பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 17, 2025 அன்று மதியம் 12:30 மணியளவில் தில்லியின் ரோஹினி பகுதியில் கிட்டத்தட்ட ரூ.11,000 கோடி மதிப்பிலான இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
திட்டங்கள்: துவாரகா விரைவுச் சாலையின் தில்லிப் பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II: இணைப்பை பெரிய அளவில் மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த முயற்சி தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்கான அரசின் விரிவான திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை வசதியை மேம்படுத்தி, தடையற்ற இயக்கத்தை உறுதி செய்யும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
துவாரகா விரைவுச் சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள தில்லிப் பகுதி சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு யஷோபூமி, மெட்ரோ ரயிலின் நீல வழித்தடம் மற்றும் ஆரஞ்சு வழித்தடம், வரவிருக்கும் பிஜ்வாசன் ரயில் நிலையம் மற்றும் துவாரகா கிளஸ்டர் பஸ் டிப்போ ஆகியவற்றுக்கு பல் நோக்கு இணைப்பையும் வழங்கும்.
தொகுப்பு I: ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார் 21-ல் உள்ள சாலையின் கீழ் பாலம் வரை 5.9 கி.மீ.
தொகுப்பு II: துவாரகா செக்டார்-21 சாலையின் கீழ் பாலத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 4.2 கி.மீ., நகர்ப்புற விரிவாக்க சாலை-IIக்க நேரடி இணைப்பை வழங்குகிறது.
துவாரகா விரைவுச் சாலையின் 19 கி.மீ நீளமுள்ள ஹரியானா பகுதியை பிரதமர் முன்னதாக மார்ச் 2024 இல் திறந்து வைத்தார்.
அலிப்பூர் முதல் டிச்சான் கலான் பகுதி வரையிலான நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II பகுதியையும் பிரதமர் திறந்து வைப்பார், மேலும் பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளும் இதில் அடங்கும். சுமார் ரூ.5,580 கோடி செலவில் இது கட்டப்பட்டுள்ளது. இது தில்லியின் உள் மற்றும் வெளிப்புற சுற்றுவட்ட சாலைகள் மற்றும் முகர்பா சௌக், தௌலா குவான் மற்றும் என்எச்-09 போன்ற பரபரப்பான இடங்களில் போக்குவரத்தை எளிதாக்கும். புதிய சாலைகள் பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கு நேரடி அணுகலை வழங்கும், தொழில்துறை இணைப்பை மேம்படுத்தும், நகர போக்குவரத்தை குறைக்கும் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்தும்.


