ஜூன் 21 ஆம் தேதி, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் 'சர்வதேச யோகா தினத்தில்' பங்கேற்றனர்: பிரதமர் மோடி
விசாகப்பட்டினம் கடற்கரையில் மூன்று லட்சம் பேர் ஒன்றாக யோகா செய்தனர், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் 108 நிமிடங்கள் 108 சூரிய நமஸ்காரங்களை செய்தனர்: பிரதமர் மோடி
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் 64% க்கும் அதிகமான மக்கள் இப்போது ஏதேனும் ஒரு சமூக பாதுகாப்பு சலுகையைப் பெறுகிறார்கள்: பிரதமர் மோடி
அவசரநிலையை விதித்தவர்கள் நமது அரசியலமைப்பைக் கொலை செய்தது மட்டுமல்லாமல், நீதித்துறையைத் தங்கள் அடிமையாக வைத்திருக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தனர்: பிரதமர் மோடி
அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய அனைவரையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்பை வலுவாகவும் நீடித்ததாகவும் வைத்திருக்க தொடர்ந்து விழிப்புடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது: பிரதமர் மோடி
போடோலாந்து இன்று நாட்டில் ஒரு புதிய முகத்துடன், ஒரு புதிய அடையாளத்துடன் தனித்து நிற்கிறது. போடோலாந்து இப்போது நாட்டின் விளையாட்டு வரைபடத்தில் அதன் பிரகாசத்தை அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி
மேகாலயா பெண்கள் இப்போது சுய உதவிக் குழுக்கள் மூலம் இந்த எரி சில்க் பாரம்பரியத்தை பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்: பிரதமர் மோடி

நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் சிறப்பாக, மேலும் விரிவானதாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அதிகமானோர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே யோகக்கலையைத் தங்களுடையதாக்கி வருகின்றார்கள் என்பதையே இது அடையாளப்படுத்துகிறது. இந்த முறை யோகக்கலை தொடர்பான சிந்தையைக் கவரும் பல காட்சிகளைக் காண முடிந்தது. விசாகப்பட்டினத்தின் கடற்கரையில் மூன்று இலட்சம் மக்கள் குழுமி ஒன்றாக யோகம் பயின்றார்கள். விசாகப்பட்டினத்தின் மேலும் ஒரு அற்புதமான காட்சியையும் காண முடிந்தது, 2,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், 108 நிமிடங்கள் வரை, 108 சூரியநமஸ்காரங்களைச் செய்து காட்டினார்கள். சிந்தித்துப் பாருங்கள், எந்த அளவுக்கு ஒழுங்குமுறை, எத்தனை அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும் அவர்களுக்கு!! நமது கடற்படையின் கப்பல்களிலும் கூட யோகக்கலையின் பெரிய வெளிப்பாட்டை நம்மால் பார்க்க முடிந்தது. தெலங்கானாவிலே 3,000 மாற்றுத் திறனாளி நண்பர்கள் ஒன்றாக இணைந்து யோகக்கலை முகாமில் பங்கெடுத்துக் கொண்டார்கள். யோகக்கலையானது எவ்வாறு அதிகாரப்பங்களிப்புக்கான ஊடகமாக ஆக முடியும் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். தில்லிவாசிகள் யோகக்கலையை தூய்மையான யமுனை என்ற உறுதிப்பாட்டோடு இணைத்து, யமுனை நதியின் கரைகளுக்குச் சென்று யோகப்பயிற்சியை மேற்கொள்வதன் வாயிலாகச் செய்து காட்டினார்கள். உலகிலேயே மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலத்திலும் கூட மக்கள் யோகப்பயிற்சியை மேற்கொண்டார்கள். இமயத்தின் பனிமூடிய சிகரங்களும், இண்டோ திபேத்திய எல்லையோர ரோந்துப்படையின் வீரர்களும் எனும் போது அங்கும் கூட யோகக்கலையை இவர்கள் பயின்றார்கள், சாகசமும், பயிற்சியும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்தன. குஜராத்வாசிகளும் கூட ஒரு புதிய வரலாற்றினைப் படைத்தார்கள். வட்நகரில் 2121 மக்கள் ஒன்றிணைந்து புஜங்காசனத்தைச் செய்து புதியதொரு பதிவினை ஏற்படுத்தினார்கள். நியூயார்க், லண்டன், டோக்கியோ, பாரீஸ் என உலகின் அனைத்துப் பெருநகரங்களிலிருந்தும் யோகப்பயிற்சி பற்றிய காட்சிகள் கிடைத்தன, ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்தன, நிலைத்ததன்மை மற்றும் சமச்சீர்நிலை. இந்த முறைக்கான கருப்பொருளும் கூட மிகவும் சிறப்பானது, ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகக்கலை. இது வெற்றுக் கோஷமல்ல, வசுதைவ குடும்பகம் அதாவது அனைவரும் ஓர்குலம் என்ற உணர்வினை நமக்குக் குறித்துக் காட்டும் ஒரு திசை இது. இந்த முறை யோகக்கலை தினத்தின் விசாலத்தன்மை, யோகக்கலையை தங்களுடையதாக்கிக் கொள்ள அதிகபட்ச மனிதர்களிடம் உள்ளெழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.

