ஜம்மு - காஷ்மீரின் கத்ராவில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.46,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத், தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். துணிச்சலான வீர ஜோராவர் சிங்கின் மண்ணுக்கு வணக்கம் செலுத்திய அவர், இன்றைய நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் ஒரு பெரிய கொண்டாட்டம் என்று குறிப்பிட்டார். மாதா வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்போது இந்தியாவின் பரந்த ரயில்வே கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். "நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் அன்னை பாரதியை வணங்கி வருகிறோம், 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி வருகிறோம். இன்று இது நமது ரயில்வே கட்டமைப்பிலும் கூட ஒரு யதார்த்தமான நடைமுறையாகிவிட்டது" என்று பிரதமர் கூறினார், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை திட்டம் வெறும் பெயரல்ல, ஜம்மு-காஷ்மீரின் புதிய வலிமையின் சின்னமாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகவும் உள்ளது என்று அவர் கூறினார். பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க, அவர் செனாப் மற்றும் அஞ்ஜி ரயில் பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும் வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது ஜம்மு-காஷ்மீருக்குள் இணைப்பை மேம்படுத்துகிறது. கூடுதலாக, ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரிக்கும் திரு. மோடி அடிக்கல் நாட்டினார், பிராந்தியத்தில் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் வலுப்படுத்தினார், ரூ 46,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை துரிதப்படுத்தும், முன்னேற்றம் மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இந்த புதிய சகாப்தத்திற்கு மக்களை வாழ்த்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தலைமுறைகள் ரயில்வே இணைப்புக்காக நீண்ட காலமாகக் கனவு கண்டிருந்ததை சுட்டிக்காட்டிய திரு. மோடி இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது என்று கூறினார். முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் சமீபத்திய அறிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர், ஏழாம் அல்லது எட்டாம் வகுப்பு மாணவராக இருந்தபோதிலேயே, திரு அப்துல்லா இந்தத் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்த்திருந்தார் என்று குறிப்பிட்டார். இந்த நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது ஜம்மு காஷ்மீரில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது, இது மேம்பட்ட இணைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.

இந்த லட்சிய ரயில்வே திட்டம் தங்கள் ஆட்சிக் காலத்தில் வேகம் பெற்று இப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது தங்கள் அரசுக்கு ஒரு பாக்கியம் என்று கூறிய திரு மோடி, சவாலான நிலப்பரப்பு, தீவிர வானிலை மற்றும் மலைகளில் விழும் பாறைகள் போன்ற சவால்கள், திட்டத்தை மிகவும் கடினமாகவும், சவாலாகவும் மாற்றியதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், தங்கள் அரசு தொடர்ந்து சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளவும், அவற்றை உறுதியுடன் சமாளிக்கவும் பழகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்தில் திறக்கப்பட்ட சோன்மார்க் சுரங்கப்பாதை மற்றும் செனாப் பாலம் மற்றும் அஞ்ஜி பாலத்தின் மீது பயணித்த தமது அனுபவத்தை குறிப்பிடத்தக்க மைல்கற்கள் என்று அவர் மேற்கோள் காட்டினார். இந்தியாவின் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பொறியியல் திறமையையும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் லட்சியத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது என்று கூறினார். மக்கள் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க பாரிஸுக்குச் செல்கின்றனர். செனாப் பாலம் அதைவிட உயரத்தில் விஞ்சி நிற்கிறது. இது ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு சாதனையாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் சுற்றுலா தலமாகவும் அமைகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேபோல், பிரதமர் அஞ்ஜி பாலத்தை ஒரு பொறியியல் அற்புதம் என்றும், இந்தியாவின் முதல் கேபிள் ரயில்வே பாலம் என்றும் விவரித்தார். இந்தக் கட்டமைப்புகள் கரடுமுரடான பிர் பஞ்சல் மலைகளில் உயர்ந்து நிற்கும் இந்தியாவின் வலிமைக்கான வாழும் சின்னங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனைகள் ஒரு வளர்ந்த தேசத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இந்தியாவின் முன்னேற்றக் கனவு எவ்வளவு மகத்தானது என்பதை நிரூபிக்கிறது என்றும் திரு மோடி தெரிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, தூய நோக்கங்களும் இடைவிடாத அர்ப்பணிப்பும்தான் இந்தியாவின் மாற்றத்துக்கான உந்து சக்திகள் என்று அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்துக்கு செனாப் பாலம் மற்றும் அஞ்ஜி பாலங்கள் உந்துசக்தியாகச் செயல்படும் என்பதை வலியுறுத்திய பிரதமர், "இந்த மைல்கல் திட்டங்கள் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கும் பயனளிக்கும் மற்றும் வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றார். ஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் இடையேயான மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்பு உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். காஷ்மீரின் ஆப்பிள்கள் இப்போது குறைந்த செலவில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சந்தைகளை அடையும், இதனால் வர்த்தகம் மிகவும் திறமையானதாக இருக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார். மேலும், உலர் பழங்கள் மற்றும் காஷ்மீரின் புகழ்பெற்ற பஷ்மினா சால்வைகள், பிற பாரம்பரிய கைவினைப்பொருட்கள், இப்போது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எளிதாக கொண்டு செல்லப்படும். இது பிராந்தியத்தின் கைவினைத் தொழிலை வலுப்படுத்தும். இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு காஷ்மீரின் மக்களுக்கு பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுமூகமான இயக்கத்தை அனுமதிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
சங்கல்தானில் ஒரு மாணவர் மனதைத் தொடும் வகையில் தெரிவித்த கருத்தை திரு மோடி பகிர்ந்து கொண்டார். இதுவரை தங்கள் கிராமத்திற்கு வெளியே பயணம் செய்தவர்கள் மட்டுமே நிஜ வாழ்க்கையில் ரயிலைப் பார்த்திருக்கிறார்கள் என்று அந்த மாணவர் கூறியிருந்தார். பெரும்பாலான கிராம மக்கள் ரயில்களை வீடியோக்களில் மட்டுமே பார்த்திருந்தனர், விரைவில் ஒரு உண்மையான ரயில் தங்கள் கண்களுக்கு முன்பாக கடந்து செல்லும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. புதிய இணைப்பு குறித்து ஆர்வத்துடன் பல குடியிருப்பாளர்கள் ஏற்கனவே ரயில் அட்டவணைகளை மனப்பாடம் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஒரு இளம் பெண்ணின் சிந்தனைமிக்க கருத்தை அவர் எடுத்துரைத்தார், அவர், இப்போது, சாலைகள் திறந்திருக்குமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்பதை வானிலை தீர்மானிக்காது என்று கூறினார். இந்தப் புதிய ரயில் சேவை அனைத்து பருவங்களிலும் மக்களுக்கு உதவும். "ஜம்மு காஷ்மீரானது இந்தியத் தாயின் கிரீடமாக, திகைப்பூட்டும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது - ஒவ்வொன்றும் பிராந்தியத்தின் மகத்தான வலிமை மற்றும் அழகைக் குறிக்கிறது" என்று பிரதமர் வர்ணித்தார், அதன் பண்டைய கலாச்சாரம், மரபுகள், ஆன்மீக உணர்வு, வியப்பூட்டும் நிலப்பரப்புகள், மருத்துவ மூலிகைகள், செழிப்பான பழத்தோட்டங்கள் மற்றும் துடிப்பான இளைஞர் திறமை ஆகியவற்றைப் பாராட்டினார், இந்தக் குணங்கள் இந்தியாவின் கிரீடத்தில் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களைப் போல பிரகாசிப்பதாகக் கூறினார். பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பிராந்தியத்தின் ஆற்றலைப் பற்றிய தமது ஆழமான புரிதலை உறுதிப்படுத்தினார். மேலும் ஜம்மு காஷ்மீரின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அதன் மக்களுக்கு வளர்ச்சியை உறுதி செய்தார்.

