திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பணிகள் நடைபெற்றுள்ளன: பிரதமர்
நவீனமாக்கப்பட்ட ரயில் நிலையங்களை அமிர்த பாரத நிலையங்கள் என நாடு பெயர் சூட்டியுள்ளது, இன்று 100-க்கும் அதிகமான அமிர்த பாரத நிலையங்கள் தயாராக உள்ளன: பிரதமர்
முப்படைகளுக்கு எங்கள் அரசு சுதந்திரம் வழங்கியது, முப்படைகள் இணைந்து உருவாக்கிய ‘சக்கரவியூகம்’ பாகிஸ்தானை மண்டியிட வைத்தது: பிரதமர்
‘சிந்தூர்’ ‘துப்பாக்கிக் குண்டுகளாக’ மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், இந்த நாட்டின் எதிரிகளும் பார்த்தனர்: பிரதமர்
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மூன்று கோட்பாடுகளை ஆபரேஷன் சிந்தூர் தீர்மானித்தது: பிரதமர்
ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறது, இந்த விலை பாகிஸ்தான் ராணுவத்தால், பொருளாதாரத்தால் கொடுக்கப்படும்: பிரதமர்
இந்தியர்களின் வாழ்க்கையோடு விளையாடியதற்காக பாகிஸ்தான் இப்போது மிகுந்த விலை கொடுக்க வேண்டியுள்ளது: பிரதமர்

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

 

ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.

 

நீங்கள் அனைவரும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலும், கடுமையான வெயிலிலும் இங்கு வந்துள்ளீர்கள். இன்று, இந்த நிகழ்ச்சியின் மூலம், நாட்டின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணையவழியில் நம்முடன் இணைந்துள்ளனர். ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல மாநிலங்களின் பிற மக்கள் பிரதிநிதிகள் இன்று நம்முடன் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சகோதர சகோதரிகளே,

கர்ணி மாதாவின் ஆசியுடன் நான் உங்கள் மத்தியில் இங்கு வந்துள்ளேன். கர்ணி மாதாவின் ஆசியுடன், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாடு வலுவடைந்து வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழா இங்கு நடைபெற்றது. இந்தத் திட்டங்களுக்காக ராஜஸ்தானின் சகோதர சகோதரிகளையும் நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.

 

நண்பர்களே,

இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்காக, நாட்டில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க ஒரு பெரிய மகா யாகம் நடந்து வருகிறது. நமது சாலைகளை நவீனமாக்க, நமது விமான நிலையங்களை நவீனமாக்க, நமது ரயில்வே மற்றும் ரயில் நிலையங்களை நவீனமாக்க, கடந்த 11 ஆண்டுகளில் பணிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செய்யப்பட்டுள்ளன. இந்த உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்பு செலவிட்டதை விட இன்று நாடு 6 மடங்கு அதிகமாக செலவிடுகிறது. இன்று உலகமே இந்தியாவில் நடைபெறும் இந்த வளர்ச்சிப் பணிகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறது. நீங்கள் வடக்கே சென்றால், செனாப் பாலம் போன்ற கட்டுமானங்களைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் கிழக்கு நோக்கிச் சென்றால், அருணாச்சலத்தின் சேலா சுரங்கப்பாதை மற்றும் அசாமின் போகிபீல் பாலம் உங்களை வரவேற்கின்றன. நீங்கள் மேற்கு இந்தியாவிற்கு வந்தால், மும்பையில் கடலின் மீது கட்டப்பட்ட அடல் பாலத்தைக் காண்பீர்கள். நீங்கள் தெற்கில் பார்த்தால், பாம்பன் பாலத்தைக் காண்பீர்கள், இது இந்த வகையிலான நாட்டின் முதல் பாலமாகும்.