நண்பர்களே, நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் புனிதப்பயணம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. கைலாஷ் மானசரோவர் அதாவது, பகவான் சிவனின் புனிதத்தலம். இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் என அனைத்துப் பாரம்பரியங்களைச் சேர்ந்தோரும் கைலாசத்தை, சிரத்தை மற்றும் பக்திக்கான மையமாகக் கருதுகிறார்கள். நண்பர்களே, ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று அமர்நாத் புனித யாத்திரை தொடங்க இருக்கிறது, மழைக்காலப் புனிதமான மாதமும் வெகு தொலைவில் இல்லை. சில நாட்கள் முன்பாக நாம் பகவான் ஜகன்நாதரின் ரத யாத்திரையையும் கண்டு பரவசப்பட்டோம். ஓடிஷாவாகட்டும், குஜராத்தாகட்டும், அல்லது தேசத்தின் எந்தவொரு மூலையாகட்டும், இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார்கள். வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு என இந்த யாத்திரைகள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் பிரதிபலிப்புகள். நாம் சிரத்தை உணர்வோடு, முழு அர்ப்பணிப்போடு, ஒழுங்குமுறையைப் பின்பற்றி நமது புனித யாத்திரைகளை நிறைவு செய்யும்போது, அவற்றுக்கான பலன் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கின்றது. புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து பாக்கியசாலி பக்தர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரெல்லாம் சேவையுணர்வோடு இந்தப் பயணங்களை வெற்றிகரமாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குவதில் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கும் கூட நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியமான நாட்டுமக்களே, நான் இப்போது உங்களோடு தேசத்தின் இரண்டு சாதனைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இவை உங்களுக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்தும். இந்தச் சாதனைகளைப் பற்றி உலக அமைப்புகள் விரித்துப் பேசுகின்றன. உலக சுகாதார அமைப்பு- WHOவும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு- ILOவும், தேசத்தின் இந்தச் சாதனைகளைப் பற்றிக் கொட்டி முழக்கியிருக்கின்றன. முதலாவது சாதனை நமது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. உங்களில் பலர் கண்களோடு தொடர்புடைய நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், இதன் பெயர் ட்ராகோமா. இந்த நோய் பாக்டீரியாவால் பரவுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நோயானது தேசத்தின் பல பாகங்களில் பரவலாகக் காணப்பட்டது. உரியநேரத்தில் இதை கவனிக்கவில்லை என்றால், மெல்லமெல்ல கண்களின் ஒளி மறைந்து போய்விடும். இந்த ட்ராகோமாவை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் மேற்கொண்டோம். பாரதத்தை ட்ராகோமாவிலிருந்து விடுதலை அடைந்த நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வது எனக்கு பேருவகையை அளிக்கிறது. இப்போது பாரதம் ட்ராகோமாவிலிருந்து விடுபட்ட தேசமாக ஆகிவிட்டது. சற்றும் சளைக்காமல், ஓய்ந்து போகாமல், தொடர்ந்து இந்த நோயோடு போராடி வெற்றிபெற்ற அனைவருடைய, இலட்சக்கணக்கானவர்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது. இந்த வெற்றி நமது சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைத்த வெற்றி. தூய்மை பாரதம் இயக்கமும் கூட இதற்கு முடிவுகட்ட பெரிய அளவில் உதவி புரிந்தது. அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இயக்கமும் கூட இந்த வெற்றிக்குப் பெரும் பங்களிப்பை நல்கியது. இன்று வீடுகள்தோறும் குழாய்வழி தூய்மையான குடிநீர் கிடைத்துவரும் வேளையில், இப்படிப்பட்ட நோய்களால் அபாயம் குறைந்து வருகிறது. பாரதம் நோய்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் அவை ஏற்படும் அடிப்படைக் காரணிகளையும் ஒழித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பும் கூட இந்த விஷயத்தைப் பாராட்டியிருக்கிறது.

நண்பர்களே, இன்று பாரதத்தின் பெரும்பாலான மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயத்தால் பலனடைந்து வரும் வேளையில், சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முக்கியமானதொரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்றால், பாரதத்தின் 64 சதவீதத்திற்கும் அதிக மக்கள்தொகைக்கு ஏதோவொரு சமூகப் பாதுகாப்பு ஆதாயம் கிடைத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. சமூகப் பாதுகாப்பு – இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்புகளில் ஒன்று. இன்று தேசத்தின் சுமார் 95 கோடி மக்கள் ஏதோவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள், ஆனால் 2015 வரை, 25 கோடிக்கும் குறைவான பேர்களை மட்டுமே அரசுநலத்திட்டங்கள் சென்றடைய முடிந்தன.