"ஜம்மு காஷ்மீரும் நீண்ட காலமாக இந்தியாவின் கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் தூணாக இருந்து வருகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா தன்னை ஒரு உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாற்றத்தில் ஜம்மு-காஷ்மீரின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அவர் மேலும் கூறினார். ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுடன் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் என்ஐடி போன்ற முதன்மையான நிறுவனங்கள் இருப்பதையும், அவை இப்பகுதியில் கல்வித் திறனை வலுப்படுத்துவதையும் திரு மோடி சுட்டிக்காட்டினார். ஆராய்ச்சிக்கான சூழல் சார் அமைப்பின் விரிவாக்கம், புதுமை மற்றும் கற்றல் வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மை ஆண்டுகளில் மாநில அளவிலான இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகளை நிறுவியதால் சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுளில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் இவை நோயாளிகளுக்கும் முன்னேற விரும்பும் மருத்துவ மாணவர்களுக்கும் பயனளிக்கின்றன. என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 500-லிருந்து 1300 ஆக உயர்த்தப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்த திரு மோடி, மருத்துவக் கல்வி அணுகலை இது உறுதி செய்துள்ளது என்றார். கூடுதலாக ரியாசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமையவிருப்பதாகவும் இது பிராந்தியத்தில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆற்றல் சால் மருத்துவ கல்விக் கழகத்தை பாராட்டிய பிரதமர், இது நவீன மருத்துவமனையாக மட்டுமின்றி இந்தியாவின் வளமான வள்ளல் பாரம்பரியத்தை தழுவியுள்ளது என்றார். இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் செய்த பங்களிப்புகளையும் பாராட்டிய அவர், அவர்கள் வழங்கிய நன்கொடை இந்த கல்விக்கழகம் அமைய உதவியுள்ளது என்றார். இதற்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த திரு மோடி, மேன்மைக்குரிய இந்த முயற்சிக்காக ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆலய நிர்வாக வாரியத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்த மருத்துவமனையின் திறன் 300 படுக்கையிலிருந்து 500 படுக்கைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இது மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த வளர்ச்சித் திட்டம் மாபெரும் வசதியை வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தமது அரசு தற்போது 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்று கூறிய பிரதமர், இந்த காலகட்டம் ஏழைகளை மேம்படுத்துவதற்கும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல முக்கிய நலத்திட்ட முன்முயற்சிகளை பட்டியலிட்டார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் உறுதியான வீடுகளை வழங்கி நான்கு கோடி ஏழை குடும்பங்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டம் 10 கோடி குடும்பங்களை புகையிலிருந்து விடுபட உதவி செய்திருப்பதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் வசதியற்ற மக்கள் ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சைப் பெற முடிகிறது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது மட்டுமின்றி போதிய ஊட்டச்சத்துடன் உணவு கிடைக்க வகை செய்கிறது. ஜன் தன் திட்டமானது 50 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் திறப்பதற்கு உதவி செய்திருப்பதுடன் நிதி அமைப்புக்குள் அவர்களைக் கொண்டுவந்துள்ளது. சௌபாக்யா திட்டம் இருளில் வாழ்ந்த 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதியை அளித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பது என்ற நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு பெண்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டம் 10 கோடி சிறு விவசாயிகளுக்கு நேரடியாக நிதி வழங்கி ஊரக இந்தியாவை வலுப்படுத்தியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வெற்றிகரமாக வறுமையிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவித்த திரு மோடி, இவர்கள் புதிய நடுத்தர வர்க்கமாக மாறியுள்ளனர் என்றார். ஏழைகள் மற்றும் புதிதாக உருவாகி வரும் நடுத்தர வர்க்கத்தினரை பலப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய அவர், முக்கிய சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார, சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம், ரூ.12 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரிவிலக்கு, வீடு வாங்குவோருக்கு நிதியுதவி, குறைந்த செலவில் விமானப்பயணம் போன்ற முன்முயற்சிகள் மூலம் நாட்டு மக்களுடன் அரசு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறது என்று அவர் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின் முதல் முறையாக தமது அரசு நேர்மையாக வரி செலுத்தும் நடுத்தர வகுப்பினர் மேம்பாட்டிற்கு பணியாற்றி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
