புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.

கையெழுத்துப் பிரதிகளைக் காண்பது கடந்த காலத்திற்கு பயணிப்பதை போன்ற உணர்வை வழங்குவதாகக் கூறிய திரு மோடி, இன்றைய நிலைமைகளுக்கும், கடந்த கால சூழல்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வேறுபாட்டை எடுத்துரைத்தார். இன்று விசைப்பலகைகளின் உதவியுடன், திருத்தம் மேற்கொள்ளும் வசதிகளுடன் நம்மால் விரிவாக எழுத முடிவதுடன், அச்சு இயந்திரங்களின் மூலம் ஒற்றை பக்கத்தை நொடியில் ஆயிரம் பிரதிகள் எடுக்க முடிகிறது என்று குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை கற்பனை செய்து பார்க்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், நவீன பொருள்சார் வளங்கள் அப்போது இருக்கவில்லை என்றும், நமது முன்னோர்கள் அறிவுசார் வளங்களை மட்டுமே நம்பி இருந்தார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு கடிதத்தை எழுதுவதற்கும் நுட்பமான கவனம் தேவைப்பட்டதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியை உருவாக்குவதற்கும் தேவைப்பட்ட அபரிமிதமான முயற்சியை சுட்டிக் காட்டிய திரு மோடி, அத்தகைய சூழலிலும் பிரம்மாண்டமான நூலகங்களை இந்தியர்கள் எழுப்பியதாகவும், அத்தகைய நூலகங்கள் உலகளாவிய அறிவுசார் மையங்களாக விளங்கியதாகவும் கூறினார். உலகின் மிகப்பெரிய கையெழுத்துப் பிரதி சேகரிப்பை இந்தியா இன்னும் தன்னகத்தே கொண்டுள்ளதை உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவில் தோராயமாக ஒரு கோடி கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த கால வரலாற்றின் கொடிய சம்பவங்களால் லட்சக்கணக்கான கையெழுத்துப் பிரதிகள் அழிந்துவிட்டதாகக் கூறிய பிரதமர், இன்றளவும் நீடித்திருக்கும் மீதமுள்ள கையெழுத்துப் பிரதிகள், ஞானம், அறிவியல், வாசித்தல் மற்றும் கற்றல் உள்ளிட்டவற்றில் நமது முன்னோர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்குகின்றன என்று தெரிவித்தார். மரப்பட்டைகள் மற்றும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் பலவீனத்தையும், செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளில் உலோக அரிப்பு ஏற்படும் அச்சுறுத்தலையும் குறிப்பிட்ட பிரதமர், இது போன்ற சவால்கள் இருந்தபோதும், நமது முன்னோர்கள் வார்த்தைகளை தெய்வமாக மதித்து, 'அக்ஷர் பிரம்ம பவ' என்ற உணர்வுடன் அவற்றுக்கு சேவை செய்தனர் என்று குறிப்பிட்டார். ஞானத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தலைமுறை தலைமுறைகளாக பல்வேறு குடும்பங்கள் இதுபோன்ற கையெழுத்துப் பிரதிகளை கவனமாக பாதுகாத்து வருகின்றன என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வலியுறுத்தி, எதிர்கால சந்ததியினர் குறித்த அக்கறையை திரு மோடி வெளிப்படுத்தினார். நாட்டின் மீதான பக்தி உணர்வை சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய அர்ப்பணிப்புக்கு வேறு எங்கு சிறந்த உதாரணம் காண முடியும் என்று கூறினார்.

