2025-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகங்களிடம் பேசினார். இந்த கூட்டத்தொடர் வெறும் சடங்கு அல்ல, நாட்டின் விரைவான முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும் என்று பிரதமர் கூறினார். "இந்தக் கூட்டத்தொடர் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று திரு மோடி கூறினார்.
தேச நலன், ஆக்கப்பூர்வமான விவாதம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கூட்டத்தொடரை நடத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதமர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகள் தங்கள் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர், அர்த்தமுள்ள மற்றும் முக்கியமான பிரச்சனைகளை எழுப்புமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். தேர்தல் தோல்விகள் குறித்த விரக்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்க அனுமதிக்கக் கூடாது என்று கட்சிகளை எச்சரித்தார். தேர்தல் வெற்றிகளிலிருந்து எழும் ஆணவத்தை இந்த அமர்வு காட்டக்கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, "குளிர்கால கூட்டத்தொடர் சமநிலை, பொறுப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியத்தை பிரதிபலிக்க வேண்டும்" என்றார்.

முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் இளம் எம்.பி.க்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பலர் தங்கள் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது தேசிய வளர்ச்சி விவாதங்களில் பங்களிக்கவோ போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கருதுவதாகக் கூறினார். இந்த எம்.பி.க்களுக்கு அவர்கள் தகுதியான மேடை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கட்சிகளையும் அவர் வலியுறுத்தினார். "அவையும், தேசமும், புதிய தலைமுறையின் செறிவான கருத்து மற்றும் ஆற்றலிலிருந்து பயனடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை புதிய தலைவரின் வழிகாட்டுதலுடன் நடைபெறவிருக்கும், இந்த அமர்வின் சிறப்பு முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இதற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், புதிய தலைவரின் தலைமை நாடாளுமன்ற செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மைக்கால நாடாளுமன்ற போக்குகள் குறித்து கவலை தெரிவித்த திரு மோடி, தேர்தல்களுக்கான தயாரிப்புக் களமாகவோ அல்லது தேர்தல் தோல்விக்குப் பின் விரக்தியை வெளிப்படுத்தும் இடமாகவோ நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது என்றார். "நாடு இந்த முறைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் அணுகுமுறையையும் உத்தியையும் மாற்ற வேண்டிய நேரம் இது. சிறப்பாகச் செயல்படுவது எப்படி என்பது குறித்த உதவிக்குறிப்புகளை அவர்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கிறேன்" என்று திரு மோடி கூறினார்.

"நாம் அனைவரும் இந்தப் பொறுப்புகளை மனதில் கொண்டு முன்னேறுவோம் என்று நம்புகிறேன். நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்பதை நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்" என்று திரு மோடி தெரிவித்தார். முன்னேற்றத்தை நோக்கிய நாட்டின் உறுதியான பயணத்தை உறுதிப்படுத்திய அவர், "நாடு புதிய உயரங்களை நோக்கிச் செல்கிறது. மேலும் அந்தப் பயணத்தில் புதிய ஆற்றலையும் வலிமையையும் செலுத்துவதில் இந்த அவை முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
No matter which party it is, we should ensure that the new generation of MPs and first-time parliamentarians are given meaningful opportunities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 1, 2025
India has proven that democracy can deliver: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 1, 2025
This Winter Session will infuse new energy into our efforts to take the nation forward at an even faster pace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 1, 2025


