திரு. மைக்கேல் புளூம்பெர்க், சிந்தனையாளர்கள், தொழில் துறை முன்னோடிகள், புளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதிப்புக்குரிய பங்கேற்பாளர்கள் ஆகியோரே,

புளூம்பெர்க் நல்லெண்ண செயல்பாடுகளுக்காக மைக்கேலுக்கும் அவரது அணியினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு நான் தொடங்குகிறேன். இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை வடிவமைப்பதில் இந்த அணியினர் மிகச் சிறந்த ஆதரவு அளித்தனர்.

நண்பர்களே,

நாம் வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். உலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கெனவே நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். அடுத்த இரண்டு தசாப்தங்களில், இந்தியா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய அளவில் நகரமயமாக்கல் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 பாதிப்பு உலக நாடுகளுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. நம் வளர்ச்சிக்கு முக்கியமான மையங்களாக இருக்கும் நகர்ப்புறங்கள் தான், நோய்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகும் பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை கோவிட்-19 காட்டியுள்ளது. பெரிய பின்னடைவு ஏற்பட்ட காரணத்தால் உலகம் முழுக்க பல நகரங்களில் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நகரில் வாழ்வதற்கு உகந்தவை என சொல்லப்பட்ட அதே காரணங்கள் இப்போது கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன. சமுதாயக் கூடல்கள், விளையாட்டுப் போட்டிகள், கல்வி மற்றும் மனமகிழ் மன்ற செயல்பாடுகள் முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை. இவற்றை எப்படி மீண்டும் தொடங்குவது என்பது தான் உலகின் முன்பு இப்போதுள்ள பெரிய கேள்வியாக உள்ளது. மறுபடி சீரமைக்காமல், மீண்டும் தொடங்கிவிட முடியாது. சீரமைப்பு என்பது மன மாற்றம். செயல்பாடுகள், செயல்பாடுகளில் மாற்றம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு நடந்த வரலாற்றுப்பூர்வமான மறுசீரமைப்பு முயற்சிகள் நமக்கு பல பாடங்களைக் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உலகப் போர்களுக்குப் பிறகு, புதிய நியதியுடன் ஒட்டுமொத்த உலகமே செயல்பட்டது. புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. உலகமே மாறிவிட்டது. ஒவ்வொரு துறையிலும் புதிய நடைமுறைகளை உருவாக்கும் அதேபோன்ற வாய்ப்பை கோவிட்-19 கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் வகையில் வளர்ச்சியை உருவாக்க விரும்பினால், இந்த வாய்ப்பை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகர்ப்புற மையங்களுக்கு புத்துயிரூட்டுவது தான் நல்ல தொடக்கத்துக்கான முயற்சியாக இருக்கும்.

நண்பர்களே,

இப்போது இந்திய நகரங்களில் உள்ள பாசிட்டிவ் விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். கடினமான நேரங்களில், அசாதாரணமான உதாரணங்களாக இந்திய நகரங்கள் இருந்துள்ளன. முடக்கநிலை நடவடிக்கைக்கு எதிராக உலகம் முழுக்க எதிர்ப்பு செயல்பாடுகள் இருந்தன. இருந்தாலும், நோய்த் தடுப்புக்கான இந்த நடவடிக்கைகளை இந்திய நகரங்கள் முறையாகக் கடைபிடித்தன. ஏனெனில், எங்களைப் பொருத்த வரையில், எங்கள் நகரங்கள் கான்கிரீட்டால் உருவானவை கிடையாது, அவை சமுதாயங்களால் உருவாகியுள்ளது. சமூகங்கள், தொழில்கள் என்ற வகையில், மக்கள் தான் எங்களின் மிகப் பெரிய சொத்து என்பதை இந்த பெருந்தொற்று பாதிப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த முக்கியமான அடிப்படை வளத்தை ஊக்கப்படுத்தி வளர்ப்பதன் மூலம் தான் உலகை கட்டமைக்க முடியும். நகரங்கள் தான் வளர்ச்சிக்கான துடிப்பான என்ஜின் போல இருப்பவை. அதிகம் தேவைப்படும் மாற்றத்தை உருவாக்கும் சக்தி நகரங்களில் தான் இருக்கிறது.