நண்பர்களே, பாரதத்தில் ஆரோக்கியம் தொடங்கி, சமூகப் பாதுகாப்பு வரை அனைத்துத் துறைகளிலும் செறிவுநிலை என்ற உணர்வை நோக்கி முன்னேறி வருகிறது. இவை சமூகநீதியின் மிகச் சிறப்பான காட்சிகளாகும். இந்த வெற்றிகள் அளித்திருக்கும் நம்பிக்கை, இனிவரும் காலம் மேலும் சிறப்பாக ஆகும், அனைத்து அடியெடுப்பிலும் பாரதம் மேலும் சக்தியுடையதாய் ஆகும் என்பதுதான்.

எனதருமை நாட்டுமக்களே, மக்கள் பங்களிப்பின் சக்தியின் துணையோடு, பெரியபெரிய சங்கடங்களை எதிர்கொள்ள முடியும். நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்கச் செய்கிறேன், இந்த ஒலிக்குறிப்பு சங்கடத்தின் பயங்கரத்தன்மையை உணரச் செய்யும். அந்தச் சங்கடம் எத்தனை பெரியது என்பதை அறிய, உணர முதலில் கேளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்.

ஒலிக்குறிப்பு..... மொரார்ஜி பாய் தேசாய்

[இந்தக் கொடுமை ஈராண்டுகள் வரை நடந்தது என்றாலும், 5-7 ஆண்டுகளாகவே இந்தக் கொடுமை தொடங்கி விட்டது. ஆனால் ஈராண்டுகளில் அது உச்சகட்டத்தை எட்டியது; அப்போது அவசரநிலை மக்களின் மீது திணிக்கப்பட்டது, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. மக்களின் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டது, செய்தித்தாள்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இருக்கவில்லை. நீதிமன்றங்கள் முழுமையாக சக்தியற்றவையாக ஆக்கப்பட்டன. மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள், இஷ்டப்படியான காட்டாட்சி நடத்தப்பட்டது. இதற்கு இணையான ஒரு எடுத்துக்காட்டு உலக வரலாற்றில் காட்டுவது கடினமான ஒன்று.]

இந்தக் குரல், தேசத்தின் முன்னாள் பிரதம மந்திரியான மொரார்ஜி பாய் தேசாய் அவர்களுடையது. அவர் ரத்தினச்சுருக்கமாக, ஆனால் மிகவும் தெளிவான வகையிலே அவசரநிலைக்காலம் பற்றித் தெரிவித்திருக்கிறார். அந்தக் காலகட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை, நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அவசரநிலைச் சட்டத்தை அமல் செய்தவர்கள், நமது அரசியலமைப்புச் சட்டத்தை மட்டும் படுகொலை செய்யவில்லை, மாறாக அவர்களின் நோக்கம் நீதிமன்றங்களையும் தங்களின் அடிமைகளாக, ஏவல்துறையாக ஆக்குவதுதான். அந்த வேளையிலே, பொதுமக்கள் பெரிய அளவிலே கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன, இவற்றை எப்போதுமே மறக்க முடியாது. ஜார்ஜ் ஃபர்னாண்டெஸ் ஐயா இரும்புத் தளைகளில் பூட்டப்பட்டார். பலர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். மிசா கொடுஞ்சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். மாணவர்களும் துன்பங்களுக்கு ஆளானார்கள். கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெறித்துப் போடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொடுமைகள் புரியப்பட்டன. ஆனால் பாரதநாட்டு மக்களின் வல்லமையால், அவர்கள் பணியவில்லை, உடையவில்லை, மக்களாட்சிக்கு எதிரான எந்த அடக்குமுறையோடும் சமரசம் செய்து கொள்ளவில்லை. முடிவிலே இறைவர்களாகிய மக்களே வெற்றி பெற்றார்கள், அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது, அவசரநிலையைத் திணித்தவர்கள் தோற்றுப் போனார்கள். பாபு ஜகஜீவன் ராம் அவர்கள் இதைப் பற்றி மிகவும் சக்திவாய்ந்த முறையிலே தனது கருத்துக்களை முன்வைத்தார்.

பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் ஒலிக்குறிப்பு

[சகோதர சகோதரிகளே, கடந்த தேர்தல், வெறும் தேர்தல் அல்ல. பாரதத்தின் மக்களுடைய ஒரு மகத்தான இயக்கம். அந்த வேளையின் சூழ்நிலைகளை மாற்றக்கூடிய யதேச்சாதிகாரப் போக்கில் திருப்பமேற்படுத்தும், பாரதத்தின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் பேரியக்கம்]

அடல் அவர்களும் கூட அப்போது தனக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தக் கருத்துக்களை கண்டிப்பாக நாம் கேட்க வேண்டும் –

அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் ஒலிக்குறிப்பு –

[சகோதர சகோதரிகளே, தேசத்தில் நடந்தது, வெறும் தேர்தல் என்று நாம் கூறி விட முடியாது. நடந்தது ஒரு அமைதியான புரட்சி. மக்கள்சக்தியின் அலையானது, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியவர்களை, குப்பைக்கூடையில் வீசி எறிந்து விட்டது]

