Indian diaspora across the world are true and permanent ambassadors of the country, says PM Modi
In whichever part of the world Indians went, they not only retained their Indianness but also integrated the lifestyle of that nation: PM
Aspirations of India’s youth and their optimism about the country are at the highest levels: PM Modi
India, with its rich values and traditions, has the power to lead and guide the world dealing with instability: PM Modi
At a time when the world is divided by ideologies, India believes in the mantra of ‘Sabka Sath, Sabka Vikas’: PM

  • பிரவாசி பாரதீய தினத்தை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரவாசி விழா என்ற பாரம்பரியத்தில் நாடாளுமன்றங்களில் செயல்படும் இந்திய வம்சாவளியினருக்கான முதல் மாநாடு இன்று புதியதொரு அத்தியாயத்தை இணைக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, பசிபிக் பகுதிகள் மற்றும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது இதமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்களுக்கு இந்தியாவின் நல்வரவு! வாருங்கள் உங்கள் இல்லத்திற்கு!

    உங்களது முன்னோர்கள், உங்களது பழைய நினைவுகள் அனைத்துமே இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளோடு தொடர்புடையதாக உள்ளது. உங்கள் முன்னோர்களில் ஒரு சிலர் வர்த்தகம் செய்யவும், படிக்கவும் என வெளிநாடுகளுக்குச் சென்றனர்; அவர்களில் சிலரை கட்டாயமாக நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கலாம்; வேறு சிலரை ஆசைகாட்டி நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கலாம். உடலளவில் அவர்கள் இந்த இடத்தை விட்டுச் சென்றிருக்கலாம். இருந்தாலும் தங்களின் ஆன்மாவில் சிறு பகுதியை, தங்களின் மனதை, அவர்கள் இந்த மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  எனவேதான் இந்தியாவின் எந்தவொரு விமானநிலையத்திலும் நீங்கள் வந்திறங்கியபோது இந்த மண்ணில் நீங்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அவர்களின் ஆன்மாக்களின் சிறு பகுதிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

    அந்த நேரத்தில் உங்கள் தொண்டை அடைத்துக் கொண்டிருக்கும். சில உணர்வுகள் கண்ணீர் என்ற வடிவத்தில்தான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. பீறிட்டு வரும் அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள நீங்கள் முடிந்தவரை முயற்சி செய்திருக்கவும் கூடும்; என்றாலும் அதில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை. உங்கள் விழிகள் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் இந்தியாவிற்கு நீங்கள் வந்திருப்பதை எண்ணி அதே விழிகள் வியப்பிலும் விரிந்திருந்தன. உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் பாசம், இந்த அன்பு, இந்த மரியாதை, இந்த இடத்தின் மணம், இந்த நாட்டின் மணம் இந்தப் பகுதியை இவ்வாறு இருப்பதற்காகவே நான் வணங்குகிறேன். இன்று நீங்கள் இங்கே இருப்பது குறித்து உங்கள் முன்னோர்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம் அனைவராலும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

    நண்பர்களே,

    கடந்த நூற்றாண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியே சென்றவர்களின் இதயங்களில் இருந்து இந்தியா எப்போதுமே வெளியே செல்லவில்லை. உலகத்தில் எந்தப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றிருந்தபோதிலும் இந்திய நாகரீகத்தை அவர்கள் உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தங்கள் இல்லமாக ஏற்றுக் கொண்ட பகுதியோடு முழுமையாக தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பதிலும் எவ்வித வியப்பும் இல்லை.

    ஒருபுறத்தில் தங்களுக்குள்ளே இந்திய மதிப்பீடுகளை உயிர்ப்புடன் வைத்திருந்த அதேநேரத்தில் அந்த நாட்டின் மொழி, உணவு, உடை ஆகியவற்றோடும் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர்.

