

பிரதமர் கிராம சாலைவசதித் திட்டம், வீட்டுவசதி, நிலக்கரி, மின்சாரம் ஆகிய முக்கியத் துறைகளின் வளர்ச்சிக் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை சீராய்வு மேற்கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசின் கட்டமைப்பு துறைகளின் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிதி ஆயோக்கின் தலைமை செயல் அலுவலர் வழங்கிய செயல் விளக்கக் காட்சி, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக் காட்டும் விதமாக இருந்தது. பிரதமர் கிராமச் சாலை வசதித் திட்டத்தின் கீழ், இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 81% இடங்கள், அதாவது 1.45 லட்சம் குடியிருப்பு இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குள் மீதமுள்ள இணைக்கப்படாத இடங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த வேலைக்காக உள்ள அனைத்து வளங்களையும் ஆண்டு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். மத்திய பட்ஜெட் முன்கூட்டியே நடைபெற இருப்பது செயல்பாட்டை அதிகரிக்கும் என்று நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார். ‘மேரி சடக்’ செயலியில் வரும் புகார்களுக்கு விரைவாக தீர்வு காணப்படுவதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அவசியமான இடங்களில் நேரத்திற்கு தீர்வுக்காண, புகார்களின் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் கூறினார்.
2019 –ம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் 1 கோடி வீடுகளை வழங்குவதற்காகத் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், வீட்டுவசதித் திட்டம் பயனாளிகளின் வாழ்க்கையில் அளிக்கும் நல்ல தாக்கத்தை சரியாக ஆய்வு செய்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
நிலக்கரித் துறையை ஆய்வு செய்த பிரதமர் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி வளிமமாக்கும் செயல்பாடுகளுக்கு சமீப தொழில்நுட்ப முறைகளை கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். ஊரகப் பகுதிகளை மின்மயமாக்குதல் மற்றும் வீடுகளுக்கு மின்சார வசதி வழங்குதல் போன்ற பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி குறித்தும் பிரதமரிடம் விவரிக்கப்பட்டது.