தேவபூமியான உத்தராகண்ட் மாநிலத்திற்கு மீண்டும் வந்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்
இந்த தசாப்தம் உத்தராகண்டின் தசாப்தமாக மாறி வருகிறது: பிரதமர்
நமது சுற்றுலாத் துறையை பன்முகப்படுத்தி, உயிரோட்டமுள்ளதாக மாற்றுவது உத்தராகண்ட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்: பிரதமர்
உத்தராகண்ட்டில் சுற்றுலா இல்லாத பருவகாலம் இருக்கக் கூடாது, ஒவ்வொரு பருவமும் சுற்றுலாவுக்கானதாக இருக்க வேண்டும்: பிரதமர்
உத்தராகண்ட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன: பிரதமர்

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடைபெற்ற குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, மலையேற்றம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் அவர் பூஜை நடத்தி, தரிசனத்தையும் மேற்கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மனா கிராமத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கல்களையும் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் தேசத்தின் மக்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மகத்தான பலத்தை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

"தேவபூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலம் ஆன்மீக சக்தி நிரம்பியதாகும். சார் தாம் (நான்கு புனித சுற்றுலா தலங்கள்) உட்பட எண்ணற்ற புனித தலங்களால் அது ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" என்று கூறிய பிரதமர், இந்தப் பகுதி உயிர் கொடுக்கும் கங்கை மாதாவின் குளிர்கால வாசஸ்தலமாக செயல்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். மீண்டும் இந்த மாநிலத்திற்கு வருகை தந்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்க கிடைத்த வாய்ப்புக்காக அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். இது தனக்கு கிடைத்த நல்லாசி  என்று அவர் கூறினார். கங்கை மாதாவின் கருணையால்தான் உத்தராகண்ட்டில் பல ஆண்டுகளாக சேவை செய்யும் பாக்கியம் தமக்கு கிடைத்தது என்றும் அவர் கூறினார். "கங்கை மாதாவின் ஆசீர்வாதம் என்னை காசிக்கு அழைத்துச் சென்றது. அங்கு நான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறேன்" என்று கூறிய திரு மோடி, கங்கை மாதா தன்னை அழைத்ததாக முன்பு காசியில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார். மேலும் கங்கை மாதா இப்போது அவரை தனது சொந்தமாக அரவணைத்துள்ளார் என்பதை சமீபத்தில் உணர்ந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார். இந்த கங்கை மாதா தனது குழந்தை மீது கொண்டுள்ள பாசமும் அன்பும் தான் அவரை முக்வா கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், முகிமத்-முக்வாவில் தரிசனம் மற்றும் பூஜை செய்யும் கௌரவத்தை வழங்கியதாகவும் பிரதமர் விவரித்தார். ஹர்சில் மண்ணுக்கு தாம் மேற்கொண்ட பயணம் குறித்து தெரிவித்த திரு மோடி, உள்ளூர் பெண்கள் காட்டிய அன்பான நினைவுகளை வெளிப்படுத்தினார். அவர்களின் அரவணைப்பு, பாசத் தொடர்பு மற்றும் ஆசிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

பாபா கேதார்நாத்திற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அங்கு "இந்த தசாப்தம் உத்தராகண்ட்டின் தசாப்தமாக இருக்கும்" என்று அறிவித்தார். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள வலிமை பாபா கேதார்நாத்திடமிருந்தே வந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், பாபா கேதார்நாத்தின் ஆசீர்வாதத்துடன், இந்த தொலைநோக்குத் திட்டம் படிப்படியாக நனவாகி வருகிறது என்று எடுத்துரைத்தார். உத்தராகண்ட் மாநிலம் உருவாவதற்கான விருப்பங்களை நிறைவேற்றி, முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறிய திரு மோடி, உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகள் தொடர்ச்சியான சாதனைகள் மற்றும் புதிய மைல்கற்கள் மூலமாக உணரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். "குளிர்காலச் சுற்றுலா இந்தத் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், இது உத்தராகண்ட்டின் பொருளாதாரத் திறனைப் பயன்படுத்த உதவுகிறது" என்று அவர் மேலும் கூறினார், மேலும் இந்தப் புதுமையான முயற்சிக்காக உத்தராகண்ட் அரசை வாழ்த்தினார். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தமது வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

