"முதல் நூறு நாட்களில், எங்கள் முன்னுரிமைகள் தெளிவாகத் தெரியும். இது எங்கள் வேகம் மற்றும் அளவின் பிரதிபலிப்பாகும்"
"உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகள்"
"இந்தியா 21-ம் நூற்றாண்டின் சிறந்த பந்தயதாரர்"
"பசுமை எதிர்காலம் மற்றும் நிகர பூஜ்ஜியம் இந்தியாவின் அர்ப்பணிப்பு"
"காலக்கெடுவுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பாரிஸில் நிர்ணயிக்கப்பட்ட பருவநிலை உறுதிமொழிகளை நிறைவேற்றிய ஜி -20-ல் முதல் நாடு இந்தியா"
"பிரதமரின் சூரியசக்தி மேற்கூரை மின் திட்டம் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடும் மின் உற்பத்தியாளராக மாற உள்ளது"
'பூமிக்கு உகந்த மக்கள் கொள்கைகளுக்கு அரசு உறுதிபூண்டுள்ளது'

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, 200 ஜிகாவாட் புதைபடிவம அல்லாத எரிபொருள் திறனை நிறுவியதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை கௌரவிக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், RE-INVEST உச்சிமாநாட்டின் 4-வது பதிப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளின் எதிர்காலம் குறித்து, அடுத்த மூன்று நாட்களில் தீவிர விவாதங்கள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாநாட்டின்  விவாதங்களும், கற்றுக் கொள்வதும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும் என்று திரு மோடி கூறினார். வெற்றிகரமான விவாதங்களுக்கு அவர் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

 

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக அதே அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்திய மக்களின் தீர்ப்பை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் விருப்பங்களே மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் என்று திரு மோடி குறிப்பிட்டார். 140 கோடி குடிமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கை மற்றும் நம்பத்தன்மையை அவர் எடுத்துரைத்தார். இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் அவர்களின் விருப்பங்கள் புதிய திசையில் பறக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஏழைகள், தலித்துகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், அரசின் மூன்றாவது ஆட்சிக் காலம், கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவின் 140 கோடி குடிமக்களும் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் தீர்மானத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பெரிய தொலைநோக்கு, இயக்கம் மற்றும் செயல் திட்டத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்ட பிரதமர், பதவியேற்ற முதல் 100 நாட்களில் அரசு எடுத்த முடிவுகளை எடுத்துரைத்தார்.

"முதல் 100 நாட்களில் அரசாங்கத்தின் பணிகள் அதன் முன்னுரிமைகளை எடுத்துக்காட்டுவதுடன், வேகம் மற்றும் அளவின் பிரதிபலிப்பைத் தருகின்றன" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார், இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து துறைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைத்தார். இந்த 100 நாட்களில், நாட்டின் இயற்கை மற்றும் சமூக உள்கட்டமைப்பை விரிவுபடுத்த, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். 7 கோடி வீடுகளை கட்டும் பணியில் இந்தியா உள்ளது என்றும், இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்றும், கடந்த இரண்டு தவணைகளில் 4 கோடி வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 12 புதிய தொழில்துறை நகரங்களை உருவாக்கும் முடிவு, 8 அதிவேக சாலை நடைபாதை திட்டங்களுக்கு ஒப்புதல், 15-க்கும் மேற்பட்ட அரை அதிவேக வந்தே பாரத் ரயில்களைத் தொடங்குதல், ஆராய்ச்சியை ஊக்குவிக்க ரூ .1 டிரில்லியன் மதிப்புள்ள ஆராய்ச்சி நிதி தொடங்குதல், மின்-இயக்கத்தை இயக்குவதற்கான பல்வேறு முயற்சிகளின் அறிவிப்பு, உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் பயோ இ 3 கொள்கைக்கு ஒப்புதல் ஆகியவை குறித்து அவர் விவரித்தார்.