    உலக அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு, கலை, சினிமா போன்ற பல்வேறு துறைகளிலும் தங்கள் முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அரசியலைப் பற்றி நான் பேச வேண்டுமென்றால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சின்னஞ்சிறு உலகப் பாராளுமன்றமே என் முன்னால் அமர்ந்திருப்பதை என்னால் காண முடிகிறது. இன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மொரீஷியஸ், போர்த்துகல், அயர்லாந்து நாடுகளின் பிரதமர்களாக வீற்றிருக்கின்றனர். பல்வேறு நாடுகளிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாட்டின் அதிபர்களாக, அரசின் பிரதமர்களாக வீற்றிருக்கின்றனர். கயானா நாட்டின் முன்னாள் அதிபர் திரு. பாரத் ஜக்தேவ் ஜி நம்மிடையே இருப்பது குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன். மிகுந்த மதிப்பிற்குரிய நீங்கள் அனைவருமே உங்கள் நாட்டின் அரசியலில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகிறீர்கள்.

    நண்பர்களே,

    உங்கள் முன்னோர்களின் தாய்நாடான இந்தியா உங்களுக்காக மிகவும் பெருமை கொள்கிறது. உங்களின் சாதனைகளும் வெற்றிகளும் எங்களுக்கு பெருமையும் மதிப்பும் தரக்கூடிய விஷயங்களாக உள்ளன. நீங்கள் பதவியேற்பது குறித்தோ அல்லது உங்களில் யாராவது தேர்தலில் போட்டியிட மனுச் செய்வது குறித்தோ ஊடகங்களில் செய்திகள் வரும்போது அது இந்தியாவில் அனைவரின் கவனத்தையும் கவரும் செய்தியாக அமைகிறது. உங்கள் பகுதியில் உள்ள அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள், உங்கள் நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது குறித்த செய்திகளை எல்லாம் இந்திய மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கின்றனர். இந்த விஷயங்களை எல்லாம் இப்படியும் கூட அவர்கள் விவாதிக்கின்றனர்: இதோ பார்… நம்மில் ஒருவர் இவ்வளவு உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறார். இத்தகைய மகிழ்ச்சியை தந்ததற்காக, எங்களை பெருமை கொள்ளச் செய்கின்ற விஷயங்களை செய்ததற்கான பாராட்டுகளுக்கு உரியவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்.

    சகோதர, சகோதரிகளே,

    மிக நீண்ட காலமாகவே பல்வேறு நாடுகளிலும் நீங்கள் வசித்து வருகிறீர்கள். கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் இந்தியா குறித்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இப்போது இந்தியாவைப் பற்றி அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவைக் குறித்த உலகத்தின் அணுகுமுறை மாறி வருகிறது. இதன் பின்னால் உள்ள முக்கிய காரணம் இந்தியாவே மாறிக் கொண்டிருக்கிறது; அது தன்னைத் தானே உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான். சமூக, பொருளாதார மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமல்ல; கருத்து மட்டத்திலும் கூட இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. “இங்கு எந்த மாற்றமும் ஏற்படாது; எப்போதும் போலத்தான் இருக்கும்; எதுவும் நடக்க வாய்ப்பில்லை” என்ற சிந்தனைப் போக்கிலிருந்து வெகு தூரத்திற்கு இந்தியா வந்து விட்டது. இப்போது இந்தியர்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. செயல்பாட்டு முறைகளில் முழுமையான மாற்றத்தை உங்களால் காண முடியும். ஒவ்வொரு துறையிலும் திசைமாற்ற முடியாத வகையிலான மாற்றத்தின் தாக்கத்தையும் உங்களால் காண முடியும்.

    • இவற்றின் விளைவாக இதுவரையில் காணாத வகையில் 2016-17ஆம் ஆண்டில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது.
    • கடந்த  மூன்றாண்டுகளில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதார அமைப்பின் உலகளாவிய போட்டித்திறனுக்கான பட்டியலில் நாம் 32 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில் 21 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
    • ஏற்பாடுகள் குறித்த செயல்திறனுக்கான பட்டியலில் 10 புள்ளிகள் மேம்பட்டுள்ளோம்.
    • உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், மூடீஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை சாதகமான வகையில் நோக்குகின்றன.
    • கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே மொத்த முதலீட்டில் பாதிக்கும் மேற்பட்ட தொகை கட்டுமானம், விமானப் போக்குவரத்து, கம்ப்யூட்டர்- மென்பொருள், வன்பொருள், மின் உபகரணங்கள் ஆகிய துறைகளில் வந்து குவிந்துள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்குமான கொள்கைகளில் பரவலான சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டுவந்ததன் விளைவாக இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாயிற்று. “மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்தம்” என்பதே எங்களின் வழிகாட்டு நெறியாக அமைந்திருந்தது. இந்த அமைப்பு முழுவதையுமே வெளிப்படையானதாக, பொறுப்புடையதாக மாற்றுவது என்பதே எங்களின் குறிக்கோளாக அமைந்திருந்தது. ஊழலை முற்றிலுமாக அகற்றுவது என்பதே எங்களின் குறிக்கோளாக இருந்தது.