 

நண்பர்களே, தேசத்தின் மீது அவசரநிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம் சில நாட்கள் முன்பு தான் கடந்தது. அந்த நாளை நாம் அரசியலமைப்புப் படுகொலை நாளாகக் கடைப்பிடித்தோம். அவசரநிலைக் காலகட்டத்தின் போது உறுதிப்பாட்டோடு அதை எதிர்கொண்டவர்களை நாமனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நமது அரசியலமைப்புச் சட்டத்தை சக்தியுடையதாக வைத்திருக்கவும், தொடர்ந்து விழிப்புணர்வோடு இருக்கவும், கருத்தூக்கம் கிடைக்கிறது.

மனம்நிறை நாட்டுமக்களே, நீங்கள் ஒரு காட்சியைக் கற்பனையில் கொண்டு வாருங்கள். காலையின் சூரியக்கதிர்கள் மலைகளை முத்தமிடுகின்றன, மெல்லமெல்ல வெளிச்சம் திறந்தவெளிகளை நோக்கி முன்னேறுகிறது, அந்த ஒளியோடு கூடவே முன்னேறுகிறது கால்பந்தாட்ட நேசர்களின் கூட்டம். சீட்டியொலிகள் கீச்சிடுகின்றன, சில கணங்களிலே மைதானமெங்கும் கரவொலிகளும், கோஷங்களும் எதிரொலிக்கின்றன. ஒவ்வொரு பாஸ், ஒவ்வொரு கோல் போடப்படுவது கூடவே மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. இது எந்த அழகான உலகம் என்று நீங்கள் யோசிப்பீர்கள் தானே?! நண்பர்களே, அசாமின் ஒரு முக்கியமான பகுதியான போடோலேண்டின் இயல்பான காட்சி இது. போடோலேண்ட் இன்று தனது புதிய வடிவோடு தேசத்தின் முன்பாக நடைபோடுகிறது. இங்கே இருக்கும் இளைஞர்களின் சக்தி, தன்னம்பிக்கை எல்லாம் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கிறது. போடோ பிரதேசத்தில், போடோலேண்ட் CEM கோப்பைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இது வாடிக்கையான ஒரு போட்டி இல்லை, இது ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான உற்சவமாக ஆகிவிட்டது. 3,700க்கும் மேற்பட்ட அணிகள், கிட்டத்தட்ட 70,000த்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், இவர்களின் பெரும் எண்ணிக்கையிலே நமது சகோதரிகளின் பங்கெடுப்பு. இந்தப் புள்ளிவிவரம் எல்லாம் போடோலேண்டின் பெரிய மாற்றக்காதையினை நம் காதுகளில் ஒலிக்கச் செய்கிறது. போடோலேண்ட் இப்போது தேசத்தின் விளையாட்டு வரைபடத்தில் தனது பளிச்சிடுதலை மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

 

நண்பர்களே, ஒரு காலத்தில் போராட்டங்களே இந்தப் பகுதியின் அடையாளமாக இருந்தது. அப்போது இங்கிருந்த இளைஞர்களுக்கான பாதை குறுகியிருந்தது. ஆனால் இன்றோ, அவர்களின் கண்களிலே ஒரு புதிய கனவு, இதயங்களில் தன்னம்பிக்கை ஒளிவிடுகிறது. இங்கிருந்து வெளிவரும் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் இப்போது பெரிய நிலையில் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஹாலிசரண் நார்ஜாரி, துர்கா போரோ, அபூர்ணா நார்ஜாரி, மன்பீர் பசுமதாரி என்ற பெயர்கள் எல்லாம் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அல்ல - போடோலேண்டை மைதானத்திலிருந்து தேசிய மேடைக்கு இட்டுச் சென்ற புதிய தலைமுறையினரின் அடையாளங்கள். இவர்களில் பலர், குறைவான ஆதாரங்களின் துணையோடு பயிற்சிகளை மேற்கொண்டார்கள், பல கடினமான சூழ்நிலைகளில் தங்கள் பாதையை வகுத்தார்கள், இன்று இவர்களின் பெயர்கள், தேசத்தின் எத்தனையோ இளம் சிறார்களின் கனவுகளின் தொடக்கமாக விளங்குகின்றன.

நண்பர்களே, நாம் நமது வல்லமையை விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், முதன்மையாக நாம் நமது உடலுறுதி, நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியாக வேண்டும். அதே போல நண்பர்களே, உடலுறுதி எனும் போது, உடல் பருமனைக் குறைக்க என்னுடைய ஆலோசனை உங்களுக்கு நினைவிருக்கிறது இல்லையா!! உணவில் 10 சதவீதம் எண்ணையைக் குறையுங்கள், உடல் பருமனை விரட்டுங்கள். நீங்கள் உடலுறுதியோடு இருந்தால், வாழ்க்கையில் நீங்கள் அதிக வெற்றியை அடைவீர்கள்.