“பாதுகாப்பு, புத்தாக்கம், சேர்த்தல் மற்றும் தகவமைப்பு ஆகிய நான்கு அடிப்படைத் தூண்களில் இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் இன்றளவும் அது சிறந்து விளங்குகிறது”, என்று பிரதமர் தெரிவித்தார். முதல் தூணான பாதுகாப்பு பற்றி விரிவாகப் பேசிய திரு மோடி, இந்தியாவின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளான வேதங்கள், இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக கருதப்படுகின்றன என்று குறிப்பிட்டார். வேதங்கள் தான் முதன்மையானது என்பதை உறுதிப்படுத்திய அவர், உன் காலத்தில் ‘சுருதி’ என்று அழைக்கப்படும் வாய்வழி கலாச்சாரத்தின் மூலமாக வேதங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையை சென்றடைந்தன என்று கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதங்கள் பிழையின்றி, முழுமையான நம்பகத்தன்மையுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அவர் வலியுறுத்தினார். இரண்டாவது தூணான புத்தாக்கம் பற்றி பேசிய பிரதமர், ஆயுர்வேதம், வாஸ்து சாஸ்திரம், வேத சாஸ்திரம் மற்றும் உலோகவியலில் இந்தியா தொடர்ந்து புதுமைகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த தலைமுறையை விட மேம்பட்டு, பழங்கால ஞானத்தை மேலும் அறிவியல் பூர்வமானதாக மாற்றியதை அவர் சுட்டிக் காட்டினார். தொடர்ச்சியான அறிவுசார் பங்களிப்புகளுக்கும், புதிய ஞானத்தை சேர்ப்பதற்கும் சூரிய சித்தாந்தம் மற்றும் வராஹமிஹிர சம்ஹிதா போன்ற உரைகளை அவர் மேற்கோள் காட்டினார். சேர்த்தல் என்ற மூன்றாவது தூண் பற்றி குறிப்பிடுகையில், ஒவ்வொரு தலைமுறையும் பழங்கால ஞானத்தை பாதுகாத்ததுடன், புதிய நுண்ணறிவுகளையும் சேர்த்தது என்று பிரதமர் விளக்கம் அளித்தார். முதன் முதலில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தைத் தொடர்ந்து பல்வேறு ராமாயணங்கள் இயற்றப்பட்டதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி ராமசரிதமனாஸ் போன்ற நூல்கள் உருவானதாகவும் வேதங்கள் மற்றும் உபநிடதங்களுக்கு விளக்க உரைகள் எழுதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். த்வைதம் மற்றும் அத்வைதம் போன்றவற்றிற்கு இந்திய ஆச்சாரியர்கள் விளக்கங்களை வழங்கியதை அவர் எடுத்துரைத்தார்.
இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் நான்காவது தூணான தகவமைப்பு பற்றி விளக்கம் அளித்த பிரதமர், காலப்போக்கில் இந்தியா சுய பரிசோதனையில் ஈடுபட்டு தேவையான மாற்றங்களை கொண்டு வந்தது என்றார். வேதங்கள் பற்றிய விவாதம் தொடர்பான கலாச்சாரத்தின் தொடர்ச்சி மற்றும் விவாதங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காலாவதியான யோசனைகளை நிராகரித்து சமூகம் புதியவற்றை ஏற்றுக்கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். இடைக்காலத்தில் பல்வேறு சமூக அவலங்கள் எழுச்சி பெற்ற போது சமூக உணர்வைத் தட்டி எழுப்பிய புகழ்பெற்ற ஆளுமைகள் தோன்றியதாக திரு மோடி கூறினார். இந்த ஆளுமைகள், இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தைப் போற்றி பாதுகாத்தனர், என்றார் அவர்.