தமது அரசு இளைஞர்களுக்கு தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றும் சுற்றுலா என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முக்கிய துறையாக உள்ளது என்றும் கூறிய திரு மோடி, சுற்றுலா வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், அவை மனித குலத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பொருளாதார வளத்திற்கும் எதிராக நிற்கின்றன என்றார். பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியாவிற்குள் வன்முறையைத் தூண்டுவது, காஷ்மீர் மக்களின் கடுமையான உழைப்பால் ஈட்டிய வருவாயை முடக்குவது ஆகிய நோக்கத்துடன் காஷ்மீர் மக்கள் மீது, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வருகை சாதனை அளவாக அதிகரித்திருந்த ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறையை சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் தீய நோக்கம் குதிரைகளில் மக்களை ஏற்றிச் செல்வோர், சுமை தூக்கிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விருந்தினர் மாளிகை உரிமையாளர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கம் கொண்டிருந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்ற இளைஞன் அடிலின் துணிவைப் பாராட்டிய பிரதமர், நேர்மையான உழைப்பின் மூலம் தனது குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த அவரின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது துயரமானது என்றார். ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்கு தமது அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திரு மோடி, இந்தப் பகுதியின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான பயங்கரவாத செயல் ஒரு போதும் வெற்றி பெறாது என்று உறுதிபட தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் மன உறுதியை பாராட்டிய பிரதமர், பாகிஸ்தானின் சதிச் செயலுக்கு எதிரான அவர்களின் நடவடிக்கை சக்தி வாய்ந்த செய்தியை உலகத்திற்கு அனுப்பியுள்ளது என்றார். பயங்கரவாதம் தலைதூக்குவதை முறியடிக்க ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் இப்போது தீர்மானகரமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தின் சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த திரு மோடி, இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் அது எவ்வாறு பள்ளிகளை எரித்தது, மருத்துவமனைகளை அழித்தது, மக்களைத் தாக்கியது என்பதை நினைவு கூர்ந்தார். பயங்கரவாதம் என்பது நியாயமான சுதந்திரமான தேர்தலுக்கு மாபெரும் சவாலாக இருந்து மக்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையை இழக்கச் செய்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் வெளிப்படுத்திய உறுதித் தன்மை ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது என்றும் அமைதி, முன்னேற்றம், ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றில் அவர்களின் உறுதிக்கான சமிக்ஞையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் இது அவர்களின் கனவுகளை கைவிடுவதற்கும் வன்முறையைத் தங்கள் விதியாக ஏற்பதற்கும் வழிவகுத்தது. இருப்பினும், தமது அரசு இதில் மாற்றத்தை ஏற்படுத்தி ஜம்மு காஷ்மீரின் இளைஞர்கள் மீண்டும் கனவு காணவும், அவர்களின் கனவை நனவாக்கவும் வழி வகை செய்தது என்று அவர் கூறினார். காஷ்மீரின் இளைஞர்கள் தற்போது பரபரப்பான சந்தைகளை, துடிப்புமிக்க வணிகம் செய்யும் மால்களை, மகிழ்ச்சி தரும் திரையரங்குகளைக் காண்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை படப்பிடிப்புக்கு முதன்மையான இடமாக மாற்றவும், விளையாட்டுகளுக்கான மையமாக உருவாக்கவும், உள்ளூர் மக்கள் விரும்புகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மாதா கீர் பவானி விழா பற்றி குறிப்பிட்ட திரு மோடி, இது ஜம்மு காஷ்மீரின் புதிய நம்பிக்கையூட்டும் முகத்தைப் பிரதிபலிக்கிறது என்றார். வரவிருக்கும் அமர்நாத் யாத்திரை, பக்ரீத் பண்டிகை உற்சாகம் ஆகியவற்றை எடுத்துரைத்த அவர், இவை இந்த பிராந்தியத்தின் உறுதியையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன என்றார். பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கனவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தத் தடையும் தகர்க்கப்படும் என்றார்.