 

கடந்த 100 நாட்களில் பசுமை எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், ரூ.7,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கடலோர காற்றாலை மின் திட்டங்களுக்கு சாத்தியக்கூறு இடைவெளி நிதித் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். வரும் காலங்களில் ரூ .12,000 கோடி செலவில் 31,000 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

இந்தியாவின் பன்முகத்தன்மை, அளவு, திறன் மற்றும் செயல்திறன் ஆகிய அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தவை என்றும், உலகளாவிய பயன்பாடுகளுக்கான இந்தியாவின் தீர்வுகளுக்கு இது வழி வகுக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். "இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 21-ம் நூற்றாண்டின் சிறந்த பந்தயதாரர் இந்தியா என்று நம்புகிறது" என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். கடந்த ஒரு மாதத்தில் இந்தியா ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த மாத தொடக்கத்தில் உலகளாவிய ஃபின்டெக் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழா, உலகளாவிய செமிகண்டக்டர் உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் பங்கேற்றதாகவும், 2-வது ஆசிய-பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியதாகவும், இன்று இந்தியா பசுமை எரிசக்தி மாநாட்டை நடத்துகிறது என்றும் கூறினார்.

 

வெண்மைப் புரட்சி, இனிப்பு (தேன்) புரட்சி, சூரியசக்தி புரட்சி ஆகியவற்றின் தொடக்கங்களைக் கண்ட குஜராத், தற்போது நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்று திரு மோடி கூறினார். "இந்தியாவில் சொந்தமாக சூரிய ஒளி கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு சூரிய ஒளி தொடர்பான தேசிய கொள்கைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார். பருவநிலை தொடர்பான அமைச்சகத்தை அமைப்பதில் உலகிலேயே குஜராத் முன்னணியில் உள்ளது என்று திரு மோடி மேலும் குறிப்பிட்டார். உலகம் நினைத்துப் பார்க்காத போதே, குஜராத் ஏற்கனவே சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கத் தொடங்கிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

நடைபெறும் இடத்தின் பெயரான மகாத்மா மந்திர் பெயரைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, பருவநிலை சவால் என்ற தலைப்பு எழாத காலத்தில் உலகை எச்சரித்த முன்னோடியான மகாத்மா காந்தியின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது என்றார். மகாத்மாவை மேற்கோள் காட்டிய பிரதமர், "பூமியில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் உள்ளன, ஆனால் நமது பேராசைகளை பூர்த்தி செய்ய அல்ல" என்று கூறினார். மகாத்மா காந்தியின் இந்த தொலைநோக்கு, இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தில் இருந்து உருவானது என்றும் அவர் கூறினார். பசுமை எதிர்காலம், நிகர பூஜ்ஜியம் போன்ற வார்த்தைகள் ஆடம்பரமான வார்த்தைகள் அல்ல, அவை மத்திய அரசு மற்றும் இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசின் தேவைகள் மற்றும் கடமைகள் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

வளரும் பொருளாதாரம் என்ற முறையில், இந்த உறுதிப்பாடுகளில் இருந்து விலகி இருப்பதற்கு இந்தியாவுக்கு சரியான காரணம் உள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார், ஆனால், அந்த பாதையை அவர்கள் தேர்வு செய்யவில்லை. இருப்பினும், "இன்றைய இந்தியா இன்று மட்டுமல்ல, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை தயார் செய்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் நோக்கம், உச்சியை அடைவது மட்டுமல்ல, உச்சியில் நீடிக்க நம்மை தயார்படுத்துவதும் ஆகும் என்று திரு மோடி எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் தன்னை வளர்ந்த நாடாக மாற்ற எரிசக்தி தேவைகள் குறித்து, இந்தியா நன்கு அறிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எண்ணெய் எரிவாயு இருப்புகளுக்கு பற்றாக்குறை இருப்பதால், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், அணுசக்தி மற்றும் நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அடிப்படையில் தனது எதிர்காலத்தை உருவாக்க இந்தியா முடிவு செய்துள்ளதை திரு மோடி நினைவுபடுத்தினார்.