"தேசியம் பற்றிய நவீன கருத்துக்களைப் போலல்லாமல், இந்தியா ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளம், சொந்த உணர்வு மற்றும் சொந்த ஆன்மாவைக் கொண்டுள்ளது" என்று கூறிய பிரதமர், இந்தியாவின் வரலாறு வெறும் அரச மரபுகளின் எழுச்சி மற்றும் சரிவுகளைப் பற்றியது மட்டுமல்ல என்பதை வலியுறுத்தினார். சமஸ்தானங்கள் மற்றும் ராஜ்யங்களின் புவி எல்லைகள் காலப்போக்கில் மாறியிருந்தாலும், இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை இந்தியா அப்படியே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் எண்ணங்கள், கோட்பாடுகள் மற்றும் மாண்புகளால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவே ஒரு வாழும் நீரோடையாக உள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தினார். கையெழுத்துப் பிரதிகள் வேற்றுமையில் ஒற்றுமையை பிரகடனப்படுத்துகின்றன என்று கூறிய பிரதமர், "இந்தியாவின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் இந்த நாகரிகப் பயணத்தின் தொடர்ச்சியான ஓட்டத்தை பிரதிபலிக்கின்றன" என்று தெரிவித்தார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 80 மொழிகளில் கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக அவர் கூறினார். இந்தியாவின் பரந்த அறிவுப் பெருங்கடல் சமஸ்கிருதம், பிராகிருதம், அசாமி, பெங்காலி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாதுகாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கில்கிட் கையெழுத்துப் பிரதிகள் காஷ்மீரைப் பற்றிய உண்மையான வரலாற்று நுண்ணறிவுகளை வழங்குகின்றன என்பதை எடுத்துரைத்த பிரதமர், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தின் கையெழுத்துப் பிரதி, அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் குறித்த இந்தியாவின் ஆழமான புரிதலை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார். ஆச்சார்ய பத்ரபாகுவின் கல்பசூத்திர கையெழுத்துப் பிரதி, சமண மதத்தின் பண்டைய ஞானத்தைப் பாதுகாக்கிறது என்றும், சாரநாத்திலிருந்து வந்த கையெழுத்துப் பிரதிகள் பகவான் புத்தரின் போதனைகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். ரசமஞ்சரி மற்றும் கீத கோவிந்தம் போன்ற கையெழுத்துப் பிரதிகள், பக்தி, அழகு மற்றும் இலக்கியத்தின் பல்வேறு சாயல்களைப் பாதுகாத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
"ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிப் பயணத்தின் தடங்களை இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகள் கொண்டிருக்கின்றன" என்று திரு மோடி வலியுறுத்தினார். இந்த கையெழுத்துப் பிரதிகள், தத்துவம் மற்றும் அறிவியலை உள்ளடக்கியிருக்கின்றன என்று கூறினார். அவை மருத்துவம் மற்றும் மெய்ப்பொருளியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், கலை, வானியல் மற்றும் கட்டிடக்கலை பற்றிய அறிவைப் பாதுகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கணிதம் முதல் இரும (பைனரி) அடிப்படையிலான கணினி அறிவியல் வரை, நவீன அறிவியலின் அடித்தளம் பூஜ்ஜியத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துரைக்கும் எண்ணற்ற உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு இந்தியாவில் நடந்தது என்பதை உறுதிப்படுத்திய திரு மோடி, பக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் பூஜ்ஜியம் மற்றும் கணித சூத்திரங்களின் பழங்கால பயன்பாடு பற்றிய சான்றுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறினார். யசோமித்ராவின் போவர் கையெழுத்துப் பிரதி, பல நூற்றாண்டுகள் பழமையான மருத்துவ அறிவைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது என்றார் அவர். சரக சம்ஹிதா மற்றும் சுஷ்ருத சம்ஹிதா போன்ற நூல்களின் கையெழுத்துப் பிரதிகள், இன்றுவரை ஆயுர்வேத அறிவைப் பாதுகாத்து வருகின்றன என்று பிரதமர் கூறினார். சூல்வ சூத்திரம், பண்டைய வடிவியல் ஞானத்தை வழங்குகிறது என்றும், கிருஷி பராசரம், பாரம்பரிய விவசாய ஞானம் பற்றிய தகவல்களை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். நாட்டிய சாஸ்திரம் போன்ற நூல்களின் கையெழுத்துப் பிரதிகள், மனித