சரியாக ஒரு மாதத்திற்கு முன் இதே நாள் இரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு பலத்த அடி கொடுத்தது என்று கூறிய பிரதமர், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பாகிஸ்தான் கேட்கும் போதெல்லாம் அதன் அவமானகரான தோல்வி அதற்கு நினைவிற்கு வரும் என்றார். இந்தியாவின் துணிச்சலான இந்த நடவடிக்கையை பாகிஸ்தானின் ராணுவமும், பயங்கரவாத அமைப்புகளும் ஒரு போதும் எதிர்பார்த்திருக்காது என்பதால் சில நிமிடங்களுக்குள் பயங்கரவாதிகள் பல தசாப்தங்களாக கட்டமைத்த முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்று பிரதமர் கூறினார். அதிர்ச்சிக்கும் விரக்திக்கும் ஆட்பட்ட பாகிஸ்தான், ஜம்மு, பூஞ்ச் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களை குறிவைத்து தாக்கியது. பாகிஸ்தானின் காட்டுமிராண்டிதனமான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், அது வீடுகளை அழித்ததையும் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு வீசி தாக்கியதையும், கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் உலகம் கண்டது என்றார். ஜம்மு காஷ்மீர் மக்களின் உறுதியான நிலைப்பாட்டை பாராட்டிய பிரதமர், பாகிஸ்தானின் ஆக்ரமிப்பை எதிர்கொண்ட அவர்களின் துணிச்சலை ஒவ்வொரு இந்தியரும் பார்த்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பின்னால் முழுமையான பலத்தோடு ஒவ்வொரு குடிமகனும் நிற்பதாக உறுதிபட தெரிவித்த அவர், அவற்றுக்கு வலிமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்தார்.
எல்லை தாண்டி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு அரசின் உதவிக்கான நியமனக் கடிதங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பீரங்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பத்தை உணர்ந்த திரு நரேந்திர மோடி, அவர்களது துயரத்தை நாட்டின் துயரமாக கருதுவதாக கூறினார். வீடுகளை பழுதுபார்ப்பதற்கு முன்னதாகவே நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். எல்லைக்கு அப்பால் இருந்து பீரங்கியால் நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவியை பிரதமர் அறிவித்தார். கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்போது 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளுடன் 1 லட்சம் ரூபாய் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும் என்றும், அவர்களுக்கு தொடர் நிவாரண உதவிகளை வழங்குவதன் மூலம் வீடுகளையும், வாழ்க்கையையும் மீண்டும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்றும் பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை நாட்டின் முன்னணி பாதுகாவலர்களாக அரசு அங்கீகரிப்பதாகவும் பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், எல்லையையொட்டிய மாவட்டங்களில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். அரசு மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, சுமார் 10,000 புதிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அவை அனைத்தும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இது அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், கூடுதலாக, இரண்டு பெண்கள் படைப்பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் ஆயுதப் படைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில், குறிப்பாக சவாலான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார். இவை அப்பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கத்வா-ஜம்மு நெடுஞ்சாலை ஆறு வழி விரைவுச் சாலையாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அக்னூர்-பூஞ்ச் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இவை தடையற்ற, சீரான போக்குவரத்திற்கு உதவிடும் என்றும் அவர் கூறினார். எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்கான திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை வழங்கவும் உறுதிசெய்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 400 கிராமங்களில் அனைத்து பருவ நிலைகளிலும் தடையற்ற போக்குவரத்து இணைப்புகளை பெறும் வகையில், தற்போது புதிதாக 1,800 கிலோமீட்டர் நீளம் உள்ள சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். எல்லைப் பகுதிகளில் பொருளாதார மேம்பாடு, பிராந்திய வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு 4,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் நாட்டின் உற்பத்தி சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்சார்பு இந்தியாவின் வலிமையை பறைசாற்றியுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு சூழல் அமைப்பை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வெற்றிக்கு ஆயுதப்படைகள் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையே காரணம் என்றும், ஒவ்வொரு இந்தியரும் தங்களது நிலைப்பாட்டை உறுதியுடன் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்திக்கான இயக்கத்தின் முன்முயற்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இது நாட்டின் உற்பத்தித் துறையின் செயல்பாடுகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உற்பத்தி சார்ந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு இளைஞர்களின் நவீன சிந்தனை, புதுமை, உத்திகள், திறன் மேம்பாடு ஆகியவை அவசியம் என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த இலக்கை நோக்கி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டின் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவிடும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு மோடி, இந்தப் பொருட்கள் சக குடிமக்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளன என்று தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துவது என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்க உதவிடும் என்றும் அவர் கூறினார். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படைகளை நாடு கௌரவிப்பது போல், சந்தைகளில் 'இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் வலிமை, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்கும் வகையில், நம் அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மத்திய - மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வளமான எதிர்காலம் அமையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அமைதி, வளம் ஆகியவை இதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும், பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் கூறினார். மாதா வைஷ்ணவ தேவியின் ஆசியால் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றிற்கான இலக்கை எட்டுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு மக்கள் அளித்து வரும் உறுதியான ஆதரவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதாக பிரதமர் திரு மோடி கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு வி. சோமன்னா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னணி
செனாப் மற்றும் அஞ்சி ரயில் பாலங்கள்
செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் சிறந்த கட்டுமானத்திற்கு சான்றாக உள்ளது. இந்த ரயில் பாலம் உலகின் மிக உயரமான வளைவு பாலமாகும். இது நில அதிர்வு, காற்றின் தன்மைக்கு ஏற்ப தாங்கி நிற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட 1,315 மீட்டர் நீளமுள்ள எஃகு வளைவு பாலமாகும். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே ரயில் போக்குவரத்திற்கான இணைப்பை மேம்படுத்துவதில் இந்தப் பாலம் முக்கிய பங்குவகிக்கிறது. இந்தப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ரா- ஸ்ரீநகர் இடையே 3 மணிநேரத்தில் பயணிக்க முடியும் என்பதால் தற்போதைய பயண நேரத்தில் 2-3 மணிநேரம் வரை குறையும்.