நண்பர்களே,

சரக்கு மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் நிலவி வந்த நூற்றுக்கணக்கான வரிகள் என்ற வலைப்பின்னலை நாங்கள் முற்றிலுமாக அகற்றி, நாட்டை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்தோம். சுரங்கப்பணிகள், உரம், நெசவாலைகள், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு, கட்டுமானம், குடியிருப்பு கட்டுமானத் தொழில், உணவுப் பதனிடுதல் என நாங்கள் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தாத துறையே இல்லை எனலாம்.

நண்பர்களே,

இந்தியா இன்று உலகத்திலேயே மிகவும் இளமையான நாடாகத் திகழ்கிறது. அளவற்ற கற்பனைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டவர்கள்தான் இளைஞர்கள். அவர்களின் ஆக்கசக்தியை சரியான துறையில் வழிநடத்திச் செல்ல அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே அவர்கள் தங்கள் சொந்த வர்க்கத்தையும் மேற்கொள்ள முடியும்.

திறமைமிகு இந்தியாவிற்கான இயக்கம், தொழில்துவங்கும் திட்டம், தனித்து நிற்கும் திட்டம், தொழில் முனைவிற்கான திட்டம் போன்ற திட்டங்கள் இந்த நோக்கத்திற்காகவே துவங்கப்பட்டுள்ளன. சுயவேலைவாய்ப்பிற்கான முத்ரா திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவித காப்புறுதியும் இன்றி ரூ. 4 லட்சம் கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக மட்டுமே 3 கோடி புதிய தொழில்முனைவர்கள் உருவாகியுள்ளனர். 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவிற்கான தேவைகளை கணக்கில் கொண்டு கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் அரசு முதலீட்டை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்பாடுகளுக்கான தேவைகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதன் அடிப்படையில் கொள்கையில் இந்த விஷயத்திற்கு சிறப்பான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றோடு இணையவும், ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளவும் உதவும் வகையில் நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், விமான வழித்தடங்கள், நீர்வழித் தடங்கள், துறைமுகங்கள் ஆகியவை வளர்த்தெடுக்கப்படுகின்றன.

நண்பர்களே,

இப்போது இந்தியாவில் புதிய இருப்புப் பாதைகள் இரண்டு மடங்கு வேகத்தில் போடப்படுகின்றன. இரண்டு மடங்குக்கும் மேலான வேகத்தில் இரட்டை வழி இருப்புப் பாதைகள் போடப்பட்டு வருகின்றன. இரண்டு மடங்கு அளவிலான புதிய மறுசுழற்சியிலான மின் உற்பத்தித் திறன் மின் பரிமாற்ற முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கப்பல் போக்குவரத்துத் துறையில் சரக்கு கையாளும் திறன் வளர்ச்சி எதிர்மறையாக இருந்த நிலையை மாற்றி இந்த அரசு 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இத்தகைய முயற்சிகள் அனைத்தின் விளைவாக புதிய வேலைவாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் உள்ளூர் அளவில் புதிய வேலைகளைப் பெற்று வருகின்றன. உதாரணமாக, உஜ்வாலா திட்டத்தைப் பற்றி நாம் பேசுவோமேயானால், அது ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்குவதோடு நின்று விடுவதில்லை. இந்தத் திட்டம் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களை சமையல் அறையில் நிரம்பி வழியும் புகையில் இருந்து விடுவித்துள்ளது. மாநிலங்கள் மண்ணெண்ணையை நம்பியிராத நிலையை எட்டவும் இது உதவியுள்ளதோடு, இதில் மேலும் ஒரு வசதியும் உள்ளது. சமையல் எரிவாயுவிற்கான புதிய விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனோடு கூடவே உஜ்வாலா திட்டத்தை துவக்கியபிறகு சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொண்டு வந்து தருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக சீர்திருத்தத்தோடு கூடவே சமூகத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது என்பதே இதன் பொருளாகும்.

