பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

இந்தக் குழுவில் வர்த்தகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தாவூதி போரா சமுதாயத்தின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தங்கள் போராட்டங்களை விவரித்தனர் மற்றும் தங்கள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் வக்ஃப்பால் எவ்வாறு தவறாகக் கோரப்பட்டன என்ற கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இது நீண்டகால கோரிக்கை என்றும் கூறினர்.

தாவூதி போரா சமூகத்தினருடன் பிரதமருக்கு உள்ள நீண்டகால சிறப்பு தொடர்பு குறித்தும், அவர் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர். தங்கள் சமூகத்திற்கு இந்த சட்டத்தின் நன்மை குறித்து பேசிய அவர்கள், பிரதமர் இந்த சட்டத்தை சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினருக்குள் உள்ள சிறுபான்மையினரின் நலனுக்காகவும் கொண்டு வந்துள்ளார் என்று கூறினர். தங்கள் அடையாளம் தழைத்தோங்க இந்தியா எப்போதும் அனுமதித்துள்ளது என்று கூறிய அவர்கள், பிரதமரின் தலைமையின் கீழ், அனைவரையும் உள்ளடக்கிய உணர்வை உணர்கிறோம் என்றும் கூறினர்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்து விவாதித்த அவர்கள், இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கான பயணத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதிபூண்டு வருவதாகத் தெரிவித்தனர். உண்மையான வளர்ச்சி, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கவனம் செலுத்தும் அவரது தலைமைத்துவத்தையும் அவர்கள் பாராட்டினர். தற்சார்பு இந்தியா, எம்.எஸ்.எம்.இ.களுக்கான ஆதரவு போன்ற பல முக்கிய முயற்சிகளை அவர்கள் பாராட்டினர், அவை குறிப்பாக சிறு வணிகங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன என்று கூறினர். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் பெண் சக்திக்கு அதிகாரம் அளிக்கும் இதர நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பிரதமர் பேசினார். வக்ஃப் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசிய அவர், இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததன் பின்னணியில் உள்ள முக்கிய உந்துதல்களில் ஒன்று, நடைமுறையில் உள்ள அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குறிப்பாக விதவைகள் என்று கூறினார்.

தாவூதி போரா சமூகத்தினருடன் தமக்கு இருந்த வலுவான பிணைப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். பல ஆண்டுகளாக சமூக நலனுக்காக உழைக்கும் சமூகத்தின் பாரம்பரியத்தை அவர் பாராட்டினார். இச்சட்டத்தைக் கொண்டு வருவதில் சமூகத்தின் சிறப்பான பங்களிப்பையும் அவர் வெளிக்கொணர்ந்தார். வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கியபோது, இது குறித்து முதலில் விவாதித்தவர்களில் ஒருவர் சையத்னா முஃபாடல் சைஃபுதீன் என்றும், அவர் சட்டத்தின் பல்வேறு நுணுக்கங்கள் குறித்து விரிவான கருத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் பிரதமர் கூறினார்.

Had a wonderful meeting with members of the Dawoodi Bohra community! We talked about a wide range of issues during the interaction.@Dawoodi_Bohras pic.twitter.com/OC09EgcJPG
— Narendra Modi (@narendramodi) April 17, 2025


