மதிப்பிற்குரிய நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

நெதர்லாந்தின் வணிகத் தலைவர்களே,

வணக்கம்!

உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் இன்று இங்கு இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 300க்கும் மேற்பட்ட நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் மீது நீங்கள் வைத்துள்ள தொலைநோக்கு பார்வையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குள் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் நெதர்லாந்து திகழ்கிறது.

நண்பர்களே,

இந்தியாவில் இயங்கி வரும் உங்களது நிறுவனங்கள் வெறும் புகழ்பெற்ற வணிக முத்திரைகள் மட்டுமல்ல, அவை இந்திய-நெதர்லாந்து நட்புறவின் உண்மையான தூதர்களாகவும் விளங்குகின்றன. இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களோடு இணைந்து, 'என்.எக்ஸ்.பி' 'பிலிப்ஸ்' மற்றும் 'ப்ரோசஸ்' போன்ற நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த நவீனத் தீர்வுகளை உருவாக்கி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல், 'ஏ.பி.எம்' 'டாமன்' மற்றும் 'ராயல் வோபக்' போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையை முற்றிலும் நவீனப்படுத்தி வருகின்றன. இன்னும் பல நிறுவனங்கள் வேளாண்மை மற்றும் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு, இந்த உலகிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உழைத்து வருகின்றன.

சமீபத்தில் ஏ.எஸ்.எம்.எல் மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி ஏ.எஸ்.எம்.எல் நிறுவனத்தின் உபகரணங்களைக் கொண்டு இந்தியாவிலேயே குறைக்கடத்தி சில்லுகள் (செமிகண்டக்டர் சிப்ஸ்) தயாரிக்கப்பட உள்ளன. இன்று உங்களுடைய அனைத்து வார்த்தைகளிலும் இந்தியாவின் மீதான நேர்மறை எண்ணமும் நம்பிக்கையும் தெளிவாகத் தெரிகிறது. இந்த நம்பிக்கையைச் சிறந்த முடிவுகளாக மாற்றித் தருவது எங்களின் உத்தரவாதம்.

நண்பர்களே,

இன்றைய இந்தியா பிரமாண்டத்தின் மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாகத் திகழ்கிறது. பிரம்மாண்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணிப் பொருளாதார நாடாகவும், மிகப்பெரிய திறமையாளர்களின் மையமாகவும் விளங்குகிறோம். கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி அல்லது இணைப்புத் திறன் என எதை எடுத்துக்கொண்டாலும், இந்தியாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க உலகில் எங்கும் இணையில்லை. அதனால்தான், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இன்று இந்தியா பதினேழு சதவீதப் பங்களிப்பை அளிக்கிறது.

ஸ்திரத்தன்மையைப் பொறுத்தவரை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக நான் பொறுப்பேற்று இன்றுடன் பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த பன்னிரண்டு ஆண்டுகளில், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம் எங்களது பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளோம். தனியார் துறைக்குக் கொள்கை ரீதியான முன்கூட்டிய கணிப்புத் தன்மையை வழங்குவதும், அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவாக்குவதும் மட்டுமே எங்களின் தெளிவான திசையாக இருந்து வருகிறது.

விண்வெளி, சுரங்கம் அல்லது அணுசக்தி என நாம் ஒவ்வொரு துறையையும் தனியார் துறைக்காகத் திறந்துவிட்டுள்ளோம். நாங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் சுமையைத் தொடர்ச்சியாகக் குறைத்து, தொழில் செய்வதை எளிதாக்கும் நடைமுறைகளை மேம்படுத்தி வருகிறோம். சமீபத்தில், வரி விதிப்பு, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகத் துறையில் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதனால், இந்தியாவில் உற்பத்தி செய்வது இப்போது மிகவும் சிக்கனமானதாக மாறி வருகிறது.

முன்பெல்லாம் இந்தியாவிற்கு மிக முக்கியமான இறக்குமதிப் பொருளாக இருந்த மின்னணுப் பொருட்கள் இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக மாறியுள்ளது. இந்த உற்பத்தி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பல முக்கியமான துறைகளில் நாங்கள் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறோம். இதன் நன்மைகளைப் பயன்படுத்தி, நீங்கள் உலக நாடுகள் அனைத்திற்குமே தேவையான பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடியும்.

அதேபோல், சேவைத் துறையிலும் தனது திறமையாளர்களின் ஆற்றலால் இந்தியா செயல்திறன் மற்றும் புதுமையின் இயந்திரமாக மாறியுள்ளது. உலகளாவிய அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது உலகளாவிய திறன் மையங்களை இந்தியாவில் திறந்துள்ளன.

இந்தியாவில் வடிவமைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் உங்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம். இதற்கு இன்றைய நாளை விட ஒரு சிறந்த நேரம் இருக்க முடியாது.

நண்பர்களே,

2026-ம் ஆண்டிலிருந்து இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில், நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். உலகின் இரு மிகப்பெரிய ஜனநாயக மற்றும் பொறுப்புமிக்க சக்திகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இருதரப்பு கூட்டுச் செழிப்பிற்கான வலுவான அடித்தளமாக மாறும்.

இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முழுத் திறனையும் வெளிக்கொணர, பிரதமர் ஜெட்டன் அவர்களும் நானும் இன்று பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறோம். நம்பகமான இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை நாங்கள் ஒரு உத்திசார்ந்த கூட்டாண்மையாக உயர்த்தி வருகிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையில் லட்சியமிக்க ஒரு கூட்டு வழிகாட்டி வரைபடத்தைத் தொடங்குகிறோம். தொழில்நுட்பத் துறையில் நமது உறவுகளை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்தி வருகிறோம்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே திறமையாளர்களின் இடப்பெயர்வு, பல்கலைக்கழகக் கூட்டாண்மை மற்றும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். சுருக்கமாகச் சொன்னால், இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையின் எதிர்காலம் முன்னெப்போதையும் விட மிகவும் பிரகாசமாக உள்ளது.

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே வலுப்பட்டு வரும் உத்திசார்ந்த கூட்டாண்மை, நமது வணிக உறவுகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது. இந்தத் திசையில் மிக வேகமாக முன்னோக்கி நகர்வது இப்போது உங்களது கைகளில் தான் உள்ளது. இந்தியாவில் உங்களது செயல்பாட்டு எல்லை, முதலீடு மற்றும் லட்சியங்களை நீங்கள் விரிவுபடுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுடன் சேர்ந்து, ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் புதுமைக்கான சூழல் அமைப்பும் இந்தியாவிற்கு வரும்.

நண்பர்களே,

நெதர்லாந்தில் ஒரு பழமொழி உண்டு:

"கப்பல்கள் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருக்கும், ஆனால் கப்பல்கள் அங்கேயே நிற்பதற்காகக் கட்டப்படுவதில்லை."

இதை நெதர்லாந்து வணிக சமூகத்தை விட யாரால் மிகச்சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்? புதிய வாய்ப்புகளைத் தேடி உங்களது நாடு பல நூற்றாண்டுகளாக முன்னோக்கிச் சென்றுள்ளது. இந்தியாவில் உங்களது தேடல் வெற்றிகரமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இனி நீங்கள் இன்னும் தைரியமாக இந்தியாவில் கால் தடம் பதிக்க வேண்டும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026

Media Coverage

'We'll provide AI skill training to 1 crore youth': PM Modi's big announcement on Independence Day 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 15, 2026
August 15, 2026

Azadi Ka Amrit Mahotsav Continues: PM Modi’s Independence Day Vision Unites Growth, Youth Power & National Pride