சகோதர, சகோதரிகளே,

உலகம் முழுவதுமே ஒரே குடும்பம் என்பதை நம்பும் நமது கலாச்சாரம் உலகத்திற்கு ஏராளமாக வாரி வழங்கியுள்ளது. நான் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற போது சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற யோசனையை உலகத்தின் முன்பாக முன்வைத்தேன். நான் இந்த யோசனையை முன்வைத்த 75 நாட்களுக்குள் ஏகமனதாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டது மட்டுமின்றி உலகத்தில் உள்ள 177 நாடுகளால் இணைந்த யோசனையாகவும் அது மாறியது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்று உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இது உங்களுக்கும் எங்களுக்கும் மிகுந்த பெருமையளிக்கக் கூடிய விஷயமாகும்.

முழுமையான இந்த வாழ்க்கை முறைதான் இந்தியாவின் செழுமையான பாரம்பரியங்களின் பரிசாகும்.

நண்பர்களே,

பருவமாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில் நானும் பிரான்ஸ் அதிபரும் இணைந்து சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்திக்கான சர்வதேச கூட்டணியை உருவாக்குவது என்ற யோசனையை முன்வைத்தோம். அது இப்போது நடைமுறையாகியுள்ளது. சூரிய ஒளி அபரிமிதமாக இருக்கும் நாடுகளின் நிதியுதவியுடன் சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்திக்கான தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மேடையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற இந்த முறையும் கூட பல்லாண்டு காலமாக  இந்தியா உலகிற்கு வழங்கி வந்த ஒரு முறையே ஆகும்.

சகோதர, சகோதரிகளே,

நேபாளத்தை பூகம்பம் தாக்கியபோதும், இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், மாலத்தீவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், முதலில் உதவிக்கு வந்தது இந்தியாதான்.

ஏமன் நாட்டில் நெருக்கடி ஏற்பட்டபோது 4,500 இந்திய குடிமக்களை நாங்கள் பாதுகாப்பாக அந்த நாட்டை விட்டு வெளியே கொண்டுவந்தோம். அதுமட்டுமின்றி இதர 48 நாடுகளைச் சேர்ந்த 2,000 குடிமக்களையும் நாங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தோம்.

மிக மோசமான நெருக்கடியான தருணத்தில் மனித மதிப்பீடுகளை பாதுகாப்பதென்பது உலகம் முழுவதையுமே ஒரே குடும்பமாக கருதும் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியே ஆகும்.

நண்பர்களே,

2018ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் நூறாண்டைக் குறிக்கும் ஆண்டாகும். முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதுவும் கூட அந்த நேரத்தில் இந்தியா அந்தப் போர்களினால் நேரடியாகப் பாதிக்கப்படாத நிலையிலும் கூட அவர்கள் இத்தகைய தியாகத்தைச் செய்துள்ளனர்.  இந்த இரண்டு உலகப் போரிலுமே வேறு எந்தவொரு நாட்டின் ஒரே ஒரு அங்குல நிலத்திற்குக் கூட இந்தியா ஆசைப்பட்டதில்லை. இந்தியா எத்தகைய மகத்தான தியாகத்தை செய்தது என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும். நாட்டின் விடுதலைக்குப் பின்பும் கூட இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து இருந்துகொண்டேதான் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியை நிலைநாட்டும் படைகளுக்கு அதிகமான அளவில் வீரர்களை வழங்கி பங்களிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது. மனிதாபிமான மதிப்பீடுகள், அமைதி ஆகியவற்றிற்கான தியாகச் செய்தியாக இது அமைகிறது.

