முதல் கட்டமாக 3 கோடி சுகாதார அலுவலர்கள், முன்கள போராளிகளுக்கு தடுப்பூசி போடும் செலவு எதையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை: பிரதமர்
தடுப்பூசி செயல்பாடுகளுக்கும், தடுப்பூசி போட்டதற்கான டிஜிட்டல் சான்று அளிக்கவும் கோ-வின் டிஜிட்டல் தளம் உதவியாக இருக்கும்
அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது: பிரதமர்
பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன; தொடர் கண்காணிப்பு முக்கியம்: பிரதமர்

கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2021 ஜனவரி 11 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.

வைரஸ் தாக்குதலுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கை

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைவு தினத்தை ஒட்டி அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். உரிய காலத்தில் எடுத்த முடிவுகள் இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் பரவுதல் பெருமளவுக்குத் தடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். பெருந்தொற்று பரவத் தொடங்கிய போது குடிமக்களிடம் இருந்த அச்சம் இப்போது குறைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக அதிகரித்து வருவதில் இருந்தே மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பது தெரிய வருகிறது என்றார் அவர். இந்தப் போரில் உறுதியுடன் செயல்பட்ட மாநில அரசுகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம்

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ல் தொடங்குவதன் மூலம், இந்த நடவடிக்கையில் உறுதியான கட்டத்தில் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் கூறினார். அவசர காலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகளுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கோடிட்டுக் காட்டினார். உலகின் மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலையுடன் ஒப்பிடும் போது, இந்த மருந்துகளின் விலை மிகவும் குறைவானது என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு தடுப்பு மருந்துகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்திருந்தால் இந்தியா பெரும் சிரமங்களை சந்தித்திருக்க வேண்டும் என்று கூறினார்.

தடுப்பு மருந்துகள் அளிப்பதில் இந்தியாவுக்கு உள்ள அனுபவம், இந்தப் பெருமுயற்சியில் மிகவும் உதவிகரமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில், இந்த மருந்துகளை அளிப்பதில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார அலுவலர்களுக்கு முதலில் இந்தத் தடுப்பூசி போடப்படும். அவர்களுடன் சேர்த்து தூய்மைப் பணியாளர்கள், இதர முன்கள போராளிகள், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், பேரழிவு மேலாண்மை தன்னார்வலர்கள், மக்கள் நிர்வாகத்தில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள், நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பில் தொடர்புடைய வருவாய் அலுவலர்களுக்கும் முதலாவது கட்டத்தில் தடுப்பூசி போடப்படும். இவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 3 கோடியாக உள்ளது. முதலாவது கட்டத்தில் இந்த 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதில் எந்தச் செலவையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை என்றும், இதை மத்திய அரசே ஏற்கும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

இரண்டாவது கட்டத்தில், 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிற நோய்கள் அல்லது அதிக ஆபத்தான தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களில் 50 வயதுக்கு கீழானவர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி போடப்படும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மருந்துகள் சேமிப்புக்கும், தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தடுப்பூசி முகாம்களை நடத்துவது குறித்து பரிசோதனை முகாம்கள் நடத்தப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு முழுக்க தேர்தல்கள் நடத்துவது மற்றும் எல்லோருக்கும் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக ஏற்கெனவே உள்ள பழைய அனுபவங்களுடன், கோவிட் சிகிச்சை தொடர்பான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளையும், புதிய வழிகாட்டுதல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். தேர்தல்களின் போது பூத் அளவில் கையாளப்படும் அணுகுமுறையை இப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கோ-வின்

யாருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பதை அடையாளம் காண்பது மற்றும் கண்காணிப்பது தான் இந்தத் தடுப்பூசி நடைமுறையில் மிக முக்கியமான விஷயமாக இருக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். இதற்காக கோ-வின் (Co-Win) என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை உதவியுடன் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர், இரண்டாவது டோஸ் மருந்து தருவதும் அதன் மூலம் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போடுவது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் கோ-வின் தளத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

ஒரு நபருக்கு முதலாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்ட பிறகு, கோ-வின் தளம் தானாகவே டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை உருவாக்கும். இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கான நினைவூட்டலுக்கு இந்தச் சான்றிதழ் பயன்படும். அதன் பிறகு இறுதிச் சான்றிதழ் அளிக்கப்படும்.

அடுத்த சில மாதங்களில் 30 கோடிப் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

வேறு பல நாடுகள் நம்மைப் பின்தொடரப் போகின்றன என்பதால், இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முக்கியத்தும் வாய்ந்ததாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். கடந்த 3 - 4 வாரங்களாக சுமார் 50 நாடுகளில், கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றாலும், இதுவரை சுமார் 2.5 கோடிப் பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போட்ட பிறகு யாருக்காவது உடல் அசௌகரியம் ஏற்பட்டால், நிலைமையைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எல்லோருக்கும் தடுப்பு மருந்து அளிக்கும் பிற திட்டங்களில் உள்ள ஆயத்த நடவடிக்கைகள் இப்போதும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பு மருந்துத் திட்டத்தில், அந்த ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளன என்றார் அவர்.

இந்தப் பெருமுயற்சியின் செயல்பாடுகள் முழுக்க, கொவிட் தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். வைரஸ் பரவாமல் தடுக்க, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களும் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். தடுப்பூசி தொடர்பான வதந்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு மதம் மற்றும் சமூக அமைப்புகள், நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப் பணித்திட்டம், சுய உதவி குழுக்கள் போன்ற அமைப்புகளின் உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பிரதமர் கூறினார்.

பறவைக் காய்ச்சல் சவாலைக் கையாள்வது

கேரளா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது பற்றியும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில், இதைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதில் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல்கள் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வனம், சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளுக்கு இடையில் உரிய ஒருங்கிணைப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தச் சவாலை விரைவில் நாம் முறியடிப்போம் என்றும் கூறினார்.

தடுப்பூசி ஆயத்த நிலை மற்றும் கருத்தறிதல்

முதல்வர்கள் ஒத்துழைப்புடன் பிரதமர் தலைமையில் கோவிட் பெருந்தொற்று நோய் கையாளும் நடவடிக்கைகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கூறினார். இந்தப் பெருமுயற்சியில் இதுவரை மாநிலங்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு, தடுப்பூசி போடும் நடவடிக்கைகளிலும் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசித் திட்டம் அமலுக்கு வருவது குறித்து முதல்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தடுப்பூசி தொடர்பாக சில பிரச்சினைகள் மற்றும் கவலைகளை அவர்கள் தெரிவித்தனர். அவற்றுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தடுப்பூசி போடும் நடவடிக்கைகளுக்கான ஆயத்தநிலை குறித்து மத்திய சுகாதாரச் செயலாளர் தகவல்களை முன்வைத்தார். ஜன் பாகீரதி என்ற அடிப்படையில் தடுப்பூசித் திட்டம் இருக்கும் என்றும், இப்போதைய சுகாதார அமைப்பு முறையில் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாமல், இந்தத் தடுப்பூசி முயற்சிகள் பக்குவமாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார். இதற்கான மருந்து சேமிப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security