என் அன்புநிறை நாட்டுமக்களே, நமது பாரதம் தனது பிராந்திய, மொழிசார், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்காக அறியப்படுவதைப் போலவே, கலை, சிற்பம் மற்றும் திறன்களின் பன்முகத்தன்மையும் கூட நமது தேசத்தின் அழகுகளாகும். நீங்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கே ஏதோ ஒரு சிறப்பான, உள்ளூர் பொருளைப் பற்றிய தகவல் உங்களுக்குக் கிடைக்கும். நாம் அடிக்கடி மனதின் குரலில் தேசத்தின் இப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருள்களைப் பற்றிப் பேசி வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு பொருள் தான் மேகாலயாவின் ஏரி சில்க் – ஏரிப் பட்டு.             சில நாட்கள் முன்பு தான் இதற்கு ஜி.ஐ. டேக் – புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இந்த ஏரிப் பட்டு மேகாலயாவின் ஒரு மரபுச் சின்னத்தைப் போன்றது. இங்கே இருக்கும் பழங்குடியினத்தவர்கள் குறிப்பாக காசி சமூகத்தவர்கள், பல தலைமுறைகளாகவே இதை போற்றி வந்திருக்கிறார்கள், தங்களுடைய திறனால் இதை மேலும் வளப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்தப் பட்டின் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன, இவை தாம் மற்ற துணிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இதை உருவாக்கும் வழிமுறை. இந்தப் பட்டை அடைய உதவும் பட்டுப் புழுக்கள் கொல்லப்படுவதில்லை, ஆகையால் இதை அகிம்சைப் பட்டு என்றும் கூறலாம். இப்போதெல்லாம் உலகில் இப்படிப்பட்ட பொருட்களுக்கான தேவை விரைவாக அதிகரித்து வருகிறது, இவற்றிலே வன்முறையோ, இயற்கை மீது எந்த விதமான பாதிப்போ இருக்கக் கூடாது என்பவை அடங்கும். ஆகையால் மேகாலயாவின் ஏரிப் பட்டு, உலகச் சந்தைக்கு ஒரு செம்மையான பொருள். இதன் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்தப் பட்டு பனிக்காலத்தில் வெம்மையையும், கோடையில் குளிர்ச்சியையும் தரவல்லது. இதன் இந்தச் சிறப்பம்சம் இதனை அதிக இடங்களுக்கும் அனுகூலமானதாக ஆக்குகிறது. மேகாலயத்தின் பெண்கள் இப்போது சுயவுதவிக் குழுக்கள் வாயிலாகத் தங்களுடைய இந்த மரபுச் சின்னத்தை மேலும் பெரிய அளவிலே முன்னெடுத்து வருகிறார்கள். ஏரிப் பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தமைக்கு நான் மேகாலயத்தின் மக்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் ஏரிப் பட்டிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பாருங்கள், காதியாகட்டும், ஆங் அப்புறம்....... கைத்தறி-கைவினைப்பொருளாகட்டும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என இவற்றையும் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் பாரதத்தில் உருவாகும் பொருட்களை வாங்குங்கள், வியாபாரிகளும் பாரதத்தில் தயாராகும் பொருட்களையே விற்பனை செய்யுங்கள், அப்போது தான் தற்சார்பு பாரதம் இயக்கத்திற்கு புதிய சக்தி கிடைக்கும்.

நாட்டுமக்களே, பெண்கள் வழிநடத்தும் முன்னேற்றம் என்ற மந்திரம் பாரதத்தின் புதிய எதிர்காலத்தைக் கட்டியமைக்கத் தயாராக இருக்கிறது. நமது தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள், இன்று தங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் புதிய திசையைக் காட்டி வருகிறார்கள். தெலங்கானாவின் பத்ராசலத்தைச் சேர்ந்த பெண்களின் வெற்றியைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள் என்றால், உங்கள் மனதும் சந்தோஷப்படும். இந்தப் பெண்கள் முன்னர் வயல்வெளிகளில் கூலிவேலை செய்து வந்தார்கள். அன்றாடத் தேவைகளுக்காக நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தது. இன்று இதே பெண்கள், சிறுதானியங்களைக் கொண்டு பிஸ்கட்டுகளைத் தயாரித்து வருகின்றார்கள். பத்ராதி மில்லட் மேஜிக் என்ற பெயர் கொண்ட இந்த பிஸ்கட், ஹைதராபாத் தொடங்கி லண்டன் வரை சென்றுவிட்டது. பத்ராசலத்தின் இந்தப் பெண்கள், சுயவுதவிக் குழுவில் இணைந்து பயிற்சி பெற்றார்கள்.