 

நண்பர்களே,

இன்று இந்தியாவும் தனது ரயில் வலையமைப்பை நவீனமயமாக்கி வருகிறது. இந்த வந்தே பாரத், அமிர்த பாரத், நமோ பாரத் ரயில்கள், நாட்டின் புதிய உத்வேகத்தையும் புதிய முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கின்றன. தற்போது, ​​நாட்டில் சுமார் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொலைதூரப் பகுதிகளுக்கும் நவீன ரயில் பாதையைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான சாலை மேம்பாலங்கள் மற்றும் சாலைக்கு அடியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முப்பத்து நான்காயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே  கிராசிங்குகள் வரலாறாக மாறிவிட்டன, அவை முடிந்துவிட்டன. சரக்கு ரயில்களுக்கான தனி சிறப்பு பாதைகள், பிரத்யேக சரக்கு வழித்தடப் பணிகளையும் நாங்கள் விரைவாக முடித்து வருகிறோம். நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இவை அனைத்துடனும், நாட்டில் 1300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களையும் ஒரே நேரத்தில் நவீனமயமாக்கி வருகிறோம்.

 

நண்பர்களே,

இந்த நவீனமயமாக்கும் ரயில் நிலையங்களுக்கு  நாடு அமிர்த பாரத நிலையங்கள் என்று பெயரிட்டுள்ளது. இன்று, இவற்றில் 100 க்கும் மேற்பட்ட  நிலையங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரயில் நிலையங்களின் நிலை முன்பு எப்படி இருந்தது, இப்போது அவற்றின் தோற்றம் எப்படி மாறிவிட்டது என்பதை மக்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பார்க்கிறார்கள்.

 

நண்பர்களே,

வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரம் இந்த அமிர்த பாரத ரயில் நிலையங்களில் தெளிவாகத் தெரியும். இவை உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தின் புதிய சின்னங்களாகும். ராஜஸ்தானில் உள்ள மண்டல்கர் ரயில் நிலையத்தில் சிறந்த ராஜஸ்தானிய கலை மற்றும் கலாச்சாரம் தெரியும், பீகாரில் உள்ள தாவே நிலையத்தில் மா தவேவாலியின் புனித கோயில் மற்றும் மதுபனி ஓவியம் சித்தரிக்கப்படும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா ரயில் நிலையத்தில் ராமரின் ஒளியை நீங்கள் உணர்வீர்கள். ஸ்ரீரங்கம் நிலையத்தின் வடிவமைப்பு பகவான் ஸ்ரீரங்கநாத சுவாமியின் கோவிலால் ஈர்க்கப்பட்டுள்ளது. குஜராத்தின் தாகோர் நிலையம் ராஞ்சோத்ராயால் ஈர்க்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நிலையம் திராவிட கட்டிடக்கலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேகம்பேட்டை நிலையத்தில், காகதீய பேரரசின் கட்டிடக்கலையை நீங்கள் காண முடியும். இதன் பொருள், ஒவ்வொரு அமிர்த நிலையத்திலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பாரம்பரியத்தையும் நீங்கள் காண முடியும் என்பதாகும். இந்த நிலையங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாகவும் மாறும், மேலும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும். அந்த நகரங்களின் குடிமக்கள், ரயில்களில் பயணிக்கும் பயணிகள், நீங்கள்தான் இந்த சொத்துக்கள் அனைத்திற்கும் உரிமையாளர்கள், அங்கு ஒருபோதும் அசுத்தம் இருக்கக்கூடாது, இந்த சொத்து ஒருபோதும் சேதமடையக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நீங்கள்தான் அதன் உரிமையாளர்கள்.

 

நண்பர்களே,

உள்கட்டமைப்பை உருவாக்க அரசு செலவிடும் பணம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் வணிகத்தை மேம்படுத்துகிறது. அரசு முதலீடு செய்யும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தொழிலாளர்களின் பைகளுக்குச் செல்கிறது. இது கடைக்காரர்களுக்கும், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மணல்-சரளை-சிமென்ட் கொண்டு செல்லும் லாரி-டெம்போ ஓட்டுநர்களும் இதனால் பயனடைகிறார்கள். இந்த உள்கட்டமைப்பு தயாரானவுடன், இன்னும் பல நன்மைகள் உள்ளன. விவசாயிகளின் விளைபொருள்கள் குறைந்த விலையில் சந்தையை அடைகின்றன, மேலும் வீணாக்கப்படுவது குறைக்கப்படுகிறது. நல்ல சாலைகள் இருக்கும் இடங்களில், புதிய ரயில்கள் வருகின்றன, புதிய தொழில்கள் அமைக்கப்படுகின்றன, சுற்றுலா ஒரு பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது, அதாவது, ஒவ்வொரு குடும்பமும், குறிப்பாக நமது இளைஞர்கள், உள்கட்டமைப்பிற்காக செலவிடப்படும் பணத்திலிருந்து அதிகம் பயனடைகிறார்கள்.

