சர்வதேச நிலைத்த வளர்ச்சி மாநாடு 2021 பிப்ரவரி 10 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். 'நமது பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்' என்பது இம்மாநாட்டின் மையக்கருவாகும்.
கயானா கூட்டுறவு குடியரசின் அதிபர் மேன்மைமிகு டாக்டர் முகமது இர்ஃபான் அலி, பப்புவா நியூ கினியா பிரதமர் மாண்புமிகு ஜேம்ஸ் மராபே, மாலத்தீவு மக்களவையின் சபாநாயகர் திரு முகமது நஷீத், ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைமை இயக்குநர் திருமிகு அமினா ஜே முகமது மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டை பற்றி:
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் 20-வது பதிப்பின் முக்கிய நிகழ்வான சர்வதேச நீடித்த வளர்ச்சி மாநாடு, 2021 பிப்ரவரி 10 முதல் 12 வரை இணையவழியில் நடைபெறும். பல்வேறு நாடுகளின் அரசுகள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், பருவநிலை விஞ்ஞானிகள், இளைஞர்கள் மற்றும் சமூகங்களை பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் இம்மாநாடு ஒன்று திரட்டும்.
இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.
எரிசக்தி மற்றும் தொழில்துறை மாற்றங்கள், இத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதலில் உறுதி, இயற்கை சார்ந்த தீர்வுகள், பருவநிலை நிதி, சுழற்சி பொருளாதாரம், தூய்மையான கடல்கள், காற்று மாசு உள்ளிட்ட தலைப்புகளில் மாநாட்டில் விவாதிக்கப்படும்.