 

நண்பர்களே, மேலும் ஒரு பாராட்டுக்குரிய செயலை இந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள். இவர்கள் கிரி சேனிட்டரி பேட்ஸைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் மூன்று மாதங்களில் 40,000 பேடுகளைத் தயாரித்து, இவற்றைப் பள்ளிகள் மற்றும் அருகில் இருக்கும் அலுவலகங்களில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள், அதுவும் மிகவும் மலிவுவிலையில்.

நண்பர்களே, கர்நாடகத்தின் கலபுர்கியைச் சேர்ந்த பெண்களின் சாதனையும் மிகச் சிறப்பானது. இவர்கள் சோள ரொட்டியை ஒரு ப்ராண்டாகவே மாற்றி விட்டார்கள். ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு நாளும் 3,000த்திற்கும் அதிகமான ரொட்டிகளை தயாரித்து வருகிறார்கள். இந்த ரொட்டிகளின் மணம் இப்போது கிராமத்தோடு மட்டும் தேங்கிவிடவில்லை. பெங்களூரூவில் ஒரு சிறப்பு முகப்பு ஏற்படுத்தப்பட்டு, இணையவழி உணவுத் தளங்களில் உணவு ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. கலபுர்கியின் ரொட்டி இப்போது பெருநகரங்களின் சமையலறைகள் வரை சென்றடைந்து வருகின்றது. இதன் மிக அருமையான தாக்கம் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டு இவர்களின் வருவாயும் அதிகரித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களின் இந்தச் சம்பவங்களில் பல்வேறு முகங்கள் இடம் பிடித்தாலும், அவர்களின் மினுமினுப்பு ஒன்று போலவே இருக்கிறது. இது தன்னம்பிக்கையின் மினுமினுப்பு, தற்சார்பின் தகதகப்பு. இப்படிப்பட்ட ஒரு முகம்தான் மத்திய பிரதேசத்தின் சுமா உயிகே, சுமா அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இவர் பாலாகாட் மாவட்டத்தின் கடங்கி தொகுதியில், சுயவுதவிக் குழுவோடு இணைந்து காளாண் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கான பயிற்சியைப் பெற்றார். இதன் வாயிலாக தற்சார்புப் பாதையை இவர் வகுத்துக் கொண்டார். சுமா உயிகே அவர்களின் வருவாய் அதிகரித்த பிறகு இவர் தனது பணியை விரிவு செய்தார். சின்ன முயற்சியிலிருந்து தொடங்கிய இவருடைய பயணம் இப்போது தீதீ கேண்டீன் மற்றும் வெப்ப சிகிச்சை மையம் வரை விரிவடைந்துவிட்டது. தேசத்தின் பல இடங்களிலிருந்தும் இப்படிப்பட்ட எண்ணற்ற பெண்கள் தங்களுடைய எதிர்காலத்தையும், தங்கள் தேசத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்துக் கொண்டு வருகிறார்கள்.

 

என் மனம் நிறை நாட்டுமக்களே, கடந்த நாட்களில், வியட்நாம் தேசத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு வகைகளில் தங்களுடைய செய்தியை அனுப்பியிருந்தார்கள். இந்தச் செய்திகளின் ஒவ்வொரு பத்தியிலும் சிரத்தை இருந்தது, மெய்யின் உணர்வு பிரதிபலித்தது. அவர்களின் உணர்வுகள் மனதைத் தொடும் வகையில் இருந்தன. அவர்கள் பகவான் புத்தரின் பவித்திரமான சின்னங்களை தரிசிக்க முடிந்தமைக்கு, பாரதத்திற்குத் தங்களுடைய நன்றிகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் சொற்களில் இருந்த உணர்வுகள், வாடிக்கையான நன்றிகளைத் தெரிவிப்பதைத் தாண்டியவையாக இருந்தன.

நண்பர்களே, அடிப்படையில் பகவான் புத்தரின் இந்தப் பவித்திரமான சின்னங்கள், ஆந்திர பிரதேசத்தின் பால்நாடு மாவட்டத்தின் நாகார்ஜுனகொண்டாவில் கிடைத்தன. இந்த இடத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடத்திற்கு இலங்கை மற்றும் சீனா உட்பட பல தொலைவான பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருக்கிறார்கள்.

நண்பர்களே, கடந்த மாதம் பகவான் புத்தரின் இந்தப் புனிதமான அடையாளங்கள் பாரதத்திலிருந்து வியட்நாமிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கே ஒன்பது பல்வேறு இடங்களில் இவை தரிசனத்திற்காக மக்களுக்குக் காட்டப்பட்டன. பாரதத்தின் இந்த முன்னெடுப்பு, ஒரு வகையில் வியட்நாமின் தேசியப் பெருவிழாவாக மாறியது. அன்பர்களே, கற்பனை செய்து பாருங்கள்!! சுமார் பத்து கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் ஒண்ணரை கோடிக்கும் அதிகமானோர், பகவான் புத்தரின் புனிதமான நினைவுச்சின்னங்களைக் கண்டார்கள். சமூக ஊடகத்தில் நான் கண்ட படங்களும், காணொளிகளும், சிரத்தைக்கு எந்த எல்லையும் இல்லை என்பதை எடுத்துக்காட்டியது. குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் உணர்ச்சிவயப்பட்டுப் போனார்கள். வியட்நாமின் குடியரசுத் தலைவர், துணைப் பிரதமர், மூத்த அமைச்சர்கள் என அனைவரும் தலைவணங்கினார்கள். இந்த யாத்திரை தொடர்பாக அங்கிருப்போரிடம் இருந்த மரியாதை உணர்வு எந்த அளவுக்கு ஆழமானதாக இருந்தது என்றால், வியட்நாம் அரசாங்கம் இந்த தரிசனத்தை மேலும் 12 நாட்கள் நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தார்கள், பாரதமும் மிகவும் உவகையோடு இதை ஏற்றுக் கொண்டது.