பாரீஸில் நிர்ணயிக்கப்பட்ட பருவநிலை மாற்ற மாநாட்டின் உறுதிமொழிகளை நிறைவேற்றிய முதல் ஜி 20 நாடு இந்தியா என்று பிரதமர் கூறினார், அதுவும் காலக்கெடுவுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாக. 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை அடைவதற்கான நாட்டின் இலக்குகளை சுட்டிக் காட்டிய திரு மோடி, பசுமை மாற்றத்தை மக்கள் இயக்கமாக அரசு மாற்றியுள்ளது என்றார். இந்தியாவின் தனித்துவமான திட்டமான கூரை சூரிய சக்தி - பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை இலவச மின்சாரத் திட்டத்தைப் படிக்க அவர் பரிந்துரைத்தார், அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேற்கூரை சூரிய மின்உற்பத்தி அமைப்புக்கு அரசாங்கம் நிதியளித்து நிறுவ உதவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மின் உற்பத்தியாளராக மாறுகிறது என்று பிரதமர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாகவும், இதுவரை 3.25 லட்சம் வீடுகளில் அவற்றை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை இலவச மின்சாரத் திட்டத்தின் விளைவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், ஒரு சிறிய குடும்பம் ஒரு மாதத்தில் 250 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தி, 100 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை மீண்டும் மின்கட்டமைப்பிற்கு விற்கும்போது, ஆண்டுக்கு மொத்தம் சுமார் 25,000 ரூபாய் சேமிக்க முடியும் என்று விளக்கினார். மின்சார பில் மூலம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் மக்கள் பயனடைவார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, சேமிக்கப்பட்ட பணம் சம்பாதித்த பணம் என்று குறிப்பிட்டார். சேமிக்கப்பட்ட பணத்தை 20 ஆண்டுகளுக்கு பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்தால், முழு தொகையும் ரூ 10 லட்சத்திற்கு மேல் இருக்கும், இது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு பயன்படுத்தப்படலாம்.

பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை மின்திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு ஊடகமாக மாறி வருகிறது என்றும், இதன் மூலம் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் திரு மோடி மேலும் கூறினார். இந்த திட்டத்தின் கீழ், 3 லட்சம் இளைஞர்களை திறமையான மனிதவளமாக தயார்படுத்துவதை அரசு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இவர்களில் ஒரு லட்சம் இளைஞர்கள், சூரிய ஒளி தொழில்நுட்ப வல்லுநர்களாக இருப்பார்கள். "உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 3 கிலோவாட் சூரிய மின்சாரமும் 50-60 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுக்கும்" என்று அவர் கூறினார், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பையும் குறிப்பிட்டார்.

"21-ம் நூற்றாண்டின் வரலாறு எழுதப்படும் போது, இந்தியாவின் சூரியசக்தி புரட்சி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்" என்று திரு மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் முதலாவது சூரிய கிராமமான மொதேரா பற்றி எடுத்துரைத்த திரு மோடி, அங்கு நூற்றாண்டுகள் பழமையான சூரியனார் கோயிலும் உள்ளது என்றார். இன்று இந்த கிராமத்தின் அனைத்து தேவைகளும் சூரிய சக்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றார். இன்று, நாடு முழுவதும் இதுபோன்ற பல கிராமங்களை சூரிய கிராமங்களாக மாற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

 

சூர்யவன்சியான ராமரின் பிறப்பிடமான அயோத்தி நகரம் பற்றி பேசிய திரு மோடி, இதை ஒரு உத்வேகம் அளிப்பதாக எடுத்துக்கொண்டு, அயோத்தியை முன்மாதிரி சூரிய நகரமாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். அயோத்தியின் ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு அலுவலகத்தையும், ஒவ்வொரு சேவையையும் சூரியசக்தி மூலம் உற்சாகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். அயோத்தியின் பல வசதிகள் மற்றும் வீடுகள் சூரிய சக்தியால் சக்தியூட்டப்பட்டிருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார், அதே நேரத்தில் ஏராளமான சூரிய சக்தி தெரு விளக்குகள், சூரிய குறுக்குவெட்டுகள், சூரிய படகுகள், சூரிய சக்தி தண்ணீர் ஏடிஎம்கள் மற்றும் சூரிய கட்டிடங்கள் அயோத்தியில் காணப்படுகின்றன. இதே முறையில் சூரியசக்தி நகரங்களாக மேம்படுத்தப்படும் இதுபோன்ற 17 நகரங்களை அரசு அடையாளம் கண்டிருப்பதை பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். விவசாய நிலங்களையும், பண்ணைகளையும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான ஊடகமாக மாற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இன்று பாசனத்திற்காக சூரிய சக்தி பம்புகள் மற்றும் சிறிய சூரிய சக்தி ஆலைகளை நிறுவ, விவசாயிகளுக்கு உதவி வருவதை அவர் எடுத்துரைத்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஒவ்வொரு துறையிலும், இந்தியா மிகவேகமாகவும், அளவிலும் பணியாற்றி வருவதை திரு மோடி எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில்,  இந்தியா முன்பை விட 35 சதவீதம் அதிக மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து உற்பத்தி செய்துள்ளது என்றும், பசுமை ஹைட்ரஜன் துறையில் உலகளாவிய தலைவராக மாற இந்தியா முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த வகையில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டதை  திரு மோடி சுட்டிக் காட்டினார். இந்தியாவில் கழிவுகளிலிருந்து எரிசக்தி இயக்கம் என்ற மிகப்பெரிய இயக்கம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். முக்கிய கனிமங்கள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வலியுறுத்திய திரு மோடி, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி தொடர்பான சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்க புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், வட்ட அணுகுமுறையையும் அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டார்.