உணர்வுகளின் வளர்ச்சிப் பயணத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாடும் தனது வரலாற்றுச் சொத்துக்களை நாகரிக மகத்துவத்தின் சின்னங்களாக உலகிற்கு வழங்குவதாகக் கூறிய பிரதமர், ஒரு கையெழுத்துப் பிரதி அல்லது கலைப்பொருளைக் கூட ஒரு தேசியப் பொக்கிஷமாக நாடுகள் போற்றிப் பாதுகாக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்தியா ஏராளமான கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுள்ளது என்றும், அவை தேசிய பெருமைக்குரியவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பண்டைய கடல்சார் வர்த்தக வழித்தடங்களை விவரிக்கும் வரலாற்று ஆவணங்களின் விரிவான தொகுப்பை வைத்திருந்த ஒரு மனிதரை தனது குவைத் பயணத்தின்போது சந்தித்த தனிப்பட்ட அனுபவத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். அந்த மனிதர் மிகுந்த பெருமையுடன் தன்னை அணுகி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா கடல்சார் வர்த்தகத்தை எவ்வாறு நடத்தியது என்பதைக் காட்டும் பொருட்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சேகரிப்புகள், இந்தியாவின் உலகளாவிய ஈடுபாட்டின் ஆற்றலையும், எல்லைகளைக் கடந்து அதற்கு கிடைக்கும் மரியாதையையும் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய சிதறிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து, பரந்த தேசிய முயற்சியில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த ஆவணங்கள் - அவை எங்கிருந்தாலும் - ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
"இந்தியா உலகின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இன்று, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மதிக்கவும் சரியான இடமாக இந்தியாவை நாடுகள் கருதுகின்றன" என்று திரு மோடி கூறினார். முன்னதாக, இந்தியாவிலிருந்து திருடப்பட்ட ஒரு சில சிலைகள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இப்போது, நூற்றுக்கணக்கான பழங்கால சிலைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த செயல், உணர்வு அல்லது அனுதாபத்தால் மேற்கொள்ளப்படவில்லை, மாறாக நம்பிக்கையால் - இந்தியா தங்கள் கலாச்சார மதிப்பை கண்ணியத்துடன் பாதுகாத்து உயர்த்தும் என்ற நம்பிக்கையால் - இயக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். உலகத்தின் பார்வையில் இந்தியா பாரம்பரியத்தின் நம்பகமான பாதுகாவலராக மாறியுள்ளது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மங்கோலியாவுக்குச் சென்றபோது, புத்த துறவிகளுடன் உரையாடி, அவர்களின் வளமான கையெழுத்துப் பிரதி சேகரிப்பைப் பார்வையிட்டபோது ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அந்த கையெழுத்துப் பிரதிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரியதை அவர் நினைவு கூர்ந்தார். பின்னர் அவை இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு, டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, மரியாதையுடன் திருப்பி அனுப்பப்பட்டன, என்றார். அந்த கையெழுத்துப் பிரதிகள் இப்போது மங்கோலியாவிற்கு ஒரு பொக்கிஷமான மரபாக மாறிவிட்டன என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

இந்தியா தற்போது இந்த பாரம்பரியத்தை உலகிற்கு பெருமையுடன் வழங்கத் தயாராகி வருவதைக் குறிப்பிட்ட திரு மோடி, ஞான பாரதம் இயக்கம், இந்த மகத்தான முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள ஏராளமான நிறுவனங்கள் பொதுமக்களின் பங்கேற்புடன் அரசுடன் இணைந்து செயல்படுவதை பிரதமர் எடுத்துரைத்தார். கொல்கத்தாவின் ஆசியடிக் சங்கமான காசி நகரி பிரச்சாரிணி சபா, உதய்பூரின் 'தரோஹர்', குஜராத்தின் கோபாவில் ஆச்சார்ய ஸ்ரீ கைலாஷ்சூரி ஞானமந்திர், ஹரித்வாரில் பதஞ்சலி, புனேவில் பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தஞ்சாவூரில் சரஸ்வதி மகால் நூலகம் முதலியவற்றை அவர் பட்டியலிட்டார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் ஆதரவுடன், இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். பல குடிமக்கள், தங்கள் குடும்ப பாரம்பரியத்தை நாட்டு மக்கள் அணுகுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர் என்பதை திரு மோடி