"சுற்றுலாத் துறையை ஆண்டு முழுவதும் செயல்படும் ஒரு நடவடிக்கையாக மாற்றுவது உத்தராகண்ட்டிற்கு முக்கியமானதுடன் அவசியமானதும்கூட" என்று கூறிய பிரதமர், உத்தராகண்ட்டில் சுற்றுலா இல்லாத பருவகாலம் ("ஆஃப்-சீசன்") இருக்கக்கூடாது என்றும், ஒவ்வொரு பருவத்திலும் சுற்றுலா செழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தற்போது, மலைப்பகுதிகளில் சுற்றுலா பருவகாலமாக உள்ளது என்றும், மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கணிசமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது, குளிர்காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோம்ஸ்டேக்கள் காலியாக உள்ளன என்று அவர் கூறினார். இந்த ஏற்றத்தாழ்வு உத்தராகண்ட்டில் ஆண்டின் பெரும்பகுதியிலா பொருளாதார தேக்க நிலைக்கு வழிவகுக்கிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கும் சவால்களை ஏற்படுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"குளிர்காலத்தில் உத்தராகண்ட்டிற்கு வருகை தருவது தேவபூமியின் தெய்வீக ஒளியின் உண்மையான காட்சியை வழங்குகிறது" என்று கூறிய திரு மோடி, இப்பகுதியில் குளிர்காலச் சுற்றுலா வழங்கும் மலையேற்றம் மற்றும் பனிச்சறுக்கு போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தும் சிலிர்ப்பை எடுத்துரைத்தார். உத்தராகண்ட்டில் மதப் பயணங்களுக்கு குளிர்காலம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் வலியுறுத்தினார், இந்த நேரத்தில் பல புனித தலங்கள் தனித்துவமான சடங்குகளை வழங்குகின்றன. முக்வா கிராமத்தில் உள்ள மத விழாக்கள் பிராந்தியத்தின் பண்டைய மற்றும் குறிப்பிடத்தக்க மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆண்டு முழுவதும் சுற்றுலா என்ற உத்தராகண்ட் அரசின் தொலைநோக்குப் பார்வை, தெய்வீக அனுபவங்களுடன் மக்கள் இணைவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சி ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் மக்களுக்கும் உத்தராகண்ட் இளைஞர்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

சார் தாம் அனைத்து வானிலைக்கும் ஏற்றி சாலை, நவீன அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் மாநிலத்தில் ரயில்வே, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட கடந்த தசாப்தத்தில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து சுட்டிக் காட்டிய பிரதமர், "உத்தராகண்ட்டை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன" என்று கூறினார். கேதார்நாத் ரோப்வே(கேபிள் கார்)திட்டம் மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கேதார்நாத் ரோப்வே பயண நேரத்தை 8-9 மணி நேரத்திலிருந்து சுமார் 30 நிமிடங்களாகக் குறைக்கும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயணத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ரோப்வே திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று திரு மோடி தெரிவித்தார். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளுக்காக உத்தராகண்ட் மாநிலத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பதிவு குடில்கள், மாநாட்டு மையங்கள் மற்றும் ஹெலிபேட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதை சுட்டிக் காட்டிய திரு மோடி, "டிம்மர்-சைன் மகாதேவ், மனா கிராமம் மற்றும் ஜாடுங் கிராமம் போன்ற இடங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது" என்றார். 1962-ம் ஆண்டு காலியாக இருந்த மனா மற்றும் ஜாடுங் கிராமங்களை மீட்டெடுப்பதை உறுதி செய்ய அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் உத்தராகண்ட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 18 லட்சம் யாத்ரீகர்கள் சார் தாம் யாத்திரைக்கு வருகை தந்ததாகவும், தற்போது இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 50 சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாகவும், இந்த இடங்களில் ஹோட்டல்களுக்கு உட்கட்டமைப்பு வசதி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார். இந்த முயற்சி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

