பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் தேசிய சிறார் (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) விருதுபெற்ற குழந்தைகளுடன் இன்று கலந்துரையாடினார்.
இந்த உரையாடலின் போது, சிறார்களின் சாதனைகள் அடங்கிய புத்தகங்களை வழங்கிய பிரதமர், ஒவ்வொரு விருதாளர்களுடனும், நேரடியாக உரையாடினார். பிரதமர் மனதிறந்து உரையாடியபோது, குழந்தைகள், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, பிரதமர் தன்னுடைய சிறு வயது முதல் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதனை முறியடித்த அனுபவங்கள் பற்றி தெரிந்துகொண்டதுடன், பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமரின் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்தனர்.

சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தொடங்கி, படிப்படியாக தங்களுடைய திறமைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்கினார். அதனையடுத்து மனநலத்தைப் பேணுதல், சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் குடும்பத்தினரின் இன்றியமையாத பங்களிப்பு பற்றியும் பிரதமர் விளக்கினார். இது தவிர, செஸ் விளையாடுவதினால் ஏற்படும் நன்மைகள், கலைத் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளுதல், அறிவியல் மற்றும் புத்தாக்கம், ஆன்மிகம் ஆகியவை குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது, பிரதமர் எடுத்துரைத்தார்.

புத்தாக்கம், சமூகசேவை, கல்வியியல், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், வீரம் ஆகியப் பிரிவுகளில் சிறப்பாக சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கத்துடன், ரூ. 1 லட்சம் ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இவர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5 மாணவர்களும், 6 மாணவிகளும் அடங்குவர்.



