இந்தியாவைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை: பிரதமர்
இந்தியாவும் டிரினிடாட் - டொபாகோவும் பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்புகளில் வேரூன்றிய உறவைப் பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர்
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்
உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்தவும், உலகளாவிய தெற்கிற்கு அதன் உரிமை வழங்கப்படவும் வேண்டும் என அவர் கூறினார்
ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
அவையில் உரையாற்றிய பிரதமர், டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
தமக்கு மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கியதற்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

மாண்புமிகு செனட் தலைவர் அவர்களே,

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

மாண்புமிகு அமைச்சர்களே,

மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களே,

நமஸ்கார்!

சுப்ரபாத்!

காலை வணக்கம்!

பெருமைமிக்க ஜனநாயகம் மற்றும் நட்பு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான உங்கள் முன் நிற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

1.4 பில்லியன் இந்திய மக்களின்  வாழ்த்துக்களை உங்களுக்கு நான்  தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த புகழ்பெற்ற சிவப்பு மாளிகையில் உங்களுடன் பேசிய முதல் இந்தியப் பிரதமர் என்பதில் நான் பணிவுடன் இருக்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம், சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் கண்டிருக்கிறது. கடந்த ஆறு தசாப்தங்களாக, நீங்கள் ஒரு நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான ஜனநாயகத்தை கட்டியெழுப்பியதால், அது வலுவாக நிற்கிறது.

நண்பர்களே,

இந்த மகத்தான நாட்டின் மக்கள் அதிபர், பிரதமர் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க பதவிகளுக்கு பெண் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  தங்களை இந்திய புலம்பெயர்ந்தோரின் மகள்கள் என்று பெருமையுடன் அவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் இந்தியப் பாரம்பரியத்தில் பெருமை கொள்கிறார்கள். இந்தியாவில், அவர்களின் தலைமை, மன உறுதி மற்றும் கடப்பாட்டை  போற்றுகிறோம். அவர்கள் நமது நாடுகளுக்கு இடையிலான உறவின் வாழும் சின்னங்கள், பகிரப்பட்ட வேர்கள் மற்றும் பகிரப்பட்ட கனவுகளில் கட்டமைக்கப்பட்டவர்கள்.

மதிப்புமிக்க உறுப்பினர்களே,

நமது இரு நாடுகளும் காலனித்துவ ஆட்சியின் நிழலில் இருந்து எழுந்து  நமது சொந்தக் கதைகளை எழுதுகின்றன. இன்று, நமது இரு நாடுகளும் பெருமைமிக்க ஜனநாயக நாடுகளாகவும், நவீன உலகில் வலிமையின் தூண்களாகவும் நிற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, நீங்கள் தேர்தல்களில் பங்கேற்று ஜனநாயகத்தின் பண்டிகையைக் கொண்டாடினீர்கள். இந்த நாட்டின் மக்களின் ஞானம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காக - அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்காக - நான் வாழ்த்துகிறேன். இந்த உன்னதமான சபையின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

 

மீண்டும் ஒருமுறை அரசை அமைத்ததற்காக பிரதமர் கமலா அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த மகத்தான நாட்டை நிலையான வளர்ச்சி மற்றும் செழிப்பு நோக்கி அவர் வழிநடத்தும் போது அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

 

சபாநாயகர் இருக்கையில் பொறிக்கப்பட்டிருக்கும் "இந்திய மக்களிடமிருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ மக்கள் வரை" என்ற பொன்னெழுத்துக்களைப் பார்க்கும்போது,  எனக்கு ஆழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. அந்த இருக்கை வெறும் ஒரு தளபாடம் மட்டுமல்ல, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாகும். ஒரு ஜனநாயகம் மற்றொரு ஜனநாயகத்தோடு ஏற்படுத்திக் கொள்ளும்  பிணைப்பை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவில் ஜனநாயகம் என்பது அரசியல் அமைப்பு மட்டுமல்ல. எங்களைப் பொறுத்தவரை இது ஒரு வாழ்க்கை முறை. உங்கள் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்களும் உள்ளனர், அவர்களின் முன்னோர்கள் வைஷாலி போன்ற மையங்களுக்கு பெயர் பெற்ற இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்தவர்கள்.

நண்பர்களே,

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு இயல்பான அரவணைப்பு உள்ளது. நான் சொல்ல வேண்டும், இந்தியர்கள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மிகவும் தீவிர ரசிகர்களாவர். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது தவிர, எங்கள் முழு மனதுடன் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம்.

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்புகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 180 ஆண்டுகளுக்கு முன்பு, நீண்ட மற்றும் கடினமான பயணத்திற்குப் பிறகு முதல் இந்தியர்கள் இந்த மண்ணுக்கு வந்தனர். பெருங்கடல்களுக்கு அப்பால், இந்திய துடிப்புகள் கரீபியன் தாளத்துடன் அழகாக கலந்தன.

இன்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளைக் கொடியை ஏந்திய பெருமைக்குரியவர்கள்!