உத்தராகண்ட் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளும் சுற்றுலாவின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளை வலியுறுத்திய பிரதமர், "ஒரு புதிய காலத்தில் கடைசி கிராமங்கள்" என்று குறிப்பிடப்பட்ட கிராமங்கள் தற்போது நாட்டின் "முதல் கிராமங்கள்" என்று அழைக்கப்படுகின்றன என்றார். அவற்றின் மேம்பாட்டுக்காக துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். இதன் கீழ் இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நெலோங் மற்றும் ஜாடுங் கிராமங்களை மீள்குடியமர்த்துவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்னதாக ஜதுங்கிற்கு ஒரு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்ததையும் குறிப்பிட்டார்.  தங்கும் விடுதிகளாக இல்லங்கள் கட்டுபவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் பயன்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். உத்தராகண்ட் மாநிலத்தில் இல்லத் தங்குமிடங்கள (ஹோம்ஸ்டே) ஊக்குவிப்பதில் உத்தராகண்ட் அரசு கவனம் செலுத்தி வருவதை திரு மோடி பாராட்டினார். பல தசாப்தங்களாக உள்கட்டமைப்பு இல்லாத கிராமங்கள் இப்போது புதிய ஹோம்ஸ்டேக்கள் திறக்கப்படுவதைக் காண்கின்றன, இது சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் உள்ளூர் குடியிருப்பாளர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு சிறப்பு வேண்டுகோள் விடுத்த திரு மோடி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலத்தில் மூடுபனி நிலவும் அதே வேளையில், மலைகள் சூரிய ஒளியில் குளிக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.  இது ஒரு தனித்துவமான நிகழ்வாக மாறும் என்று குறிப்பிட்டார். கார்வாலியில் "காம் தபோ சுற்றுலா" (சூரியனில் குளிர் காய்தல்)என்ற கருத்தாக்கத்தை பரிந்துரைத்த பிரதமர், நாடு முழுவதிலுமிருந்து வரும் மக்கள் குளிர்காலத்தில் உத்தராகண்ட்டிற்கு வருகை தருவதை ஊக்குவித்தார். இந்தப் பிராந்தியத்தில் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் குளிர்கால சுற்றுலாவில் பங்கேற்குமாறு பெரு வணிகர்களை அவர் குறிப்பாக வலியுறுத்தினார். யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சி பெறவும், உத்தராகண்ட் மாநிலம் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் குளிர்கால பயணங்களுக்காக உத்தராகண்ட்டை பரிசீலிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திருமணப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்ற தமது வேண்டுகோளை நாட்டு மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தியதுடன், குளிர்காலத் திருமணங்களுக்கான இடமாக உத்தராகண்ட் முன்னுரிமை பொறுவதை ஊக்குவித்தார். இந்திய திரைப்படத் துறையிடமிருந்து தாம் எதிர்பார்ப்பவை குறித்தும்  அவர் எடுத்துரைத்தார். உத்தராகண்ட் மாநிலத்துக்கு "சிறந்த திரைப்பட நட்பு மாநிலம்" என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இப்பகுதியில் நவீன வசதிகளின் விரைவான வளர்ச்சியை வலியுறுத்திய அவர், குளிர்காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக உத்தராகண்ட் மாநிலத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

பல நாடுகளில் குளிர்காலச் சுற்றுலா பிரபலமடைந்துள்ளதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, உத்தராகண்ட் தனது சொந்த குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்த அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உட்பட உத்தராகண்ட் சுற்றுலாத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த நாடுகளின் மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட செயல் அம்சங்களைத் தீவிரமாக செயல்படுத்துமாறு உத்தராகண்ட் அரசை அவர் கேட்டுக் கொண்டார். உள்ளூர் மரபுகள், இசை, நடனம் மற்றும் உணவு வகைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். உத்தராகண்ட்டின் வெப்ப நீரூற்றுகளை ஆரோக்கிய ஸ்பாக்களாக மேம்படுத்த முடியும் என்றும், அமைதியான, பனி மூடிய பகுதிகளில் குளிர்கால யோகா ஓய்வு விடுதிகளை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், உத்தராகண்ட்டில் ஆண்டுதோறும் யோகா முகாம் நடத்த யோகா குருக்களை வலியுறுத்தினார். உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவ குளிர்காலத்தில் சிறப்பு வனவிலங்கு சஃபாரிகளை ஏற்பாடு செய்யவும் அவர் பரிந்துரைத்தார். இந்த இலக்குகளை அடைய 360 டிகிரி அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதையும், ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றுவதையும் அவர் வலியுறுத்தினார்.

வசதிகளை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை பரப்புவதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று வலியுறுத்திய பிரதமர், உத்தராகண்டின் குளிர்காலச் சுற்றுலா முன்முயற்சியை மேம்படுத்துவதில் நாட்டின் இளம் உள்ளடக்கப் படைப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் உள்ளடக்கப் படைப்பாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறிப்பிட்ட திரு மோடி, உத்தராகண்டில் உள்ள புதிய இடங்களைக் கண்டறியுமாறும், தங்களது அனுபவங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் அவர்களை வலியுறுத்தினார். உத்தராகண்ட்டில் சுற்றுலாவை மேம்படுத்த உள்ளடக்க படைப்பாளர்களைக் கொண்டு குறும்படங்களை உருவாக்கும் போட்டியை நடத்துமாறு மாநில அரசை அவர் வலியுறுத்தினார். வரும் ஆண்டுகளில் இத்துறை விரைவான வளர்ச்சியைக் காணும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆண்டு முழுவதும் சுற்றுலா பிரச்சாரத்திற்காக உத்தராகண்ட் மாநிலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு. அஜய் தம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

உத்தராகண்ட் அரசு இந்த ஆண்டு குளிர்காலச் சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் பத்ரிநாத் ஆகிய குளிர்கால வழிபாட்டு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே வருகை தந்துள்ளனர். இந்தத் திட்டம் மதச் சுற்றுலாவை மேம்படுத்துவதையும், உள்ளூர் பொருளாதாரம், ஹோம்ஸ்டே, சுற்றுலா வணிகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward

Media Coverage

India’s GDP To Grow 7% In FY26: Crisil Revises Growth Forecast Upward
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 16, 2025
December 16, 2025

Global Respect and Self-Reliant Strides: The Modi Effect in Jordan and Beyond