மேற்கொண்டுள்ள பணிகள் உலக அளவில் ஒப்பிட முடியாதது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

மற்றொரு விவசாயியுடன் உரையாடுகையில், பயிற்சியில் இளம் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்களா என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். ஏராளமான இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பதாக விவசாயி பதிலளித்தார். இயற்கை வேளாண் திட்டம் ஒன்றின் கீழ், 3000 கல்லூரி மாணவர்களுடன், 7000 விவசாயிகளுக்கு தங்களது மாதிரி விளை நிலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக விவசாயி மேலும் தெரிவித்தார்.

தாம் குஜராத் முதல்வராகப் பணியாற்றிய போது, “கால்நடை விடுதி” என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியது பற்றி திரு மோடி பகிர்ந்து கொண்டார். கிராமத்தில் கால்நடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பராமரிப்பதன் மூலம் கிராமம் தூய்மை அடைவதுடன், பராமரிப்புக்குத் தேவைப்படும் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று அவர் விளக்கம் அளித்தார். இந்த அமைப்புமுறை ஜீவாமிர்தத்தின் பெருமளவிலான உற்பத்தியை ஆதரிக்கிறது என்றும் அருகில் உள்ள விவசாயிகளுக்கு பின்னர் அது வழங்கப்படுகிறது என்றும் விவசாயி கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Here are highlights from a very insightful interaction with farmers at the South India Natural Farming Summit in Coimbatore. Their passion for agriculture, innovation and sustainability is noteworthy. pic.twitter.com/GXacGtR1c2
— Narendra Modi (@narendramodi) November 20, 2025