 

"பூமிக்கு ஆதரவான மக்களின் கொள்கைகளுக்கு அரசு உறுதிபூண்டுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார், மிஷன் லைஃப் இன் இந்தியாவின் பார்வையை எடுத்துரைத்தார், அதாவது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை. சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கான இந்தியாவின் முன்முயற்சியையும், ஜி-20 தலைமைப் பொறுப்பின்போது, பசுமை மாற்றத்தில் கவனம் செலுத்தியதையும், ஜி-20 உச்சிமாநாட்டின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி தொடங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், இந்தியா தனது ரயில்வேயை நிகர பூஜ்ஜியமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று கூறிய அவர், 2025 க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை அடைய இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்.  ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அமிர்த கால நீர்நிலைகள் தண்ணீர் சேமிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' பிரச்சாரத்தை சுட்டிக்காட்டி, அனைவரும் இந்த முயற்சியில் சேருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த தேவையை பூர்த்தி செய்ய அரசு புதிய கொள்கைகளை வகுத்து வருவதாகவும், அனைத்து வகையிலும் ஆதரவை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். தமது உரையின் நிறைவாக, எரிசக்தி உற்பத்தியில் மட்டுமின்றி, உற்பத்தித் துறையிலும் முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார். "இந்தியா முழுமையான மேட் இன் இந்தியா தீர்வுகளுக்காக பாடுபடுவதுடன், பல வாய்ப்புகளை உருவாக்குகிறது. விரிவாக்கத்திற்கும், சிறந்த வருமானத்திற்கும் இந்தியா உண்மையிலேயே உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறிய திரு மோடி, இந்தியாவின் பசுமை மாற்றத்தில் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

 

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கோவா முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியாவின் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த 4 வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சி (RE-INVEST) தயாராக உள்ளது. இதில் உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகளை ஈர்க்கும் இரண்டரை நாள் மாநாடு இடம்பெறும். பங்கேற்பாளர்கள் முதலமைச்சர் தொடக்க அமர்வு, தலைமை நிர்வாக அதிகாரி வட்டமேசை மற்றும் புதுமையான நிதி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் எதிர்கால எரிசக்தி தீர்வுகள் குறித்த சிறப்பு விவாதங்கள் உள்ளிட்ட விரிவான திட்டத்தில் ஈடுபடுவார்கள். ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நார்வே ஆகியவை இந்த நிகழ்வில் பங்குதாரர் நாடுகளாக பங்கேற்கின்றன. இதை நடத்தும் மாநிலமாக குஜராத் உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவை பங்குதாரர் மாநிலங்களாக பங்கேற்கின்றன.

 

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சி இருக்கும். நீடித்த எதிர்காலத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தக் கண்காட்சி எடுத்துரைக்கும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Kashi to Ayodhya to Prayagraj: How Cultural Hubs Have Seen A Rejuvenation Since 2014

Media Coverage

Kashi to Ayodhya to Prayagraj: How Cultural Hubs Have Seen A Rejuvenation Since 2014
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Maharashtra Chief Minister meets Prime Minister
December 12, 2024

The Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis met the Prime Minister Shri Narendra Modi today.

The Prime Minister’s Office handle on X wrote:

“Chief Minister of Maharashtra, Shri @Dev_Fadnavis, met Prime Minister @narendramodi.

@CMOMaharashtra”