குறிப்பிட்டு, இது போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் அத்தகைய ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தியா தனது அறிவை ஒருபோதும் பண பலத்தால் அளவிடவில்லை என்று பிரதமர் கூறினார். அறிவுதான் மிகப்பெரிய நன்கொடை என்ற இந்திய துறவிகளின் பழங்கால ஞானத்தை மேற்கோள் காட்டி, பண்டைய காலங்களில், இந்திய மக்கள் தாராள மனப்பான்மையுடன் கையெழுத்துப் பிரதிகளை நன்கொடையாக அளித்ததை அவர் சுட்டிக்காட்டினார். சீனப் பயணி ஹியூன் சாங், இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவர் அறுநூறுக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளை எடுத்துச் சென்றதாக திரு மோடி குறிப்பிட்டார். பல இந்திய கையெழுத்துப் பிரதிகள் சீனா வழியாக ஜப்பானை அடைந்தன என்றும் அவர் கூறினார். 7-வது நூற்றாண்டில், இந்த கையெழுத்துப் பிரதிகள் ஜப்பானின் தேசிய தலைநகரான ஹோரியு-ஜி மடாலயத்தில் பாதுகாக்கப்பட்டதை எடுத்துரைத்த பிரதமர், இன்றும் கூட, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்தியாவின் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை வைத்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். ஞான பாரதம் இயக்கத்தின் கீழ், மனிதகுலத்தின் இந்த பகிரப்பட்ட பாரம்பரியத்தை ஒன்றிணைக்க இந்தியா பாடுபடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஜி-20 கலாச்சார உரையாடலின் போது இந்தியா இந்த முயற்சியைத் தொடங்கியதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவுடன் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகளைக் கொண்ட நாடுகளும் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தார். மங்கோலிய கஞ்சூரின் மறுபதிப்பு தொகுதிகள் மங்கோலியாவின் தூதருக்கு பரிசாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 2022-ம் ஆண்டில், இந்த 108 தொகுதிகள் மங்கோலியா மற்றும் ரஷ்யாவில் உள்ள மடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். பழங்கால கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்க இந்த நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த முயற்சிகளின் விளைவாக, பாலி, லன்னா மற்றும் சாம் மொழிகளில் பல கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்த திரு மோடி, ஞான பாரதம் இயக்கம் மூலம், இந்தியா இந்த முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தும் என்று கூறினார்.

ஞான பாரதம் இயக்கம் ஒரு பெரிய சவாலையும் எதிர்கொள்ளும் என்று கூறிய பிரதமர், பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் அமைப்புகளின் பல கூறுகள் பெரும்பாலும் மற்றவர்களால் நகலெடுக்கப்பட்டு காப்புரிமை பெறப்படுகின்றன என்று தெரிவித்தார். இந்த வகையான திருட்டைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் கையெழுத்துப் பிரதிகள் அத்தகைய தவறான பயன்பாட்டை எதிர்ப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தும் மற்றும் அறிவுசார் திருட்டைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு துறைகளில் உண்மையான மற்றும் அசல் ஆதாரங்களை உலகம் அணுகும் என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.
ஞான பாரதம் இயக்கத்தின் மற்றொரு முக்கியமான பரிமாணத்தையும், ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான புதிய களங்களை உருவாக்குவதில் அதன் பங்கையும் சுட்டிக்காட்டிய திரு மோடி, உலகளாவிய கலாச்சார மற்றும் படைப்புத் துறை தோராயமாக 2.5 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், இந்தத் துறையின் மதிப்புச் சங்கிலிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த கோடிக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும், அவற்றில் பொதிந்துள்ள பழங்கால ஞானமும் ஒரு பரந்த தரவு வங்கியாகச் செயல்படும் என்றும், இது தரவு சார்ந்த புதுமைகளுக்கு ஒரு புதிய உந்துதலை அளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய திரு மோடி, கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல் மயமாக்கல் பணி முன்னேறும்போது, கல்வி சார்ந்த ஆராய்ச்சியிலும் புதிய சாத்தியக்கூறுகள் உருவாகும் என்று கூறினார்.