 

நண்பர்களே,

உள்கட்டமைப்புப் பணிகளால் நமது ராஜஸ்தான் பெரும் பலன்களைப் பெற்று வருகிறது. இன்று, ராஜஸ்தானின் ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. எல்லைப் பகுதிகளிலும் சிறந்த சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக, கடந்த 11 ஆண்டுகளில் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரயில்வே மேம்பாட்டிற்காக மத்திய அரசு இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளது. இது 2014 க்கு முன்பு இருந்ததை விட 15 மடங்கு அதிகம். சிறிது நேரத்திற்கு முன்பு, இங்கிருந்து மும்பைக்கு ஒரு புதிய ரயில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று, பல பகுதிகளில் சுகாதாரம், நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது மற்றும் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து முயற்சிகளின் நோக்கமும், ராஜஸ்தானின் நகரங்களும் கிராமங்களும் விரைவான முன்னேற்றத்தை நோக்கி நகர முடியும் என்பதே. ராஜஸ்தானின் இளைஞர்கள் தங்கள் நகரத்திலேயே நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும்.

 

நண்பர்களே,

ராஜஸ்தானின் தொழில்துறை வளர்ச்சிக்கு இரட்டை எஞ்சின் அரசும் வேகமாக செயல்பட்டு வருகிறது. பஜன் லாலின் அரசு  பல்வேறு துறைகளுக்கான புதிய தொழில்துறை கொள்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகளால் பிகானிர் நகரமும் பயனடையும், பிகானிரைப் பொறுத்தவரை, பிகானிரி பூஜியாவின் சுவையும், பிகானிரி ரசகுல்லாக்களின் இனிமையும் உலகம் முழுவதும் தங்கள் அடையாளத்தை உருவாக்கி விரிவுபடுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும். ராஜஸ்தானில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. இது ராஜஸ்தானை பெட்ரோலியம் சார்ந்த தொழில்களின் முக்கிய மையமாக மாற்றும். அமிர்தசரஸிலிருந்து ஜாம்நகர் வரை கட்டப்பட்டு வரும் 6 வழி பொருளாதார வழித்தடம், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர், ஹனுமன்கர், பிகானிர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜலூர் வழியாக செல்கிறது. தில்லி-மும்பை விரைவுச்சாலையின் பணிகளும் ராஜஸ்தானில் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. இந்த இணைப்பு பிரச்சாரம் ராஜஸ்தானில் தொழில்துறை வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

 

நண்பர்களே,

பிரதமரின் சூரியக்கூரை மின்சாரத் திட்டமும் ராஜஸ்தானில் வேகமாக முன்னேறி வருகிறது. ராஜஸ்தானில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டது, மேலும் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் மக்கள் புதிய வருவாய் ஈட்டுவதற்கான வழியையும் பெற்றுள்ளனர். இன்று, மின்சாரம் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவற்றிலிருந்தும் ராஜஸ்தான் அதிக மின்சாரம் பெறும். அதிகரித்து வரும் மின்சார உற்பத்தி ராஜஸ்தானில் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

 

நண்பர்களே,

இந்த ராஜஸ்தான் நிலம் மணல் நிறைந்த சமவெளிகளுக்கு பசுமையைக் கொண்டு வந்த மகாராஜா கங்கா சிங்கின் நிலம். நமக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பகுதியை விட வேறு யாருக்குத் தெரியும்? மேற்கு ராஜஸ்தானின் பிகானிர், ஸ்ரீ கங்காநகர், ஹனுமன்கர் போன்ற பல பகுதிகளின் வளர்ச்சிக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. எனவே, ஒருபுறம் நாங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை முடித்து வருகிறோம், அதே நேரத்தில், நாங்கள் ஆறுகளை இணைக்கிறோம். பார்வதி-காளிசிந்த்-சம்பல் இணைப்புத் திட்டத்தால் ராஜஸ்தானின் பல மாவட்டங்கள் பயனடையும், இங்குள்ள நிலம், இங்குள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.