நகரங்களில் வேலை கிடைக்கிறது என்பதற்காகத் தான் மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். ஆனால், மக்களுக்கான நகரங்களை உருவாக்க வேண்டிய தருணம் இது. மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழல்களை நகரங்களில் ஏற்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்தும் வாய்ப்பை கோவிட்-19 கொடுத்திருக்கிறது.நல்ல வீட்டு வசதிகள், நல்ல பணிச் சூழல், குறுகிய நேரத்தில் சிறப்பான பயண வசதி ஆகியவை இதில் அடங்கும். முடக்கநிலை காலத்தில் பல நகரங்களில் ஏரிகள், ஆறுகள் சுத்தமாகிவிட்டன, காற்றும்கூட சுத்தமாகிவிட்டது. எனவே முன் எப்போதும் பார்த்திராத பறவைகள் கூட சுற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இவையெல்லாம் வழக்கமாக நடைபெறக் கூடிய வகையில் நகரங்களில் நம்மால் வசதிகளை உருவாக்க முடியாதா? கிராமங்களின் அடிப்படை அம்சங்களுடன், வசதிகள் நிறைந்த நகரங்களை உருவாக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் திட்டமாக உள்ளது.

நண்பர்களே,

பெருந்தொற்று நோய் காலத்தில், நமது வேலைகளைத் தொடர்வதற்கு தொழில்நுட்பமும் உதவியுள்ளது. காணொலி போன்ற வசதிகளால், என்னால் நிறைய கூட்டங்களில் பங்கேற்க முடிந்தது. இடைவெளிகளை தகர்த்து, உங்கள் அனைவருடனும் பேசுவதற்கு அது உதவியுள்ளது. ஆனால், கோவிட்டுக்குப் பிந்தைய காலம் குறித்த ஒரு கேள்வியையும் இது எழுப்புகிறது. கோவிட் காலத்தில் கற்றுக் கொண்ட காணொலி சந்திப்புகளையே நாம் தொடரப் போகிறோமா அல்லது மாநாடுகளில் பங்கேற்க நாம் கண்டங்கள் கடந்து பயணம் செய்யப் போகிறோமா என்பதே அந்தக் கேள்வியாக உள்ளது. நகர்ப்புறங்களில் நெருக்கடிகளைக் குறைப்பது, நாம் தேர்வு செய்யும் வாய்ப்புகளைப் பொருத்து அமையும்.

அந்தத் தேர்வுகள் தான் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை சமன்பாட்டை பராமரிக்க உதவும். எந்த இடத்தில் இருந்தும் வேலை பார்க்கும், எந்த இடத்திலும் வாழக்கூடிய, எங்கிருந்தும் உலக அளவிலான வழங்கல் தொடரில் இணையக் கூடிய வசதிகளை இன்றைய காலக்கட்டத்தில் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சேவைகள் துறைக்கு எளிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நாங்கள் அறிவித்திருக்கிறோம். இதனால் `வீட்டில் இருந்தே வேலை பார்த்தல்' மற்றும் `எங்கிருந்தும் வேலை பார்த்தல்' வசதிகள் கிடைக்கும்.

நண்பர்களே,

குறைந்த செலவிலான வீட்டுவசதி இல்லாமல் நமது நகரங்கள் வளம் பெற முடியாது. இதை உணர்ந்த காரணத்தால், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் தொடங்கினோம். திட்டமிட்ட பாதையில் நாங்கள் சென்று கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இலக்கு நிர்ணயித்துள்ள 2022 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு நாங்கள் வீடுகள் கட்டிக் கொடுத்துவிடுவோம். பெருந்தொற்று பாதிப்பு காலத்தில் ஏற்பட்ட சூழல்களைப் பார்த்ததால், குறைந்த செலவில் வாடகை வீடுகள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாடுகளை இது மாற்றியுள்ளது. அந்தத் துறையை வாடிக்கையாளர் நலன் சார்ந்ததாக, வெளிப்படையானதாக இது ஆக்கியுள்ளது.

நண்பர்களே,

தேவைகளை சமாளிக்கக் கூடிய நகரங்களை உருவாக்குவதற்கு, நீடித்த பயன் தரக் கூடிய போக்குவரத்து வசதி தேவைப்படுகிறது. 27 நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.  2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகளை உருவாக்கிவிடுவோம். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் மூலம், போக்குவரத்து வாகன வசதிகளை உருவாக்குவதில் உள்நாட்டு செயல் திறன் அதிகரித்துள்ளது. நீடித்த காலத்துக்கு செயல்படக் கூடிய போக்குவரத்து வசதிகளை உருவாக்கும் முயற்சியில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நண்பர்களே,

ஸ்மார்ட்டான, வளமான, தேவைகளை சமாளிக்கும் நகரை உருவாக்குவதில் தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நகரை சிறப்பாக பராமரிக்க, தொடர்புடைய சமுதாயங்களை உருவாக்க தொழில்நுட்பம் உதவுகிறது. கல்வி, சுகாதாரம், ஷாப்பிங், உணவுத் தேவைகள் போன்ற முக்கிய சேவைகளில் பெரும்பகுதி அளவுக்கு ஆன்லைனில் நடக்கும் எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இயல்பு உலகம் மற்றும் டிஜிட்டல் உலகை இணைக்கும் வகையில் நமது நகரங்களை தயார்படுத்த வேண்டும். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற எங்கள் திட்டங்கள்  இதை நோக்கியவையாக உள்ளன. இரண்டு கட்டங்களாக நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். கூட்டுறவு மற்றும் போட்டிநிலை கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய அளவிலான போட்டியாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த நகரங்களில் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் அல்லது 30 பில்லியன் டாலர் அளவுக்குத் திட்டப் பணிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் அல்லது 20 பில்லியன் டாலர் மதிப்புக்கு வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன அல்லது முடிக்கப்படும் நிலையில் உள்ளன. தொழில்நுட்பத்தின் முழு திறனையும் பயன்படுத்திக் கொள்வதற்கு, பல நகரங்களில் ஒருங்கிணைந்த கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நகரங்களில் கோவிட் சூழ்நிலையைக் கையாள்வதற்கான மையங்களாக இவை இப்போது செயல்பட்டு வருகின்றன.

கடைசியாக, உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். நகரமயமாக்கலில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு அற்புதமான வாய்ப்புகளை அளிப்பதாக இந்தியா இருக்கும். போக்குவரத்து வசதியை உருவாக்குவதில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு அற்புதமான வாய்ப்புகளை அளிப்பதாக இந்தியா இருக்கும். புதுமை சிந்தனை படைப்புகளில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு அற்புதமான வாய்ப்புகளை அளிப்பதாக இந்தியா இருக்கும். நீண்டகாலத்துக்கு பயன்தரக் கூடிய தீர்வுகளை அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு அற்புதமான வாய்ப்புகளை அளிப்பதாக இந்தியா இருக்கும். துடிப்பான ஜனநாயகத்துடன் இந்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. தொழில் செய்ய உகந்த சூழ்நிலை உள்ளது, பெரிய சந்தை உள்ளது. முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் செய்யும்.

நண்பர்களே,

நகர்ப்புற நிலைமாற்றத்தை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. தொடர்புடைய துறையினர், மக்கள் அமைப்புகள், கல்வி நிலையங்கள், தொழில் துறையினர் மற்றும் மிக முக்கியமாக குடிமக்கள் மற்றும் சமுதாயங்களின் ஒத்துழைப்புடன், தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வளமான நகரங்களை நாங்கள் உருவாக்குவோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Manufacturing to hit 25% of GDP as India builds toward $25 trillion industrial vision: BCG report

Media Coverage

Manufacturing to hit 25% of GDP as India builds toward $25 trillion industrial vision: BCG report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 12, 2025
December 12, 2025

Citizens Celebrate Achievements Under PM Modi's Helm: From Manufacturing Might to Green Innovations – India's Unstoppable Surge