அஞ்சி பாலம் நாட்டின் முதல் கேபிள்-ஸ்டே ரயில் பாலமாகும். இது சவாலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் மற்றும் பிற மேம்பாட்டு முயற்சிகள்
பிரதமர் திரு நரேந்திர மோடி, உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் போக்குவரத்து இணைப்பு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.43,780 கோடி செலவில் 272 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப்பாலத்தில் 36 சுரங்கப்பாதைகள் (119 கி.மீ. நீளம்), 943 பாலங்கள் உள்ளன. இது இப்பகுதியில் ரயில் போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், சமூக-பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே அனைத்து பருவ நிலைகளிலும் தடையற்ற ரயில் போக்குவரத்து சேவையை வழங்க வகைசெய்கிறது.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ள கத்ரா- ஸ்ரீநகர் இடையே இரண்டு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவைகள் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் ஆகியோருக்கு விரைவான, வசதியான மற்றும் நம்பகமான ரயில் பயண அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக எல்லையையொட்டிய தொலைதூரப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த பல்வேறு சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை எண்-701-ல் ரஃபியாபாத்- குப்வாரா இடையேயான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை எண்-444-ல் ரூ.1,952 கோடி மதிப்பிலான ஷோபியன் புறவழிச்சாலை கட்டுமானப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலை-1-ல் உள்ள சங்க்ராமா சந்திப்பிலும், தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள பெமினா சந்திப்பிலும் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேம்பாலங்களையும் மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் திறந்துவைத்தார். இந்த மேம்பாலங்கள் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு விரைவான போக்குவரத்தை உறுதிசெய்யும்.
கத்ராவில் ரூ.350 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு நிறுவனத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பகுதியில் சுகாதார உள்கட்டமைப்பிற்கு இந்த நிறுவனம் கணிசமாக பங்களிக்கும் என்றும் ரியாசி மாவட்டத்தில் அமையும் முதல் மருத்துவக் கல்லூரி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
We have always invoked Maa Bharati with deep reverence, saying... 'from Kashmir to Kanyakumari.'
— PMO India (@PMOIndia) June 6, 2025
Today, this has become a reality even in our railway network: PM @narendramodi pic.twitter.com/j5MI7ZIXNx
The Udhampur-Srinagar-Baramulla Rail Line Project is a symbol of a new, empowered Jammu & Kashmir and a resounding proclamation of India's growing strength. pic.twitter.com/IbZrScjOBl
— PMO India (@PMOIndia) June 6, 2025
The Chenab and Anji Bridges will serve as gateways to prosperity for Jammu and Kashmir. pic.twitter.com/g53yz2n0Ob
— PMO India (@PMOIndia) June 6, 2025
Jammu and Kashmir is the crown jewel of India. pic.twitter.com/ZMzxVStqcb
— PMO India (@PMOIndia) June 6, 2025
India won't bow to terrorism. pic.twitter.com/iYJmreMHba
— PMO India (@PMOIndia) June 6, 2025
Whenever Pakistan hears the name Operation Sindoor, it will be reminded of its shameful defeat. pic.twitter.com/17iwQZyslb
— PMO India (@PMOIndia) June 6, 2025