அரசியல் முதல் கவிதை வரை, கிரிக்கெட் முதல் வணிகம் வரை, கலிப்சோ முதல் சட்னி வரை, அவர்கள் ஒவ்வொரு துறையிலும் பங்களிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் மதிக்கும் துடிப்பான பன்முகத்தன்மையின் ஒருங்கிணைந்த பகுதியாக அவர்கள் உள்ளனர். ஒன்றாக, நீங்கள் "ஒன்றாக நாம் ஆசைப்படுகிறோம், ஒன்றாக நாம் சாதிக்கிறோம்" என்ற அதன் குறிக்கோளை வாழும் ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

 

நண்பர்களே,

 

இன்று அதிகாலையில், இந்த நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை மேன்மைதங்கிய அதிபர் அவர்கள் எனக்கு அன்புடன் வழங்கினார். 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக நான் அதைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டேன்.

இப்போது, மிகுந்த நன்றியுடன், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் மூதாதையர் உறவுகளுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே,

இந்த அவையில் பல பெண் உறுப்பினர்களைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் மீதான மரியாதை இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

விண்வெளி முதல் விளையாட்டு வரை, புத்தொழில் நிறுவனங்கள் முதல் அறிவியல் வரை, கல்வி முதல் தொழில்முனைவு வரை, விமானப் போக்குவரத்து முதல் ஆயுதப் படைகள் வரை, அவர்கள் பல்வேறு துறைகளில் இந்தியாவை ஒரு புதிய எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறார்கள். உங்களைப் போலவே, எங்களுக்கும் ஒரு பெண் இருக்கிறார். அவர் கீழ் நிலையிலிருந்து எங்களது குடியரசுத் தலைவராகி இருக்கிறர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நாடாளுமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்தது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடிவு செய்தோம்.  வரும் தலைமுறைகளில், அதிகமான பெண்கள் நாட்டின் தலைவிதியையும் திசையையும் தீர்மானிப்பார்கள்.

இந்தியாவில் அடிமட்டத்திலும் பெண் தலைவர்கள் செழித்து வருகின்றனர். சுமார் 1.5 மில்லியன் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  அதிகாரம் அளிக்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். இது எங்கள் G20 தலைமையின் போது நாங்கள் முன்வைத்த முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாகும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

இன்று, இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு சமூகமும் இந்த வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் மக்களை மையமாகக் கொண்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் சமூக பாதுகாப்பு 950 மில்லியன் மக்களை உள்ளடக்கியது என்று குறிப்பிடுகிறது. அதாவது கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள், இது உலகின் பெரும்பாலான நாடுகளை விட அதிக மக்கள் தொகை!

இத்தகைய உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் பார்வை எங்கள் எல்லைகளில் நிற்கவில்லை. எங்கள் வளர்ச்சியையும் மற்றவர்களுக்கு எதிரான ஒரு பொறுப்பாக நாங்கள் பார்க்கிறோம். மேலும், எங்கள் முன்னுரிமை எப்போதும் உலகளாவிய தெற்காக இருக்கும்.

அதே மனப்பான்மையுடன், டிரினிடாட் மற்றும் டொபாகோவுடனான எங்கள் உறவுகளை நாங்கள் ஆழப்படுத்துகிறோம். எங்கள் வர்த்தகம் தொடர்ந்து வளரும். இந்த நாட்டில் எங்கள் வணிக நிறுவனங்கள்  அதிக முதலீடு செய்ய ஊக்குவிப்போம். எங்கள் மேம்பாட்டு கூட்டாண்மை விரிவடையும். பயிற்சி, திறன் மேம்பாடு  ஆகியவை மனித வளர்ச்சியை அதன் மையத்தில் வைத்திருக்கும். சுகாதாரம் எங்கள் கூட்டாண்மையின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

 

பல இந்திய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இங்கு தனித்துவத்துடன் சேவை செய்து வருகின்றனர். இந்திய மருத்துவத் தரங்களை அங்கீகரிக்க நீங்கள் முடிவு செய்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அனைவருக்கும் உயர்தர, மலிவு விலையில் மருந்துகளை அணுகுவதை உறுதி செய்யும்.

யுபிஐ டிஜிட்டல் கட்டண முறையை ஏற்றுக்கொள்வதற்கான உங்கள் முடிவையும் நாங்கள் வரவேற்கிறோம். இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.  யுபிஐ இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை புரட்சிகரமாக்கியுள்ளது.

இந்தத் தளத்தால் இயக்கப்படும் இந்தியா, உலகில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. இன்று, இந்தியாவில், மாம்பழ விற்பனையாளர்களிடம் கூட கியூஆர் குறியீடுகள் உள்ளன.

பிற டிஜிட்டல் கண்டுபிடிப்புகளிலும் நாங்கள் ஒத்துழைக்க ஆர்வமாக உள்ளோம். உலகளாவிய தெற்கில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதற்கு இந்தியா செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்கும்போது, டிரினிடாட் மற்றும் டொபாகோ எங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

விவசாயம், தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதலில் எங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வோம். இந்தியாவில் இருந்து இயந்திரங்கள் உங்கள் விவசாயத் தொழிலை ஆதரிக்கும். மேலும், வளர்ச்சி என்பது கண்ணியத்தைப் பற்றியது என்பதால், இங்குள்ள மாற்றுத்திறனாளி குடிமக்களுக்கு ஒரு செயற்கை மூட்டு பொருத்துதல் முகாமை நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

எங்களைப் பொறுத்தவரை, உங்களுடன் எங்கள் ஒத்துழைப்புக்கு வரம்புகள் இல்லை. உங்கள் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளால் நாங்கள் எப்போதும் வழிநடத்தப்படுவோம்.