சுயநலத்தை உதறித் தள்ளுவது; இத்தகைய சேவை மனப்பான்மை, எதையும் புறந்தள்ளும் போக்கு ஆகியவையே நமது அடையாளமாக விளங்குகின்றன. இந்த மனித மதிப்பீட்டின் விளைவாகவே உலகம் இந்தியாவை சிறப்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவோடு கூடவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூகமான உங்களையும் உலகம் சிறப்பான வகையில் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

எந்த நாட்டிற்கு நான் பயணம் மேற்கொண்டாலும் அந்த நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை சந்திக்க முயற்சித்து வந்துள்ளேன். அத்தகைய பயணங்களின் போது உங்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இத்தகைய எனது முயற்சிக்குப் பின்னால் உள்ள மிகப்பெரும் காரணமாக அமைவது இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான நிரந்தர தூதர்கள் என்று யாராவது இருக்கிறார்கள் என்றால் அது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்ற எனது நம்பிக்கைதான். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்துக் கொள்வது என்பதும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதுமே எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் ஆகும்.

இதற்கு முன்பு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கென்றே தனியாக அமைச்சகம் இருந்தது. எனினும் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைப்பு செய்வதில் பிரச்சினை நிலவுகிறது என்ற கருத்தை நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பெற்றோம். உங்களிடமிருந்து பெற்ற ஆலோசனையை அடுத்து இந்த இரண்டு அமைச்சகங்களையும் ஒன்றாகச் சேர்த்து விட்டோம். இதற்கு முன்பு பி. ஐ. ஓ. மற்றும் ஓ. சி. ஐ. என்ற இரண்டு வெவ்வேறு வகையான திட்டங்கள் இருந்தன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தி அந்த இரண்டையும் ஒன்றாக ஆக்கியுள்ளோம்.

நமது வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இந்தியர்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தவில்லை; இந்திய வம்சாவளியினர் குறித்தும் வாரத்தின் ஏழு நாட்களிலும், நாளின் 24 மணி நேரத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவரது தலைமையின் கீழ், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிநாடுகளின் நிகழ்வுகளை உடனடியாக கண்காணிப்பது, தூதரகங்கள் குறித்த குறைபாடுகளுக்கான உதவியை வழங்குவது ஆகியவற்றுக்கென மதத் என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது பிரவாசி பாரதிய தினம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதுபோக, பிரதேச வாரியான பிரவாசி பாரதீய தினங்களும்  கொண்டாடப்படுகின்றன. சுஷ்மா ஜி சிங்கப்பூரில் நடைபெற்ற இத்தகைய மாநாட்டில் பங்கேற்று விட்டு இப்போதுதான் திரும்பியுள்ளார்.

சகோதர, சகோதரிகளே,

இன்று நாம் அனைவரும் கூடியிருக்கும் இந்தக் கட்டிடம் உங்கள் அனைவருக்காகவுமே, அதாவது இந்திய வம்சாவளியினருக்காகவே, 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று அர்ப்பணிக்கப்பட்டதாகும்.  மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே இந்த மையம் இந்திய வம்சாவளியினரின் செயல்பாட்டிற்கான மையமாக உருவாகியுள்ளது மிகவும் பெருமை கொள்ளத்தக்கதாகும். இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை குறித்த கண்காட்சியை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள் என்ற வினாடி வினா போட்டியின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய முயற்சிகளின் விளைவை நம்மால் காண முடிகிறது. நூறு நாடுகளுக்கும் மேற்பட்டவற்றிலிருந்து 5,700க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இந்தியாவின் மீதான அவர்களின் உற்சாகமும் ஆர்வமும் எங்கள் அனைவருக்கும் மிகுந்த ஊக்கத்தைத் தந்தன. அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்ற நாங்கள் இந்த ஆண்டு அதைவிடப் பெரிய அளவில் இந்த வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம்.

