செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4:30 மணிக்கு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்வார். கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல்மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் பொது அணுகலை விரைவுப்படுத்துவதற்கான ஞான பாரதம் டிஜிட்டல் தளத்தையும் பிரதமர் அறிமுகப்படுத்திவைத்து நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.
கையெழுத்துப் பிரதிகளின் பாரம்பரியத்தின் வாயிலாக இந்தியாவின் அறிவுசார் மரபை மீட்டெடுத்தல் என்ற கருப்பொருளில் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவின் ஒப்பற்ற கையெழுத்து பிரதி வளங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் வழிமுறைகள் குறித்த ஆலோசிக்க இந்த மாநாடு முன்னணி அறிஞர்கள், ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பு நிபுணர்களை ஒன்றிணைக்கும். கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கல் தொழில்நுட்பங்கள், மெட்டா தரவு தரநிலைகள், சட்ட கட்டமைப்புகள், கலாச்சார ராஜதந்திரம் பழங்கால எழுத்து வடிவங்களின் விளக்க உரை போன்ற முக்கிய துறைகளில் அறிஞர்களின் விளக்கக் காட்சிகளும், அரிய கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சியும் மாநாட்டில் இடம்பெறும்.