 

நண்பர்களே,

இந்த ராஜஸ்தான் நாட்டின் துணிச்சலான நிலம், நாட்டையும் அதன் குடிமக்களையும் விட பெரியது எதுவுமில்லை என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி, பயங்கரவாதிகள் தங்கள் மதத்தைப் பற்றிக் கேட்ட பிறகு, நமது சகோதரிகளின் நெற்றியின் குங்குமத்தை அழித்துவிட்டனர். அந்த குண்டுகள் பஹல்காமில் சுடப்பட்டன, ஆனால் அந்த குண்டுகள் 140 கோடி நாட்டு மக்களின் இதயங்களைத் துளைத்தன. இதன் பிறகு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றுபட்டு, பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்மானித்தனர். இன்று, உங்கள் ஆசீர்வாதங்களாலும், நாட்டின் ராணுவத்தின் துணிச்சலாலும், அந்த உறுதிமொழியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். எங்கள் அரசு  முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்தது, மேலும், மூன்று படைகளும் சேர்ந்து, பாகிஸ்தானை மண்டியிடச் செய்யும் ஒரு சக்ரவியூகத்தை உருவாக்கியது.

 

நண்பர்களே,

22 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளின் 9 பெரிய மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். குங்குமம், துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கிறது என்பதை உலகமும் நாட்டின் எதிரிகளும் கூட பார்த்திருக்கிறார்கள்.

 

நண்பர்களே,

5 ஆண்டுகளுக்கு முன்பு பாலகோட்டில் நாடு வான்வழித் தாக்குதல்களை நடத்திய பிறகு, ராஜஸ்தானின் எல்லையிலேயே எனது முதல் பொதுக் கூட்டம் நடைபெற்றது என்பது தற்செயல் நிகழ்வு. இதுபோன்ற தற்செயல் நிகழ்வுகள் நடப்பது வீரபூமியின் தவம். இப்போது இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, ​​அதன் பிறகு எனது முதல் பொதுக் கூட்டம் மீண்டும் ராஜஸ்தானின் வீரபூமியின் எல்லையில், பிகானிரில் உங்கள் அனைவருக்கும் மத்தியில் நடக்கிறது.

 

நண்பர்களே,

சுருவிற்கு, விமானத் தாக்குதலுக்குப் பிறகு நான் வந்தேன், அப்போது நான் - 'இந்த மண்ணின் மீது சத்தியம் செய்கிறேன், என் நாட்டை நான் அழிய விடமாட்டேன், என் நாட்டை நான் தலைவணங்க விடமாட்டேன்' என்று சொன்னேன். இன்று, ராஜஸ்தான் மண்ணிலிருந்து, நாட்டு மக்களுக்கு மிகுந்த பணிவுடன் சொல்ல விரும்புகிறேன், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் திரங்கா யாத்திரைகளை நடத்தும் நாட்டு மக்களுக்கு - சிந்தூரத்தைத் துடைக்கப் புறப்பட்டவர்கள், தூசியாகிவிட்டனர். இந்தியாவின் ரத்தத்தைச் சிந்தியவர்கள், இன்று ஒவ்வொரு துளிக்கும் விலை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா அமைதியாக இருக்கும் என்று நினைத்தவர்கள், இன்று அவர்கள் தங்கள் வீடுகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் ஆயுதங்களைப் பற்றி பெருமைப்பட்டவர்கள், இன்று அவர்கள் இடிபாடுகளின் குவியல்களுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

 

என் அன்பான நாட்டு மக்களே,

இது தாக்குதல் மற்றும் பழிவாங்கும் விளையாட்டு அல்ல, இது ஒரு புதிய நீதி வடிவம், இது ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் கோபம் அல்ல, இது சக்திவாய்ந்த இந்தியாவின் கடுமையான வடிவம். இது இந்தியாவின் புதிய வடிவம். முன்பு, வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டது, இப்போது அது மார்பில் நேரடி தாக்குதல். இதுதான் கொள்கை, இதுதான் பயங்கரவாதத்தின் போர்வையை நசுக்கும் வழி, இதுதான் இந்தியா, இதுதான் புதிய இந்தியா. சொல்லுங்கள்-

