ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்
"இந்தியா ஒரு முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக திகழ உள்ளது"
"தன்னம்பிக்கை கொண்ட இளையோர் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுகிறார்"
"இந்தியாவின் துரிதமான முன்னேற்றம் நமது இளையோர் சக்தி மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது"
"இந்தியாவை தற்சார்பையும், நவீனத்தையும் நோக்கி, சிப் உற்பத்தி முன்னெடுத்துச் செல்லும்"
"சிப் உற்பத்தி எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது"
"இந்திய இளைஞர்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தேவை. செமிகண்டக்டர் முன்முயற்சி அந்த வாய்ப்பை இன்று இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது"
இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக உள்ளது என்று கூறிய அவர், நாட்டின் தொழில்நுட்ப வளம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியை எடுத்துரைத்தார்

வணக்கம்!

எனது அமைச்சரவை சகா திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, அசாம் மற்றும் குஜராத் முதலமைச்சர்களே, டாடா குழுமத்தின் தலைவர் திரு. என். சந்திரசேகரன், சிஜி மின்சக்தி நிறுவனத்தின் தலைவர் திரு வெள்ளையன் சுப்பையா அவர்களே, மத்திய, மாநில மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பிரமுகர்களே,

வரலாற்றை உருவாக்குவதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைப்பதற்கும் நாம் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ள இன்றைய தினம் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது. செமிகண்டக்டர் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் தோலேரா, சனந்த் மற்றும் அசாமில் உள்ள மோரிகான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்த செமிகண்டக்டர் உற்பத்தி இத்துறையில் உலகளாவிய மையமாக பாரதத்தை நிலைநிறுத்த பங்களிக்கும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, மகத்துவமான தொடக்கமாகவும், தீர்க்கமான முன்னோக்கிய அடி எடுத்து வைக்கும் இந்த மகத்தான முன்முயற்சிக்காகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தைவானைச் சேர்ந்த நமது நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் இந்த முயற்சிகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன!

 

நண்பர்களே,

இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தில், நாடு முழுவதிலுமிருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து சாதனை படைத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்! நாட்டின் இளைஞர்களின் கனவாக கருதி, இன்றைய நிகழ்ச்சியில் நமது இளைஞர்கள் அதிகபட்ச அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் குறிப்பாக அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டேன். இன்றைய நிகழ்ச்சி உண்மையில் செமிகண்டக்டர் திட்டங்களின் தொடக்கமாகும், ஆனால் இன்று என் முன் அமர்ந்திருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தின் உண்மையான பங்குதாரர்கள், நமது நாட்டின் வலுவான, ஆற்றலை உள்ளடக்கியவர்கள். எனவே, பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை நேரில் காண வேண்டும் என்பது எனது மனமார்ந்த விருப்பமாக இருந்தது. இன்று, முன்னேற்றம், தற்சார்பு மற்றும் விநியோகச் சங்கிலியில் அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய பாரதத்தின் விரிவான முயற்சிகளை அவர்கள் காண்கிறார்கள். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த இளைஞர் ஒருவருக்கு தனது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவரையும் நான் அன்புடன் வரவேற்று மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டு சந்தேகத்திற்கு இடமின்றி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, மின்னணு சிப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட 'மேட் இன் இந்தியா சிப்' வளர்ச்சி, நம் நாட்டை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி நகர்த்துவதில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. பல்வேறு காரணங்களால் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழில் புரட்சிகளின் போது பின்தங்கிய போதிலும், இந்தியா இப்போது நான்காவது தொழில் புரட்சியான தொழில்துறை 4.0-ஐ வழிநடத்த நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. ஒரு நொடியைக் கூட வீணாக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு இன்றைய நிகழ்ச்சியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விரைவான முன்னேற்றம் இதற்கு எடுத்துக்காட்டாகும். நமது இலக்குகளை நோக்கி உழைப்பதில் நமது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனுக்கு இது ஒரு சான்றாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் செமிகண்டக்டர் இயக்கத்தைத் தொடங்கினோம். சில மாதங்களுக்குள், நாங்கள் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். இன்று, சில மாதங்களுக்குள், மூன்று திட்டங்களுக்கு நாம் அடிக்கல் நாட்டுகிறோம்.

நண்பர்களே,

உலகெங்கிலும் உள்ள ஒரு சில நாடுகள் மட்டுமே தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் நம்பகமான மற்றும் நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த களத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க பாரதத்தைத் தூண்டியுள்ளது. ஏற்கனவே விண்வெளி, அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியாக நிறுவப்பட்ட பாரத், எதிர்காலத்தில் செமிகண்டக்டர் தொடர்பான தயாரிப்புகளின் வணிக உற்பத்தியில் இறங்கத் தயாராக உள்ளது. இந்தத் துறையில் பாரதம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மேலும், இன்று பாரத் செயல்படுத்தும் முடிவுகளும், கொள்கைகளும் எதிர்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நன்மைகளை வழங்கும். எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பது, விதிமுறைகளை எளிமைப்படுத்துவது போன்ற முயற்சிகள் சமீப ஆண்டுகளில் நமது அரசால் 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்களை நீக்க வழிவகுத்துள்ளன. மேலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு வசதியாக அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. தாராளமயமாக்கல் பாதுகாப்பு, காப்பீடு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தியிலும் நமது நிலையை வலுப்படுத்தியுள்ளோம். அதே நேரத்தில், பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள், அத்துடன் மின்னணு கூறுகள் மற்றும் மின்னணு உற்பத்தி தொகுப்புகளுக்கான சலுகைகள் போன்ற முயற்சிகள் மின்னணுத் துறையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, பாரத் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது. இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் விரைவான விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளது. இது தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை மட்டுமல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் நோக்கி நமது நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

 

நண்பர்களே,

பாரதத்தின் இளைஞர்கள் செமிகண்டக்டர் துறையால் அதிகம் பயனடைகிறார்கள். இந்தத் தொழில் தகவல் தொடர்பு முதல் போக்குவரத்து வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் அளவிலான உலகளாவிய அளவில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சிப் உற்பத்தி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; இது எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த வளர்ச்சிக்கான பாதையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இத்துறை இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, தொழில்நுட்ப முன்னேற்றங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தற்போது, உலகளவில் பெரும்பாலான செமிகண்டக்டர் சிப் வடிவமைப்புகள் இந்திய இளைஞர்களின் அறிவுக்கூர்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, செமிகண்டக்டர் உற்பத்தியில் பாரத் முன்னேறி வரும் நிலையில், திறமைச் சூழலில் இந்த சுழற்சியை நாம் திறம்பட நிறைவு செய்கிறோம். இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் நாட்டில் உருவாகி வரும் வாய்ப்புகளை புரிந்துகொள்கிறார்கள். விண்வெளி, வரைபடம்  போன்ற துறைகளை இந்தியா தனது இளைஞர்களுக்காக உருவாக்கியுள்ளது. புத்தொழில் சூழலுக்கு எங்கள் அரசு அளித்த ஊக்கத்தொகையும் ஊக்குவிப்பும் முன்னெப்போதும் இல்லாதவை. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குறுகிய காலத்திற்குள் உலகளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக பாரத் உயர்ந்துள்ளது. இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து, நமது புத்தொழில் நிறுவனங்கள், செமிகண்டக்டர் துறையில் புதிய வழிகளைக் கண்டறியும். இந்த புதிய முயற்சி நமது இளம் தலைமுறையினருக்கு மேம்பட்ட தொழில்நுட்ப தொழில்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

"இதுதான் தருணம், இதுவே சரியான தருணம்." என்று  செங்கோட்டையிலிருந்து நான் அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த மனநிலையுடன் நாம் கொள்கைகளையும் முடிவுகளையும் வகுக்கும்போது, முடிவுகளை நாம் காண்கிறோம். பாரத் இப்போது பழைய சித்தாந்தங்கள் மற்றும் அணுகுமுறைகளைத் தாண்டி, விரைவாக முடிவெடுப்பது மற்றும் கொள்கை அமலாக்கத்துடன் முன்னேறி வருகிறது. செமிகண்டக்டர் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற தசாப்தங்களை நாம் இழந்திருந்தாலும், மற்றொரு தருணத்தை வீணடிக்க நாங்கள் மறுக்கிறோம், அத்தகைய தேக்கம் மீண்டும் நிகழாது.

 

பாரத் முதன்முதலில் 1960-ம் ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தியை விரும்பியது. இந்த விருப்பம் இருந்த போதிலும், அன்றைய அரசுகள் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டன. மன உறுதி இல்லாமை, நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தவறியது ஆகியவை முதன்மையான தடைகளாக இருந்தன. இதன் விளைவாக, பாரதத்தின் செமிகண்டக்டர் கனவு பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. காலப்போக்கில் முன்னேற்றம் இயல்பாகவே நிகழும் என்று நம்பிய அன்றைய தலைமை ஒரு மெத்தனமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. செமிகண்டக்டர் உற்பத்தியை எதிர்காலத் தேவையாக அவர்கள் கருதினர். அதன் உடனடி பொருத்தத்தைப் புறக்கணித்தனர். அவர்கள் நாட்டின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறிவிட்டனர். அதன் திறனை அங்கீகரிக்கும் தொலைநோக்கு பார்வையும் இல்லை. செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற உயர் தொழில்நுட்ப தொழில்களை நிர்வகிக்க முடியாத ஒரு ஏழை நாடாக பாரதத்தை அவர்கள் பார்த்தனர். பாரதத்தின் வறுமையைக் காரணமாக வைத்து நவீன தேவைகளில் முதலீடுகளை புறக்கணித்தனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்ட அவர்கள், செமிகண்டக்டர் உற்பத்தியில் இதே அளவிலான முதலீடுகளை புறக்கணித்தனர். இத்தகைய சிந்தனை ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். எனவே, எங்கள் அரசு தொலைநோக்கு சிந்தனை மற்றும் எதிர்கால அணுகுமுறையை பின்பற்றுகிறது.