நண்பர்களே,

உங்கள் நாடுகளின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பின் விளைவாக இந்தியாவிற்கு மரியாதை கிடைக்கிறது. இந்தியாவின் முன்னேற்றமும் வளர்ச்சியின் விளைவாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இனத்தவருக்கு அதிகமான மரியாதை கிடைக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கான எங்களின் முயற்சியில் ஒரு கூட்டாளியாகவே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை நாங்கள் கருதுகிறோம். நிதி ஆயோக் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள 2020 வரையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இந்தியாவின் வளர்ச்சிக்கான இந்தப் பாதையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பங்களிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. உலகத்தில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் மிகப்பெரும் நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இத்தகைய மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதில் மற்றுமொரு வழியும் கூட இருக்கிறது. இன்று உலகத்திலேயே நேரடி அந்நிய முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இந்தியா இருக்கிறதெனில், இந்த விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கு ஏற்பாடு செய்வதில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். நீங்கள் வாழும் சமூகங்களில் நீங்கள் அனுபவிக்கும் முக்கியத்துவத்தைக் கணக்கில் எடுக்கும்போது இந்த விஷயத்தில் உங்களால் கிரியா ஊக்கியாக செயல்பட முடியும் என்றே நான் கருதுகிறேன். இந்தப் பின்னணியில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவை நோக்கிய சுற்றுலாவை வளர்த்தெடுப்பதில் மிகப் பெருமளவில் பங்களிக்க முடியும்.

நண்பர்களே,

உலகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ள  நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாகியாகவும், தலைவர்களாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் நமது இந்தியர்கள் இருந்து வருகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அவர்கள் முழுமையாக உணர்ந்தும் இருக்கின்றனர். எனவேதான் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் அவர்கள் வைத்துள்ள வலுவான நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இன்று வெளிநாடுகளில் நிரந்தரமாக வசித்துவரும் ஒவ்வொரு இந்தியருமே இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்பவராக தன்னைக் கருதிக் கொள்கின்றார். இந்த மாற்றத்தில் தானும் பங்கெடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்புகின்றார். அதற்கான தங்களது பொறுப்பை மேற்கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர். உலக அளவில் தங்களது நாடு மேலும் அதிகமாக உயர்வதைக் காண அவர்கள் விரும்புகின்றனர். நீங்கள் வசிக்கும் நாட்டின் சமூக, பொருளாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வந்ததில் நீங்கள் பெற்ற அனுபவத்தின் முக்கியத்துவமும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தவகையில் உங்களின் அனுபவம் இந்தியாவிற்கு உதவும்வகையில் கூட்டாக ஆய்வு செய்வதற்காக வருகை தரும் ஆய்வாளர்களுக்கான திட்டம் என்ற பொருள்படும் வஜ்ரா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் மூன்று மாதங்கள் வரை நீங்கள் வேலை செய்யலாம்.

இந்தத் திட்டத்துடன் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், உங்கள் நாட்டிலுள்ள இந்தியர்களையும் இதனோடு இணைத்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் எனவும் இந்த மேடையிலிருந்து உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்ற அனுபவத்தை நீங்கள் பெறும்போது உங்களுக்கும் இது மன நிம்மதியை அளிக்கும். இந்தியாவின் தேவைகளை, இந்தியாவின் வலிமையை, அதன் தனித்தன்மையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான திறமை உங்களைத் தவிர வேறெவருக்கும் இல்லை.

இந்த குழப்பமான சூழ்நிலையில் உலகம் முழுவதற்கும் இந்தியாவின் நாகரீகம், கலாச்சாரம் ஆகியவற்றின் மதிப்பீடுகளால் வழிகாட்ட முடியும். நல்வாழ்விற்கான பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகின்றன. முழுமையான வாழ்க்கை குறித்த உங்களது பழைய பாரம்பரியம் குறித்து உங்களால் உலகிற்கு எடுத்துக் கூற முடியும். பல்வேறுபட்ட கருத்தோட்டங்கள், பல்வேறு மட்டங்களில் உலக சமூகம் பிளவுபட்டுள்ள சூழ்நிலையில் அனைவரையும் இணைத்து செல்லும் அனைவரும் ஒன்றாக, அனைவருக்குமான வளர்ச்சி என்ற இந்தியாவின் உள்ளீடான தத்துவத்தை உங்களால் உதாரணமாக எடுத்துக் காட்ட முடியும். தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை குறித்த கவலைகள் உலகில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மதங்களுக்கு இடையேயான ஒருமித்த உணர்வு என்ற இந்தியாவின் கலாச்சாரம் குறித்த செய்தியை உங்களால் வலியுறுத்த முடியும்.