நண்பர்களே,

நமது  நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மகத்தான வாக்குறுதியைக் கொண்டுள்ளது. கரீபியனில் ஒரு முக்கிய பங்காளியாகவும், லத்தீன் அமெரிக்காவிற்கு ஒரு பாலமாகவும், டிரினிடாட் மற்றும் டொபாகோ பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பரந்த பிராந்தியத்துடன் வலுவான தொடர்பை உருவாக்க எங்கள் உறவுகள் உதவும் என்று நான் நம்புகிறேன்.

இரண்டாவது இந்தியா-காரிகோம் உச்சிமாநாட்டின் உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் இயக்கத்தை உருவாக்குதல், சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய அளவில் திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கும் முயற்சிகளில் ஒத்துழைக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

நண்பர்களே,

உலகம் பருவநிலை மாற்றம், உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. பயங்கரவாதம் ஒரு அழுத்தமான அச்சுறுத்தலாகவே உள்ளது. கடந்த கால காலனித்துவ விதிகள் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அவற்றின் நிழல்கள் புதிய வடிவங்களில் நீடிக்கின்றன.

 

விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பில் புதிய சவால்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு புதிய வாய்ப்புகளையும் அபாயங்களையும் திறக்கிறது. பழைய நிறுவனங்கள் அமைதியையும் முன்னேற்றத்தையும் வழங்க போராடி வருகின்றன.

எங்கள் ஜி-20 தலைமையின் போது, உலகளாவிய தெற்கின் கவலைகளை உலகளாவிய முடிவெடுக்கும் மையத்திற்கு கொண்டு வந்தோம். தொற்றுநோய் காலத்தில், எங்கள் 1.4 பில்லியன் மக்களைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கியது. பேரிடர் காலங்களில், உதவி, நிவாரணம் மற்றும் ஒற்றுமையுடன் விரைவாக உதவியுள்ளோம். எங்கள் வளர்ச்சி கூட்டாண்மைகள் தேவைக்கேற்ப உள்ளன.

மதிப்புமிக்க உறுப்பினர்களே,

நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது, உலகளாவிய தெற்கிற்கு சரியான இடத்தில் இருக்கை வழங்க வேண்டும். பருவநிலை நெருக்கடிக்கு மிகக் குறைந்த பங்களிப்பை வழங்கியவர்கள் மீது சுமை வராமல் இருக்க, பருவநிலை நீதியை உறுதி செய்ய வேண்டும். இந்த முயற்சியில் டிரினிடாட் மற்றும் டொபாகோவை ஒரு முக்கிய பங்காளியாக நாங்கள் கருதுகிறோம்.

நண்பர்களே,

நமது இரு நாடுகளும் அளவு மற்றும் புவியியல் ரீதியாக வேறுபட்டிருக்கலாம், ஆனால் நமது மதிப்புகளில் நாம் ஆழமாக இணைந்திருக்கிறோம். நாம் பெருமைமிக்க ஜனநாயக நாடுகள். உரையாடல், இறையாண்மை, பன்முகத்தன்மை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மோதல்களின் இந்தக் காலங்களில், இந்த மதிப்புகளுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. இந்த சிவப்பு மாளிகையே பயங்கரவாதத்தின் காயங்களையும் அப்பாவிகளின் ரத்த இழப்பையும் கண்டிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் எங்களுடன் நின்றதற்காக இந்த நாட்டின் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகிறோம்.

நண்பர்களே,

நமது முன்னோர்கள் போராடினர், தியாகம் செய்தனர், எதிர்காலச் சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய சிறந்த வாழ்க்கையைப் பற்றிய கனவுகளைக் கொண்டிருந்தனர். இந்தியாவும் டிரினிடாட் மற்றும் டொபாகோவும் நமது மக்களுக்கு வாக்குறுதி அளித்த எதிர்காலத்திற்கான பயணத்தில் நீண்ட தூரம் வந்துவிட்டன. ஆனால் நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

 

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும், அந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். அயோத்தியிலிருந்து அரிமா வரை, கங்கை நதிக்கரையிலிருந்து பரியா வளைகுடா வரை, நமது பிணைப்புகள் மேலும் மேலும் ஆழமாக வளரட்டும், நமது கனவுகள் மேலும் மேலும் உயரட்டும்.

இந்த எண்ணத்துடன், இந்த கௌரவத்திற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். நீங்கள் இங்கே சொல்வது போல், கருணையுடனும் பெருமையுடனும் - "மரியாதைக்குரியது."

நன்றி. மிக்க நன்றி.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan

Media Coverage

Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2025
December 17, 2025

From Rural Livelihoods to International Laurels: India's Rise Under PM Modi