பகவான் புத்தரின் கருத்துக்களில் இருந்த சக்தி, தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மக்களை ஓரிழையில் இணைத்தது. முன்னதாக பகவான் புத்தரின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தாய்லாந்து, மங்கோலியா ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கேயும் கூட இதே சிரத்தை நிறைந்த உணர்வு வெளிப்பட்டது. உங்களுடைய மாநிலத்தில் இருக்கும் பௌத்த புனிதத் தலங்களுக்கு அவசியம் யாத்திரை மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு ஆன்மீக அனுபவமாக இருக்கும், கூடவே நமது கலாச்சார பாரம்பரியத்தோடு நாம் இணையும் ஒரு அழகான சந்தர்ப்பமாகவும் ஆகும்.

 

நாட்டுமக்களே, இந்த மாதம் நாமனைவரும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடினோம். உங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான செய்திகள் எனக்குக் கிடைக்கப்பெற்றன. தன்னந்தனியாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடுபட்ட நண்பர்களைப் பற்றியும், சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பின்னர் எப்படி தங்களையும் அவர்களுடைய முயற்சிகளோடு இணைத்துக் கொண்டார்கள் என்பதைப் பற்றியும் என, தங்களுக்கு அருகேயுள்ள நபர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அனைவரின் இந்தப் பங்களிப்பு, நமது மண்ணிற்கு பெரிய பலத்தை அளிக்கிறது. புணேயின் ரமேஷ் கர்மாலே அவர்களின் செயல்களைப் பற்றி அறிந்தால் உங்களுக்கும் உத்வேகம் பிறக்கும். வாரக்கடைசியில் மக்கள் ஓய்வெடுக்கும் போது, ரமேஷ் அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் மண்வெட்டி-கடப்பாறைகளை எடுத்துக் கொண்டு பயணிப்பார்கள். எங்கே தெரியுமா? ஜுன்னரின் மலைகளை நோக்கி. வெயிலாகட்டும் அல்லது மலையேற்றமாகட்டும், அவர்களுடைய பயணம் தடைப்பட்டதில்லை. அவர்கள் புதர்களை அகற்றுவார்கள், நீரைச் சேமிக்கக் குழிகளை வெட்டுவார்கள், விதைகளை நடுவார்கள். வெறும் இரண்டு மாதங்களிலே மட்டும் 70 குழிகளை ஏற்படுத்தினார்கள். ரமேஷ் அவர்கள், பல சிறிய குளங்களையும் உருவாக்கியிருக்கிறார், பல ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். அவர் ஒரு பிராணவாயு பூங்காவையும் உருவாக்கி வருகிறார். இதன் விளைவாக, இங்கே பறவைகள் திரும்ப வர ஆரம்பித்திருக்கின்றன, வன உயிரினங்கள் புதிய சுவாசத்தை சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சுற்றுச்சூழல் தொடர்பாக மேலும் ஒரு அழகான முன்னெடுப்பு என்றால், குஜராத்தின் அஹமதாபாத் நகரத்தில் காணமுடியும். இங்கே நகராட்சியின் ‘Mission for Million Trees’ மில்லியன் மரங்களுக்கான இயக்கம் தொடங்கப்பட்டது. இலக்கு, இலட்சம் மரங்களை நடுதல்தாம். இந்த இயக்கத்தின் ஒரு சிறப்பம்சம் சிந்தூர் வனம். இந்த வனச் செயல்பாடு, ஆப்பரேசன் சிந்தூர் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சிந்தூரின் மரங்கள், தேசத்திற்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அந்த இராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கே மேலும் ஒரு இயக்கத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது, அது தான் அன்னையின் பெயரில் ஒரு மரம். இதன்படி தேசம் நெடுக, கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டு விட்டன. நீங்களும் உங்கள் கிராமத்திலோ, நகரத்திலோ நடைபெற்றுவரும் இப்படிப்பட்ட இயக்கத்தில் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மரம் நடுங்கள், நீரைச் சேமியுங்கள், பூமியின் சேவையில் ஈடுபடுங்கள், ஏனென்றால் நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, உண்மையில் நாம் நமது வருங்காலத் தலைமுறையினரையே பாதுகாக்கிறோம்.