நண்பர்களே,

2019ஆம் ஆண்டில் அலகாபாத் பிரயாக்கில் கும்ப மேளா நடைபெறவிருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். மனித இனத்தின் தெளிவாக உணர்ந்தறியக் கூடிய கலாச்சார பாரம்பரியத்திற்கான யுனெஸ்கோவின் பட்டியலில் கும்ப மேளாவும் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும். முழுமையான அளவில் இந்த நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளை உத்தரப் பிரதேச மாநில அரசு துவங்கி விட்டது. அடுத்த ஆண்டு நீங்கள் இந்தியாவிற்கு வரும்போது பிரயாகிற்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் தயாரிப்புடன் வருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ள விழைகிறேன். இந்த மாபெரும் நிகழ்வு பற்றி உங்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு நீங்கள் சொல்வீர்களேயானால் அவர்களும் கூட இந்திய கலாச்சார பாரம்பரியம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

சகோதர, சகோதரிகளே,

உலகம் இன்று மிகப்பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகிறது. இவற்றை வெற்றி கொள்வதற்கு காந்திஜியின் கருத்தோட்டங்கள் இன்றும் பொருத்தமுள்ளதாக அமைகின்றன. அமைதியான எதிர்ப்பு, அகிம்சை ஆகிய பாதைகளை பின்பற்றுவதன் மூலம் எந்தவொரு சச்சரவுக்கும் தீர்வு காண முடியும். பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தகுதியான  தத்துவம் ஏதாவது ஒன்று உண்டெனில் அது காந்திஜியின் தத்துவம் தான். அது இந்திய மதிப்பீடுகளின் தத்துவமும் ஆகும்.

நண்பர்களே,

உங்களோடு கைகோர்த்துக் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும், புதிய இந்தியா என்ற கனவை நனவாக்கவும் நாங்கள் முன்னேற விரும்புகிறோம். இந்த மாநாட்டில் உங்கள் அனுபவத்திலிருந்து நாங்களும் பயனடைய விரும்புகிறோம். புதிய இந்தியாவின் வளர்ச்சி குறித்து நாங்கள் உங்களுக்குத் தகவல் தெரிவிக்க விரும்புகிறோம். உங்களுடன் எங்களை இணைத்துக் கொள்ளவும் விரும்புகிறோம். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் நீங்கள் வசித்தாலும் சரி, உங்களது வளர்ச்சிக்கான பயணத்தில் நாங்களும் பங்காளிகளாக இருக்க விரும்புகிறோம்.

 நண்பர்களே,

இன்றைய 21வது நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படுகிறது. அதில் இந்தியாவிற்கும்  நிச்சயமாக முக்கியமான பங்கிருக்கும். நீங்கள் எங்கு வசித்தாலும் சரி, இந்தப் பங்கின் தாக்கம் குறித்து உங்களால் உணர முடியும். இந்தியாவின் தகுதி உயர்ந்து கொண்டே போவதை உணர முடியும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் வலிமை ஆகியவற்றைக் கண்டபிறகு உங்கள் தலை நிமிர்ந்து நிற்பதைக் காணும்போது மேலும் அதிக வலுவோடு உழைக்கவும் எங்களுக்கு உற்சாகம் பிறக்கும்.

 சகோதர, சகோதரிகளே,

இந்தியா எப்போதுமே உலக அரங்கில் சாதகமானதொரு பாத்திரத்தை வகித்ததொரு  நாடாகும். லாப-நஷ்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நாட்டின் மீதும் நமது கொள்கைகளை நாம் எப்போதுமே மதிப்பிட்டதில்லை. மனித மதிப்பீடுகள் என்ற கோணத்தில் இருந்துதான் நாம் அவற்றைப் பார்த்து வந்திருக்கிறோம்.