தற்போது வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் லட்சியங்களுடன் செமிகண்டக்டர் உற்பத்தியில் நாம் முன்னேறி வருகிறோம். நமது நாட்டின் அனைத்து முன்னுரிமைகளும் முறையாக கவனிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம், நாங்கள் ஏழைகளுக்கு உறுதியான வீடுகளைக் கட்டுகிறோம், மறுபுறம், பாரதம் ஆராய்ச்சியை வளர்ப்பதற்காக லட்சக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. அதே நேரத்தில், செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னேறும் அதே வேளையில், உலகின் மிகப்பெரிய தூய்மை இயக்கத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். மேலும், நாங்கள் விரைவாக வறுமையை ஒழித்து வருகிறோம். அதே நேரத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தற்சார்பை வளர்த்து வருகிறோம். 2024-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை நான் தொடங்கி வைத்துள்ளேன். பொக்ரானில் தற்சார்பு பாதுகாப்புத் துறையின் ஒரு பார்வையுடன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் முன்னேற்றத்தை நேற்று நாம் கண்டோம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அக்னி-5 ஏவுகணையுடன் பாரதம் பிரத்யேக நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்ததைக் கண்டது. மேலும், நாட்டின் வேளாண் துறையில் ட்ரோன் புரட்சி 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ககன்யானுக்கான பாரதத்தின் தயாரிப்புகள் விரைவடைந்துள்ளன. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது விரைவான ஈணுலை திறக்கப்பட்டதை நாடு கொண்டாடியது. இந்த கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பாரதத்தை அதன் வளர்ச்சி நோக்கங்களை விரைவான வேகத்தில் செலுத்துகின்றன. இன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த மூன்று திட்டங்களின் முக்கியத்துவம், இந்த முன்னேற்றப் பாதைக்கு மேலும் பங்களிக்கும் என்பதில் ஐயமில்லை.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவை சுற்றியுள்ள பரவலான உரையாடல் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். உலகளவில் செயற்கை நுண்ணறிவுக்  களத்தில் பாரதம் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த சில வாரங்களாக நான் ஆற்றிய தொடர் உரைகளை நீங்கள் கவனித்திருக்கலாம். சில இளைஞர்கள் என்னை அணுகி, எனது உரைகளின் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு மொழியிலும் பரப்ப வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, அவற்றை உங்கள் சொந்த மொழியில் எனது உரைகளை விரைவில் கேட்க முடியும். தமிழ், பஞ்சாபி, வங்காளம், அசாமி, ஒரியா அல்லது வேறு எந்த மொழியாக இருந்தாலும், நமது நாட்டின் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப அற்புதம் குறிப்பிடத்தக்கது. இதுதான் செயற்கை நுண்ணறிவின் அதிசயம். அனைத்து இந்திய மொழிகளிலும் எனது உரைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்முயற்சியை மேற்கொண்ட இந்த இளைஞர் குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. விரைவில், எங்களுடைய தகவல் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழித் தடைகளையும் கடக்கும். நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஆற்றல்கள் நிறைந்த பாரதத்தின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. எங்கள் செமிகண்டக்டர் முயற்சி நமது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியுள்ளது.

நண்பர்களே, 

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள எவரும், இத்தகைய குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. ஆனால் அதைச் செய்ய நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்ற ஹிமந்த் அவர்களின் கருத்தை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். தென்கிழக்கு ஆசியாவுடனான நமது உறவுகள் வலுப்பெறும் போது, தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்புகளை வளர்ப்பதில் மிகவும் செல்வாக்கு மிக்க பிராந்தியமாக வடகிழக்குப் பகுதி உருவெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதை நான் தெளிவாக முன்னறிவிக்கிறேன், இந்த மாற்றத்தின் தொடக்கத்தை நான் காண்கிறேன். எனவே, இன்று, அசாம் மக்களுக்கும், ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பாரதத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 'மோடியின் உத்தரவாதம்' உங்களுக்கும் உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் ஆதரவாக உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மிகவும் நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 7, 2025
December 07, 2025

National Resolve in Action: PM Modi's Policies Driving Economic Dynamism and Inclusivity