 

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

 

நண்பர்களே,

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூன்று கொள்கைகளை வகுத்துள்ளது. முதலாவதாக, இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதற்குப் பொருத்தமான பதில் வழங்கப்படும். நேரம் நமது படைகளால் தீர்மானிக்கப்படும், முறையும் நமது படைகளால் தீர்மானிக்கப்படும், மேலும் நிலைமைகளும் நம்முடையதாக இருக்கும். இரண்டாவதாக, அணுகுண்டின் வெற்று அச்சுறுத்தல்களால் இந்தியா பயப்படப் போவதில்லை. மூன்றாவதாக, பயங்கரவாதத்தின் எஜமானர்களையும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசையும் நாம் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம்; அவர்களைத் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம்; அவர்களை ஒன்றாகக் கருதுவோம். அரசு மற்றும் அரசு சாராத ஆதரவாளர்கள் என்ற பாகிஸ்தானின் இந்த விளையாட்டு இனி வேலை செய்யாது. பாகிஸ்தானை அம்பலப்படுத்த நம் நாட்டிலிருந்து ஏழு வெவ்வேறு பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்றடைவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பிரதிநிதிகளில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள், பிரமுகர்கள் அடங்குவர், இப்போது பாகிஸ்தானின் உண்மையான முகம் முழு உலகிற்கும் காட்டப்படும்.

 

நண்பர்களே,

இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. நேரடிப் போர் நடக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே, இந்தியாவுக்கு எதிராகப் போராட பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த பல தசாப்தங்களாக இது நடந்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பரப்பியது, அப்பாவி மக்களைக் கொன்றது, இந்தியாவில் பயத்தின் சூழலை உருவாக்கியது, ஆனால் பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது, இப்போது பாரத தாயின் சேவகர் மோடி இங்கே தலை நிமிர்ந்து நிற்கிறார். மோடியின் மனம் குளிர்ச்சியாக இருக்கிறது, ஆனால் மோடியின் ரத்தம் சூடாக இருக்கிறது, இப்போது மோடியின் நரம்புகளில் பாய்வது இரத்தம் அல்ல, சூடான குங்குமம் ஆகும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இப்போது இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விலையை பாகிஸ்தானின் ராணுவமும் பாகிஸ்தானின் பொருளாதாரமும் செலுத்தும்.

 

நண்பர்களே,

நான் தில்லியில் இருந்து இங்கு வந்தபோது, ​​பிகானிரின் நால் விமான நிலையத்தில் தரையிறங்கினேன். இந்த விமானப்படைத் தளத்தையும் குறிவைக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் இந்த விமானப்படைத் தளத்திற்கு சிறிதளவு கூட சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. இங்கிருந்து சிறிது தூரத்தில், எல்லையைத் தாண்டி, பாகிஸ்தானின் ரஹிம்யார் கான் விமானப்படைத் தளம் உள்ளது, அது எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது, அது ஐசியுவில் கிடக்கிறது. இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல் இந்த விமானப்படைத் தளத்தை அழித்துவிட்டது.

 

நண்பர்களே,

பாகிஸ்தானுடன் எந்த வர்த்தகமோ பேச்சுவார்த்தையோ இருக்காது. பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வதைத் தொடர்ந்தால், ஒவ்வொரு பைசாவையும் பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் உரிமைப் பங்கை பாகிஸ்தான் பெறாது, இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவது இப்போது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவின் உறுதிப்பாடு, உலகில் எந்த சக்தியாலும் இந்த உறுதியிலிருந்து நம்மைத் தடுக்க முடியாது.

 

சகோதர சகோதரிகளே,

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பாதுகாப்பு மற்றும் செழிப்பு இரண்டும் அவசியம். இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வலுவாக மாறும்போதுதான் இது சாத்தியமாகும். இன்றைய திட்டம் இந்தியாவின் சீரான வளர்ச்சிக்கும், இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த துணிச்சலான நிலத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டு மக்களையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். என்னுடன் சேர்ந்து, உங்கள் இரு கைகளையும் மூடி, முழு பலத்துடன் சொல்லுங்கள்-

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

வந்தே மாதரம். வந்தே மாதரம்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions