பிப்ரவரி 08, 2019 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜல்பைகுரிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 31 டி-யில் உள்ள ஃபலகட்டா – சல்சலாபாரி பிரிவினை நான்கு வழிப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார். 41.7 கி.மீ நீளமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை, மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ளது. இந்த சாலையின் கட்டுமான செலவு சுமார் ரூ. 1938 கோடியாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சல்சலாபாரி மற்றும் அலிபுருத்வார் முதல் சிலிகுரி வரை ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்படும். ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தைவிட, இந்த புதிய போக்குவரத்து வசதி சிறந்ததாக அமையும். இந்தப் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேயிலை மற்றும் பிற வேளாண் பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல இந்த தேசிய நெடுஞ்சாலை வழிவகுக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த போக்குவரத்து வசதி இந்தப் பகுதியின் சுற்றுலாவையும் அதிகரிக்கும். இது அனைத்தும் ஒன்றாக இணைந்து மாநிலத்தின் சமூக – பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து அம்மாநில மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
சாலை போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 3 ரயில்வே மேம்பாலங்கள், 2 சாலை மேம்பாலங்கள், 3 சுரங்கப் பாதைகள், 8 பெரிய பாலங்கள் மற்றும் 17 சிறிய பாலங்கள் கட்டப்படவுள்ளன.
ஜல்பைகுரியின் புதிய உயர்நீதிமன்ற கிளையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். வங்காளத்தின் வடபகுதியில் உள்ள டார்ஜிலிங், கலிம்பாங், ஜல்பைகுரி மற்றும் கூச்பெஹார் மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வழி செய்யும் வகையில் ஜல்பைகுரியில் கொல்கத்தாவின் உயர்நீதிமன்ற கிளை திறக்கப்படுகிறது. இந்த 4 மாவட்டத்தின் மக்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக 600 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது இந்த புதிய கிளை திறப்பதன் மூலம் 100 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான பயணம் மேற்கொண்டால் போதும்.