இத்தகைய டிஜிட்டல் கையெழுத்துப் பிரதிகளை திறம்பட ஆய்வு செய்ய, செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், பழங்கால கையெழுத்துப் பிரதிகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், மேலும் விரிவாக பகுப்பாய்வு செய்யவும் முடியும் என்று கூறினார். இந்த கையெழுத்துப் பிரதிகளில் உள்ள ஞானத்தை உண்மையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உலகிற்கு வழங்குவதிலும் செயற்கை நுண்ணறிவால் உதவ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஞான பாரதம் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு நாட்டின் இளைஞர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்த திரு மோடி, தொழில்நுட்பத்தின் மூலம் கடந்த காலத்தை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அளவுருக்கள் மூலம் இந்த ஞானத்தை மனிதகுலத்திற்கு அணுகக்கூடியதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், நிறுவனங்களும் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த நாடும் சுதேசி உணர்வு மற்றும் தற்சார்பு இந்தியாவின் உறுதியுடன் முன்னேறி வருவதைக் குறிப்பிட்ட திரு மோடி, இந்த இயக்கம், அத்தகைய தேசிய உணர்வின் நீட்சி என்று உறுதிப்படுத்தினார். இந்தியா தனது பாரம்பரியத்தை அதன் வலிமையின் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஞான பாரதம் இயக்கம் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு ராவ் இந்தர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி:
கையெழுத்துப் பிரதிகளின் பாரம்பரியத்தின் வாயிலாக இந்தியாவின் அறிவுசார் மரபை மீட்டெடுத்தல் என்ற கருப்பொருளில் செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவின் ஒப்பற்ற கையெழுத்து பிரதி வளங்களுக்குப் புத்துயிரூட்டும் வழிமுறைகள் குறித்த ஆலோசிக்க இந்த மாநாடு முன்னணி அறிஞர்கள், ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பு நிபுணர்களை ஒன்றிணைக்கும். கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கல் தொழில்நுட்பங்கள், மெட்டா தரவு தரநிலைகள், சட்ட கட்டமைப்புகள், கலாச்சார ராஜதந்திரம் பழங்கால எழுத்து வடிவங்களின் விளக்க உரை போன்ற முக்கிய துறைகளில் அறிஞர்களின் விளக்கக் காட்சிகளும், அரிய கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சியும் மாநாட்டில் இடம்பெறும்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
#GyanBharatam Mission is set to become the voice of India's culture, literature and consciousness. pic.twitter.com/zanqx4stxs
— PMO India (@PMOIndia) September 12, 2025
Today, India has the world's largest collection of about one crore manuscripts. pic.twitter.com/vnSXJAa2Kc
— PMO India (@PMOIndia) September 12, 2025
Throughout history, crores of manuscripts were destroyed, but the ones that remain show how devoted our ancestors were to knowledge, science and learning. pic.twitter.com/pQQ0JnlRv5
— PMO India (@PMOIndia) September 12, 2025
India's knowledge tradition is built on four pillars... pic.twitter.com/10gpfDBOrA
— PMO India (@PMOIndia) September 12, 2025
India's history is not just about the rise and fall of dynasties. pic.twitter.com/792omip0Tq
— PMO India (@PMOIndia) September 12, 2025
India is itself a living stream, shaped by its ideas, ideals and values. pic.twitter.com/WKUev33svO
— PMO India (@PMOIndia) September 12, 2025
India's manuscripts contain footprints of the development journey of the entire humanity. pic.twitter.com/zAat3MzdQn
— PMO India (@PMOIndia) September 12, 2025


