பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாம் அரசு தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பிரதமர் பதவியில் ஏழு ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். பதவியில் உள்ள அரசின் தலைவர் என்ற முறையில், அவரது சாதனைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பிடுவதற்கு இது நீண்ட காலம்தான். பிரதமர் மோடியின் பதவிக்காலம் குறித்து நாம் எவ்வாறு மதிப்பிட வேண்டும்?
அளவிடக்கூடிய சாதனைகளின் பட்டியல் மூலம் இதனை மதிப்பிடுவது ஒரு முறை. உதாரணமாக, முதன்மையான திட்டங்களின் எண்ணிக்கை மிகவும் அசாதாரணமானது. வங்கிகளுக்கு செல்லாதவர்களுக்கு, 42 கோடி ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் நிதிப்பரவலில் சேர்கப்பட்டுள்ளன. நிதியுதவி கிட்டாதவர்களுக்கு நிதி அளிக்கும் முத்ரா திட்டத்தின் மூலம் 29 கோடி பேருக்கு ரூ.15 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொழில் முனைவோர் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. டிஜிடல் என்றால் என்னவென்று தெரியாதவர்களை யுபிஐ மூலம் டிஜிடல் பரிவர்த்தனையில் சேர்த்து, 2020-ல் 25 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகிலேயே அதிக அளவுக்கு டிஜிடல் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அப்பால், வெற்றிகளை மதிப்பிட மற்றொரு வழியும் உண்டு. அதுதான், நமது தேசிய தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். அத்தகைய சில மாற்றங்கள் எவை?
முதலாவதாக, மத்திய அரசுகள் பொருளாதார கொள்கை வகுப்பதை புரிந்துகொண்டு வந்த வழிமுறையின் அடிப்படையிலேயே பிரதமர் மோடி மாற்றம் செய்தார். பிரதமர் மோடிக்கு முன்பு இருந்த அரசுகள், கவர்ச்சி மிகுந்த விரிநிலைப் பொருளாதாரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தின. அதன் பின்புலத்தில் மாநில அரசுகள் இருந்தன. அதனால் தான் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையிலும் (2014-ல் மோடி பதவி ஏற்பதற்கு முன்பு வரை) நாடு அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியாமல், வீடுகள் தனித்து விடப்பட்டன, ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதார வசதி செய்து கொடுக்க முடியாமலும், அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்க முடியாமலும் அரசுகள் தவித்து வந்தன.
சமச்சீரற்ற இந்த நிலையை மோடி சரிப்படுத்தினார். அதனால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், புதிய வேளாண் சட்டங்கள் மூலமும் வேளாண் துறைக்கு புதிய முன்னுதாரணமாக கொள்கை வகுக்கப்பட்டது. இந்த துறைகளில், பிரதமர் மோடி சிறப்பான முன்னேற்றத்தை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இரண்டாவதாக, மத்திய அரசுகளிடம் இருந்து, சிறப்பானவற்றை எதிர்பார்க்கும் மனப்போக்கை பிரதமர் மோடி மாற்றினார். இந்த நாட்டு மக்கள் பின்தங்கிய நிலையிலோ அல்லது பின்பற்றி நடப்பவர்களாக இருப்பதில் இனியும் திருப்தி அடைய மாட்டார்கள். கொவிட்-19 தொற்றை முறியடிக்கும் திறன் மிக்க தடுப்பூசியை ஓராண்டுக்குள் உலகம் உருவாக்கியுள்ளதென்றால், உள்நாட்டு தடுப்பூசிகளை உருவாக்குவதுடன், அவற்றை உலகிலேயே அதிவேகத்தில் மக்களுக்கு செலுத்தும் இந்தப் போட்டியிலும் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் உள்ளது.
மூன்றாவதாக, மிகக் கடுமையான துன்பத்தை எதிர்கொள்ளும் போது பின்தங்கி விடும் வகையிலான கடந்த 70 ஆண்டுகளாக நம்மிடம் இருந்த மனப்போக்கை மோடி மாற்றினார். தோக்லாமிலிருந்து பாங்காங் ஏரி வரை குறிவைத்ததுடன், தென்சீனக்கடல் வரை ஒரே பகுதி ஒரே சாலை என்னும் முயற்சியை சீனா முன்னெடுத்துள்ளது. பருவநிலை மாற்ற பேச்சு வார்த்தைகள், தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி என எந்த விஷயமாக இருந்தாலும், இன்றைய 2021 இந்தியா, 2014-க்கு முந்தைய இந்தியா இல்லை என்பதை வெளிநாடுகளை உணர வைத்தவர் பிரதமர் மோடி.
நான்காவதாக, நமது வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம். அவை நீதி போதிக்கும் சொற்பொழிவுகளாக இனி இருக்காது. முற்றிலும் தேசிய நலனுக்கு ஏற்ற வகையிலேயே அவை இருக்கும்.
ஐந்தாவதாக, தனியார் துறைக்கு மதிப்பு அளித்தல். முறையான லாபம் இயற்றுவதற்கு இனி தடையிருக்காது. தொழில் முனைவோர் நாட்டு நிர்மானத்தின் தூண்கள் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அதை கொள்கையாக மாற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இந்த வகையில், மிகவும் முக்கியமான பொருளாதார பங்களிப்பு இனிமேல்தான் வரவுள்ளது.
ஆறாவதாக, பெண்களை சமுதாயக் கட்டுப்பாட்டு பிடியிலிருந்து மீட்டு அவர்களுக்கு அதிகாரமளித்தல். இத்தருணத்தில் மோடியின் முக்கியமான சமூகப் பங்களிப்பாக அது உள்ளது. மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் முதல் ஆயுதப்படைகளில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைத்தது, சிறு, குறு தொழில்களின் நிர்வாகக் குழுக்களில் இடம் பெற வைத்தது, முத்தலாக் என்னும் கொடுமையிலிருந்து விடுவித்தது, மூதாதையரின் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை என அனைத்து தளைகளும் உடைக்கப்பட்டுள்ளன.
ஏழாவதாக, மோடியின் முக்கியமான, நிலைத்து நிற்கும் பங்களிப்பாக நமது பெருமைக்குரிய கலாச்சார பாரம்பரியத்தை நவீன வசதிகளுடன் மாற்றுவது இடம் பெறும். ராமர் கோயில் கட்டுமானத்தைக் கொண்டாடும் நாடு, செயற்கைக்கோளைத் தாக்கும் ஆயுத இயக்கத்தின் வெற்றியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ககன்யான் தொடங்கப்படுவதையும் அது எதிர்பார்த்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் கடந்த பல தசாப்தங்களில் முழுப்பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடு தற்போது கொவிட்-19 இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் மக்களுக்கு சேவை புரியும் வகையில் உறுதி ஏற்று மோடி அரசு தனது ஏழாவது ஆண்டை உரிய முறையில் கொண்டாடுகிறது. தற்போதைய தேசிய கட்டாயத்துக்கிடையில் மட்டுமல்லாமல், இந்த அரசுக்கு வாக்களித்த மக்களுக்கு உரிய முறையில் பெருமை அளிக்கும் வகையிலும் அது நடை போடுகிறது. ஆட்சி என்பதிலிருந்து சேவையாக அரசை மாற்றியிருக்கும் பிரதமர் மோடியின் செயல்பாடுதான் என்றென்றும் மின்னும் சாதனையாக இருக்கும்.