மகாராஷ்டிரத்தின் ஒரு கிராமத்தில் மிக அருமையான எடுத்துக்காட்டு காணக் கிடைக்கிறது. சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் ஒரு கிராமப் பஞ்சாயத்து தான் பாடோதா. இது கார்பன் ந்யூட்ரல், அதாவது கரிக்காற்று உமிழ்வற்ற கிராமப்பஞ்சாயத்தாகும். இந்தக் கிராமத்தில் யாரும் தங்களுடைய வீட்டிற்கு வெளியே குப்பையைக் கொட்ட மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் குப்பைகளையும் ஒன்றுதிரட்டும் முழுமையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத எந்தவொரு நீரும் நதியில் கலக்க அனுமதிக்கப்படுவதில்லை. வரட்டிகளைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, அந்தச் சாம்பலைக் கொண்டு காலஞ்சென்றவரின் பெயரில் ஒரு மரம் நடப்படுகிறது. இந்தக் கிராமத்தில் தூய்மைப்பணி பார்த்துப் பார்த்துச் செய்யப்படுகிறது. சின்னச்சின்ன பழக்கங்கள் சமூக உறுதிப்பாடுகளாக மாறும்போது, பெரிய மாற்றங்கள் சாத்தியப்படுகின்றன.

 

எனதருமை நாட்டுமக்களே, இப்போது அனைவரின் பார்வையும் சர்வதேச விண்வெளி மையத்தின் மீது நிலைபெற்றிருக்கிறது. பாரதம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது. நேற்று க்ரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா அவர்களோடு நான் உரையாடினேன். நீங்களும் சுபான்ஷுவுடனான என்னுடைய உரையாடலைக் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள். இப்போது சுபான்ஷு, மேலும் சில நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்பார். நாம் இந்தப் பயணத்தைப் பற்றி மேலும் உரையாடலாம் ஆனால், மனதின் குரலின் அடுத்த பகுதியில் தான்.

இப்போது இந்தப் பகுதியில் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஆனால் நண்பர்களே, போகும் போக்கில் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளைப் பற்றி நினைவூட்ட விரும்புகிறேன். ஜூலை மாதம் முதல் தேதி அதாவது நாளை மறுநாள், நாம் இரண்டு மகத்துவம் வாய்ந்த தொழில்களுக்கு கௌரவத்தை அளிக்கிறோம், மருத்துவர்களுக்கும், பட்டயக் கணக்காயர்களுக்கும். இந்த இருவரும் சமூகத்தின் பெரிய தூண்கள், நமது வாழ்க்கையைச் சிறப்பாக்க உதவுபவர்கள். மருத்துவர்கள் நமது உடல் ஆரோக்கியத்தின் பாதுகாவலர்கள் என்றால், பட்டயக் கணக்காயர்கள் நமது பொருளாதார வாழ்க்கையின் பாதைகாட்டிகள். மருத்துவர்கள்-பட்டயக் கணக்காயர்கள் அனைவருக்கும் எனது ஏராளமான நல்வாழ்த்துகள்.

 

நண்பர்களே, நான் எப்போதும் உங்களுடைய ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன். மனதின் குரலின் அடுத்த பகுதி உங்கள் அனைவரின் இந்த ஆலோசனைகளால் செறிவானதாகும். புதிய விஷயங்களோடு, புதிய உத்வேகங்களோடு, நாட்டுமக்களின் புதிய சாதனைகளோடு மீண்டும் சந்திப்போம். பலப்பல நன்றிகள், வணக்கம்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-New Zealand elevate ties to strategic partnership; Scripts 2030 roadmap, $20bn investment & Indo-Pacific security

Media Coverage

India-New Zealand elevate ties to strategic partnership; Scripts 2030 roadmap, $20bn investment & Indo-Pacific security
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the passing of Father Amir of State of Qatar HH Sheikh Hamad bin Khalifa Al Thani
July 12, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has expressed deep grief over the passing of the Father Amir of the State of Qatar, HH Sheikh Hamad bin Khalifa Al Thani.

The Prime Minister described him as a visionary leader who led Qatar to great levels of development and prosperity. Shri Modi also remembered him as a true friend whom he had the honour of meeting during his visit to Qatar in February 2024.

The Prime Minister conveyed his sincere condolences to the Amir of Qatar, HH Sheikh Tamim bin Hamad Al Thani, the entire royal family and the people of Qatar.

The Prime Minister wrote on X;

“We deeply mourn the passing of Father Amir of State of Qatar, HH Sheikh Hamad bin Khalifa Al Thani. A visionary leader who led Qatar to great levels of development and prosperity, we remember him also as a true friend whom I had the honour of meeting during my last visit to Qatar in February 2024. I convey my sincere condolences to the Amir of Qatar, HH Sheikh Tamim bin Hamad Al Thani and the entire royal family and people of Qatar. May the departed soul rest in eternal peace.

@TamimBinHamad”