வளர்ச்சிக்கான உதவியை வழங்குவதென்ற நமது முன்மாதிரி எப்போதுமே கொடுத்து வாங்குவது என்ற அடிப்படையில் அமைந்தது அல்ல. அத்தகைய உதவியைப் பெறும் நாடுகளின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றைப் பொறுத்ததாகவே அவை எப்போதும் அமைந்திருந்தன. வேறெவரின் ஆதார வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கமோ அல்லது வேறெந்த நாட்டின் பகுதியை விரும்புவதோ நம்மிடம் இருந்ததில்லை. எப்போதுமே நமது கவனம் என்பது நமது திறனை வளர்த்துக் கொள்வதிலும், வள ஆதாரங்களை வளர்த்தெடுப்பதிலுமே இருந்து வந்துள்ளது. எந்தவொரு மேடையிலுமே அது இரு தரப்பாக இருந்தாலும் சரி, பல நாடுகளை உள்ளடக்கிய மேடையாக இருந்தாலும் சரி, காமன்வெல்த் அமைப்பாக இருந்தாலும் சரி, இந்திய ஆப்பிரிக்க உச்சி மாநாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, அல்லது இந்திய பசிபிக் தீவுகளின் ஒத்துழைப்பிற்கான அமைப்பாக இருந்தாலும் சரி, நம்மோடு அனைவரையும் அழைத்துக் கொண்டு முன்னே செல்வதற்கே நாம் முயற்சிகளை செய்து வந்திருக்கிறோம்.

ஆசியன் அமைப்பிலுள்ள நாடுகளுடன் நமக்கு ஏற்கனவே வலுவான உறவுகள் இருந்தபோதிலும் கூட அவர்களுடன் நமது உறவுகளை மேலும் முன்னே கொண்டு செல்ல மேலும் வலுவான வடிவத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இன்னும் சில தினங்களில் குடியரசு தினத்தின் போது இந்திய- ஆசியன் அமைப்பு உறவுகள் எவ்வளவு வலுவானவை என்பதை உலகத்தினரால் காண முடியும்.

நண்பர்களே,

உலகம் முழுவதற்குமான மகிழ்ச்சி, அமைதி, வளம், ஜனநாயக மதிப்பீடுகள், உள்ளார்ந்த தன்மை, ஒத்துழைப்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராகவே இந்தியா எப்போதும் இருந்து வந்துள்ளது. இதே மதிப்பீடுகள் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் உங்களது வாக்காளர்களுடன் உங்களை இணைக்கின்றவையாக அமைந்துள்ளன. இதுதான் நமது முயற்சியும் நமது உறுதிப்பாடும் ஆகும். உலகத்தில் அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றில் இந்தியா தனது பங்களிப்பை தொடர்ந்து செலுத்தும்.

நண்பர்களே,

எங்களது அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டில் பங்கு கொள்வதற்காக உங்களின் தொடர்ச்சியான வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி இங்கு வந்து பங்கேற்றதற்காக எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் தீவிர பங்கேற்பின் விளைவாக இந்த மாநாடு வெற்றிகரமான ஒன்றாக இருக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த ஆண்டு பிரவாசி பாரதீய தினத்தன்று உங்களை சந்திக்க எனக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.

மிக்க நன்றி.

ஜெய் ஹிந்த்!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Will walk shoulder to shoulder': PM Modi pushes 'Make in India, Partner with India' at Russia-India forum

Media Coverage

'Will walk shoulder to shoulder': PM Modi pushes 'Make in India, Partner with India' at Russia-India forum
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in fire mishap in Arpora, Goa
December 07, 2025
Announces ex-gratia from PMNRF

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives in fire mishap in Arpora, Goa. Shri Modi also wished speedy recovery for those injured in the mishap.

The Prime Minister informed that he has spoken to Goa Chief Minister Dr. Pramod Sawant regarding the situation. He stated that the State Government is providing all possible assistance to those affected by the tragedy.

The Prime Minister posted on X;

“The fire mishap in Arpora, Goa is deeply saddening. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Goa CM Dr. Pramod Sawant Ji about the situation. The State Government is providing all possible assistance to those affected.

@DrPramodPSawant”

The Prime Minister also announced an ex-gratia from PMNRF of Rs. 2 lakh to the next of kin of each deceased and Rs. 50,000 for those injured.

The Prime Minister’s Office posted on X;

“An ex-gratia of Rs. 2 lakh from PMNRF will be given to the next of kin of each deceased in the mishap in Arpora, Goa. The injured would be given Rs. 50,000: PM @narendramodi”